உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/4 5 கனா இறுத்தது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

4 5 கனாவிறுத்தது

உதயணன் நிலை

[தொகு]

பொலிவுடை நகர்வயிற் புகலருங் கோயிலுள்
வலிகெழு நோன்றாள் வத்தவர் பெருமகன்
புதுமணக் காரிகை பூங்குழை மாதர்
பதுமா தேவியொடு பசைந்துகண் கூடி
அசையுஞ் சீரு மளந்துநொடி போக்கி 5
இசைகொள் பாடலி னிசைந்துட னொழுக
விசைகொள் வீணை விருந்துபடப் பண்ணி
வசைதீ ருதயணன் மகிழ்ந்துட னிருந்துழி

பதுமாபதியின் கூற்று

[தொகு]

நெடியோ னன்ன நெடுந்தகை மற்றுநின்
கடியார் மார்பங் கலந்துண் டாடிய 10
வடிவேற் றடங்கண் வாசவ தத்தை
வழிபா டாற்றி வல்ல ளாகிய
அழிகவுள் வேழ மடக்கு நல்லியாழ்
யானும் வழிபட் டம்முறை பிழையேன்
காண லுறுவேன் காட்டி யருளென 15
முள்ளெயி றிலங்கச் செவ்வாய் திறந்து
சில்லென் கிளவி மெல்லென மிழற்றி
நகைநயக் குறிப்பொடு தகைவிரல் கூப்ப

வாசவதத்தையை நினைந்து உதயணன் கலங்கல்

[தொகு]

முற்றிழை பயிற்றிய முற்பெரு நல்லியாழ்
கற்பே னென்றசொற் கட்டழ லுறீஇ 20
வேலெறிந் தன்ன வெம்மைத் தாகிக்
காவல குமரற்குக் கதுமெனவிசைப்ப
மாசி றாமரை மலர்கண் டன்ன
ஆசில் சிறப்பி னமரடு தறுகண்
இளநல முண்ட விணையி றோகை 25
வளமயிற் சாயல் வாசவ தத்தையை
நினைப்பி னெகிழ்ந்து நீர்கொள விறைஞ்சிச்
சினப்போ ரண்ணல் சேயிழை மாதர்க்கு
மனத்தது வெளிப்பட மறுமொழி கொடாஅன்

உதயணனுடைய குறிப்பறிந்து பதுமாபதி தன்னிடஞ் செல்லுதல்

[தொகு]

கலக்க மறிந்த கனங்குழை மாதர் 30
புலத்தல் யாவதும் பொருத்த மின்றென
எனக்கு மொக்கு மெம்பெரு மான்றன்
மனத்தகத் துள்ளோ ளின்னும் விள்ளாள்
விழுத்தவ முடையள் விளங்கிழை பெரிதென
ஒழுக்க மதுவா முயர்ந்தோர் மாட்டே 35
என்றுதன் மனத்தே நின்றுசில நினையா
.....
அறியாள் போலப் பிறிதுநயந் தெழுந்துதன்
ஆயஞ் சூழ வரசனை வணங்கி
மாவீ ழோதிதன் கோயில் புக்கபின்

வயந்தகன் உதயணனிடம் கூறுதல்

[தொகு]

கவன்றன னிருந்த காவன் மன்னற்கு 40
வயந்தக குமரன் வந்து கூறும்
வாலிழைப் பணைத்தோள் வாசவ தத்தைக்கும்
பாசிழை யல்குற் பதுமா பதிக்கும்
சீர்நிறை கோல்போற் றானடு வாகி
நின்றி பேரன் பின்றிவட் டாழ்த்து 45
நீங்கிற் றம்ம நீத்தோ ணினைந்தென
ஆங்கவ னுரைப்ப வதுவுங் கேளான்

உதயணன் வாசவதத்தையை நினைந்து வருந்தித் துயிலல்

[தொகு]

முதிர்மலர்த் தாமமொடு முத்துப்புரி நாற்றிக்
கதிர்மணி விளக்கங் கான்றுதிசை யழல
வீதியிற் புனைந்த வித்தகக் கைவினைப் 50
பதினைந் தமைந்த படையமை சேக்கையுட்
புதுநலத் தேவியொடு புணர்தல் செல்லான்
நறுந்த ணிருங்கவு ணளகிரி வணக்கியதன்
இறும்புபுரை யெருத்த மேறிய ஞான்று
கண்டது முதலாக் கான நீந்திக் 55
கொண்டனன் போந்தது நடுவாப் பொங்கழல்
விளிந்தன ளென்ப திறுதி யாக
அழிந்த நெஞ்சமொ டலமர லெய்தி
மேனா ணிகழ்ந்ததை யானா தரற்றி
இகலிடை யிமையா வெரிமலர்த் தடங்கண் 60
புகழ்வரை மார்பன் பொருந்திய பொழுதிற்
கொள்ளென் குரலொடு கோட்பறை கொளீஇ
உள்ளெயிற் புரிசை யுள்வழி யுலாவும்
யாமங் காவல ரசைய வேமம்
வாய்ந்த வைகறை வையக வரைப்பின் 65

உதயணன் கனவு காண்டல்

[தொகு]

