உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 27

விக்கிமூலம் இலிருந்து


27-ஆம் அதிகாரம்
எதிர் பாரா நல்வரவு

ஒரு நாள் சாயரக்ஷை நானும் தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் வேடிக்கையாக உரையாடிக்கொண்டிருந்தோம். அப்பொழுது என்னுடன் சத்தியபுரியிலிருந்து வந்த வண்டிக்காரன் ஒருவன் வெளியே யிருந்து மேல்மூச்சு கீழ்மூச்சுடன் ஓடி வந்து உள்ளே நுழைந்து எங்களைப் பார்த்து “““சந்தோஷ சமாசாரம்! சந்தோஷ சமாசாரம்!““” என்று சொல்லிக்கொண்டு ஆநந்த நர்த்தனஞ் செய்தான். நாங்கள் “அந்த சமாசாரம் என்ன?” என்று கேட்க, அவன் “““சுவாமிகளே! நான் இரண்டு நாழிகை வழி தூரம் ஓடி வந்ததால் எனக்கு இரைக்கின்றது.! இரைப்பு அடங்கின உடனே சொல்லுகிறேன்““” என்று மறுபடியுங் குதித்துக் கூத்தாடினான். நான் அவனைப் பார்த்து “““இப்பொழுது நீ எத்தனையோ வார்த்தைகள் பேசினாய்! சந்தோஷச் செய்தி இன்னதென்று ஒரு வார்த்தையிலே சொல்லக் கூடாதா?”““ என்று உறுக்கினேன். அவன் மறுபடியும் காரியம் இன்னதென்று தெரிவிக்காமல் சம்பந்தமில்லாத காரியங்களைச் சொல்லி நேரம் போக்கினான். எனக்குக் கோபம் ஜனித்து அவனை அடிக்கிறதற்காகக் குதிரைச் சவுக்கைக் கையிலே எடுத்தேன். அவன் கத்திக் கொண்டு ““நான் சந்தோஷ சமாசாரங் கொண்டுவந்ததற்கு இது தானா சம்மானம்? நான் இன்று நேற்று வந்தவனல்லவா? நான் எத்தனையோ காலமாக உங்களுக்கு ஊழியஞ் செய்து வருகிறேன். பெரிய ஐயா, அம்மா கூட என்னை ஒரு வார்த்தை சொன்னதில்லை; ஒரு அடி அடித்ததில்லையே! நேற்றைப் பிள்ளையாகிய நீங்கள் என்னை அடிக்கலாமா? வையலாமா?”” என்று பல அசங்கதமான காரியங்களைப் பேசினானே தவிரச் சங்கதி இன்னதென்று தெரிவிக்கவில்லை. உடனே எனக்குக் கோபாக்கினி மூண்டு குதிரைச் சவுக்கை அவன் மேலே பிரயோகிக்க ஆரம்பித்தேன். அவன் இருபது அடி வாங்கின பிற்பாடு, எங்களை நோக்கி; “சத்தியபுரியிலிருந்து ஐயா, அம்மா எல்லாரும் வருகிறார்கள். நான் ஆற்றுக்குப் போனபோது அவர்களை வழியிலே கண்டு சந்தோஷ சமாசாரஞ் சொல்வதற்காக இரண்டு நாழிகை வழி தூரம் குடல் தெறிக்க ஓடி வந்தேன்”” என்றான். இதைக் கேட்டவுடனே தேவராஜப் பிள்ளை பெருங் களிப்புடனே எழுந்து பெட்டியைத் திறந்து இரண்டு கோடி வஸ்திரங்களை எடுத்து சந்தோஷ சமாசாரங் கொண்டுவந்ததற்காக அந்த வண்டிக்காரனுக்கு வெகுமானஞ் செய்தார். அவன் அத்தனை அடிபட்டும் எங்களுக்குச் சங்கதியைப் பூரணமாய்த் தெரிவிக்கவில்லை. அவன் சொன்னதைக் கொண்டு என் தாய்தகப்பனார் மட்டும் வருவதாக எண்ணிக்கொண்டோமே தவிரச் சம்பந்தி முதலியாரும் அவருடைய பத்தினியும் வருவதாக ஊகிப்பதற்கு