உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 59 முதல் 60 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்" (திபா 25 [24]). ஆல்பனி விவிலிய ஓவிய நூல். இலத்தீன் அணியெழுத்து. காலம்: 12ஆம் நூற்றாண்டு.

திருப்பாடல்கள்

[தொகு]

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 59 முதல் 60 வரை

திருப்பாடல் 59

[தொகு]

பாதுகாப்புக்காக மன்றாடல்

[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
'அழிக்காதே' என்ற மெட்டு;
தாவீதின் வீட்டருகே காத்திருந்து
அவரைக் கொல்வதற்கென்று
சவுல் ஆள்களை அனுப்பிய போது
தாவீது பாடிய கழுவாய்ப் பாடல்)
[*]



1 என் கடவுளே!
என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்;
என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து
எனக்குப் பாதுகாப்பளித்தருளும்.


2 தீமை செய்வோரிடமிருந்து
எனக்கு விடுதலை அளித்தருளும்;
கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும்.


3 ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்;
கொடியவர் என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்;
நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும் இழைக்கவில்லை;
பாவம் ஏதும் செய்யவில்லை;


4 என்னிடம் குற்றமில்லாதிருந்தும்,
அவர்கள் ஓடிவந்து என்னைத் தாக்க முனைகின்றனர்;
என்னை எதிர்கொள்ளுமாறு எழுந்தருளும்;
என்னைக் கண்ணோக்கும்.


5 படைகளின் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் இஸ்ரயேலின் கடவுள்!
பிற இனத்தார் அனைவரையும் தண்டிக்க எழுந்துவாரும்;
தீங்கிழைக்கும் அந்தத் துரோகிகளுள் எவருக்கும்
இரக்கம் காட்டாதேயும். (சேலா)


6 அவர்கள் மாலைவரை காத்திருந்து,
அதன்பின் நாய்களைப் போலக் குரைத்துக் கொண்டு
நகரினுள் சுற்றித் திரிகின்றனர்.


7 அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்;
அவர்களின் நாவின் சொற்கள் வாள் போன்றவை;
'நாங்கள் பேசுவதை கேட்கிறவர் யார்?' என்கின்றார்கள்.


8 ஆனால், ஆண்டவரே, நீர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றீர்;
பிற இனத்தார் எல்லாரையும் பார்த்து நீர் ஏளனம் செய்கின்றீர்;


9 நீரே என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்;
ஏனெனில், கடவுளே! நீரே என் அரண்.


10 என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்;
கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை
நான் கண்ணாரக் காணும்படி செய்வார்.


11 அவர்களை ஒரேயடியாய்க் கொன்று விடாதேயும்;
இல்லையேல், உம் வல்லமையை என் மக்கள் மறந்துவிடுவர்;
என் தலைவரே! எங்கள் கேடயமே!
அவர்களை உமது வலிமையால் நிலைகுலையச் செய்யும்.


12 அவர்களின் வாய் பேசுவதும் நா உரைப்பதும் பாவமே;
அவர்கள் தற்பெருமை அவர்களைச் சிக்கவைப்பதாக!
அவர்கள் சபிக்கின்றனர்;
அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர்.


13 ஆகவே, வெகுண்டெழுந்து அவர்களை அழித்துவிடும்;
இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்;
அப்பொழுது, கடவுள் யாக்கோபின் மரபினரை ஆள்கின்றார் எனவும்
அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும் உள்ளது எனவும்
அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். (சேலா)


14 அவர்கள் மாலைவரை காத்திருந்து,
அதன்பின், நாய்களைப்போல குரைத்துக் கொண்டு
நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள்.


15 அவர்கள் இரைதேடி அலைகின்றனர்;
வயிறு நிறையாவிடில் முறுமுறுக்கின்றனர்.


16 நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்;
காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்;
ஏனெனில், நெருக்கடியான வேளையில்
நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர்.


17 என் ஆற்றல் நீரே!
உம்மைப் போற்றிப் பாடுவேன்;
ஏனெனில், கடவுள் எனக்கு அரண்;
கடவுளே எனக்குப் பேரன்பு!


குறிப்பு

[*] திபா 59: தலைப்பு = 1 சாமு 19:11.


திருப்பாடல் 60

[தொகு]

விடுதலைக்காக மன்றாடல்

[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
'சான்றுபகர் லீலிமலர்' என்ற மெட்டு;
ஆராம் நகராயிம், ஆராம் சோபா
என்ற அரசுகளோடு
தாவீது போர் புரிகையில்,
யோவாபு திரும்பி வந்து
உப்புப் பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை
வெட்டி வீழ்த்தியபோது படிப்பினையாகத்
தாவீது பாடிய கழுவாய்ப் பாடல்)
[*]



1 கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிடடீர்;
எங்களை நொறுக்கிவிட்டீர்; எங்கள்மீது சீற்றம் கொண்டீர்;
இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும்.


2 நிலத்தை நீர் அதிரச் செய்தீர்;
அதில் பிளவு உண்டாகச் செய்தீர்;
அதன் வெடிப்புகளைச் சீர்படுத்தும்,
அது ஆட்டம் கண்டுள்ளது;


3 உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்;
மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.


4 உமக்கு அஞ்சி நடப்போர் எதிரிகளின் அம்பினின்று
தப்பித்துக்கொள்ளுமாறு
அவர்களுக்கெனக் கொடி ஒன்றை ஏற்றிவைத்தீர். (சேலா)


5 உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு,
உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணை செய்யும்;
எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!


6 கடவுள் தமது தூயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்:
வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்;
சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன்.


7 கிலயாது என்னுடையது;
மனாசேயும் என்னுடையதே;
எப்ராயிம் என் தலைச்சீரா;
யூதா என் செங்கோல்!


8 மோவாபு எனக்குப் பாதம்கழுவும் பாத்திரம்;
ஏதோமின்மீது என் மிதியடியை எறிவேன்;
பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்.


9 அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்?
ஏதோம்வரை என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?


10 கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு வீட்டீர் அன்றோ!
கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ!


11 எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்;
மனிதர் தரும் உதவியோ வீண்.


12 கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்;
அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார்.


குறிப்பு

[*] திபா 60: தலைப்பு = 2 சாமு 8:13; 1 குறி 18:12.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 61 முதல் 62 வரை