சிவகாமியின் சபதம்/பிக்ஷுவின் காதல்/இராஜோபசாரம்

விக்கிமூலம் இலிருந்து
13. இராஜோபசாரம்


வாதாபிச் சக்கரவர்த்தி காஞ்சிக்கு விஜயம் செய்ததிலிருந்து ஏழு தினங்கள் ஒரே திருவிழாக் கொண்டாட்டமாயிருந்தது. ஒவ்வொரு நாளும் நகரின் ஒவ்வொரு பகுதிக்கு இரண்டு சக்கரவர்த்திகளும் விஜயம் செய்தார்கள். தினம் ஒரு கோயிலுக்குச் சென்றார்கள். ஒரு நாள் காஞ்சியின் கல்விக் கழகங்களையெல்லாம் பார்வையிட்டார்கள். ஒரு நாள் சிற்பக் கலை மண்டபங்களையும் சித்திர சாலைகளையும் பார்த்தார்கள். ஒருநாள் பௌத்த விஹாரங்களுக்கும் இன்னொரு தினம் ஜைனர்களின் கோயில்களுக்கும் சென்றார்கள். ஒரு நாள் இரு சக்கரவர்த்திகளும் பட்டத்து யானை மீது அம்பாரியில் அமர்ந்து நகர் முழுவதும் பவனி வந்தார்கள்.

பழகப் பழக இரண்டு சக்கரவர்த்திகளுக்குள்ளேயும் சிநேகம் முதிர்ந்து வந்ததாகத் தோன்றியது. இந்தச் சிநேகத்தின் பயனாக வருங்காலத்தில் இரண்டு சாம்ராஜ்யங்களும் பெரு நன்மையடையப் போகின்றன என்று மகேந்திர பல்லவர் எதிர்பார்த்ததுடன் அதைப் புலிகேசியிடமும் தெரியப்படுத்தினார். தமக்குச் சமண மதத்தினிடமோ புத்த சமயத்தினிடமோ எள்ளளவும் துவேஷம் கிடையாதென்றும், சைவ சமயமானது மற்ற எல்லாச் சமயங்களையும் சமநோக்குடன் பார்க்க இடம் தருகிறதென்றும், அதனால்தான் தாம் சைவ சமயத்தைச் சார்ந்ததாகவும், சமணர்களும் பௌத்தர்களும் அநாவசியமான விரோத பாவம் தம் பேரில் கொண்டிருப்பதாகவும் மகேந்திர பல்லவர் கூறினார். புலிகேசி தமக்கும் தீவிர மதப் பற்றோ, மதத் துவேஷமோ கிடையாதென்றும், இராஜீய காரணங்களை முன்னிட்டே சமண முனிவர்களுக்கு அதிகமாக இடம் கொடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். சமய போதனையில் ஈடுபட்ட குருமார்கள் இராஜீய விஷயங்களில் தலையிடவே கூடாதென்றும், தலையிடுவதால் அவர்களுக்கும் சமயத்துக்கும் நாட்டுக்குமே தீமைதான் என்றும் மகேந்திரர் கூறினார். அதை வாதாபிச் சக்கரவர்த்தியும் ஒப்புக் கொண்டார். மகேந்திர பல்லவர், "உண்மையான சமய பெருமானுடைய வாழ்க்கை உதாரணத்தை எடுத்துக் காட்டினார். அந்த மகானைத் தாம் பார்க்க முடியுமா என்று புலிகேசி கேட்டதற்கு, "யுத்தக் குழப்பங்களின் போது அந்தப் பெரியார் இங்கே இருக்க வேண்டாம் என்று நானே அவரைத் தீர்த்த யாத்திரைக்கு அனுப்பி விட்டேன். இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை" என்று மகேந்திரர் தெரிவித்தார். புலிகேசி அப்போது "பல்லவ நாட்டு மகா சிற்பியைக் கூட நான் பார்க்க முடியாதோ?" என்று கேட்க, மகேந்திரபல்லவர், "யாரைச் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டார். "ஆயனர் என்பவரைத்தான்!" என்றார் புலிகேசி. "அவரைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று மிக்க வியப்புடன் மகேந்திர பல்லவர் கேட்டார்.

