சோழர் வரலாறு/சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்

விக்கிமூலம் இலிருந்து

13. சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்

சங்ககால நிலைமை: தொல்காப்பியம், வடமொழியாளர் தமிழகத்தில் வேரூன்றிவிட்டதை நன்கு அறிவிக்கிறது; அவர் தம் பழக்க வழக்கங்களையும் ஒரளவு தெரிவிக்கிறது. அக்கால முதல் சங்கத்து இறுதிக் காலமாகிய கி.பி. 3-ஆம் நூற்றாண்டுவரை சிலப்பதிகார காலம் வரையுள்ள தமிழ்ப்பாக்களைக் கானின், வடமொழியாளருடைய வேதவேள்விகள், சமயக் கோட்பாடுகள் இன்னபிறவும் படிப்படியாகத் தமிழர் வாழ்க்கையில் கலந்து வந்த நிலைமையை நன்கு உணரலாம். எனினும், இந்தப் புதுமை நகர மக்களிடமே காணப்பட்டதாகும். திணை மக்களாக இருந்தவரிடம் இவை வேரூன்றில, இஃது எங்ஙனமாயினும், தமிழ் அரசர் தம்மைக் கதிரவன்வழி வந்தவர் என்றும், மதிவழி வந்தவர் என்றும் வடநாட்டு அரசரைப் போலக் கூறத் தலைப்பட்டு விட்டனர்; வேத வேள்விகளில் விருப்புக் கொண்டனர், வேதங்களில் வல்லாரைத் தமக்கும் புரோகிதராகக் கொள்ளத் தலைப்பட்டனர் என்பன நன்கு விளங்குகின்றன. வடவர் கூட்டுறவால் பழந்தமிழர் மணவாழ்க்கை, பிற சடங்குகள், சமயக் கொள்கை முதலியவற்றுள் வடவர்கொள்கைகள் சிறிது சிறிதாகப் புகத் தொடங்கின என்பதும் நன்கு அறியக் கிடக்கிறது. எனினும், கூர்த்தஅறிவு கொண்டுகாணின், ‘பழந்தமிழர் நாகரிகம் இது’ என்பதைச் சங்க நூற்களைக் கொண்டு எளிதில் உணரலாம். இதனை உணர விரும்பாதாரும் உணர அறிவற்றாருமே, ‘இரண்டையும் பிரித்துணரல் இயலாது’ என்பர்.

நாடு: சோழநாடு என்பது தஞ்சை, திருச்சிக் கோட்டங்களைக் கொண்ட நிலப்பரப்பாகும். வடக்கும் தெற்கும் வெள்ளாறுகள்; கிழக்கே கடல், மேற்கே கோட்டைக் கரை இதற்கு எல்லைகள் ஆகும். ‘கோட்டைக் கரை’ என்பது ஆற்றங்கரை மீதமைந்த கோட்டை, அஃதாவது ஆற்றங்கரையை மிகவுயர்த்திக் கோட்டை போலக்கட்டப்பெற்ற அரண் அமைப்பாகும். இஃது திருச்சிக் கோட்டத்தில் உள்ள குழித்தலை நாட்டில் உள்ளது. கோட்டையின் சிதைவுகள் இன்றும் காணக்கிடக்கின்றன.[1] இந்நாடு தட்டையான சமவெளி மலைகள் அற்றது; காவிரியாறு தன் பல கிளையாறுகளுடன் பரந்து பாயும் செழுமையுடையது. இச்சமவெளி மேற்கே சிறிது உயர்ந்தும் கிழக்கே சிறிது தாழ்ந்தும் இருக்கின்றது. காவிரி கடலருகில் பல கிளைகளாகப் பிரிந்து கடலை அடைகின்றது. அந்த இடத்தில் காவிரியால் தேக்கப்படும் வண்டல், நாட்டைச் செழுமைப்படுத்துகிறது. காவிரியும் அதன் கிளைகளும் கடலோடு கலக்கும் இடம் நீண்ட சமவெளியாகும். அந்த இடம், பார்க்கத்தக்க பண்புடையது. சோழநாட்டில் நெல்வயல்கள் மிக்குள்ளன. மாமரங்கள்,தென்னைமரங்கள், பழமரங்கள் என்பன நன்றாக செழித்து வளருகின்றன. சோணாட்டில் காடுகளே இல்லை.[2] ‘யானை படுக்கும் அளவுள்ள இடத்தில் விளையும் பயிர் எழுவரை உண்பிக்கும் வளமுடைய சோணாடு என்று ஆவூர் மூலங்கிழார் அறைந்துளர்.[3] ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளைந்ததென்று பொருநர் ஆற்றுப்படை ஆசிரியர் கூறியுள்ளார்.[4]