இடமில்லாமலிருந்தது. ஆனால் அவன் ஞானாம்பாள் இடத்திலே போய் அவளுடைய தாய் தந்தை வருவதாக மட்டுஞ் சொல்லி என் தாய் தந்தையருடைய வரவைப் பற்றி ஒன்றும் பிரஸ்தாபிக்காமலிருந்து விட்டான். நானும் ஞானாம்பாளும் சந்தித்தபோது தான் அவளுடைய தாய் தந்தைகள் வருவதாக எனக்கும் என்னுடைய தாய்தந்தைகள் வருவதாக ஞானாம்பாளுக்கும் வெளியாயிற்று. ஞானாம்பாள் என்னை நோக்கி “அந்த வண்டிக்காரனுடைய குதூகலிப்பையும் ஆனந்தத்தையும் யோசிக்குமிடத்தில் நம்முடைய தாய்தந்தையர் வரவையன்றி வேறு காரணமும் இருக்க வேண்டும். அதை இப்போது நான் அறிகிறேன்” என்று சொல்லி அந்த வண்டிக்காரனை அழைத்து அவனைப் பார்த்து “எல்லோரும் வருவதாகச் சொன்னாயே! அவர்களுடன் கூட உன் பெண்சாதியும் வருகிறாளா?” என்று கேட்டாள். அவன் “ஆம் அம்மா! ஆம் அம்மா!” என்று சொல்லி மறுபடியும் நடனஞ் செய்யத் தொடங்கினான். அவன் ஆனந்த நடனத்துக்கும் அவன் பாதிச் சமாசாரஞ் சொல்லிப் பாதியைச் சொல்லாமல் விட்டதற்கும் இப்போது தான் காரணம் தெரிந்தது.
அவன் வந்த உடனே காரியத்தைத் தெரிவித்திருப்பானால் நானும் தேவராஜப் பிள்ளை முதலானவர்களும் என் தாய் தந்தைமார்களை வழியிலே எதிர்கொண்டு அழைப்பதற்காகப் போயிருப்போம். அவன் காரியத்தைச் சொல்லாமல் கால விளம்பனஞ் செய்தபடியால் நாங்கள் எதிர்கொண்டுபோக அவகாசம் இல்லாமற் போய்விட்டது. பிறகு சற்று நேரத்திற்குள் அநேகம் வண்டிகள் பல்லக்குகள் முதலிய வாகனங்கள் வருகிற ஓசை ேட்டு நாங்கள் வெளியே ஓடினோம். என் தகப்பனாரும் சம்பந்த முதலியாரும் இரண்டு குதிரைகள் பூண்ட ரதத்தினின்று கீழே இறங்கினார்கள். உடனே தேவராஜப் பிள்ளை அஞ்சலியஸ்தராய் அவர்களிடஞ் சென்று கைலாகு கொடுத்து அழைத்துக்கொண்டு வந்து அவர்களைத் தக்க ஆசனங்களில் இருத்தி உபசரித்தார். அவருடைய பத்தினி முதலிய ஸ்திரீகள் என் தாயார் மாமியார் முதலியோர்களை எதிர்கொண்டு அழைத்து வந்து மரியாதை செய்தார்கள். நான் என் தாய் தந்தையரைக் கண்டவுடனே பூமியில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்து அவர்களுடைய திருப் பாதங்களை என் கண்ணீராற் கழுவினேன். அவர்கள் ஒவ்வொருவரும் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு நெட்டுயிர்ப்புடன் பொருமி அழுது அவர்களுடைய கண்ணீரால் என்னை ஸ்நானஞ் செய்வித்தார்கள். என்னுடைய பிரிவின் நிமித்தம் அவர்கள் பாதி உடம்பாய் மெலிந்து போயிருந்தபடியால் இப்படிப்பட்ட பக்ஷமுள்ள தாய் தந்தையர்களை விட்டுப் பிரிந்தோமேயென்று நினைத்து நினைத்து நெடுநேரம் விம்மி அழுதேன். பிறகு என் தந்தையார் ஒரு பிரகாரம் அவருடைய பொருமலை அடக்கிக் கொண்டு தேவராஜப் பிள்ளையைப் பார்த்து “ஐயா!