பக்கம்:சோழர் வரலாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

61


 கரிகாலன், பற்பல வாய்க்கால்களையும் வடி மதகுகளையும் அமைத்துத் தண்ணிரை அழிவுறாமற் பாதுகாத்து, வேளாண் வாழ்க்கையை விழுமியதாக்கினான். இப்புதிய முயற்சியால் சோணாடு பொன் கொழிக்கும் நாடாயிற்று. நாடு வளம் பெறச் ‘சோழ வளநாடு சோறுடைத்து’ எனப்புலவர் பாராட்டலாயினர். அன்று முதல் கரிகாலன் ‘கரிகாற் பெருவளத்தான்’ எனப்பட்டான். காவிரியாறு ‘பொன்னி’ எனப் பெயர் பெற்றது.பொன்னிநாட்டைஆண்டமையால், சோழரும் அதுமுதல் ‘வளவர்’ எனப்பட்டனர்.சோணாட்டின் சிறப்பைப் பொருநர் ஆற்றுப் படையுள் கண்டு மகிழ்க![1]

இவன் காவிரியாற்றை ஒழுங்குபடுத்தியதன்றிப் பல குளங்களைப் புதியனவாக எடுப்பித்தான்; கோவில்களைக் கட்டினான்; கோட்டை கொத்தளங்களை ஆங்காங்கு அமைத்தான் என்று பட்டினப்பாலை பகர்கின்றது.[2]

அமைதியுடைய வாழ்க்கை: இவனது தலைநகரமான பூம்புகாரில் கடற்கரை ஓரம் வாணிபத்தின் பொருட்டுச் சோனகர், சீனர், சாவகர் முதலிய பல நாட்டாரும் விடுதிகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்தனர்; அவர்களுடன் உள்நாட்டு மக்களும் கலந்து உறவாடினர்; இரு திறத்தாரும் மனமொத்து வாழ்க்கை நடத்தினர். பெளத்த, சமண, வைதிக சமய மக்களும் பண்டைத் தமிழரோடு அமைதியுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இதற்கென்ன காரணம்? கரிகாலனது செங்கோற் சிறப்புடைய அரசியலே அன்றோ?[3]

முறை வழங்கல்: கரிகாலனிடம் ஒருகால் முதியவர் இருவர் முறை வேண்டி வந்தனராம். அவர் இவனது இளமைத் தோற்றத்தைக் கண்டு ஐயுற்றனராம்.


  1. வரி 242-248.
  2. வரி 283-288.
  3. பட்டினப் பாலை ; வரி. 216-218. 199,207-8.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/63&oldid=480628" இலிருந்து மீள்விக்கப்பட்டது