உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

ஒழித்துக் கட்ட இறுதி முயற்சி ஒன்றில் இறங்கியது. அம்முயற்சியை முறியடிக்க ஆங்கிலக் கம்பெனிக்குப் பெருந்துணை புரிந்தவன் கான் சாகிபே. இவ்வுண்மை அச்சமயத்தில் ஆங்கிலப் படைகளுக்குத் தலைமை தாங்கிய லாரென்ஸ் தம் கைப்பட எழுதியுள்ள பின் வரும் வாசகங்களால் விளங்கும்: “கான் சாகிப் சிறந்த தளபதி; நாட்டின் நிலையை நன்கு அறிந்தவன்; உறுதியும், வீரமும் நிறைந்தவன். போராட்டக் காலங்களில் அறிவோடும், அமைதியை இழக்காமலும் காரியங்களைச் சாதிப்பவன். ஒரு கணமும் ஓய்வு கொள்ளாமல், எல்லாப் பணிகளையும் தானே ஏற்றுச் செய்பவன். தன் கூர்த்த மதியால், எங்களுக்கு வேண்டும் உணவுப் பொருள்களைச் சேதமின்றிக் கொண்டு வந்து சேர்த்தவன்.” கான் சாகிபைப் பற்றிய இந்தக் குறிப்பைத் தம் பெரிய புத்தகத்தில் மேற்கோளாக எடுத்துக் காட்டும் அறிஞர் ஹில், அதே லாரென்ஸ், கிளைவைப் பற்றி எழுதியுள்ள வாசகத்தையும் எடுத்துக் காட்டி, “கிளைவையும், கான் சாகிபையும் லாரென்ஸ் ஒரே மாதிரி வருணித்துள்ளாரே” என்று வியந்து பாராட்டுகின்றார். அது மட்டுமன்று. அறிஞர் ஹில், கிளைவையும், கான் சாகிபையும் உணர்வோடு ஒப்பிட்டுக் கூறும் வாசகங்கள் கல் நெஞ்சையும் கரைக்கும். இந்தியாவில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அடிக்கல் நாட்டிய இராபர்ட் கிளைவ், கடைசியில் தன் கழுத்தைத் தானே கத்தியால் அறுத்துக் கொண்டு செத்தான். ஏறத்தாழ அதே மாதிரியான முடிவே கான் சாகிப்புக்கும் ஏற்பட்டது. ஏகாதிபத்தியத்துக்கு அடிக்-