பிரதாப முதலியார் சரித்திரம்/அத்தியாயம் 25

விக்கிமூலம் இலிருந்து


25-ஆம் அதிகாரம்
புலி யென்னுங் கிலி—அழையா விருந்து—
பிரயாண முடிவு


ஒரு நாள் மத்தியானத்தில் இரண்டு பக்கமும் மலைகள் அடர்ந்த கானகத்தின் வழியாக நாங்கள் யாத்திரை செய்து கொண்டிருக்கையில், திடீரென்று வானம் இருண்டு, பெருங் காற்றுடனே மழையும் துவங்கிற்று. நாங்கள் இருந்த வண்டியில், நாலு பக்கமும் தூவானம் அடித்து, நாங்கள் நனையும் படியான ஸ்திதியில் இருந்தபடியால், மழை விடுகிற வரையில் மலைக் குகைக் குள்ளே, இருக்கலா மென்று நினைத்து, வண்டியினின்று கீழே இறங்கி, நானும் ஞானாம்பாளும் வேலைக்காரர்களும் அவர்களுடைய பெண்சாதிகளும் மலை அடிவாரத்துக்குப் போனோம். வண்டிக்காரர்கள் வண்டிகளுக்குக் காவலாக இருந்தார்கள். நாங்கள் மலை அடிவாரத்தில் இருள் அடைந்த ஒரு கெபியைக் கண்டு அதற்,குள்ளே நுழைந்து, வாசற்படி யோரத்தில் உட்கார்ந்தோம். மழை நின்று, கொஞ்சம் வெளிச்சம் கண்ட வுடனே, அந்தக் கெபிக் குள்ளாகப் பார்த்தோம். எங்களுக்குக் கொஞ்ச தூரத்தில், அந்த குகையில், இரண்டு புலிகளைக் கண்டு, நாங்கள் திகில் அடைந்து ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஓட ஆரம்பித்தோம். எங்கள் வேலைக்காரர்கள் எங்களையும் அவர்களுடைய பெண்சாதிகளையும் விட்டு விட்டு ஒரு நிமிஷத்தில், போன இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள். நான், ஞானாம்பாளையும், வேலைக்காரிகளையும் முன்னே ஓடச் சொல்லி, பின்னே ஓடினேன். ஓடச் சக்தியில்லாமல், அந்த ஸ்திரீகளும் நானும் சேற்றிலே சறுக்கி விழுந்து, கொண்டு தள்ளாடித் தள்ளாடி ஓடும் பொழுது பின்னே திரும்பிப் பார்த்தோம். அந்தப் புலிகள் குகையை விட்டு ஓடி வருகிறதைக் கண்டு, அந்த ஸ்திரீகளைப் பார்த்து ““புலிகள் தொடர்ந்து வருகிறபடியால் சீக்கிரமாய் ஓடுங்கள்!”” என்றேன். இதைக் கேட்டவுடனே, அந்த வேலைக்காரிகள் கிலி பிடித்து, கீழே விழுந்து, உதைத்துக் கொண்டார்கள். அவர்களை அந்த ஸ்திதியில் விட்டு எப்படிப் போகிற தென்று, நானும் ஞானாம்பாளும் மலைத்து நின்றோம். புலிகள் சமீபித்தவுடனே, அவைகளைச் சுடலா மென்று, என் கையிலிருந்த துப்பாக்கியில் குண்டு போட்டுக் கெட்டிக்க ஆரம்பித்தேன்.

