திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/இணைச் சட்டம் (உபாகமம்)/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
மோசே மக்களுக்குக் கடவுளின் கட்டளைகளை அளித்தல். ஓவியர்: ஃபெர்டினான்ட் போல் (1616-1680). ஆம்ஸ்டர்டாம், ஓலாந்து.

இணைச் சட்டம்[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

துப்புத் துலங்காத கொலைகள் குறித்த விதிமுறைகள்[தொகு]


1 நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுத்த மண்ணில் திறந்த வெளியில் ஒருவன் கொலையுண்டு கிடக்க, அவனைக் கொலைசெய்தவன் யாரென்று தெரியாதிருந்தால்,
2 தலைவர்களும் நீதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலையுண்டு கிடப்பவனைச் சுற்றிலுமுள்ள நகர்களுக்கு உள்ள தொலைவு எவ்வளவு என்று அளப்பார்களாக.
3 கொலையுண்டு கிடப்பவனுக்கு மிக அருகிலுள்ள நகர்த் தலைவர்கள், வேலையில் பழக்கப்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஓர் இளம் பசுவை மந்தையிலிருந்து பிடிப்பர்.
4 பின்னர், உழப்படாததும் விதைக்கப்படாததும் நீரோடுவதுமான பள்ளத்தாக்கிற்கு அந்தக் கிடாரியை அந்நகர்த்தலைவர்கள் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கில் அதன் கழுத்தை முறிப்பர்.
5 அப்பொழுது, தனக்கு ஊழியம் செய்யவும், ஆண்டவர் பெயரால் ஆசி வழங்கவும், உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்ட லேவியின் புதல்வர்களாகிய குருக்கள் முன்வர வேண்டும். ஏனெனில், அவர்களது வாக்கின்படியே எல்லா வழக்குகளும் எல்லாத் தடியடிகளும் தீர்க்கப்படவேண்டும்.
6 அப்போது கொலையுண்டவனுக்கு மிக அருகில் உள்ள நகர்த் தலைவர்கள் எல்லோரும் பள்ளத்தாக்கில் கழுத்து முறிக்கப்பட்ட கிடாரியின் மீது அவர்கள் கைகளைக் கழுவி,
7 உரத்துச் சொல்ல வேண்டியது; "எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தியதுமில்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதுமில்லை.
8 ஆண்டவரே, நீர் மீட்ட உம் மக்களாகிய இஸ்ரயேலை மன்னித்தருளும். குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தினபழியை உம்மக்கள் இஸ்ரயேல்மேல் சுமத்தாதேயும். இரத்தப் பழியிலிருந்து அவர்களை விடுவித்தருளும்."
9 இவ்வாறு குற்றமற்றவனின் இரத்தத்தைச் சிந்தின பழியை உன்னிடமிருந்து நீக்கி விடுவாய். ஏனெனில் ஆண்டவரின் முன்னிலையில் நேரியதைச் செய்துள்ளாய்.

போர்ப் பெண் கைதிகளைக் குறித்த விதிமுறைகள்[தொகு]


10 உன் பகைவர்களுக்கு எதிராகப் போர் புரியப்போகையில், உன் கடவுளாகிய ஆண்டவர் அவர்களை உன் கையில் ஒப்படைப்பார். நீ அவர்களைச் சிறைப்பிடிப்பாய்.
11 அப்போது, சிறைப்பட்டவர்களில் அழகிய தோற்றமுடைய ஒரு பெண்ணைக் கண்டு, அவள்மேல் காதல்கொண்டு, அவளை உன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால்,
12 அவளை உன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போ. அவள் தன் தலையை மழித்து, நகங்களை வெட்டிக்கொள்வாள்.
13 அவள் சிறைக் கைதியின் ஆடையைக் கழற்றிவிட்டு, உன்வீட்டில் தங்கி, ஒரு மாதகாலம் தன் தந்தையையும் தாயையும் நினைத்துத் துக்கம் கொண்டாடுவாள். அதன்பின் நீ அவளோடு கூடி அவள் கணவனாவாய்; அவள் உனக்கு மனைவியாவாள்.
14 அவள்மேல் உனக்கு விருப்பமில்லாமற் போனால், அவள் விருப்பம் போல் அவளைப் போகவிடு. நீ அவளைக் கெடுத்துவிட்டதால் பணத்துக்கு விற்கவோ அடிமைபோல் நடத்தவோ வேண்டாம்.

தலைச்சனின் பங்கு குறித்த விதிமுறை[தொகு]


15 இரண்டு மனைவியரைக் கொண்ட ஒருவன் ஒருத்தியின்மேல் விருப்பாகவும், மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்கும்போது, இருவருமே அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கையில், வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் தலைப்பேறாக இருப்பானாயின்,
16 அவன் தனக்குண்டான சொத்தைத் தன் புதல்வர்களுக்குப் பங்கிடும் நாளில், தலைச்சனுக்குரிய உரிமையைத் தலைச்சனாகிய வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனுக்கன்றி, விரும்ப்பட்ட பெண்ணின் புதல்வனுக்குக் கொடுக்கக்கூடாது.
17 வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வனையே தலைச்சனாக ஏற்றுக் கொண்டு, தன்னிடம் உள்ள சொத்துக்களில் அவனுக்கு இரண்டு பங்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் அவனே தன் தந்தையின் ஆற்றலது முதற் கனி. தலைச்சனுக்குரிய உரிமை அவனையே சாரும்.