`இந்தப் பிள்ளை பிறந்த நாள் முதல் ஒருநாளாவது நான் பிரிந்ததில்லை. அப்படிப்பட்ட என்னை இத்தனை நாளாகப் பிரிந்திருக்கும்படி செய்துவிட்டான். எங்களுக்குப் பிராணன் இவனே யன்றி, வேறு பிராணன் இல்லை. இவன் பிரிந்த நாள் முதல் நாங்கள் பிராணன் இல்லாத சரீரம் போலிருந்தோமேயல்லாமல் மற்றப்படியல்ல. யுபெற்ற மனம் பித்து பிள்ளை மனங் கல்ரு என்கிற பழமொழியை மெய்யாக்கிவிட்டான். ஆயினும் இவன் மேலே தோஷம் சொல்வதற்கு இடமில்லை. நான் இவளையும் ஞானாம்பாளையும் நிஷ்காரணமாய்த் தூஷித்து ஒரு நாளுஞ் சொல்லாத கடுஞ் சொற்களைப் பிரயோகித்தபடியால் அவர்கள் எங்களைப் பிரியும்படி நேரிட்டது. என்னுடைய குற்றத்தை இப்போது நன்றாக உணருகிறேன். இனி ஒருக்காலும் இவனையும் ஞானாம்பாளையும் நான் தூஷிக்கிறதில்லையென்றும் உங்கள் முன்பாக நான் பிரமாண பூர்வமாகச் சொல்லுகிறேன். இவனும் என்னை ஒருநாளும் பிரிகிறதில்லையென்று பிரமாணம் செய்யவேண்டும்” என்றார். பக்ஷம் நிறைந்த இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே நான் மனம் உருகி என் தகப்பனார் பாதத்தில் விழுந்து “ஐயா! உங்களுக்குச் சொல்லாமல் நான் வெளிப்பட்டது என்மேலே குற்றமேயன்றி உங்கள்மேலே அணுவளவுங் குற்றமில்லை. நீங்கள் எனக்குச் செய்த எண்ணிறந்த உபகாரங்களுக்குப் பிரதியாக என்னுடைய தேகத்தை உங்களுக்குச் செருப்பாய்த் தைத்துப் போட்டாலுந் தகும்; இனி ஒரு நாளும் உங்களுடைய உத்தரவில்லாமல் உங்களைப் பிரிகிறதில்லையென்று நான் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்” என்றேன். இந்தச் சமயத்தில் சம்பந்தி முதலியாரும் வந்து கலந்துகொண்டார். அவர் என்னை ஆலிங்கனஞ் செய்துகொண்டு நெடு நேரம் என்னை விடாமற் பொருமினார். என்னை விட்டுவிட்டால் நான் மறுபடியும் அவருடைய மகளை அழைத்துக் கொண்டு தேசாந்தரம் போய்விடுவேனென்று பயந்து அவர் பிடித்த பிடியை விடாமல் என்னை ஆலிங்கனஞ் செய்ததாகத் தோன்றிற்று. கடைசியாக அவருடைய ஆலிங்கனமும் நின்றது; மூச்சுத் திணறலும் அடங்கிற்று.

பிறகு என் தகப்பனாரும் மாமனாரும் தேவராஜப் பிள்ளையை நோக்கி “ஐயா! எங்கள் பிள்ளைகள் முகம் அறியாத தேசத்திலே போய் என்ன துன்பப்படுகிறார்களோ வென்று நாங்கள் சித்தாங்கிரந்தர்களாயிருந்தோம். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல அவர்கள் உங்களிடத்தில் வந்து சேர்ந்திருக்கிற சமாசாரந் தெரிந்த பிறகு தான் எங்களுக்கு ஆறுதல் உண்டாயிற்று. