உள்ளடக்கத்துக்குச் செல்

மனோன்மணீயம்/அங்கம் 04

விக்கிமூலம் இலிருந்து

மனோன்மணீயம்

[தொகு]

அங்கம் நான்கு

[தொகு]

முதற்களம்- கதைச் சுருக்கம்

[தொகு]
போர்க்களம். காலைவேளை. குடிலன் மகன் பலதேவன், படைகளை அணிவகுக்கிறான். குடிலன், ஓர் இடத்தில், அரசனை எதிர்பார்த்து இருக்கிறான். அரசன் தோல்வியுற்று உயிரிழக்கவேண்டும் என்பது குடிலனுடைய உள்ளெண்ணம். ஆகையினாலே, அரசனிடம் உண்மைப்பற்றும் அன்பும் உள்ள நடராசன் முதலிய வீரர்களைப் போர்க்களத்தில் இருத்தாமல், அவர்களைக் கோட்டைக்குக் காவலாக அமைத்துத், தன்மகனான பலதேவனைத் தளபதியாக்கியிருக்கிறான். அரசன் வருகையை எதிர்நோக்கியிருக்கும் அமைச்சன், தனக்குள்ளே இப்படி எண்ணிக் கொள்கிறான்:
“ஒருத்தன் கொண்ட பேராசையினால், கடல்போன்ற துன்பம், உலகத்தில் ஏற்படுகிறது. இதோ, இந்தப் போர்க்களத்திலே, அணிஅணியாக நிற்கும் போர்வீரர்களில், மாண்டு மடியப்போகிறவர்களின் தொகையைக் கணக்கிட முடியுமா? குளத்திலே கல்லைப் போட்டால், அது விழுந்த இடத்தில் அலைகள் தோன்றிப் பெரிதாகிப் பெரிதாகிக் கரையை வந்து மோதுவதுபோல, வீரர்கள் இறந்தால், அந்தத் துன்பம் அவர்கள் மனைவிமக்கள், உற்றார், பெற்றார், நண்பர் முதலியவர்களிடம் பரவிப் பெருந்துயர் உண்டாக்குகிறது! சீச்சீ! இதென்ன, எனக்கு ஏன், இந்த எண்ணங்கள்? அரசனுக்காகச் சாகவேண்டியது இவர்கள் கடமை. பல ஆண்டுகளாக அரசனுடைய சோற்றைத் தின்று வருகிற இவர்கள் செய்தது என்ன? செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவேண்டும் அல்லவா? மேலும், பலபேர் துன்பப்பட்டால்தான், ஒருவன் சுகம் அடையலாம் என்பது உலக இயற்கை. ஆகவே, இவர்களுக்காக நாம் ஏன் கவலைப்படவேண்டும்? உழுவோர், நெய்வோர், பல்லக்குச் சுமப்போர் முதலியவர்கள் துன்பம் அடைவதனாலே, அவ்வவ்வேலைகளை வேண்டாமென்றா சொல்லுவார்கள்? ஒவ்வொருவரும் அவரவர் நன்மைகளையே நாடுகிறார்கள். வாய்க்காலில் மோனமாக நின்றுகொண்டு, மீன் வருமளவும் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிற கொக்கைப்போல, அறிவாளிகள், காலம்இடம் வரும்வரையில், பொறுமையோடு கருமமே கண்ணாகக் காத்திருப்பார்கள். எண்ணித் துணிவர்; துணிந்தபின் அதனைச் செய்துமுடிப்பர். கோழைகள், என்றும் இன்பம் பெறமாட்டார்கள்...”
இவ்வாறு குடிலன், தன்காரியத்தைப் பற்றித் தனக்குள் எண்ணிக்கொண்டிருக்கும்போது, அரசன் வருகிறான். குடிலன், அரசனை வரவேற்று, அணிவகுப்பைக் காட்டுகிறான். பிறகு, பேச்சோடு பேச்சாகக் கோட்டைக்காவலுக்கு நாராயணனை ஏற்படுத்தி யிருப்பதாகவும், அப்பணியை நாராயணன் அரைமனத்தோடு ஏற்றுக்கொண்டு போனதாகவும் கூறி நாராயணன் மீது அசூயையை உண்டாக்குகிறான். அரசன் வந்ததைக் கண்டு போர்வீரர், ஆரவாரம் செய்து வரவேற்கின்றனர். போர் அணிவகுப்பைக் கண்டபிறகு, அரசன், வீரர்கள் வீறுகொள்ளும்பொருட்டு, அவர்களுக்கு வீரமொழி கூறுகிறான்:-
