திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
திருப்பாடல்கள். பாடல் எண் 1. இலத்தீன் மற்றும் பழைய போலந்து - நடு செருமான மொழியில். காலம்: 14-15ஆம் நூற்றாண்டு.

திருப்பாடல்கள் (The Book of Psalms) [1][தொகு]

முன்னுரை

"திருப்பாடல்கள்" என்னும் இந்நூல் விவிலியப் பக்திப் பாடல்கள், இறைமன்றாட்டுகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். பல்வேறு காலக் கட்டங்களில் பல்வேறு கவிஞர்களால் இயற்றப்பட்ட இப்பாடல்களை இசுரயேல் மக்கள் தங்கள் வழிபாட்டில் பயன்படுத்தினர். காலப்போக்கில் இவற்றின் தொகுப்பு அவர்களது திருமறைநூலின் முக்கியப் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இப்பக்திப் பாடல்கள் பலவகைப்படும்; அவையாவன:

  1. கடவுளைப் புகழ்ந்து வழிபடுவதற்கானவை.
  2. கடவுளிடம் உதவி, பாதுகாப்பு, மீட்பு வேண்டிப் பாடியவை.
  3. மன்னிப்பு வேண்டும் மன்றாட்டுகள்.
  4. கடவுள் வழங்கிய ஆசிகளுக்கு நன்றி செலுத்தும் பாடல்கள்.
  5. அரசர் பற்றிய பாடல்கள்.
  6. அறிவுரை அளிக்கும் பாடல்கள்.

இவை தனி மனிதரின் வேண்டுதலாகவோ, நாட்டு மக்களின் மன்றாட்டாகவோ அமைந்துள்ளன. இவற்றுள் பல, தனிப்பட்ட இறையடியாரின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகின்றன; ஏனையவை இசுரயேல் இனத்தின் நாட்டங்களையும் உணர்ச்சிகளையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.

கிறிஸ்து இயேசுவின் திருவாழ்விலும் திருப்பணியிலும், திருப்பாடல்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன. புதிய ஏற்பாட்டிலும் இப்பாடல்கள் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இப்பாடல்கள் கிறிஸ்துவத் திருமறையிலும் திருச்சபையின் இறைவழிபாட்டிலும் தொடக்கத்திலிருந்தே சிறப்பிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருப்பாடல்கள்[தொகு]

பொருளடக்கம் திருப்பாடல்களின் எண்ணிக்கை வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
முதல் பகுதி திருப்பாடல்கள் 1 முதல் 41 வரை 813 - 845
இரண்டாம் பகுதி திருப்பாடல்கள் 42 முதல் 72 வரை 845 - 872
மூன்றாம் பகுதி திருப்பாடல்கள் 73 முதல் 89 வரை 872 - 890
நான்காம் பகுதி திருப்பாடல்கள் 90 முதல் 106 வரை 890 - 906
ஐந்தாம் பகுதி திருப்பாடல்கள் 107 முதல் 150 வரை 906 - 939

திருப்பாடல்கள்[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 1 முதல் 2 வரை


திருப்பாடல் 1[தொகு]

நற்பேறு பெற்றோர்[தொகு]


1 நற்பேறு பெற்றவர் யார்? -
அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்;
இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;


2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்;


3 அவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்;
பருவகாலத்தில் கனிதந்து,
என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். [*]


4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை;
அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்.


5 பொல்லார் நீதித் தீர்ப்பின்போது நிலைநிற்க மாட்டார்;
பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார்.


6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்;
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.


குறிப்பு

[*] 1:3 = எரே 17:8.


திருப்பாடல் 2[தொகு]

கடவுள் தேர்ந்துகொண்ட அரசர்[தொகு]


1 வேற்றினத்தார் சீறி எழுவதேன்?
மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?


2 ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப்
பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்;
ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்; [1]


3 'அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்;
அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்' என்கின்றார்கள்.


4 விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்;
என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார்.


5 அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்;
கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்;


6 'என் திருமலையாகிய சீயோனில்
நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தனேன்.'


7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்:
'நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். [2]


8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;
பிறநாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்;
பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன்.


9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்;
குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்.' [3]


10 ஆகவே, மன்னர்களே, விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;
பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.


11 அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்;
நடுநடுங்குங்கள்!
அவர்முன் அக மகிழுங்கள்!


12 அவர் சினங்கொள்ளாதபடியும் நீங்கள் வழியில் அழியாதபடியும்
அவரது காலடியை முத்தமிடுங்கள்;
இல்லையேல், அவரது சினம் விரைவில் பற்றியெரியும்;
அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர்.


குறிப்புகள்

[1] 2:1-2 = திப 4:25-26.
[2] 2:7 = திப 13:33; எபி 1:5; 5:5.
[3] 2:9 = திவெ 2:26-27; 12:5; 19:15.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 3 முதல் 4 வரை