நாற்கட லும்பர் நாக வேதிகைப்
பாற்கடற் பரப்பிற் பனித்திரை நடுவண்
வாயுங் கண்ணுங் குளம்பும் பவளத்
தாயொளி பழித்த வழகிற் றாகி
விரிகதிர்த் திங்களொடு வெண்பளிங் குமிழும் 70
உருவெளி யுடைத்தா யுட்குவரத் தோன்றி
வயிரத் தன்ன வைந்நுனை மருப்பிற்
செயிர்படு நோக்கமொடு சிறப்பிற் கமைந்ததோர்
வேண்டா ரணிந்த வெள்ளேறு கிடந்த
வண்டார் தாதின் வெண்டா மரைப்பூ 75
அங்கண் வரைப்பி னமரிறை யருள்வகைப்
பொங்குநிதிக் கிழவன் போற்றவு மணப்ப
மங்கலங் கதிர்த்த வங்கலு ழாகத்துத்
தெய்வ மகடீஉ மெய்வயிற் பணித்துப்
பையு டீரக் கைவயிற் கொடுத்தலும் 80

உதயணன் எழுதல்

[தொகு]

பயில்பூம் பள்ளித் துயிலெடை மாக்கள்
இசைகொள் ளோசையி னின்றுயி லேற்று
விசைகொண் மான்றேர் வியல்கெழு வேந்தன்
கனவின் விழுப்ப மனவயி னடக்கி

முனிவரைக் கண்டு உதயணன் வினாதல்

[தொகு]

அளப்பரும் படிவத் தறிவர் தானத்துச் 85
சிறப்பொடு சென்று சேதியம் வணங்கிக்
கடவது திரியாக் கடவுளர்க் கண்டுநின்
றிடையிருள் யாம நீங்கிய வைகறை
இன்றியான் கண்ட தின்னது மற்றதை
என்கொ றானென நன்கவர் கேட்ப 90
உருத்தகு வேந்த னுரைத்ததன் பின்றைத்

ஒரு முனிவன் கனாப் பயன் உரைத்தல்

[தொகு]

திருத்தகு முனிவன் றிண்ணிதி னாடி
ஒலிகடற் றானை யுஞ்சையர் பெருமகன்
மலிபெருங் காதன் மடமொழிப் பாவை
இலங்குகதி ரிலைப்பூ ணேந்துமுலை யாகத்து 95
நலங்கிளர் நறுநுத னாறிருங் கூந்தல்
மாசில் மற்பின் வாசவ தத்தை
முழங்கழன் மூழ்கி முடிந்தன ளென்பது
மெய்யெனக் கொண்டனை யாயின் மற்றது
பொய்யெனக் கருது புரவ லாள 100
இந்நா ளகத்தேசின்மொழிச் செவ்வாய்
நன்னுதன் மாதரை நண்ணாப் பெறுகுவை
பெற்ற பின்றைப் பெய்வளைத் தோளியும்
கொற்றக் குடிமையுட் குணத்தொடும் விளங்கிய
விழுப்பெருஞ் சிறப்பின் விஞ்சைய ருலகின் 105
வழுக்கில் சக்கரம் வலவயி னுய்க்கும்
திருமகற் பெறுதலுந் திண்ணிது திரியா
காரணங் கேண்மதி தாரணி மார்ப
ஆயிர நிரைத்த வாலிதழ்த் தாமரைப்
பூவெனப் படுவது பொருந்திய புணர்ச்சிநின் 110
தேவி யாகுமதன் றாதக டுரிஞ்சி
முன்றாண் முடக்கிப் பின்றா ணிமிர்த்துக்
கொட்டை மீமிசைக் குளிர்மதி விசும்பிடை
எட்டு மெய்யோ டிசைபெறக் கிடந்த
விள்ளா விழுப்புகழ் வெள்ளே றென்பதை 115
முகனமர் காதனின் மகனெனப் படுவது
பரந்த வெண்டிரைப் பாற்கட லாகி
விரும்பப் படுமது வெள்ளியம் பெருமலை
வெண்மை மூன்றுடன் கண்டதன் பயத்தாற்
றிண்மை யாழி திருத்தக வுருட்டலும் 120
வாய்மை யாக வலிக்கற் பாற்றென
நோன்மை மாதவ னுண்ணிதி னுரைப்ப

உதயணன் செயல்

[தொகு]

அன்று மின்று மறிவோ ருரைப்பதை
என்றுந் திரியா தொன்றை யாதலின்
உண்டுகொ லெதிர்தலென் றுள்ளே நினையாப் 125
பெருந்தண் கோயிலு ளிருந்த பொழுதில்
உருகெழு மந்திரி வரவதை யுணர்த்தலிற்
புகுதக வென்றுதன் புலம்பகன் றொழிய
இகல்வேல் வேந்த னிருத்த லாற்றான்
ஆனா வுவகையொடு தானெதிர் செல்லத் 130
தேனார் தாமரைச் சேவடி வீழ்தலிற்
றிருமுயங்கு தடக்கையிற் றிண்ணிதிற் பற்றி
உரிமைப் பள்ளி புக்கனன் மாதோ
பெருமதி யமைச்சனைப் பிரிந்துபெற் றானென்.

4 5 கனாவிறுத்தது முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெருங்கதை/4_5_கனா_இறுத்தது&oldid=482640" இலிருந்து மீள்விக்கப்பட்டது