“வீரர்களே! உங்கள் போர்க்கோலத்தைக் கண்டு மகிழ்ந்தோம்! உங்களுக்கு வாய்த்திருக்கும் இந்தப் பெரும்பேறு யாருக்கு வாய்க்கும்? தாயினும் சிறந்த தாயாகிய உங்கள் பாண்டிநாட்டுக்குத் தீங்குசெய்யப் படையெடுத்து வந்தனர். உங்கள் தாய்நாட்டைக் காப்பதற்காக, நீங்கள் இப்போர்க்களத்தில் வந்திருக்கிறீர்கள். உங்கள் உள்ளத்தில் பொங்கும் சினத்தீ, அடங்காமல் மேலே புகைந்து, உங்கள் கண்களில் பொரிகிறது. உங்கள் புருவம் நெரிப்பதும், மீசை துடிப்பதும், உங்கள் முகக்குறிப்பும் கண்டு, பாண்டித்தாய் மகிழ்ச்சி அடைகிறாள். உங்களை ஊட்டி வளர்த்த தாமிரவரணித் தாய், அதோ, அலையெடுத்து ஆரவாரிக்கிறாள்! (வீரர்கள் வீறுகொண்டு ஆரவாரம் செய்கிறார்கள்.) உங்களை ஊட்டி வளர்த்த தாமிரவரணித் தாய் கூறுவதைக் கேளுங்கள்! ‘என் அருமை மக்களே! என் நீரைக்குடித்து வளருங்கள். என் நீரைக்குடித்து வளர்ந்த நீங்கள், ஒப்புயர்வில்லாத வீரர்களாகிச் சுதந்திரத்தின் முத்திரையை உங்கள் இருதயத்தில் பதிய வைத்திருக்கிறீர்கள். அயலான் ஒருவன் என்னைத் தீண்டுவானாயின், உங்கள் மார்பின் குருதியைப் பொழிந்து, உங்கள் உயிரைக் கொடுத்தாகிலும், என்னைக் காப்பாற்றுங்கள்!’ என்று ஆணையிடுகிறாள். தாமிரவரணியின் நீரைக்குடித்து வளர்ந்த நீங்கள், போர்க்கோலத்துடன் களத்தில் நிற்பதைக் கண்டு, அவள், உங்களை வாழ்த்துகிறாள். (வீரர்கள் வீறுகொண்டு ஆரவாரம் செய்கின்றனர்).
“அகத்தியர் ஆய்ந்த தமிழ்மொழி, நமது தாய்மொழி. அதை, அன்னியருக்கு அடிமைப்படாதபடி காப்பாற்றுவது, உங்கள் கடமையன்றோ?
“உங்களைத் தொட்டிலில் இட்டு, உம்முடைய பெரியோர்களின் சிறப்பையும், புகழையும் பாடி உங்கள் அன்னைமார் தாலாட்டி வளர்த்த காலம்முதல், அவர்களுடைய வீரதீரங்களைக் கேட்டு வளர்ந்தீர்கள். தமிழையும், பண்டையோர் வீரத்தையும், அருந்தி வளர்ந்த நீங்கள், ஆண்மையும் உரிமையும் இழந்தவர்கள் அல்லர். பொதிகைமலைக் காற்றைச் சுவாசித்து வளர்ந்த நீங்கள், அன்னியனுக்கு அடிமைப்பட்டு, நாட்டுப்பற்று இல்லாமல் நடைப்பிணமாகத் திரியும் பேடிகள் அல்லர். நீங்கள் தேசாபிமானம், பாசாபிமானம், ஆண்மை, சுதந்திரம், வீரம், ஆற்றல் முதலியவை அற்றவர்கள் என்று உங்களைத் துச்சமாக எண்ணிப் போருக்கு வந்த பகைவர்மேல் நீங்கள் சினங்கொண்டிருப்பது, முழுவதும் சரியே. போரிலே என்ன ஆகுமோ என்று உங்கள் மக்கள் மனைவியர், உறக்கம் இல்லாமல் அழுகின்றனர். அதனைக்கண்டு, உங்கள் நெஞ்சம் பகைத்துக் கோபம் கொண்டது இயல்பே. சிங்கத்தை அதன் குகையில் சென்று, பிடரிமயிரைப் பிடித்து இழுத்தால், அது சினங்கொள்ளாதிருக்குமோ? உரிமை பறிபோகும்போது, அதனை ஆண்மையோடு காப்பாற்றுவது, வீரர்களின் கடமையல்லவா?
