பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசசிம்மன்

155



கோவில் இலக்கணம்

இராசசிம்மன் கட்டிய கோவில்கள் தொலைவில் இருந்து நோக்கின், தருமராசர் தேரைப்போலவே தோன்றும் வரவரச் சிறுத்து உயரும் தட்டுகளைக் கொண்டவை. உள் அறை வேறு, கோபுரம் வேறு என்று இராது. நான்கு பக்கங்களிலும் உள்ள-புரைகளில் சிவலிங்கம் இருக்கும். கோவிலுக்குள் எழுந்தருளுவித்த லிங்கங்கள் எட்டு அல்லது பதினாறு பட்டைகள் தீர்ந்தவை; சில பக்கங்களில் காடி வெட்டியவை. சிவலிங்கத்திற்குப் பின் சுவர்மீது சோமாஸ்கந்தர் சிலை இருக்கும்.திருவாசிகள் ஒற்றைவளைவு கொண்டவை. இவை அனைத்தையும் விடச் சிறந்த அடையாளம் ஒன்றுண்டு. அஃதாவது, தூண்களுக்கு அடியில் பின் கால்கள்மீது எழுந்து நிற்கும் சிங்கங்கள் வெட்டப்பட்டு இருப்பதே ஆகும். சில சிங்கங்கள் சுண்ணாம்பினால் அமைக்கப்பட்டிருக்கும்.


கயிலாசநாதர் கோவில்[1]

கோவில் இடமும் அமைப்பும்

இராசசிம்மன் கட்டிய உலகம் போற்றும் கயிலாச நாதர் கோவில் நகரத்தனி மேற்றிசையில் கழனிகளுக்கு இடையில் இருக்கிறது. இதற்குப் பின்புறம் சிறிது தொலைவில் இன்றைய கச்சி நகரின் மேற்கு எல்லை முடிவு பெறுகிறது. ஆயின் இது கட்டப்பட்ட காலத்தில், இந்தக் கோவில், நகரத் தெருக்களுக்கு இடையிற்றான் இருந்தது என்பது பல கல்வெட்டுகளால் தெரிகின்றது. இக் கோவிலுக்குப் புறமதில் திருமடைவளாகம் முதலியன இருந்தன. ஏராளமான நிலங்கள் இருந்தன. கோவிலைச் சுற்றிலும் மாடவீதிகள் இருந்தன.[2] இராசசிம்மன், மாடெல்லாம் சிவனுக்காகப் பெருஞ்


  1. நான் இக்கோவிலை (10-1-43) விளக்கமாகக் காண உதவி புரிந்த பெரியார் இக் கோவில் கண்காணிப்பாளராகவுள்ள காஞ்சிபுரம் சி.குமரகாளத்தி முதலியார் ஆவர்.
  2. S.I.I.Vol. Nos.-86-88: 140 - 150.