உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 107 முதல் 108 வரை

விக்கிமூலம் இலிருந்து
"விண்ணுலகில் உள்ளவையே ஆண்டவரைப் போற்றுங்கள்" (திருப்பாடல்கள் 148). மூலம்: "தெ பெர்ரி திருப்பாடல்கள் ஓவிய நூல்". 15ஆம் நூற்றாண்டு. பிரான்சு.

திருப்பாடல்கள்

[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 107 முதல் 108 வரை

திருப்பாடல் 107

[தொகு]

கடவுளின் கருணையைப் புகழ்தல்

[தொகு]


1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
ஏனெனில், அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. [*]


2 ஆண்டவரால் மீட்படைந்தோர்,
எதிரியின் கையினின்று அவரால் மீட்கப்பட்டோர்,


3 கிழக்கினின்றும், மேற்கினின்றும்
வடக்கினின்றும் தெற்கினின்றும்,
பல நாடுகளினின்றும் ஒன்று சேர்க்கப்பட்டோர்
சொல்வார்களாக.


4 பாலைநிலத்தில் பாழ் வெளியில்
சிலர் அலைந்து திரிந்தனர்;
குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல
அவர்கள் வழி காணவில்லை;


5 பசியுற்றனர்; தாகமுற்றனர்;
மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர்.


6 தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்;
அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து
அவர்களை அவர் விடுவித்தார்.


7 நேரிய பாதையில் அவர்களை வழிநடத்தினார்;
குடியிருக்கும் நகரை அவர்கள் அடையச் செய்தார்.


8 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,
மானிடர்களுக்காக அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு,
அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!


9 ஏனெனில், தாகமுற்றோர்க்கு அவர் நிறைவளித்தார்;
பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.


10 சிலர் காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்தனர்;
விலங்கிடப்பட்டுத் துன்பத்தில் உழன்றனர்.


11 ஏனெனில், அவர்கள் இறைவனின்
கட்டளைகளை எதிர்த்து நின்றனர்;
உன்னதரின் அறிவுரைகளைப் புறக்கணித்தனர்.


12 கடும் வேலையால் அவர் அவர்களின்
உள்ளத்தைச் சிறுமைப்படுத்தினார்;
அவர்கள் நிலைகுலைந்து போயினர்;
அவர்களுக்குத் துணைசெய்வார் எவருமிலர்.


13 அவர்கள் தம் நெருக்கடியில்
ஆண்டவரைக் கூவியழைத்தனர்;
அவர் அவர்களைத் துன்பங்களிலிருந்து விடுவித்தார்.


14 காரிருளிலும் சாவின் நிழலிலும் கிடந்த அவர்களை
அவர் வெளிக்கொணர்ந்தார்.
அவர்களைப் பிணித்திருந்த தளைகளைத் தகர்த்தெறிந்தார்.


15 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,
மானிடரான அவர்களுக்கு அவர் செய்த
வியத்தகு செயல்களை முன்னிட்டு,
அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!


16 ஏனெனில், வெண்கலக் கதவுகளை அவர் தகர்த்துவிட்டார்;
இரும்புத் தாழ்ப்பாள்களை உடைத்துவிட்டார்.


17 சிலர் தங்கள் தீயநெறிகளை முன்னிட்டு
நோய்களுக்கு உள்ளாயினர்;
அவர்களுடைய தீச்செயல்களின் பொருட்டுத்
துன்பங்களுக்கு உள்ளாயினர்.


18 எல்லா உணவையும் அவர்களின் மனம் வெறுத்தது;
சாவின் வாயில்களை அவர்கள் நெருங்கினார்கள்.


19 அவர்கள் தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்;
அவர் அவர்களைத் துன்பங்களினின்று விடுவித்தார்.


20 தம் வார்த்தையை அவர் அனுப்பி
அவர்களைக் குணப்படுத்தினார்;
அழிவினின்று அவர்களை விடுவித்தார்.


21 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,
மானிடரான அவர்களுக்கு அவர் செய்த
வியத்தகு செயல்களை முன்னிட்டு,
அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக!


22 நன்றிப் பலிகளை அவர்கள் செலுத்துவார்களாக!
அக்களிப்போடு அவர்தம் செயல்களைப்
புகழ்ந்தேத்துவார்களாக!


23 சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்;
நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.


24 அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்;
ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர்.


25 அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது;
அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது.


26 அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்;
பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்;
அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது.


27 குடிவெறியரைப் போல் அவர்கள் தள்ளாடித் தடுமாறினர்;
அவர்களின் திறனெல்லாம் பயனற்றுப் போயிற்று.


28 தம் நெருக்கடியில் அவர்கள்
ஆண்டவரைக் கூவியழைத்தனர்;
அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து
அவர் அவர்களை விடுவித்தார்.


