பக்கம்:வைணமும் தமிழும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

51



தோன்ற திருவாய்மொழி என்று வழங்கப்பெற்றது என்பதும் ஈண்டு அறிதற்பாலவை. எனவே திருமொழி, திருவாய்மொழி என்ற பெயர்கட்குக் காரணமான பெயரையுடைய திருமொழிகளின் தொகையைக் கொண்டு 'முதல் பத்து', 'இரண்டாம் பத்து' - என்றிப்படி வரையறை ஏற்பட்டது என்பது தெளிவு. இம்முறையில் பெரியாழ்வார் திருமொழி முதல் பத்துக்கு இரண்டாம் பத்து முதலானவற்றைப் போலும் ‘பெரிய திருமொழி’, திருவாய்மொழி இவற்றின் பத்துகளைப் போலும் வழக்கமாகப் பத்துத் திருமொழிகள் இருந்தே தீரவேண்டும். ஆயின் பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம் பத்தில் நான்கு திருமொழிகளே உள்ளன. அதனைப் போலவே பத்துக்குக் குறைந்த ஒன்பது திருமொழிகளே உள்ள முதல் பத்தினை ஏன் 'பத்து' என்று வழங்குதல் கூடாது? என்று வினவலாம். பத்துப் பத்துத் திருமொழிகளாகப் பிரித்து கொண்டுபோய் எஞ்சியுள்ள நான்கு திருமொழிகளை பத்தாகக் கொள்வதற்கும் எடுத்த எடுப்பிலே ஒன்பது திருமொழிகளை ஒரு பத்து என்று கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. தான் வரையறுத்த கொள்கையை எடுத்த எடுப்பிலேயே எவரும் கைவிடார். தவிர, முழுப் பத்து ஒன்றுக்கு மேல் இருக்கும் இடங்களில் தான் ஒதுதல் முதலான வசதிகளைக்கருதித் திருமொழிகளைப் பத்துப் பத்தாக பிரிக்க முடியாததற்குக் காரணம் முழுப் பத்து ஒன்றுக்குக் குறைந்திருப்பதேயாகும் என்பதும், ஈண்டு அறிதற்பாலவை. எனவே, திருப்பல்லாண்டு தனிப் பிரபந்தம் அன்று என்று கொள்ளத்தக்க ஏதுவொன்றும் இல்லை.