கீழ்ப்படியாத மகனைக் குறித்த விதிமுறை[தொகு]


18 ஒருவனுடைய புதல்வன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய், தந்தை சொல்லையோ தாய் சொல்லையோ கேளாமல், அவர்களால் தண்டிக்கப்பட்ட பின்பும் அடங்காமல் போனால்,
19 தந்தையும் தாயும் அவனைப் பிடித்து, அவனது நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கொண்டு போவர்.
20 "எங்கள் மகனாகிய இவன் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்டவனாய் இருக்கிறான்; எங்கள் சொல் கேட்பதில்லை; பெருந்தீனிக்காரனும் குடிவெறியனுமாய் இருக்கிறான்" என்று நகர்த் தலைவர்களிடம் அவர்கள் சொல்ல வேண்டும்.
21 உடனே, அந்நகரத்து மனிதர் எல்லோரும் அவனைக் கல்லால் எறிவர்; அவனும் செத்தொழிவான். இவ்வாறு, உன்னிடமிருந்து தீமையை அகற்று. அதைக் கேட்டு இஸ்ரயேலர் எல்லோரும் அஞ்சுவர்.

பிற சட்டங்கள்[தொகு]


22 சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டபின் அவனது பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிடு,
23 ஆனால் அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக்கூடாது. அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டைத் தீட்டுப் படுத்தாதே. [*]

குறிப்பு

[*] 21:23 = கலா 3:13.

அதிகாரம் 22[தொகு]


1 உன் இனத்தவன் ஒருவனின் ஆடோ மாடோ வழிதவறித் திரிவதைக் கண்டும், அதைக் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதை உன் இனத்தானிடம் திருப்பிக் கொண்டு போ;
2 உனக்கு அடுத்திருப்பவன் உன்னிடமிருந்து வெகு தொலையில் இருந்தால், அல்லது அவன் யாரென்று நீ அறியாதிருந்தால், அதை உன் வீட்டுக்குள் கொண்டுபோய் உன்னோடு வைத்துக்கொள். உனக்கு அடுத்திருப்பவன் அதைத் தேடி வரும்பொழுது அதை அவனிடம் திரும்பக் கொடு.
3 உனக்கு அடுத்திருப்பவனிடமிருந்து காணாமல் போன கழுதைக்கோ, ஆடைக்கோ வேறு எந்தப் பொருளுக்கோ அவ்விதமே செய். நீ அவற்றைக் கண்டும் காணாதவன் போல் இருந்துவிடாதே.
4 உனக்கு அடுத்திருப்பவனின் கழுதையோ மாடோ வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டும் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதைத் தூக்கிவிட அவனுக்கு உதவிசெய். [1]
5 ஆண்களின் ஆடைகளைப் பெண்கள் அணியலாகாது. பெண்களின் உடைகளை ஆண்கள் உடுத்தலாகாது. ஏனெனில் அப்படிச் செய்பவர்கள் உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அருவருப்பானவர்கள்.
6 வழியோரமாய், மரத்திலோ தரையிலோ, குஞ்சுகள் அல்லது முட்டைகள் உள்ள பறவைக்கூட்டையும், அந்தக் குஞ்சுகள் அல்லது முட்டைகள்மேல் தாய் உட்கார்ந்து கொண்டிருப்பதையும் கண்டால், குஞ்சுகளோடு தாயைப் பிடிக்காதே.
7 தாயைப் போகவிடு. குஞ்சுகளை உனக்கென எடுத்துக்கொள். அப்போது உனக்கு நலமாகும். நீ நெடுநாள் வாழ்வாய்.
8 நீ புது வீட்டைக் கட்டும்போது உன் வீட்டு மாடியைச் சுற்றிக் கைப்பிடிச் சுவரைக் கட்டு. இல்லையெனில், ஒருவன் மாடியிலிருந்து விழுந்தால், விழுந்தவனின் இரத்தப்பழி உன் வீட்டின்மீது வரும்.
9 திராட்சைத் தோட்டத்தில் வேறு விதைகளை விதைக்காதே. அப்படிச் செய்தால், நீ விதைத்தவற்றின் பயிரையும் திராட்சைத் தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
10 மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழலாகாது.
11 ஆட்டுமயிரும் நூலும் கலந்து நெய்யப்பட்ட ஆடையை உடுத்தாதே. [2]
12 உன்னை நீ மூடிக்கொள்ளும் மேற்போர்வையின் நான்கு மூலைகளிலும் தொங்கல்களை அமைத்துக்கொள். [3]

