பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 26

விக்கிமூலம் இலிருந்து


26-ஆம் அதிகாரம்
தாய் தந்தையர் செய்த உபகாரம்—நல்ல
பிள்ளைகளின் சரித்திரம்

நாங்கள் வந்து சேர்ந்த மறு தினமே எங்களுடைய க்ஷேமலாபங்களைக் குறித்து தேவராஜப் பிள்ளை என் தகப்பனாருக்குத் திருமுகங்கள் அனுப்பினார். காலம் போகப்போக எங்கள் தாய் தந்தைகளை விட்டுப் பிரிந்த துக்கம் பெரிதாயிருந்தது. எங்கள் தந்தையர்களிடத்தில் எங்களுக்கு இருந்த அற்ப மனஸ்தாபமும் நாளாவட்டத்தில் தீர்ந்துபோய் விட்டது. ஒரு நாள் நானும் ஞானாம்பாளும் அடியிற் கண்டபடி சல்லாபித்துக் கொண்டோம்.

“தாய் தகப்பனைப்போல நமக்கு உபகாரிகள் யார் இருக்கிறார்கள்? மற்றவர்கள் எல்லாரும் ஏதாவது அற்ப உதவி செய்வார்கள். தாய் தகப்பன்மாரோவென்றால் தேகத்தையும் பிராணனையும் பூலோக வாழ்வையும் நமக்குக் கொடுத்த பரம தாதாக்களாயிருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பெற்று வளர்த்து பெயரூட்டிப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டிச் சம்ரக்ஷித்தார்கள். மற்றவர்கள் எல்லாரும் யாதொரு பிரதி உபகாரத்தை விரும்பி உதவி செய்வார்கள். தாய் தந்தையர்கள் யாதொரு பிரதி பலனையும் வேண்டாமல் நம்முடைய சுகமே அவர்களுடைய சுகமாகவும் நம்முடைய துக்கமே அவர்களுடைய துக்கமாகவும் எண்ணி நாம் அழும்போதுகூட அழுதும் நாம் சந்தோஷிக்கும்போது கூடச் சந்தோஷித்தும் அத்தியந்த அன்பு பாராட்டினார்கள். நாம் வியாதியில்லாமலிருக்கும் பொருட்டு அவர்கள் மருந்துகளை உண்டு பத்தியம் பிடித்தார்கள். நாம் க்ஷேமமாயிருக்கும் பொருட்டுப் பல விரதங்களை அநுஷ்டித்து தேவதாப் பிரார்த்தனை செய்தார்கள். நாம் தூங்கும்போது அவர்கள் தூங்காமல் நம்மைப் பாதுகாத்தார்கள். நாம் வியாதியாயிருக்கும்பொழுது அவர்கள் அன்னம் ஆகாரம் நித்திரையைத் துறந்துவிட்டார்கள். நம்முடைய வாந்தி மல ஜலாதி அசுத்தங்களையுஞ் சகித்தார்கள். நம்மைச் சௌக்கியத்தில் வைக்கும்பொருட்டு அவர்களுடைய சௌக்கியங்களைக் குறைத்துக் கொண்டார்கள். துக்கங்களை எல்லாம் அவர்கள் தாங்கிக்கொண்டு சுகங்களை நமக்குக் கொடுத்தார்கள்” என்று பலவாறாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் எங்களிடத்துக்கு வந்தார்கள். நாங்கள் தாய்தகப்பன்மார்கள் செய்த நன்மைகளைக் குறித்துச் சம்பாஷிக்கிறோ மென்பதை தேவராஜப்பிள்ளை தெரிந்துகொண்டு அவர் எங்களைப் பார்த்து “கொடுமையான தாய்தகப்பன்மார்களுக்குக் கூடச் சில நல்ல பிள்ளைகள் எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில சரித்திரங்களைச் சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று சொல்லுகிறார். “

