பக்கம்:வைணமும் தமிழும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வைணவமும் தமிழும்


தாண்டகம் முதல் பத்துப் பாசுரங்களையும் தம்பிரான் படியையும் சேவிப்பதுடன் அன்றைய நிகழ்ச்சி நிறைவுபெறும்.

(1). பகல் பத்து

முதல் திருநாள் : இன்று அரையர் ‘திருப்பல்லாண்டு’ தொடங்கி வெண்ணெய் விழுங்கி என்ற இரண்டாம் பத்து 9ஆம் திருமொழி முடிய 212 பாசுரங்களைச் சேவிப்பர். எம்பெருமானுக்குக் காப்பிட்டு பெரியாழ்வார் குறிப்பிடும் கண்ணன் அவதாரம், அழகு, சிறுகுறும்பு முதலிய அனைத்தையும் காட்டி ஆய்ச்சியர் யசோதையிடம் கண்ணனின் குறும்புகளை முறையிடுவதோடு நிற்கும். இவற்றுள் ‘பல்லாண்டு, பல்லாண்டு’, ‘அடியோ மொடு” என்று தொடங்கும் முதல் இரு பாசுரங்கட்கு மட்டும் அரையர் அபிநயம் பிடிப்பார், வியாக்கியானம் செய்வார்.

இரண்டாம் திருநாள் : இன்று அரையர் 'ஆற்றிலிருந்து விளையாடுவோங்களை' (பெரியாழ். திரு 2-10;1) என்று தொடங்கும் முதல் பதிகம் முதல் ‘துக்கச் சுழலைச் சூழ்ந்து கிடந்த வலை' (மேலது 5-3;1) எனத் தொடங்கும் பதிகம் ஈறாகவுள்ள 250 பாசுரங்களைச் சேவிப்பார். இவற்றுள் கண்ணன்பற்றிய பல செய்திகள் அடங்கும். 'ஆற்றிலிருந்து' (2.10;1), ‘தன்னேர் ஆயிரம் பிள்ளைகளோடு' (3.1;1) என்ற இரண்டு பாசுரங்கட்கு அரையர் அபிநயம் பிடித்து வியாக்கியானம் செய்வார்.

மூன்றாம் திருநாள்: இன்று அரையர் 'சென்னியோங்கு' (5.4;1) என்ற பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை முப்பது, நாச்சியார் திருமொழியில் ‘தையொரு திங்களும்’ (1:1) என்று