பக்கம்:வைணமும் தமிழும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வைணவமும் தமிழும்



இங்ஙனம் பறவைகளைத் தூது விடுத்தற்கு உட்பொருள் உண்டு. ஆசாரிய ஹிருதயம்,

'சேர்ப்பாரைப் பட்சிகளாக்கிப் ஜ்ஞான கர்மங்களைச்
சிறகு என்று, குரு ஸ்ப்ரஹ்மசாரி புத்ரசிஷ்ய ஸ்தானே
பேசும் சூத்திரம் (150)
(ஸ்ப்ரமசாரி-ஒரு சாலை மாணாக்கர்; ஸ்தானே-இடத்தில்)

என்று குறிப்பிடுகின்றது. “விண்ணோர்பிரானார் மாசு இல் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே" (திருவிரு. 55) என்று ஆழ்வாரே அருளிச் செய்துள்ளமையால் பகவத் விஷயத்தில் கொண்டு சேர்க்குமவர்கள் பறவைகளாகக் கொள்ளப்பெறுவர். இரண்டு சிறகுகளைக் கொண்டு பறவைகட்கு எங்கனம் விசும்பில் பறந்துசெல்லுதல் இயலுகின்றதோ அங்ஙனமே ஞானம் ஒழுக்கம்(அநுட்டானம்) என்னும் இரண்டாலும் இறைவன் அடையப் பெறுகின்றான் என்பது ஆன்றோர் கொள்கை. எனவே, ஞானத்தையும், அநுட்டானத்தையும் சிறகுகளாகக் கொள்ள வேண்டும். ஆசாரியர்களும் ஒரு சாலை மாணாக்கர்களும், புத்திரர்களும் இறைவனை அடையும் பேற்றுக்குத் துணையாக இருப்பார்கள் என்பது அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் கருத்தாகும்.

மேற்குறிப்பிட்ட பறவைகளிலும், அன்னம், வண்டு முதலியவையாகச் சொல்லப்பெறுபவர்கள் இன்னார் இன்னார் போன்றவர்கள் என்னும் உள்ளுறைப் பொருளும் அருளிச் செய்யப் பெற்றுள்ளது. அன்னமாகப் பேசப்பெறுபவர்கள் “செல்வநம்பி, பெரியாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார்"