உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அன்பு அலறுகிறது

 அதனால்தான் என்னைப் பொறுத்தவரை அவர் மேல் கொண்ட அன்பு உயிரையும் உள்ளத்தையும் ஒட்டித்தொட்டு வளரவேண்டுமென்றும், உயிரையும் உள்ளத்தையும் ஒட்டித் தொட்டு தேய்ந்து மாய்ந்து போக வேண்டுமென்றும் நான் விரும்பினேன். அந்த விருப்பத்தால் ஏற்பட்ட உள்ள நிறைவோடு தோழிகள் புடைசூழக் கையில் பாலுடன் அன்றிரவு நான் அவருடைய அறையை நோக்கிச் சென்றேன் --- ஆம், அதுதான் எனக்கு முதல் இரவு; அவருக்கு அது எத்தனையாவது இரவோ?

இம்மாதிரியான எண்ண அலைகளின்மேல் நான் மெள்ள மெள்ள மிதந்து சென்று கொண்டிருந்தபோது, "சீக்கிரம் போடி, தாத்தா தூங்கிவிடப் போகிறார்!’ என்றாள் என் தோழிகளில் ஒருத்தி, என்னுடைய காதோடு காதாக.

"தூங்கினால் என்னடி, பாலை இவளே குடித்து விட்டுப் படுத்துக் கொள்கிறாள்!” எ ன்றாள் இன்னொருத்தி.

"விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே ஒருவருக்கும் தெரியாமல் நரைத்த மயிரைப் பிடுங்கி விடவேண்டாமா? சீக்கிரம் படுத்தால்தானே சீக்கிரம் எழுந்திருக்க முடியும்?” என்றாள் அவள்.

"அதுவும் சரிதான்!” என்றாள் இவள்.

மாப்பிள்ளைக்கு இருந்த மொத்தம் முப்பத்திரண்டு பற்களில் மூன்றைக் காணோமாமே?’ என்ருள் மற்றொருத்தி.