விவாக ரத்து அவசியம் தானா?
பெண்மையை அறியத் துடிக்கும் இளம் உள்ளத்திற்கு, அவள் வருகை பருவ மழை போலிருந்தது. மனைவி என்றால் ஒரு புதுமை. அவளை திருப்தி செய்ய வேண்டும். இதுவே என் ஆவல். மனம் சதா அவள் நினைவிலேயே லயித்துக் கிடந்தது. புது மலரைச் சுற்றி ஆடும் தேனீ போல.
அவள் வாய் திறந்து ஏதேனும் கேட்டு விட்டால், அது பிரிய தேவதையின் வாக்காக ஒலித்தது. அப்படிக் கேட்க மாட்டாளா என்பதுதானே என் ஆசை. அந்த மோகம் சில மாதங்களில் மறைந்து விட்டது. அவள் புதுமை என்பது போய், பழகிய ஜந்துவாகி விட்டாளே. அதனால், அவளிடம் குறை காணத் தொடங்கியது மனம். போகப் போக அலுப்படையவும் ஆரம்பித்தது.
அவளது உள்ளம் மாறவில்லை. வெளித் தோற்றம் மாறியது. அது அவள் குற்றம் இல்லை. இந்த உண்மை எனக்குக் கசப்பாகத்தான் இருந்தது. அவளது அழகு மங்கினாலும், அன்பு மறையவில்லை. ஆனால், என் உள்ள நிறைவிலே கள்ளம் புகுந்து விட்டது. அதனால்தான் அவள் குறைகளே பிரமாதமாகப் பட்டன.
மனித மனம் அன்றாடச் சுழல்களில் சிக்கி அலுத்த பின், புதுமைக்காக ஏங்குகிறது. உடன் ஒட்டிய எல்லாவற்றிலும் வெறுப்பு பிறப்பது இயல்பு. பழகப் பழகப் பாலும் புளித்து விடுகிறது.
இது ‘பழகிய பால்’ எனும் கதையொன்றிலே வருகிறது. கல்யாணமாகிச் சில வருஷங்கள் கழித்ததும், கணவன் அடையும் மன நிலையைக் கூறுகிறது.