சில காலத்துக்குமுன் தஞ்சை நகரத்திலே சுப்பையன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு புத்திரர்கள். அவர்களில் மூத்தவனுடைய ஜாதக பலன் தகப்பனுக்கு ஆகாது என்று ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருந்தபடியால் அவனைத் தகப்பன் சத்துரு பாவமாக எண்ணத் தலைப்பட்டான். அந்தப் பிள்ளையை அவன் கண்ணாற் பார்க்கிறதுமில்லை; கையால் தொடுகிறதுமில்லை. மூத்த பிள்ளை அவனுக்கு வேம்பாகவும், இளைய பிள்ளை கரும்பாகவும் போய்விட்டார்கள். மூத்த பிள்ளை நன்மை செய்தாலும் அது தகப்பனுக்குத் தீமையாகத் தோன்றும். இளைய பிள்ளை செய்கிற தீமையெல்லாம் நன்மையாகத் தோன்றும். மூத்த பிள்ளை இடத்தில் தகப்பனுக்கு உண்டாயிருக்கிற துவேஷத்தைப் பரிகரிக்கிறதற்கு அந்தப் பிள்ளையின் தாயார் அவளாற் கூடியமட்டும் பிரயாசைப்பட்டும் நிஷ்பிரயோசனமாய்ப் போய்விட்டது. ஆயினும் மாதா உள்ளவரைக்கும் மூத்த பிள்ளைக்குப் பத்தாம் வயதும், இளைய பிள்ளைக்கு ஒன்பதாம் வயதும் நடக்கும்பொழுதும் கஷ்டகாலம் ஆரம்பித்தது. அந்தப் பிள்ளையைத் தகப்பன் திரும்பிப்பார்க்கிறதே யில்லை. தகப்பனுக்கு ஒரு அற்பத் துன்பம் நேரிட்டாலும், மூத்த பிள்ளையினுடைய ஜாதகப் பலன் என்று நினைத்து அந்தப் பிள்ளையைத் தகப்பன் விரோதித்து வந்ததுந் தவிர, இளைய பிள்ளையும் தமையன் மேலே கோளுங்குறைகளையுஞ் சொல்லித் தகப்பனுடைய துவேஷம் அதிகரிக்கும்படி செய்தான். மூத்த பிள்ளை இன்னும் சில நாள் வரைக்கும் தகப்பன் வீட்டில் இருந்திருப்பானானால் அவனுடைய ஆயுசு முடிந்து தாய் போன இடத்துக்குப் போயிருப்பான் என்பது சத்தியம். அவன் படுகிற கஷ்ட நிஷ்டூரங்களை அவன் தாயுடன் பிறந்த அம்மான் கேள்விப்பட்டு, அவன் வந்து அந்தப்பிள்ளையைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சம்ரக்ஷித்துவந்தான். அவன் எப்படியாவது தொலைந்தானே யென்று தகப்பன் சந்துஷ்டியடைந்து தன்னுடைய பிரியத்தையெல்லாம் இளைய பிள்ளைக்கே தத்தஞ் செய்துவிட்டான். மூத்த பிள்ளைக்கு இருபத்திரண்டு வயது நடக்கும்போது தகப்பனுக்குக் கபவாத சுரங்கண்டு அநேக மாசம் வரைக்கும் அவஸ்தைப்பட்டான். அந்த வியாதியும் மூத்த பிள்ளையினுடைய ஜாதக விசேஷத்தால் நேரிட்டதென்று தகப்பன் எண்ணி அந்தப் பிள்ளைக்கு ஒன்றும் வைக்காமல் சகல சொத்துக்களுக்கும் இளைய பிள்ளையைப் பாத்தியப்படுத்திப் பிரசித்தமாக ஒரு மரண சாசனம் எழுதிவைத்தான். மூத்த பிள்ளை நற்குண சம்பன்னன் ஆகையால் தகப்பன் என்ன கொடுமை செய்தாலும் அதைப் பாராட்டாமல் வியாதியாயிருக்கிற தன் தகப்பனை அடிக்கடி போய்ப் பார்த்துக்கொண்டு வருவான். அவனைக் கண்டபோதெல்லாம் தகப்பன் பாம்புபோல் சீறி, வைது, துரத்திக்கொண்டு வந்தான். ஒரு நாள், விழலினால் ஙேயப்பட்டிருந்த