ஞானாம்பாள் சற்று நேரம் அந்தப் புலிகளை உற்றுப்பார்த்து ““அவைகள் நாலுகாற் புலிகளாயிராமல் இரண்டு காற் புலிகளாகக் காணப்படுகின்றன; அவைகளை நன்றாய்ப் பாருங்கள்”” என்றாள். நான் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தவுடனே அந்தப் புலிகளிடத்தினின்று ஒரு வாக்கியம் புறப்பட்டது; என்னவென்றால் “““ஐயா! எங்களைச் சுட வேண்டாம். நாங்கள் புலிகள் அல்ல. நாங்கள் வேஷக்காரர்கள்”““ என்பது தான். சற்று நேரத்தில் நெருங்கி வந்து, எங்களைப் பார்த்து “““நாங்கள் அல்லாப் பண்டிகைக் காகப் புலி வேஷம் போட்டுக்கொண்டு பல ஊர்களுக்குப் போய் யாசகம் வாங்குகிற தற் காகப் புறப்பட்டோம்; மழையினால் எங்களுடைய வேஷம் கலைந்து போ மென்று நினைத்து அந்தக் குகைக்குள்ளாக உங்களுக்கு முன்பாக வந்து உட்கார்ந் திருந்தோம். இதுதான் நடந்த வாஸ்தவம்”” என்றார்கள். அவர்கள் புலி அல்ல வென்றும் வேஷக்காரர்க ளென்றும், எங்களுக்குப் பிரத்தியட்சமாய்த் தெரிந்தவுடனே எங்களுடைய பயம் நீங்கி விட்டது. கீழே விழுந்து கிடந்த அந்த வேலைக்காரிகளுடைய நடுக்கம் தீரவே யில்லை. அவர்கள் எழுந்திருக்கும் படியாக நாங்கள் பட்ட பாடு கொஞ்சமல்ல. அவர்களுடைய புருஷர்கள் போன வழி தெரியாமையால் அவர்களை நாலு பக்கமும் தேட ஆரம்பித்தோம். சற்று நேரத்துக்குப் பின்பு சாமான்களை விலக்கிப் பார்த்தோம். அந்த வேலைக்காரர்கள் சாமான் வண்டிக்குள் நுழைந்து, சாமான்களை வாரி மேலே போட்டு மறைத்துக்கொண்டு படுத் திருந்தார்கள். அவர்களை எழுப்பி வெளியே விட்டு, “‘ஆபத்து வரும்போது நாங்கள் முன்னின்று தலை கொடுப்போம் என்று சொல்லி வந்த நீங்கள் இப்படிச் செய்யலாமா?”’ என்று கேட்டேன். அவர்கள் என்னைப் பார்த்து “‘சுவாமி! எங்கள் மேலே தோஷமில்லை; ஆபத்து இல்லாத காலத்தில் நாங்கள் பூரண தைரியசாலிகளா யிருக்கிறோம்; ஆபத்தைக் கண்டவுடனே எங்களுடைய கால்கள் நிலை கொள்ளாமல் எங்களையும் இழுத்துக்கொண்டு ஓடுகின்றன; நாங்கள் என்ன செய்வோம்?‘” என்றார்கள். இப்படிப்பட்ட சுத்த வீரர்களைக் கோபிப்பதில் பிரயோசனம் என்ன? அவர்களுடைய பெண்சாதிகளை ஆபத்து வேளையில் கைவிட்டு ஓடினதற்காக அவர்களே புருஷர்களைக் கோபிப்பார்களென்று நினத்து நான் சும்மா இருந்துவிட்டேன். அந்த மூடப் பெண்சாதிகள் புருஷர்களைக் கோபிப்பதற்குப் பதிலாய் அவர்களைப் பார்த்து ““நீங்கள் ஓடும்போது உங்கள் பாதங்களில் கல்லும் முள்ளும் தைத்திருக்குமே; சாமான்களைத் தூக்கி மேலே போட்டுக் கொண்ட போது தேகத்தில் காயம் பட்டிருக்குமே”” என்று அநுதாபப்பட்டார்கள். பக்ஷத்துக்குக் கண் இல்லை என்பது அப்போது தான் எனக்குத் தெரிந்தது.

இவ்வகையாகச் சிலநாள் யாத்திரை செய்த பின்பு ஒரு நாள் எங்களுக்கு நேரே ஒரு நகரம் குறுக்கிட்டது. அது என்ன ஊரென்று விசாரிக்க, தேவராஜப் பிள்ளையினுடைய ஊராகிய ஆதியூரென்று கேள்விப்பட்டோம். உடனே எங்களுக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாகி ஒளியப் போயும் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல், நாம் ஒருவரும் காணாதபடி தூரதேசத்துக்குப் போக உத்தேசித்துப் போகும்போது இந்த ஊர் வந்து குறுக்கிட்டதே! இந்த ஊருக்கு வருகிறதென்றும் நாம் நினைக்கவே இல்லையே! நாம் இவ்வளவு சமீபத்தில் வந்தும் அவர்களைப் பார்க்காமல் போனால் பிற்பாடு அவர்களுக்கு உண்மை தெரியும்போது மனஸ்தாபப்படுவார்களே! இந்தத் தரும சங்கடத்துக்கு என்ன செய்கிறதென்று நானும் ஞானாம்பாளும் வண்டியை நிறுத்தி ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது ரஸ்தாவில் எங்களுக்கு எதிரே நாலு குதிரைகள் கட்டின இரண்டு இரதங்கள் ஓடி வந்தன. முன்னர் வந்த ரதத்தில் யார் இருக்கிறார்களென்று எட்டிப் பார்த்தேன். அதில் தேவராஜப் பிள்ளையும் அவருடைய மகன் கனகசபையும் இருந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்தவுடனே ரதத்தை நிறுத்திக் கீழே குதித்தார்கள்; நானும் கீழே குதித்தேன்; அவர்கள் முகமகிழ்ச்சியோடும் அகமகிழ்ச்சியோடும் என்னைக் கட்டிக்கொண்டு “நீங்கள் வர இந்த ஊர் என்ன தவஞ் செய்ததோ நாங்கள் செய்த புண்ணிய பலன் இன்றைக்குத் தான் எங்களுக்குக் கிடைத்தது.” என்று பலவாறாக உபசரித்தார்கள். மற்றொரு ரதத்திலிருந்து தேவராஜப் பிள்ளையின் பத்தினியும் அவருடைய தங்கையும் கீழே இறங்கி ஞானாம்பாளைத் தழுவிக்கொண்டு பலவகையான முகமன் கூறினார்கள். தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் ஞானாம்பாளுக்குத் தக்கபடி இனிய வசனம் கூறி அவளை அந்த ஸ்திரீகள் வந்த ரதத்தில் ஏற்றுவித்து என்னைத் தங்களுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டு ஊருக்குத் திரும்பினார்கள்.