"காட்டின் மத்தியில் உள்ள சிற்ப வீட்டை ஒருநாள் நான் பார்த்தேன். அதனுள் உயிருள்ள பிராணி எதுவும் இல்லை. ஆனால், உயிர்ச் சிலைகள் பல இருந்தன. அதிலும் வெகு வெகு அற்புதமான நடனச் சிலைகள் பல இருந்தன. அப்புறம் விசாரித்தேன், அந்த வீட்டில் ஆயனர் என்னும் மகா சிற்பியும், நாட்டியக் கலையில் வல்ல அவருடைய மகளும் வசித்ததாகவும், கோட்டை முற்றுகை காரணமாக அவர்கள் எங்கேயோ போய் விட்டதாகவும் தெரிந்தது. அவர்கள் தற்போது இருக்குமிடமும் தங்களுக்குத் தெரியாதோ?" என்று வாதாபிச் சக்கரவர்த்தி கேட்டார். "அவர்கள் இருக்குமிடமும் தெரியும்; அவர்களை அழைத்து வர ஆளும் அனுப்பி இருக்கிறேன். நாளை கூடும் மகா சபைக்கு அவர்கள் வந்தாலும் வருவார்கள்" என்றார் காஞ்சிச் சக்கரவர்த்தி. அதைக் கேட்ட புலிகேசி மிக்க உற்சாகம் அடைந்தவராகக் காணப்பட்டார்.

வாதாபிச் சக்கரவர்த்தி காஞ்சி நகருக்குள் பிரவேசித்த எட்டாம் நாள், அவருக்கு பிரிவுபசாரம் நடத்துவதற்காகக் காஞ்சியின் பிரதான சபா மண்டபத்தில் பெரிய சபை கூடியது. அந்த மகா சபையில் பல்லவ சாம்ராஜ்யத்தின் மந்திரிகள், அமைச்சர்கள், தளபதிகள், மண்டலத் தலைவர்கள், கோட்டத் தலைவர்கள், நகரத் தலைவர்கள், வர்த்தகச் செல்வர்கள் முதலியோர் வீற்றிருந்தனர். இன்னும் சைவ வைஷ்ணவ சமய குருமார்கள், வடமொழி வித்வான்கள், தமிழ் மொழிப் புலவர்கள், இரு பாஷைகளிலும் கவி பாடத் தெரிந்தவர்கள், சங்கீத வித்வான்கள், சிற்பிகள், சித்திரக்காரர்கள் முதலியோரும் வரிசைக் கிரமமாக வீற்றிருந்தார்கள்.

மேலே கூறப்பட்ட கூட்டத்தாருக்குள் பிரமுகர்கள் வாதாபிச் சக்கரவர்த்திக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். வடமொழி, தென்மொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்ல புலவர்கள் அந்த மகத்தான சந்தர்ப்பத்துக்கேற்ற கவிதைகளைப் புனைந்து பாடினார்கள். இரண்டு சக்கரவர்த்திகளில் எவரையும் தாழ்த்தாமலும் ஒருவரையும் அதிகமாக உயர்த்தாமலும் சமமான புகழுரைகளை நிறைத்துப் புலவர்கள் பாடிய கவிகள் அவர்களுடைய கவித் திறத்தைக் காட்டிலும் அவர்களுடைய லௌகிக ஞானத்துக்கே சிறந்த உதாரணங்களாயிருந்தன. பிறகு, சாம்ராஜ்யத்தின் சங்கீத வித்வான்கள் தங்களுடைய வித்வத்தைக் காட்டினார்கள். மகேந்திர பல்லவரால் புதிதாக அமைக்கப்பட்ட ஏழு நரம்புகள் உடைய 'பரிவாதினி' என்னும் வீணையைப் புலிகேசி பரிசீலனை செய்து மிகவும் மகிழ்ந்தார்.

இவ்வாறு நேரம் போய்க் கொண்டேயிருந்தது. ஆனாலும், மகேந்திர பல்லவர், வாதாபிச் சக்கரவர்த்தி இருவருமே கொஞ்சம் மன அமைதியின்றிப் பரபரப்பு உள்ளவர்களாகக் காணப்பட்டார்கள். மகேந்திர பல்லவரின் கண்கள் அடிக்கடி சபா மண்டபத்தின் வௌி வாசற்பக்கத்தை நோக்கிக் கொண்டிருந்தன. கடைசியாக, அவர் உற்சாகமான குரலில், "அதோ வந்து விட்டார்கள்!" என்று கூறிய போது, பக்கத்திலிருந்த வாதாபிச் சக்கரவர்த்தி, "யார்? ஆயனரும் அவர் மகளுந்தானே?" என்று வினவினார். அப்போது உண்மையாகவே அச்சபா மண்டபத்தின் வௌி வாசல் வழியாக ஆயனரும் சிவகாமியும் உள்ளே பிரவேசித்துக் கொண்டிருந்தார்கள். வாசற்படியைத் தாண்டும் போது சிவகாமியின் கால் வாசற்படியில் இடறிற்று. 'ஆஹா! இது என்ன அபசகுனம்? என்று எண்ணமிட்டுக் கொண்டே சிவகாமி மானின் நடைபெற்ற மயிலைப் போலச் சபா மண்டபத்திற்குள் பிரவேசித்தாள்.