மேல் மாடியில் தகப்பன் வியாதி யுடன் படுத்திருக்கும் போது அந்த மேல் மாடிக்குப் போகிற படிகளில் நெருப்புப் பிடித்துக் கொண்டு மேல் மாடியிலும் தாவ ஆரம்பித்தது. படிகளில் நெருப்புப் பற்றிக் கொண்ட படியால் வியாதியஸ்தனை ரக்ஷிக்கும் பொருட்டு மேல் மாடியில் ஏறுவதற்கு மார்க்க மில்லாமல் போய் விட்டது. இவ்வகையாகத் தகப்பனுக்கு நேரிட்ட ஆபத்தை, மாமன் வீட்டிலிருந்த மூத்த பிள்ளை கேள்வியுற்று உடனே ஓடிவந்து படி வழியாய் மேல்மாடிக்குப் போக யத்தனித்தான். அவனுடைய பிரயத்தனத்துக்கு அக்கினிச் சுவாலை இடங்கொடுக்க வில்லை. அந்த ஜேஷ்ட புத்திரத் துரோகிக்கு மகன் செய்யும் உபகாரம் அக்கினிக்குச் சம்மதம் இல்லாதது போல வழி மறித்துக்கொண்டது. மேல் மாடியின் பின்புறத்திலிருக்கிற பலகணிகளின் வழியாய் உள்ளே நுழைந்து தகப்பனை வெளிப்படுத்துகிறதென்று மூத்த பிள்ளை நிச்சயித்துக் கொண்டு அந்தப் பலகணிகள் ஒரு தென்னைமர உயரத்திலிருந்தபடியால் இரண்டு பெரிய ஏணிகளைச் சேர்த்துக் கட்டி ஜன்னலுக்கு நேரே நிறுத்தி அவைகளின் வழியாக ஏறி ஜன்னலின் மரக்கம்பிகளை அரிவாளால் வெட்டிப் பிளந்து கொண்டு உள்ளே பிரவேசித்து தகப்பனை மிருதுவாகத் தூக்கி ஜன்னல் வழியாக இறக்கி ஏணியின் மேல் நிறுத்திக் கைலாகு கொடுத்துப் படிப்படியாய் நடத்திக்கொண்டு வந்து பூமியிலே சேர்த்தான். அப்படிச் செய்யாமல் சிறிது நேரம் தாமதப்பட்டிருக்குமானால் தகப்பனுடைய சரீரமும் அவனுடைய ஓர வஞ்சகமும் அவன் இளைய பிள்ளைக்கு எழுதி வைத்த மரண சாசனமும் அக்கினியில் வெந்து படுசூரணமாய்ப் போயிருக்குமென்பது அந்த அக்கினியே சாட்சி. ஒரு காலத்திலும் மூத்த பிள்ளையைத் தொடாமலிருந்த தகப்பன் அன்றையத் தினம் மார்போடு இறுகக் கட்டித் தழுவிச் சொல்லுகிறான்: “என் புத்திர பாக்கியமே! என் குலவிளக்கே!! என் கண்மணியே!!! உன்னைப்போல தர்மிஷ்டர்களும் என்னைப் போலே பாபிஷ்டர்களும் இந்த உலகத்தில் இருப்பார்களோ? நான் உனக்குச் செய்ததெல்லாம் கொடுமை; நீ எனக்குச் செய்ததெல்லாம் நன்மை; நான் உன்னுடைய குணத்தையும், என்னுடைய குணத்தையும் யோசிக்குமிடத்தில் நான் உனக்குத் தகப்பனாயிருக்க எவ்வளவும் யோக்கியன் அல்ல. நான் உனக்குச் செய்த துரோகமே, நெருப்பாக வந்து விளைந்ததே தவிர வேறல்ல. அந்த நெருப்பினின்று நீ என்னை ரக்ஷித்தபடியால் நீயே என்னைப் பெற்ற தாயும் தகப்பனும் ஆனாய்!” என்று பலவகையாக ஸ்தோத்திரஞ் செய்ததுமன்றி தான் செய்த கொடுமைகளை நினைத்து நினைத்து மனம் உருகி அழுதான். அன்று முதல் மூத்த பிள்ளையே தனக்குச் சகல பாக்கியமுமென்று நினத்து அவன் வசத்தில் ஆஸ்திகளையெல்லாம் ஒப்புவித்துத் தானும் இளைய குமாரனும் அவனால் போஷிக்கப்பட்டு வாழ்ந்தார்கள்.