நாங்கள் வழியே போகும்போது தேவராஜப் பிள்ளை என்னை நோக்கி “இன்றையத்தினம் உங்கள் தந்தையாரிடத்திலிருந்து தபால் மார்க்கமாக வந்த கடிதத்தில் நீங்கள் ஒருவருக்கும் சொல்லாமல் ஊரைவிட்டுப் போய்விட்டதாகவும் இன்ன ஊருக்குப் போனீர்களென்று தெரியவில்லையென்றும் தாங்கள் பல ஊர்களுக்கு மனுஷர்களும் கடிதங்களும் அனுப்பி இருப்பதாகவும் நீங்கள் இந்த ஊருக்கு வந்தால் உடனே தெரிவிக்கவேண்டுமென்றும் எழுதப்பட்டிருந்தது. நீங்கள் இந்த ஊருக்கு வராமல் வேறே எங்கே போகிறீர்களோ என்று நாங்கள் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். உங்களை எங்கள் தெய்வந்தான் கொண்டு வந்துவிட்டது; நாங்கள் கிருதார்த்தர்களானோம்” என்று சொல்லிப் பின்னும் என்னைப் பார்த்து “நீங்கள் ஒருவருக்கும் சொல்லாமல் ஏழைகளைப் போல ஊரை விட்டு வெளிப்பட்டதற்குக் காரணம் என்ன?” வென்று வினாவினார். என் தகப்பனாருடையவும் மாமனாருடையவும் வீணான சண்டையை வெளிப் படுத்த எனக்கு மனமில்லாமலிருந்தாலும் பொய்யான காரணத்தைச் சொல்லக் கூடாதென்று நினைத்து ஞானாம்பாளுக்குக் கர்ப்பச் சின்னங்கள் தோன்றினதும், அந்தக் கர்ப்பக் குழந்தையை என் மாமனார் ஸ்வீகாரம் கொடுக்கும்படி கேட்டு அது மூலமாகச் சண்டை விளைந்ததும் நான் சங்க்ஷோபமாகத் தெரிவித்தேன். அதைக் கேட்டவுடனே அவருக்கு உண்டான பெருஞ் சிரிப்பு எப்படிப்பட்டதென்றால் அவர் அவ்வகையாக இன்னும் சற்று நேரம் சிரித்திருப்பாரானால் அவர் மரித்திருப்பாரென்பதும் கனசபை தகப்பன் இல்லாப் பிள்ளையாகி இருப்பான் என்பதும் நிச்சயமே. பிறகு எனக்கு வருத்தமாயிருக்குமென்று அவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்லுகிறார்:—

தாய் தகப்பன்மார்களுடைய சண்டைகளெல்லாம் பிள்ளைகளின் மேல் இருக்கிற பக்ஷத்தினால் விளைகின்றனவே அல்லாமல் மற்றப்படி அல்ல. உம்முடைய மாமனார் தம்முடைய மகள் பிள்ளை தமக்குப் பிள்ளையாயிருக்கவேணுமென்று அபேக்ஷித்து அந்தப் பிள்ளையைத் தமக்கு ஸ்வீகாரம் கொடுக்கும்படி கேட்டார். உமது தகப்பனார் தம்முடைய பேரப் பிள்ளையைப் பிரிய இஷ்டமில்லாமல் ஆக்ஷேபித்தார்; ஆகையால் உங்கள் மேலும் உங்கள் சந்ததிகளின் மேலும் அவர்களுக்கு உண்டாயிருக்கிற பக்ஷத்தினால் அந்தச் சண்டை விளைந்ததென்பது நிதரிசனமாயிருக்கின்றது. அநேக சமயங்களில் பொல்லாங்கிலிருந்து சுவாமி நன்மையை விளைவிப்பது போல் இந்தச் சண்டையினால் எனக்கு ஒரு நன்மையைச் செய்திருக்கிறார். இந்தச் சண்டை நேராவிட்டால் உங்களை இப்போது தரிசிக்கும்படியான பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்குமா?” என்றார். இவ்வகையாகச் சல்லாபித்துக் கொண்டு அவருடைய அரண்மனையிலே போய்ச் சேர்ந்தோம். அங்கே எங்களுக்கு நடந்த உபகாரங்களும் மரியாதைகளும் இப்படிப்பட்டது என்று விவரிப்பது எளிதல்ல. தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் என்னைவிட்டு ஒரு நிமிஷமாவது பிரிகிறதில்லை. அவருடைய பத்தினியும் தங்கையும் தங்கை மகளும் ஞானாம்பாளை விட்டுச் சற்றும் பிரிகிறதில்லை. ராஜோபசாரங்களும் வேடிக்கை விநோதங்களும் செய்து எங்களைச் சந்தோஷிப்பித்தார்கள்.