உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் நாள்

31

வீதியிலே வந்துநின்றேன். மேற்றிசையில் அவ்வுருவம் 15
சோதிக் கடலிலே தோன்றுகரும் புள்ளியெனக்
காணுதலும், சற்றே கடுகி யருகே போய்,
'நாணமிலாப் பொய்க்குயிலோ', என்பதனை நன்கறிவோம்
என்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால்,
நின்ற பறவையுந்தான் நேராகப் போயினதால்; 20
யான் நின்றால் தான்நிற்கும் சென்றால் தான்செல்லும்;
மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது;
வானி லதுதான் வழிகாட்டிச் சென்றிடவும்
யான்நிலத்தே சென்றேன் இறுதியில் முன்புநாம்
கூறியுள்ள மாஞ்சோலை தன்னைக் குறுகியந்த 25
ஊரிலாப் புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால்;
மாஞ்சோலைக் குள்ளே மதியிலிநான் சென்றாங்கே
ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல்
சின்னக் கருங்கயிலி செவ்வனே வீற்றிருந்து,
பொன்னங்குழலின் புதிய ஒளிதனிலே 30
பண்டைப் பொய்க்காதற் பழம்பாட்டைத் தாம்பாடிக்
கொண்டிருத்தல் கண்டேன், குமைந்தேன்; எதிரேபோய்,
“நீசக் குயிலே, நிலையறியாப் பொய்ம்மையே,
ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும்
எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை 35
நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை’
என்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன்;
கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன்; மறுபடியும்
நெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன். ஈங்கிதற்குள்,
வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக் 40
கண்ணிலே பொய்ந்நீர் கடகடவெனத் தானூற்றப்
பண்ணிசைபோ லின்குரலாற் பரவியது கூறிடுமால்;
'ஐயனே, என்னுயிரின் ஆசையே! ஏழையெனை
வையமிசை வைக்கத் திருவுளமோ? மற்(று) எனையே
கொன்றுவிடச் சித்தமோ? கூறீர், ஒருமொழியில்! 45
அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது;
ஞாயிறுதான் வெம்மைசெயில், நாண்மலக்கு வாழ்வுளதோ?
தாயிருந்து கொன்றால் சரண்மதலைக் கொன்றுளதோ?