வெகு காலத்துக்கு முன்பாக யூரோப்பிலே, (Europe) சிசிலி (Sicily) நாட்டில் இருக்கிற அக்கினி மலை அக்கினியைக் கக்கி, அநேக ஊர்களைச் சுட்டு நிர்மூலமாக்கினபோது ஜனங்கள் எல்லாரும் அதிக விலை பெற்ற சொத்துக்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்கள். அவர்களில் அநப்பியஸ் (Anapius) அம்பினோமஸ் (Amphinomas) என்கிற இரண்டு வாலகர்கள் யாதொரு ஆஸ்தியையும் தொடாமல் வயோதிகர்களான தங்களுடைய தாய் தந்தைகளைத் தூக்கிக்கொண்டு சென்று அவர்களுடைய பிராணனை ரக்ஷித்துப் பிரக்கியாதி அடைந்தார்கள்.

ரோமாபுரியை மூவேந்தர் கூடி அரசாக்ஷி செய்து வந்த காலத்தில் பெயர் பெற்ற பிரசங்க வித்வானாகிய சிசரோ (Cicero) என்பவரையும் அவருடைய சகோதரராகிய குவின்டஸ் (Quintus) என்பவரையும் இன்னும் அநேகரையும் கொண்டுவிடும்படி அந்த மூவேந்தர்கள் தீர்மானித்தார்கள். இந்தச் சமாச்சாரம் கேட்டவுடனே சிசரோவும் அவருடைய சகோதரரும் தப்பி ஓட ஆரம்பித்தார்கள். பிறகு சிசரோ தம்முடைய சகோதரனைப் பார்த்து “நான் கடற்கரைக்குப் போய்ப் பிரயாணக் கப்பல் திட்டஞ் செய்கிறேன். நீ வீட்டுக்குப் போய் வழிச் செலவுக்குப் பணம் கொண்டுவா” என்று ஆக்ஞாபித்தார். அந்தப் பிரகாரம் குவின்டஸ் என்பவர் வீட்டுக்குப் போனார். அவர் வீட்டுக்கு வந்திருக்கிற சமாசாரம் தெரிந்து அவரைப் பிடித்துக் கொல்வதற்காக அநேகம் போர்வீரர்கள் வீட்டுக்குள்ளே பிரவேசித்து அவரைத் தேடினார்கள். அவர் அகப்படாதபடி வீட்டுக்குள் ஒரு பக்கத்தில் ஒளிந்துகொண்டார். அந்தச் சேவகர்களுக்கு ஆக்கிரகம் உண்டாகி, அவருடைய மகனைப் பிடித்துத் தகப்பன் ஒளித்திருக்கிற இடத்தைக் காட்டும்படி அந்தப் பிள்ளையை அடித்துப் பலவிதமாக உபத்திரவஞ் செய்தார்கள். தாங்கக் கூடாத உபத்திரவங்களையெல்லாம் அந்தப் பிள்ளையாண்டான் சகித்துக் கொண்டு தகப்பன் ஒளிந்திருந்த இடத்தைக் காட்டாமலிருந்தான். குவின்டஸ் என்பவருக்கு தனது மகன் படுகிற உபத்திரவம் தெரிந்தவுடனே மனஞ் சகியாமல் வெளியே ஓடிவந்து அந்தக் கொலைஞரைப் பார்த்து “நிர்த்தோஷியான அந்தப் பிள்ளையை ஏன் உபாதிக்கிறீர்கள்? என்னைக் கொல்லுங்கள்!” என்று அழுதார். உடனே அவருடைய மகன் “என்னைக் கொல்லுங்கள்! தகப்பனாரைக் கொல்லவேண்டாம்” என்று பிரார்த்தித்தான். அந்தப் பரம சண்டாளர்கள் சற்றும் இரக்கமில்லாமல் தகப்பனையும் மகனையும் ஒரே காலத்தில் வெட்டிக் கொன்றார்கள்.

