பக்கம்:தம்ம பதம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 ☐ தம்ம பதம்

403. நிற்பனவும் திரிவனவுமாகிய எவ்வுயிரையும் துன்புறுத்தாமலும, வதைக்காமலும, வதைக்கக் காரணமாயில்லாமலும் எவன் உள்ளானோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (23)

404. பகைமை உணர்ச்சியுள்ளவர் நடுவே பகைமையற்றும், தடியெடுத்து நிற்போர் நடுவே சாந்தியுடனும், ஆசையுடையோர் நடுவே ஆசையற்றும் உள்ளவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (24)

405.எவனுடைய ராகத் துவேஷங்களும், கர்வமும், கபடமும், ஊசி முனையிலிருந்து உருண்டு விழும் கடுகு போல், ஒழிந்து விட்டனவோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (25)

406.உண்மையே பேசுவோன்,இன்சொல்லும் தெளிந்த பொருளும் விளங்கப் பேசுவோன், எவர் மனமும் நோவாமல் பேசுவேன் எவனோ அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (26)

407.இந்த உலகில் தனக்கென்று அளிக்கப்படாத எதையும்-அது நெடியதோ, குறுகியதோ, பெரிதோ, சிறிதோ, நல்லதோ, கெட்டதோ-ஏற்றுக்கொள்ளாதவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (27)

408. இகத்திலும் பரத்திலும் எதிலும் ஆசையற்றவன், எதிலும் நாட்டமற்றவன், தளைகளற்றவன் எவனோ, அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (28)

409. எவனுக்கு வேட்கையில்லையோ, ஞானத்தால் ஐயங்கள் திர்ந்து விட்டனவோ, எவன் நித்தியமான மெய்ப்பொருளில் ஆழ்ந்துள்ளானோ அவனையே நான் பிராமணன் என்று சொல்வேன். (29)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/94&oldid=1360041" இலிருந்து மீள்விக்கப்பட்டது