உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவருட்பாச் சிந்தனை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


பெறுதற் பொருட்டு அதனினும் நுட்பப் பொருளை உணர்த்தத் தொடங்கின் அன்னோர் ஏற்றுக் கொள்ளும் உணர்வு பெறாமையின் துாலஉடம்பே ஆன்மா எனவும், அவ்வுடம்பு நசித்தலே பேருறுதிப்பயன் எனவும் அறிவுறுத்தி யருளினான். பின்னர் அவ்வாறு அறிவுறுத்தும் நெறியிலே ஒழுகி இறைவனது திருவருளுக்கு உரியராய் ஆணவமல மறைப்பினின்றும் சிறிது நீங்கி, உடம்பே ஆன்மா, உடம்பு நசித்தலே பேருறுதிப்பயன் எனத் தாம் முன்பு கொண்ட கோள்கையில் ஐயப்பாடுடையராயினர். அங்கனம் ஐயுற்ற மாந்தர்களுக்கு, உடம்பு முதலியன ஆன்மா அல்ல என்று மறுத்தற் பொருட்டுப் புத்த சமயத்தை அறிவுறுத்தியருளினன். இவ்வாறு மக்களின் மன உணர்வினை வளர்த்தற் பொருட்டே மேலும் மேலும் ஏணிப்படிகளாகப் பல்வேறு சமயங்களையும் இறைவன் வகுத்தருளினான் என்பர் பெரியோர்.

'இது, தைத்திரியத்தில் அதிகாரி பேதம் பற்றி அன்ன மயகோசம் பிரமம் என்றும் அதனை மறுத்து மேல், அதனிற்சூக்குமமாகிய பிராணமயகோசம் பிரமம் என்றும் அதற்குமேல் மனோமயகோசம் பிரமம் என்றும், அதற்கு மேல் விஞ்ஞானமய கோசம் பிரமம் என்றும், அதற்கு மேல் ஆநந்தமயகோசம் பிரமம் என்றும் ஒன்றற்கொன்று சூக்குமமாய் உணர்த்துதல் போலவும், கவுசிதக உபநிடதத்தில் அதிகாரி பேதத்தால் இந்திரன் தைத்தியனுக்குத் தன்னையே பிரமமாகக் கூறியது போலவும் கொள்க. அங்ங்னம் புல்லை எதிரே காட்டி ஆக்களைப் பிடிக்குமாறு போலச் சோபான முறைமைபற்றிக் கூறியது என்பதூஉம், அவை எல்லாம். ஒருவாற்றாற் பிரமாணம் என்பதூஉம் சூதசங்கிதையிற் காண்க' (சிவஞான பாடியம்-சிறப்புப்பாயிரம்)