“நாட்டுப்பற்று என்னும் தீ, வேள்வியைவிடத் தூய்மையானது என்று விண்ணவரும் கருதுவர். படையெடுத்துவந்து, உங்கள் உள்ளத்தில் கோபத்தீயை மூட்டிவிட்ட பகைவர், தாங்களே, உங்கள் கோபத்தீயை எரியவிடும் விறகுகளாக அமைகிறார்கள். இன்று நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும், உலகமுள்ளளவும் சொல்லும், ‘பாண்டிநாட்டார் சுதந்திரமுடையவர்கள்; அவர்களிடம் போகாதீர்கள். சுதந்திரமும் செருக்கும், அவர்களுக்கு உயிராக, உணவாக, மூச்சாக உள்ளன!” என்று. போர்க்களத்திலே நீங்கள் கொள்ளும் காயங்கள், வெற்றிமகள் உங்களுக்கு முத்தமிட்டளித்த வெற்றி முத்திரை என்று கருதுங்கள். (போர்வீரர்கள் மீண்டும் ஆரவாரம் செய்கின்றனர்).
“போரில் அடைந்த காயம், உங்கள் வீரப்புகழின் அடையாளம். இப்பெருமை யாருக்கு வாய்க்கும்! உங்கள் பின்வழியார், தலைமுறை தலைமுறையாகப் பேசுவார்கள்: ‘நமது பெரியோர் போரிட்டுப் புண்ணடைந்து, பெற்ற சுதந்திரம் அல்லவா, நாம் இப்போது அடைந்துள்ள சுதந்திரம்’, என்று பெருமையுடன் பேசுவார்கள். நீங்கள் அடைவது விழுப்புண் அல்ல; புகழின் கண்! போரில் புண்கொள்ளாமல், புகழுடம்பு பெற்றவர் யார்? அத்திப்பழத்தில் கொசுகள் உண்டாகிச் சாவதுபோல, நாள்தோறும் சாகிறவர் பலப்பலர். அவர்களெல்லாம் வாழ்ந்தவர்கள் என்று கருதப்படுவார்களோ! வீரர்களே! நீங்கள் அடையப்போகிற புகழைப்பற்றி, நானும் பெருமைப்படுகிறேன். உங்களில் போருக்கு அஞ்சி உயிர்விட அஞ்சுவோர் ஒருவரும் இலர் எனலாம். இருந்தால் சொல்லுங்கள், அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவோம். ( ‘இல்லை இல்லை; ஒருவரும் இல்லை’ என்ற குரல்).
“நல்லது; உரிமைக்காக, சுதந்திரத்துக்காக, மேன்மைக்காக, புகழுக்காகப் போராடுவோம்; வாருங்கள். அதோ விஜயலட்சுமி காத்திருக்கிறாள். குமரி மனோன்மணி, உங்கள் வெற்றிக்காக நோன்பு நோற்கிறாள். வெற்றி முரசு கேட்டால்தான், அவள் நோன்பு விடுவாள். (குமரி மனோன்மணிக்கு ‘ஜே’ எனும் குரல்). நமது தாய்தந்தையர், மனைவி மக்கள், நமது நாடு எல்லோருடைய சுதந்திரத்தையும் அழித்துப் பறிக்க வந்தனர், பகைவர்கள். அவர்களை அடிப்போம், விரட்டுவோம், மண்டையை உடைப்போம், குடலைப் பிடுங்குவோம், உயிரைக்குடிப்போம், வெற்றி பெறுவோம். வாருங்கள்! வாருங்கள்!”
முரசு கொட்டுகின்றனர். பாணர்கள், போர்ப்பாட்டுப் பாடுகிறார்கள். படைவீரர்கள், சேனைத்தலைவரைப் பின்தொடர்ந்து போர்க்களம் செல்கின்றனர்.

மனோன்மணீயம்: நான்காம் அங்கம், முதற்களத்தின் கதைச்சுருக்கம் முற்றியது.

[தொகு]
பார்க்க

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 01

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 02

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 03

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 04

மனோன்மணீயம்/அங்கம் 04/களம் 05

"https://ta.wikisource.org/w/index.php?title=மனோன்மணீயம்/அங்கம்_04&oldid=478982" இலிருந்து மீள்விக்கப்பட்டது