பக்கம்:வைணமும் தமிழும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வைணவமும் தமிழும்


வந்தார். இளமையில் கலைகள் முழுதும் தன்னடைவே நிரம்பப் பெற்று வளர்ந்து வந்தாள் கோதை. ஆழ்வாரைப் போன்றே கோதையாரும் இளமை தொட்டே கண்ணன் பக்தியில் ஈடுபட்டாள். தந்தையருளால் குழந்தையாகக் கருதின கண்ணன் இவளுக்குக் காதலனாக அமைந்து விடுகின்றான். தந்தைக்குத் தெரியாமல் அவன் வடபத்திரசாயிக்கு (ஆலிலைப்பள்ளி யானுக்குக் கட்டிவைத்த திருமாலையைச் சூட்டிக் கொண்டும், காறை பூண்டு கூறையுடுத்து, கைவளை குலுக்கிக் கோவைச் செவ்வாய்திருத்தித் தன் அழகைக் கண்ணாடியில் கண்டு பல நாளும் கோதை மகிழ்ந்து வந்ததை ஒரு நாள் ஆழ்வார் கண்டு விட்டார். தன் மகளுடைய அடாத செயலுக்கு அவளைக் கடிந்து கொண்டார். அன்றிரவு வடபெருங்கோயிலுடையான் ஆழ்வார் கனவில் தோன்றி அவர் மகள் சூடிக் கொடுத்த மாலைதான் தனக்கு விருப்பமாகும் என்று குறிப்பிட்டார். அன்றுமுதல் தன் திருமகளார் சூடிய திருமாலைகளையே நாளும் சாத்திப் பெருமாளை உவப்பித்து வரலானார். அதுமுதல் அவளுக்குச் 'சூடிக்கொடுத்தாள்' எனத் திருநாமம் வழங்கலாயிற்று. தம் மகளாரின் பெருமையை மெச்சிய ஆழ்வார் 'என்னை ஆண்டாள் இவளே' என்று தன் மகளைத் தழுவி உச்சி மோந்தார். அன்று முதல் கோதையாருக்கு 'ஆண்டாள்' என்ற திருப்பெயரும் நிலைத்து விட்டது. மங்கைப் பருவமடைந்ததும் ஆண்டாள் மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்.[1] என்று கூறித் திருவரங்கப் பெருமானையே கணவனாக வரித்தாள். ஆழ்வாரும் தன் கனவில் பெருமாள் உரைத்தபடியே தன் மகளை அழகிய


  1. நாச்.திரு1:5