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றதுபோல் உங்களிடத்தில் வந்து சேர்ந்த பிற்பாடு அவர்களுக்கு என்ன குறைவு இருக்கிறது? ஆனால் அவர்கள் வெளிப்பட்டபிறகு எங்களுடைய கிருகங்கள் தாமரையில்லாத தடாகம் போலவும் சந்திரனில்லாத இரவு போலவும் இருள் அடைந்திருக்கின்றன. ஆகையால் அவர்களைத் தாங்கள் உத்தரவு கொடுக்கவேண்டும். கனக சபைக்குக் கலியாணம் நடக்கும்போது நாங்கள் அகத்தியம் வருகிறோம். அவனுடைய கலியாணத்தை நிறைவேற்றாமல் ஏன் தாமதஞ் செய்கிறீர்கள்?” என்று வினவத் தேவராஜப் பிள்ளை சொல்லுகிறார்:—

“கனக சபை கலியாணத்தை எவ்வளவு சீக்கிரத்தில் முடிக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேனோ அவ்வளவுக்கு அது பிந்திப் போகின்றது. பாளையப்பட்டுச் சம்பிரதாயம் என்னவென்றால் எங்களுக்குள் கலியாணம் நடக்கிறதற்கு முன் கலெக்டர் ரிவின்யூ போர்ட் முதலான அதிகாரஸ்தர்களுக்கு எழுதி உத்தரவு பெற்றுக்கொண்டு கலியாணஞ் செய்கிறது வழக்கம். நான் அந்த அதிகாரஸ்தர்களூக்குப் பல மனுக்கள் அனுப்பியும் யாதொரு மறுமொழியும் வரவில்லை. அந்தக் கலெக்டர் கச்சேரி சிரெஸ்ததார் கேட்டுக்கொண்டபடி என் தங்கை மகளைத் தனக்குக் கலியாணஞ் செய்து கொடுக்கவில்லை யென்கிற அகங்காரத்தினால் கனகசபை கலியாணம் நிறைவேறாதபடி அவன் ஏதேதோ விகற்பங்கள் செய்துவருகிறான். அவனுடைய துர்ப்போதனைகளுக்குச் செவி கொடுத்துக் கலெக்டர் என்னுடைய பாளையப்பட்டை ஜப்தியில் வைக்கவேண்டிய முயற்சிகள் செய்து வருகிறார். நான் ஜப்தி செய்யக்கூடாதென்பதற்குள்ள நியாயங்களைக் கண்டு கவர்ன்மெண்டாரவர்களுக்கு விண்ணப்பம் அனுப்பியிருக்கிறேன். அதற்கு அனுகூலமான மறுமொழி கிடைக்குமென்று தினந்தோறும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்; கனகசபை எனக்குப் பிள்ளையல்லவென்றும் கவர்ன்மெண்டாரை வஞ்சிக்கிறதற்காக நான் அவனைப் பிள்ளை போல் பாவிப்பதாகவும் அந்தச் சிரெஸ்ததார் கலெக்டர் முதலான அதிகாரிகளுக்குப் போதித்து வருகிறான். என் தம்பி செய்த மாறுபாடு இவ்வளவு பிரமாதமாய் வந்து விளைந்திருக்கிறது. ஆயினும் சத்தியத்தை அசத்தியம் வெல்லுமா? புண்ணியத்தைப் பாவம் ஜயிக்குமா? சுத்த நிர்த்தோஷியான என்னைக் கடவுள் கைவிடுவாரா? எப்படியும் சில தினங்களுக்குள் கலியாணத்துக்கு உத்தரவு வருமென்று நிச்சயமாக நம்பியிருக்கிறேன். அதுவரையுந் தாங்களிருந்து அந்தக் கலியாணத்தைச் சிறப்பிக்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.” என்றார். அந்தப் பிரகாரம் என் தகப்பனாரும் மாமனாரும் சம்மதித்துப் பயணத்தை நிறுத்தினார்கள். அவர்களுக்கு நடந்த உபசாரங்களும் மரியாதைகளும் அரசர்களுக்குக் கூட நடவா. போக பூமியில் வசிப்பவர்கள் போல் நாங்கள் எங்களுடைய ஊரையுங் கிருகங்களையும் சுத்தமாய் மறந்து விட்டோம்.

