பக்கம்:வைணமும் தமிழும்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சம்பிரதாயங்களாக - மேலும் சில

331


5. திருச்சூர்ணத்தைத் தரிக்கும்போது : ஊர்த்துவப் புண்ட்ரத்திலுள்ள இடைவெளியில் திருச்சூர்ணத்தைத் தரிக்க வேண்டும். திருச்சூர்ணம் இலக்குமி சொரூபமானது. மஞ்சள் காப்பைத் தரித்துக்கொண்டு இலட்சுமியை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும். மேலே குறிப்பிட்ட பன்னிரண்டு இடங்களிலும் இடப்படும் மஞ்சள் காப்புக்கு உரிய மந்திரங்கள் முறையே (அ) சிரீதேவியை நம; (ஆ) அம்ருத்தோ பவாயை நம: (இ) கமலாயை நம; (ஈ) லோக கந்தரியை நம (உ) சிரீ விஷ்ணு பத்தியை நம:(ஊ) சிரீவைணவ தேவியை நம:(எ)வராரோஹாயை நம: (ஏ) ஹரி வல்ல பாயை நம; ஐ சாரங்கிண்யை நம: (ஓ) தேவதேவிகாயை நம: (ஓ) மகாலட்சுமியை நம (ஒள) லோக பூஜிதாயை நம: என்பனவாகும்.

6. தவறான கருத்து : திருமண் காப்பைச் சிலர் எம்பெருமானின் திருவடி என்று கருதுகின்றனர். இது தவறு. அடியார்கள் நெற்றியில் இட்டுக்கொள்வது அரிபாதவடிவமான ஊர்த்துவ புண்டரம் ஓர் இரேகைதான்; திருமால்திருவடி அல்ல. எம்பெருமானுக்கு இதைப்போல் இரேகை இடுதல், திருக்கோயில்களில் எம்பெருமானுக்குத் திருமுழுக்காட்டுதல், திவ்வியாபரணங்கள் தரிப்பித்தல், திருப்பரிவட்டம் சேர்த்தல், போனகமளித்தல் முதலியவைகளால் அணிசெய்து உபசாரம் செய்வது போலாகும். அப்பொழுது திருமண்ணையும் அலங்காரத்திற்காக ஒர் அணிபோல் சாத்துகின்றனரேயன்றி வேறு அல்ல என்பது அறியப்படும்.

7. ஆகார நியமம் : வைணவர்கள் இந்த நியமத்தைக் கவனமாகக் கடைப்பிடிக்கின்றனர். உணவு தூய்மை இல்லாவிடில் மனம் தெளிவடைவதில்லை. ஆகவே, உணவுப்பற்றிய கவனம் மிகவும் முக்கியமானதாகின்றது.