பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

யிருக்கவேண்டும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அதன் உண்மைக் காரணம் என்னவென்பதை ஈண்டு ஆய்வோம்.

இசுலாமிய சமயம் காலத்தால் பிற்பட்டது. இது கி. பி. ஏழாம் நூற்றாண்டில் அரேபிய நாட்டில் நபி நாயகத்தினால் தோற்றுவிக்கப்பட்டது. பாலை நிலத்தில் நாடோடிகளாகத் திரிந்த அராபிய மக்களை இச்சமயம் ஒன்று சேர்த்தது; நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்த்து வலிவுள்ள இனமாக அவர்களை மாற்றியமைத்தது. புதிய சமயத்தால் ஒன்றாக இணைந்த அம்மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். மிக விரைவில் தங்கள் சமயத்தை ஆசிய நாட்டின் மேற்குப் பகுதியில் பரப்பி விட்டனர்.

சமயத்தைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு, புது நாடுகளைக் கைப்பற்றி ஆள வேண்டும் என்ற பேரவாவும் அராபியரைப் பிடர் பிடித்துத் தள்ளியது. மாபெரும் வீரர்களும், அரசியல் தலைவர்களும் அவர்களிடையே தோன்றினர். புயல்போல அவர்கள் நாற்புறமும் சீறி எழுந்தனர். வலிமைமிக்க அவர்கள் வாள்வீச்சுக்கு முன்னால் மணி முடிகள் உருண்டு மண்ணில் விழுந்தன. கொடி கட்டி ஆண்ட மாபெரும் பேரரசுகளெல்லாம் மண்மேடாயின. பாரசீகம், ஆப்கானிஸ்தானம், துருக்கிஸ்தானம், துருக்கி, வட ஆப்ரிக்கா முதலிய நாடுகள் அவர்கள் காலடியில் சரணடைந்தன. ஏறத்தாழ ஐரோப்பாவின் பெரும் பகுதி இவர்கள் குதிரைக் குளம்படியில் கும்பிட்டுப் பணிந்தன.