‘அந்த மூன்று போலீஸ்காரர்களுக்கும் எய்ட்ஸைக் கொடுத்துட்டேன்’ என்று எக்களிக்கிற எஸ்தரை, ஏதோ எதேச்சையாக இல்லாமல், எதேச்சாதிகாரத்துக்கு எதிராக ஏவப்பட்ட கணையாக அடையாளம் காண்கிறோம். எஸ்தரின் கொச்சைப் பேச்சும், ‘வாடா போடாவும்’ ஆண்-பெண் உறவுகளின் நளினத்தை ஏளனப்படுத்துகிற விஷயம் அல்ல. சமூக அவலங்களுக்குச் சவால் விடுகிற மொழியாகத்தான், சமுத்திரம், அந்தப் பாத்திரத்தைக் கையாளுகிறார்.
‘உடம்பை எவ்வளவு தூரம் கெடுக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கெடுக்க வேண்டும், எவ்வளவு சீக்கிரம் சாக வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் சாக வேண்டும்’ என்று மெழுகுவர்த்தியாய் உருகும் மனோகரும் நம்மை உருக்கும் ஒரு பாத்திரம்.
கலை, எஸ்தர், மனோகர் இவர்கள் சோகச் சித்திரங்கள் என்று சொல்வது கூட வழக்கமான வருணனை. அதை விட… அதை விட… ஆமாம், அழுகைதான் வருகிறது.
‘பாலைப்புறாவை’த் தொடராக்கி தினமணி, தனது நீண்ட கால சமூக சேவைக்கு இன்னுமொரு சான்றினை நிறுவியுள்ளது.
தினமணி மூலம் லட்சக் கணக்கான வாசகர்களுக்கு ஒரு சமூகப் பயணம் தரப்பட்டுள்ளது. சினிமா, இப்படிப்பட்ட புதினங்களைப் பார்க்க வைப்பது நல்லது. சாராயத்திற்கும், சினிமாவுக்கும், சம அளவிலும் கணிசமாகவும் நிதி ஒதுக்கீடு செய்யும் என் சகோதரத் தமிழனை, சினிமாவைத் தவிர வேறெந்த வழியில் சென்றடைவது?
சு.சமுத்திரம் ஒரு வெகு ஜன சமுத்திரம். பாலைப்புறா அவரது சமூக விஞ்ஞான சாத்திரம்.
சென்னை, | |
-விஜயதிருவேங்கடம் |
10.4.1998. |
ix