பாலுறவுத் தூய்மை பற்றிய சட்டங்கள்[தொகு]


13 ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளை வெறுத்து,
14 அவள் மீது அவதூறுசொல்லி, அவளது பெயரைக் கெடுத்து, "நான் இந்தப்பெண்ணை மணம் முடித்தேன்; ஆனால் அவளோடு உறவுகொண்டபோது, அவள் கன்னியல்ல என்று கண்டுகொண்டேன்" என்று கூறினால்,
15 அப்பெண்ணின் தந்தையும் தாயும் அவளது கன்னிமையின் அடையாளத்தை எடுத்துக்கொண்டு, அவளை நகர் வாயிலுள்ள தலைவர்களிடம் கூட்டி வருவார்கள்.
16 அப்போது, அப்பெண்ணின் தந்தை தலைவர்களிடம், "என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன்; அவனோ அவளை வெறுக்கிறாள்.
17 அத்தோடு, "உன் மகளிடம் கன்னிமையைக் காணவில்லை" என்று கூறி அவளைப் பற்றி அவதூறு சொல்லுகிறான்; "இதோ என் மகளின் கன்னிமைக்கான சான்று" என்று சொல்லுவான். பின்பு அவர்கள் நகர்த் தலைவர்களின் முன்னர் அந்தத் துணியை விரிப்பார்கள்.
18 அப்போது அந்நகர்த் தலைவர்கள் அம்மனிதனைப் பிடித்துத் தண்டிப்பார்கள். 19 பின்னர், அவனுக்கு நூறு வெள்ளிக் காசுகள் தண்டம் விதித்து, அதைப் பெண்ணின் தந்தையிடம் கொடுப்பார்கள். ஏனெனில், இஸ்ரயேலின் கன்னி ஒருத்தியின் மேல் அவன் அவதூறு கூறியுள்ளான். அவளே இவனுக்கு மனைவியாக இருப்பாள். அவன் வாழ்நாள் முழுவதும் அவளைத் தள்ளிவிட முடியாது.
20 ஆனால், அப்பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்பது உண்மையானால்,
21 அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டுவந்து அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர். அவளும் சாவாள். ஏனெனில், அவள் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போதே வேசித்தனம் பண்ணி இஸ்ரயேலுக்கு இழுக்கானதைச் செய்தாள். இவ்வாறு தீமையை உன்னிடமிருந்து அகற்று.
22 ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று.
23 மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை நகரில் ஒருவன் சந்தித்து அவளோடு உறவுகொண்டால்,
24 அவர்கள் இருவரையும் நகர் வாயிலுக்குக் கொண்டு போய்க் கல்லால் எறிவர்; அவர்களும் சாவர். அவள் நகரில் இருந்தும் உதவிக்காகக் கூக்குரலிடாததாலும், அவன் மற்றொருவனின் மனைவியைக் கெடுத்ததாலும் அவர்கள் சாவர். இவ்வாறு உன்னிடமிருந்து தீமையை அகற்று.
25 ஆனால், மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை வயல்வெளியில் ஒருவன் கண்டு அவளைப் பலவந்தமாகப் பிடித்து அவளோடு உறவுகொண்டால், அவளோடு உறவுகொண்ட அம்மனிதன் மட்டுமே சாகட்டும்.
26 அந்தப் பெண்ணுக்கு ஒரு தீங்கும் செய்ய வேண்டாம். சாவுக்கு ஏதுவான பாவம் எதுவும் அவள் செய்யவில்லை. தனக்கு அடுத்திருப்பவனை ஒருவன் தாக்கி அவனைக் கொல்வது போலத்தான் இதுவும்.
27 ஏனெனில், அவன் அவளை வயல்வெளியில் மேற்கொண்டான். மணமாகியும் கன்னிமை கழியாத அவள் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்ற எவரும் இல்லை.
28 மணமாகாத ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தப்படுத்தி, அவளோடு உறவுகொண்டது கண்டுபிடிக்கப்பட்டால்,
29 அப்பெண்ணின் தந்தைக்கு அவளோடு உறவு கொண்டவன் ஐம்பது வெள்ளிக்காசுகள் தரவேண்டும். அவன் அவளைக் கெடுத்துவிட்டதால் அவளை மனைவியாக்கிக்கொள்ள வேண்டும். அவன் வாழ்நாள் முழுவதும் அவளை மணமுறிவு செய்யமுடியாது. [4]
30 எவனும் தன் தந்தையின் மனைவியோடு கூடலாகாது; தன் தந்தையின் படுக்கையை இழிபுபடுத்தலாகாது. [5]

குறிப்புகள்

[1] 22:1-4 = விப 23:4-5.
[2] 22:9-11 = லேவி 19:19.
[3] 22:12 = எண் 15:37-41.
[4] 22:28-29 = விப 22:16-17.
[5] 22:30 = லேவி 18:8; 20:11; இச 27:20.


(தொடர்ச்சி): இணைச் சட்டம்: அதிகாரங்கள் 23 முதல் 24 வரை