பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிலவுலகம் நிலைத்தற்கு அடிப்படை

75


னாவது? பாரியாவது? இன்று உங்கள் கொடையைப் பார்த்தால் அவர்கள் வெட்கிப் போவார்கள்!” என்றெல்லாம் துதி செய்து, முகஸ்துதியையே மூலதனமாக்குவார்கள். முகஸ்துதியில் மயங்கிச் சில காசுகளை வாரிக் கொடுத்துப் புகழ்ச்சியைப் பெறுதலும் புகழாமோ?

மலரினின்றும் மணம் முகிழ்ப்பதைப் போல ஒருவனுடைய வாழ்க்கையினின்று புகழ் முகிழ்க்க வேண்டும். உண்மையான புகழினைப் பெறுதலே வாழ்க்கையின் நோக்கம். அதனாலன்றோ திருவள்ளுவர் ‘புகழ்’ என்ற ஒரு தனி அதிகாரம் ஓதினார். புகழ் எளிதில் கிடைப்பதன்று. எளிதில் கிடைப்பதும் புகழன்று. அது அப்பட்டமான முகஸ்துதி: வியாபாரம்: வேசித்தனம். இத்தகைய புகழால் வையகம் வளராது; வாழாது.

புகழ் தன்னல மறுப்பில் பிறர் நல வேட்கையில் தோன்றுவது. உயிரையும் வெறுத்த உயர் அறநெறி வாழ்க்கையில் புகழ் தோன்றும். அத்தகைய புகழுக்கு உயிரையும் பணயம் வைத்து வாழ்தலே கடவுள் தன்மை யுடைய வாழ்க்கை!

பழிக்கப்படுவது பழி; புகழுக்கு எதிரானது பழி; பழி சைத்தானின் கோட்டை! பேய்களின் கூடாரம்! சராசரி மனிதனால் கூட பழியில் சிக்கி வாழும் வாழ்க்கை வெறுக்கத் தக்கது. ஆனால் இன்று புகழாவது பழியாவது? எப்படியாவது வாழ்ந்தால் சரி என்ற தவறான கொள்கை மேலோங்கி வருகின்றது.

உயிரைத் தாங்க வழங்கிய உடல், உயிரை நலிய வைக்கும் பொதி சதையைச் சுமந்து கொண்டு, வீணில் உண்டு, பழியைச் சுமந்து செத்துக் கொண்டிருக்கும் வேடிக்கை மனிதர் பலரைக் காண்கின்றோம். அவர்கள் தற்செயலாக மனிதராகப் பிறந்துவிட்டனர். அவர்களுக்கு எல்லாம் வாணிகமே! ஆனால் உயர் புகழை விரும்புபவர்கள்