பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

நாரதர் இல்லாவிட்டால் கதை இனிக்காது. அவருடைய 'கலகம்' இருக்க வேண்டும். அது கலகமானலும் கடைசியிலே எல்லாம் மங்களமாக முடிவதற்கு உதவுகிறது.

வள்ளியம்மை ஒயில் கும்மியிலேயும் நாரதர் வருகிருர். அவர்தான் வள்ளியைப்பற்றி முருகனுக்குச் சொல்லி அவரைக் கானகத்துக்கு அழைத்து வருகிருர். அவர் வழி காட்ட வேலன் வருகின்ற விதத்தை ஒயில் பாட்டுக் கூறுகிறது.

வில்லெடுத்து அம்பு தொடுத்து-தகதத்தம்
வேலர் புனம் பார்க்கவே
கன்னி வள்ளி தன்னைக்காண-தகதத்தம்
கந்தர் வனம் தேடிவருகிருர்
தூரவோ வழி கிட்டவோ-தகதத்தம்
சொல்லு மென்று வேலர் கேட்க
ரண்டுநா ழிகைக்குள் வழி-தகதத்தம்
இக்கணமே காண வைப்பேன்
இப்படி நாரதர் கந்தர்-தகதத்தம்
இருவர் தேடி வருகையிலே
ஆலோலம் ஆலோலம்-தகதத்தம்
அதனைக் கந்தர் காதில் கேட்டார்
தகதத்தம் தகதத்தம் தகதத்தம்

ஆடுபவர்கள் தகதத்தம், தகதத்தம் என்று கூறிக் கொண்டே ஆடுவார்கள். கடைசியிலே இப்படிக் கூறும் வேகம் அதிகரித்துக்கொண்டே போகும். வள்ளியைக் காண முருகன் அத்தனை வேகத்தோடு போகிறாரோ என்றுகூட நினைக்கத் தோன்றும்,