29 புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்;
கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.


30 அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்;
அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு
அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.


31 ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,
மானிடரான அவர்களுக்கு அவர் செய்த
வியத்தகு செயல்களை முன்னிட்டு
அவர்கள் அவருக்கு நன்றி செலுத்தவார்களாக!


32 மக்களின் பேரவையில்
அவரைப் புகழ்ந்தேத்துவார்களாக!
பெரியோரின் மன்றத்தில்
அவரைப் போற்றுவார்களாக!


33 ஆறுகளை அவர் பாலை நிலமாக்கினார்;
நீரோடைகளை அவர் வறண்ட தரையாக்கினார்.


34 செழிப்பான நிலத்தை உவர் நிலமாக்கினார்;
அங்குக் குடியிருந்தோரின்
தீச்செயலை முன்னிட்டு இப்படிச் செய்தார்.


35 பாலை நிலத்தையோ நீர்த் தடாகமாக மாற்றினார்;
வறண்ட நிலத்தை நீருற்றுகளாகச் செய்தார்.


36 பசியுற்றோரை அங்கே குடியேற்றினார்;
அவர்கள் அங்கே குடியிருக்க
நகரொன்றை அமைத்தனர்.


37 அங்கே அவர்கள் வயலில் விதைத்தனர்;
திராட்சைத் தோட்டங்களை அமைத்தனர்;
அறுவடைக்கான கனிகளை அவை ஈன்றன.


38 அவர் ஆசி வழங்கினார்;
அவர்கள் மிகுதியாகப் பல்கிப் பெருகினர்;
அவர்களின் கால்நடைகளைக்
குறைந்துபோக விடவில்லை.


39 பின்பு, அவர்களின் தொகை குறைந்தது;
அவர்கள் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு
இகழ்ச்சிக்கு உள்ளாயினர்.


40 தலைவர்கள்மேல் இகழ்ச்சியைக் கொட்டி,
அவர்களைப் பாதையற்ற பாழ் வெளியில்
அலையச் செய்தார் அவர்.


41 ஆனால், எளியோரை அவர்
துன்ப நிலையினின்று தூக்கிவிட்டார்,
அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார்.


42 நேர்மையுள்ளோர் இதைப் பார்த்து மகிழ்கின்றனர்;
தீயோர் யாவரும் தங்கள் வாயை மூடிக்கொள்கின்றனர்.


43 ஞானமுள்ளோர் இவற்றைக்
கவனத்தில் கொள்ளட்டும்!
அவர்கள் ஆண்டவரின் பேரன்பை
உணர்ந்து கொள்ளட்டும்!


குறிப்பு

[*] 107:1 = 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11;
திபா 100:5; 106:1; 118:1; 136:1; எரே 33:11.

திருப்பாடல் 108

[தொகு]

பகைவரிடமிருந்து விடுவிக்குமாறு வேண்டல்

[தொகு]

தாவீதின் புகழ்ப்பாடல்
(திபா 57:7-11; 60:5-12)


1 என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது; கடவுளே!
என் உள்ளம் உறுதியாய் இருக்கின்றது;
நான் பாடுவேன், உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
என் நெஞ்சே! விழித்தெழு;


2 வீணையே! யாழே! விழித்தெழுங்கள்;
வைகறையை விழித்தெழச் செய்வேன்.


3 ஆண்டவரே, மக்களினங்களிடையே
உமக்கு நன்றி செலுத்துவேன்;
எல்லா இனத்தாரிடையேயும்
உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.


4 ஏனெனில், வானளவு உயர்ந்துள்ளது உமது பேரன்பு!
முகில்களைத் தொடுகின்றது உமது உண்மை!


5 கடவுளே!
வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக!
பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!


6 உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு
உமது வலக்கையால் அவர்களுக்குத் துணை செய்யும்!
என் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!


7 கடவுள் தமது தூயகத்தினின்று
இவ்வாறு உரைத்தார்:
"வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்;
சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன்!


8 கிலயாது என்னுடையது;
மனாசேயும் என்னுடையதே;
எப்ராயிம் என் தலைச்சீரா,
யூதா என் செங்கோல்!


9 மோவாபு எனது பாதங்கழுவும் பாத்திரம்;
ஏதோமின்மீது எனது மிதியடியை எறிவேன்;
பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்!"


10 அரண்சூழ் நகரினுள்
என்னை இட்டுச் செல்பவர் யார்?
ஏதோம்வரைக்கும் என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?


11 கடவுளே!
நீர் எங்களைக் கைவிட்டு விட்டீர் அன்றோ?
கடவுளே!
நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ?


12 எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்;
மனிதர் தரும் உதவியோ வீண்.


13 கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்;
அவரே நம் எதிரிகளை மிதித்துவிடுவார்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 109 முதல் 110 வரை