பக்கம்:வைணமும் தமிழும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

வைணவமும் தமிழும்


(அ). கர்மயோகம்: சாத்திரங்களைப் பயின்ற அறிவினால் சில சடங்குகளையும் கடமைகளையும் தவறாது செய்தல் வேண்டும். இவற்றுள் நித்தியகர்மங்களும் நைமித்திகக் கடமை களும் அடங்கும். நித்திய கர்மங்கள் என்பன சந்தியாவந்தனம், பகவதாராதனம் போன்று நாடோறும் செய்யப் பெறுபவை; நைமித்திகக் கடமைகள் என்பன கிரகணம், கார்த்திகை, சங்கராந்தி, ஆவணிஅவிட்டம், போன்ற விசேட நாட்களில் மேற்கொள்ளப்பெறும் கடமைகளாகும். இறைவனை ஏத்தல், திருத்தலப்பயணத்தை மேற்கொள்ளல், அறம்புரிதல் போன்றவை யாவும் கர்மயோகத்தில் அடங்கும். யாதொரு பலனையும் எதிர்பாராது செய்யப்பெறும் கருமத்தில் மனம் தூய்மையுறுகின்றது. இஃது ஆன்மா தியானத்தில் அழுந்த வழியாகவும் அமைகின்றது.

          பரிவது இல் ஈசனைப் பாடி
          விரிவது மேவல் உறுவீர்!
          பிரிவகை இன்றி.நல் நீர்தூய்
          புரிவ துவும்புகை பூவே. (1.6:1)

என்ற திருவாய்மொழிப் பாசுரதத்தில் பலனை எதிர்பாராது இறைவனுக்குச் செய்யப்பெறும் கருமம் கூறப்பெறுகின்றது.

இறைவன் ஆராதனைக்கு எளியவன் என்பதும் இதனால் பெறப்படுகின்றது. எளியவனாயிருப்பதுடன் ஆராதிப்பார்க்கு இனியனாகவும் இருக்கின்றான் இறைவன் என்பதை,

          ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
          மாயப் பிரானைஎன் மாணிக்கச் சோதியை,
          தூய அமுதைப் பருகிப் பருகிஎன்
          மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே (1.7:3)

          [ஆயர்-இடையர் மயர்வு அஞ்ஞானம்]