பெருமையிற் சிறந்த அலெக்சான்றர் (Alexander) என்னும் அரசனுடைய தாயாராகிய ஒலிம்பியாஸ் (Olympias) என்பவள் அதிகாரப் பிரியம் உள்ளவளாய் ராஜரீகக் காரியங்களிர் பிரவேசித்து மகனுக்கு ஓயாத சஞ்சலத்தைக் கொடுத்துக் கொண்டு வந்தாள். அப்படி இருந்தும் மாதாவின் மீதுள்ள அன்பு குறையாமல் அவர் திக்குவிஜயஞ் செய்யப் போன இடங்களில் அகப்பட்ட அபூர்வ வஸ்துக்களைத் தாயாருக்கு அனுப்பி வந்தார். அவரால் நியமிக்கப்பட்ட கவர்னராகிய அன்டிப்பாட்டர் (Antipater) என்பவரே தேச காரியங்களை நடப்பிக்க வேண்டாமென்றும் அலெக்சாண்டர் எழுதிய கடிதத்துக்கு அவருடைய தாயார் கடுங்கோபமாய் மறுமொழி எழுதியும் அந்த அரசனுக்கு மாதாமேலே எவ்வளவுங் கோபம் உண்டாகவில்லை. அவளுடைய உபத்திரவத்தைப் பொறுக்கமாட்டாமல் அன்டிப்பாட்டர் என்னும் கவர்னர் அலெக்சாண்டருக்கு அநேக கடிதங்கள் அனுப்பினார். அதற்கு அலெக்சாண்டர் சொன்னதாவது: “அன்டிப்பாட்டர் அறுநூறு கடிதங்கள் அனுப்பினாலும் அத்தனைக் கடிதங்களையும் என் தாயாருடைய கண்ணீர்த்துளி அழித்து அபலமாக்கிவிடுமென்பதை அன்டிப்பாட்டர் அறியவில்லை” என்றார்.

புருசியா (Purussia) தேசத்து அரசராகிய பிரடரிக் (Frederick) என்பவர் ஒருநாள் வேலைக்காரனை அழைப்பதற்காக வழக்கப்படி மணியை ஆட்டினார். ஒருவரும் வராதபடியால் அவர் வேலைக்காரனிருக்கிற இடத்தைப் போய்ப் பார்க்க வேலைக்காரன் ஒரு கட்டிலின் மேலே படுத்து நித்திரை செய்துகொண்டிருந்தான். அவனுடைய சட்டைப்பையில் ஒரு கடிதம் நீட்டிக்கொண்டிருந்தபடியால் அவனை எழுப்பாமல் அவர் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்து வாசித்தார். அது அந்த ஊழியக்காரனுக்கு அவனுடைய தாயாரால் எழுதப்பட்ட கடிதமாயிருந்தது. அதில் “”மகனே! உன்னுடைய சம்பளத்தில் மிச்சம் பிடித்து என்னுடைய கஷ்ட காலத்துக்கு உதவும்படியாக அனுப்பிக் கொண்டு வருகிறாயே! இந்த உபகாரத்திற்காகக் கடவுள் உனக்குக் கிருபை செய்வார்”” என்று எழுதப்பட் டிருந்தது. உடனே அந்த அரசர் சில தங்க நாணயங்களை அந்தக் கடிதத்துடன் சேர்த்து, வேலைக்காரனுடைய சட்டைப் பையில் மிருதுவாக வைத்துவிட்டு, மறுபடியும் அவருடைய அறைக்குள்ளே போய் மணியை அதிக பலமாக ஆட்டினார். வேலைக்காரன் விழித்துக் கொண்டு அரசருடைய சமூகத்துக்கு ஓடினான். அரசர் அவனைப் பார்த்து ““நீ நல்ல தூக்கம் தூங்கினாய்”” என அவன் ““க்ஷமிக்க வேண்டும்“” என்று பிரார்த்தித்தான். பிறகு தன் சட்டைப்பை கனமாயிருப்பதைக் கண்டு உள்ளே கையைவிட அந்தத் தங்க நாணயங்கள் அகப்பட்டன. அந்தத் தங்க நாணயங்கள் வந்த விவரந் தெரியாமல் அவன் மதிமயங்கி அழுதுகொண்டு அரசனுடைய காலில் விழுந்து ““மகாராஜாவே! யாரோ என் குடியைக் கெடுக்க இந்த நாணயங்களை என் சட்டைப் பையில் வைத்து விட்டார்கள்“” என்றான். உடனே வேந்தன் அவனைப் பார்த்து ““கடவுள் சில சமயங்களில் நித்திரையில் நமக்கு நன்மையை அனுப்புகிறதும் உண்டு. நீ என்னுடைய வந்தனத்துடன் அந்த நாணயங்களை உன் தாயாருக்கு அனுப்புகிறதும் அன்றி உன்னையும் உன் தாயாரையும் கைவிட மாட்டேன் என்று உன் மாதாவுக்குத் தெரிவி”“ என்றார்.