இந்த அதிகாரத்தின் துவக்கத்திலே சொல்லியபடி என் தாய் தந்தையரின் வரவைப் பற்றி முந்தி வந்து சமாசாரந் தெரிவித்த அந்த வண்டிக்காரன் மறுபடியும் என்னிடத்தில் வந்து ”“ஐயா! நான் சந்தோஷ சமாசாரந் தெரிவித்ததற்காக நீங்கள் ஒரு வெகுமானமுஞ் செய்யவில்லையே. இப்போது நான் கேட்கிறபடி உத்தரவு செய்யவேண்டும்”” என்று என் காலில் விழுந்து வணங்கினான். ““நீ கேட்கிற காரியம் கிரமமாமாயிருந்தால் அந்தப் படி செய்கிறேன். அது இன்னதென்று சொல்லு“” என்றேன். அவன் “”அது கிரமமா யிருந்தாலும், அக்கிரமாயிருந்தாலும் அகத்தியம் செய்யவேண்டும்”” என்றான். நான் அவனைப் பார்த்து ”“யுக்தா உக்தம் பாராமல் ஒரு காரியத்தையும் வாக்குத் தத்தஞ் செய்யக்கூடாது. அலெக்சான்றர் மகாராஜனிடத்தில் ஒருவன் வந்து ‘மகாராஜாவே! நீங்கள் யார் என்ன கேட்டாலும் ஆக்ஷேபியாமற் கொடுக்கிறீர்களென்கிற பிரக்கியாதி பெற்றிருக்கிறீர்கள்; எனக்கு ஒருகாசு கொடுக்க வேண்டும்’ என்று கேட்டான். உடனே அந்த அரசர் ’அவ்வளவு அற்பப் பொருள்களைக் கொடுப்பது என்னுடைய அந்தஸ்துக்குத் தகாது’ என்றார். அவன், “’அப்படியானால் எனக்கு ஒரு ராஜ்யங் கொடுங்கள்“’ என்றான். இவர் அவனைப் பார்த்து ’அவ்வளவு பெரிய காரியத்தைக் கேட்பது உன்னுடைய அந்தஸ்துக்குத் தகாது’ என்றார். அப்படிப் போல உன்னுடைய அந்தஸ்துக்கும் என்னுடைய அந்தஸ்துக்கும் தக்க காரியத்தை நீ கேட்டுக்கொண்டால் செய்கிறேன்”“” என்றேன் அவன் என்னை நோக்கிச் சொல்லுகிறான்:— “நான் உட்கார்ந் திருக்கும்போதே தூங்கி விழுகிறே னென்று அடிக்கடி என்னைக் கோபிக்கிறீர்கள்; தூக்கத்தை யடக்க என்னாலே சாத்தியப்படவில்லை. நான் சந்தோஷ சமாசாரங் கொண்டுவருவதற்காக நான் கேட்கும் வெகுமானம் ஏதென்றால் நான் தூங்கி விழும்படியாக உத்தரவு கொடுக்க வேண்டும்”“” என்றான். இதைக் கேட்ட வுடனே, எனக்கும் அப்போது கூட இருந்த தேவராஜப் பிள்ளை முதலானவர்களுக்கும் பெரு நகைப்பு வந்துவிட்டது. தேவராஜப் பிள்ளை என்னைப் பார்த்து “”“உங்கள் பண்டிக்கார னுடைய பிரார்த்தனையானது, நான் வாசித்த ஒரு கதையை நினைப்பூட்டுகின்றது”. அஃதென்ன வெனில், ஒரு அரசனுக்கு இஷ்டமாயிர்ந்த ஒரு கல்விமான், அடிக்கடி தன்னுடைய தாடியைத் தடவுவதும், அதில் மயிர் பிடுங்குவதும், வழக்கமா யிருந்தது. அதை ஒரு நாள் அரசன் கண்டு, அந்த வித்துவாளைப் பார்த்து, 'இனிமேல் நீ தாடியில் மயிர் பிடுங்கினால், உன்னைத் தண்டிப்பேன்' என்று உத்தரவு கொடுத்தான். அந்த உத்தரவு வித்துவானுக்குப் பெரிய பிராண சங்கடமா யிருந்தது. சில தினங்களுக்குப் பின்பு, அந்த அரசனுக்கு அந்தக் கல்விமான் ஒரு பெரிய உபகாரம் செய்த படியால், அரசனுக்குச் சந்தோஷ முண்டாகி, அவளைப் பார்த்து, 'நீ என்ன வெகுமதி கேட்டாலும் கொடுக்கச் சித்தமா யிருக்கிறோம். நீ வேண்டிய யதைக் கேள்' என்றான். உடனே அந்த வித்துவான், 'நான் முன் போல், தாடியில் மயிர் பிடுங்க உத்தரவு கொடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு சம்மானம் வேண்டாம்' என்றான். அரசன் சிரித்துக் கொண்டு, அந்தப் படி உத்தரவு கொடுத்தான். அப்படியே, நீங்களும் உங்களுடைய பண்டிக்காரன் தூங்கி விழும் படி உத்தரவு கொடுக்க வேண்டும்" என்று தேவராஜப் பிள்ளை, அவனுக்குப் பரிந்து பேசினார். அந்தப் படி, நானும் உத்தரவு கொடுத்தேன். அவனும் தூங்கி விழ ஆரம்பித்தான்.