பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசசிம்மன்

151



வான் ஒலி கேட்ட வரலாறு

சென்னைக்கும் திருவள்ளூருக்கும்[1] இடையில் உள்ள ‘தின்னூர்’ என்பது இராசசிம்மன் காலத்தில் திருநின்றவூர் எனப்பெயர் பெற்று இருந்தது. அப்பதியில் நான்மறையாளர் மிக்கிருந்தனர். அவருட் பூசலார் என்பவர் ஒருவர். அவர் சிறந்த சிவபக்தி மிகுந்தவர்; தமது பத்தி மேலிட்டால் சிவன் கோவில் ஒன்றைக் கட்ட முற்பட்டார். பொருளுக்குப் பல இடங்களில் அலைந்தார். முன்சொன்ன (கி.பி. 686-689) பஞ்சக் கொடுமையால் பணம் கொடுப்பார் இல்லை. ஆயினும், அவர் அவா மிகுதியினால் இன்னின்னவாறு கோவில் அமைக்கவேண்டும் என்பதை மனத்தில் எண்ணினார்; இறுதியில் தம் உள்ள நினைவில் உருத்தெரியாத கோவிலை அமைத்தார்; சிவனாரை அக்கோவிலில் எழுந்தருளப் பண்ண ஒரு நாளைக் குறித்தார். அந்த நாளே கயிலாசநாதர் கோவிலைக் கட்டி முடித்த இராசசிம்மன் கும்பாபிடேகம் செய்ய எண்ணிய நன்னாள் ஆகும். அதற்கு முன்னாள் இரவில் இறைவன் அரசன் கனவில் தோன்றி, தாம் பூசலார் கட்டிய கோவிலில் அடுத்த நாள் எழுந்தருளப் போவதால், வேறு நாள் குறித்துக்கொள்ளும்படி கூறினார். அது கேட்டு வியந்த அரசன் திருநின்றவூர் சென்று பூசலாரைக்கண்டு, அவர்கட்டிய கோவிலைக் காட்டும்படி வேண்டினான். பூசலார் திடுக்கிட்டுத் தம் வரலாற்றை விளங்க உரைத்தார். அரசன் பெருவியப்பெய்தி அகக் கோவில் கட்டிய அன்பர்க்கு வணக்கம் செலுத்தி மீண்டான். இதுவே பெரிய புராணம் கூறும் பூசலார் புராணச் செய்தி ஆகும். இதில் ‘சிவனார் கனவிற் சென்று கூறினார்’ என்பது, கல்வெட்டில், ‘அரசன் வான் ஒலி கேட்டான்’ என்று கூறப்படுகிறது.[2]


  1. இதன் சரியான பெயர் திரு.எவ்வுள்.
  2. இந்த நுட்பமான செய்தி கி.பி. 12 ஆம் நூற்றாண்டினரான சேக்கிழார் பெருமானுக்கு எங்கனம் தெரிந்தது? அவர் கயிலாசநாதர் கோவில் கல்வெட்டைப் படித்தே இந் நுட்பமான செய்தியை எழுதியிருத்தல் வேண்டும் என்னல் மிகையாகாது. அவர் அரசரிடம் உயர் அலுவலாளராக இருந்தவர் ஆதலின் கல்வெட்டில் நிரம்பிய புலமையுடைராய் இருந்திருத்தல் வேண்டும். இங்ஙனமே அவர், கல்வெட்டுகளிற் காணப்படும் பல குறிப்புகளைத் தம் நூலுட் பல இடங்களிற் குறித்துச் சொல்லலைக் காணலாம்.