பக்கம்:வைணமும் தமிழும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

237


இருந்தான், சிறையன் கர்மம் அடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று, அரசகுமரன் இச்சையால் பிரவேசித்தமையால் போக ரூபமாக இருந்தது. இந்த எடுத்துக் காட்டால் இக்கூறிய கருத்தைத் தெளியலாம்.

‘சரீர-சரீரி பாவனை ஆழ்வார் பாசுரங்களில் அமைந்துள்ளன.

          திடவிசும்பு எரிவளி
             நீர்நிலம் இவைமிசை
          படர்பொருள் முழுவதும்
             ஆய்அவை அவைதொறும்
          உடல்மிசை உயிரெனக்
             கரந்தெங்கும் பரந்துளன். (திருவாய். 1.1:7)

[வளி-வாயு கரந்து-மறைந்து]

என்ற நம்மாழ்வார் பாசுரத்தில் இக்கொள்கை விளக்கம் அடைகின்றது. உலகிலுள்ள ஒவ்வொரு பொருளிலும் உடலில் உயிர் உறையுமாப்போலே மறைந்திருந்து எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவற வியாபித்திருப்பான் இறைவன். நம்முடைய உடலுக்கு ஆன்மாதான் தாரகமாய், நியாமகனாய், சேவியாய் இருப்பதுபோல், உடல் ஆன்மாக்களுக்கு எம்பெருமான்தான் தாரகமாய், நியாமகனாய்,சேவியாய் இருப்பான். 'கரந்து’ என்பதனால் ஒருவருக்கும் தெரியாமல் மறைந்து அந்தர்யாமியாய் இருப்பான் என்பதும், ‘ எங்கும் பரந்து என்பதனால் உள்ளும்புறமும் வியாபித்து இருப்பான் என்பதும் பெறப்படுகின்றன. இப் பாசுரம் இறைவன் அசித்தில்மட்டிலும் பரவியிருப்பதைக் குறிப்பிடுகின்றது.