ஆஸ்திரியா (Austria) தேசத்தின் ராஜதானியாகிய வியன்னா (Vienna) நகரத்தில் ஒரு எளிய கைம்பெண்மாது இருந்தாள். அவளுடைய புருஷன் இறந்த பிற்பாடு காலக்ஷேபத்துக்கு மார்க்கமில்லாமல் அவளும் அவளுடைய பிள்ளையும் மகா கஷ்டப்பட்டார்கள். அவளுடைய வறுமையின் நிமித்தமே அவளுக்கு வியாதியுந் துர்ப்பலமும் அதிகரித்தன; சில நாளளவும் படுத்த படுக்கையிலே இருந்தாள். அவளுடைய புத்திரன் அதி பாலியனாயிருந்ததால் அவன் யாதொரு கைத்தொழில் செய்ய அசக்தனாயிருந்தான். அந்தச் சிறுவன் பல வைத்தியர்கள் வீட்டுக்குப் போய்த் தன்னுடைய தாயாருக்கு வைத்தியம் பார்க்க வரவேண்டுமென்று பிரார்த்தித்தான். அவர்கள் எல்லோரும் முன் பணமில்லாமல் வரமாட்டோமென்று சொல்லிவிட்டார்கள். அந்தப் பையன் அவர்களுக்கு இரக்கம் உண்டாகும்படி அவர்களுடைய காலில் விழுந்து நமஸ்காரஞ் செய்து அவனாற் கூடியமட்டும் இரந்து மன்றாடியும் அந்தப் பாவிகளுக்கு இரக்கம் உண்டாகவில்லை. அந்தப் பாலன் அழுதுகொண்டு தெருவிலே போகும்போது அந்தத் தேசத்துச் சக்கரவர்த்தியாகிய இரண்டாவது ஜோசேப் (Joseph II) என்பவர் ஒரு சாதாரணமான வண்டியின் மேலே ஏறிக்கொண்டு சவாரி போய்க்கொண்டிருந்தார். அவர் சக்கரவர்த்தி யென்பது அந்தப் பையனுக்குத் தெரியாதபடியால் அவன் அவருக்கு முன்பாகப் போய் வியாதியாயிருக்கிற தன் மாதாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகப் பொருளுதவி செய்யவேண்டுமென்று விண்ணப்பஞ் செய்தான். அவன் மாதாவுக்காகப் படும் பரிதாபத்தைப் பார்த்துச் சக்கரவர்த்திக்கு இரக்கம் உண்டாகி, “நான் உன்னுடைய மாதாவுக்கு வைத்தியஞ் செய்கிறேன். உன்னுடைய வீட்டைக் காட்டு” என்று சொல்லி, அவனையும் வண்டியின்மேல் ஏற்றுவித்துக் கொண்டு போனார். அவர் அந்த வீட்டுக்குப் போன உடனே அந்த ஸ்திரீ பசியினால் வாடிக் கண்ணிருட்டிக் காதடைத்து மெலிந்து போயிருக்கிறதைப் பார்த்து அவளுக்கு தரித்திரத்தைத் தவிர வேறு வியாதியில்லை யென்றும் அதற்கு ஔஷதம் பொருள் தானென்றும் தெரிந்து கொண்டு அந்தப் பையனைப் பார்த்து “உன்னுடைய தாயார் வியாதிக்குத் தகுந்த ஔஷதம் இன்னதென்று எழுதிக் கொடுக்கிறேன். மைக்கூடும் இறகும் காகிதமுங் கொண்டு வா” என்றார். அவன் அந்தப்பிரகாரங் கொண்டுவந்து கொடுத்தான். அவர் அந்தப் பொக்கிஷசாலை உத்தியோகஸ்தனுக்கு உத்தரவு எழுதி அனுப்பினார். அந்தப் பிரகாரம் அவர்களுக்கு நூறு வராகன் கிடைத்து அவர்களுடைய தரித்திர வியாதியை அதஞ் செய்தது.