நாட்டின் பிரிவுகள்: சங்க நாளில் நாட்டின் பிரிவுகட்குக் கூற்றம், கோட்டம், நாடு என்னும் பெயர்கள் வழங்கின. குறிச்சி, பாடி, ஊர், குடி, பதி, பாக்கம், பட்டினம், நகர் முதலியன ஊர்கட்கு வழங்கிய பெயர்களாகும். இவற்றுள் பட்டினம், நகர் என்பன பேரூர் அல்லது அரசன் உறையும் ஊரைக் குறிக்கும். இவ்விரண்டினுள் பட்டினம் என்பது கடற்கரையில் உள்ள நகராகும்.[5]

காவிரியாறு: காவிரியாறே சோணாட்டின் செழுமைக்குக் காரணமானது. ஆதலின் அதனைப்பற்றிப் பிற்காலத்தே பல கதைகள் எழுந்தன. அவற்றை மணிமேகலையிற் காண்க. காவிரி, ‘செவிலித்தாய் என்ன ஒம்பும் தீம்புனற் கன்னி’ என்று சிவஞானமுனிவரும் பாராட்டத்தக்க சிறப்புடையது. அது பொன்னைக் கொழித்தலாற் பொன்னி எனவும், சோலைகளைத் தன் இருபுறங்களிலும் விரிந்திருக்கப் பெற்றமையின் காவிரி எனவும் பெயர் பெற்றன.இதன் சிறப்பை நன்குணர்ந்தே கி.பி. 12ஆம் நூற்றாண்டினரான சேக்கிழார் “வருநா ளென்றும் பிழையாத் தெய்வப் பொன்னி” என்றார். இங்ஙனம் பிற்காலப் புலவரும் போற்றுந்தகைமை உடையதாய அக்காவிரி, சோணாட்டுக் குடிகட்குச் செவிலித்தாயாக அமைந்ததில் வியப்பில்லை அன்றோ? ஆண்டுதோறும் புது நீர்ப் பெருக்கம் வரும்பொழுது பதினெட்டுப் படிகளும் நீரில் மறையுமாம். அந்த நாளே ‘பதினெட்டாம் பெருக்கம்’ என்று பண்டையோர் காவிரியாற்றுக்கு வணக்கம் செய்து  வந்தனர். இக்காவிரியைப் பெண்ணாக உருவகப்படுத்திப் பாடப்பெற்ற காவிரிப்பாக்களைச் சிலப்பதிகாரத்திற் கண்டு மகிழ்க.

நகரங்கள்: பண்டைச் சோழநாட்டின் துறைமுகப் பட்டினமாக இருந்த பெருமை பெற்றது காவிரிப்பூம் பட்டினம். அந்த இடம் மணிமேகலை காலத்திற் கடல் கொண்டது. அந்த இடத்தை உணர்த்த இன்று காவிரிப் பட்டினம் என்ற பெயருடன் அங்கு ஒரு சிற்றுார் இருக்கிறது. அந்த இடத்திற் கிடைத்த கல்வெட்டுகள் அங்குதான் புகார் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன.[6] தவிர, நாகப்பட்டினமும் சிறந்த துறைமுக நகரமாகும். இன்று சிற்றுாராகக் கிடக்கும் உறையூர் பண்டைச் சோழர் கோ நகரங்களில் ஒன்றாகும். குடந்தை அல்லது கும்பகோணம் சோணாட்டுப் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

சிற்றுார்கள்: சோழ நாட்டில் எண்ணிறந்த சிற்றுார்கள் இருந்தன. பொய்யாதளிக்கும் பொன்னியாற்று வளத்தால் சிற்றுார்கள் நெற்களஞ்சியங்களாக விளங்கின. வயல்களில் அல்லி மலர்கள் பூத்துக் கிடந்தன. அவை கருப்பஞ் சாற்றைக் காய்ச்சும் முயற்சியில் எழுந்த புகையால் வாட்டமுற்றன. எருமை மறையத் தக்க செஞ்சாலிப் பயிர்கள் வயலை அழகு செய்தன. சிற்றுரைச் சுற்றிலும் மா, பலா, வாழை, தென்னை, கமுகு மரங்கள் செழித்து வளர்ந்தன; நிறைந்த பயனைத் தந்தன. அறுவடைக்கு முன் கண்ணைக் கவரத் தக்க அணிகலன்களை அணிந்த மகளிர் வயல்களைக் காவல் புரிந்தனர். நென் மணிகளைத் தின்ன வந்த பறவைகளைத் துரத்தத் தம் அணிகளை வீசி எறிந்தனர். சிறிய பிள்ளைகள் கால்களில் தண்டை ஒசையிட விளையாட்டுப் பொருள்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.[7]

சோழர் முதலிய பெயர்கள்: சோழர் என்னும் சொல்லுக்குப் பொருள் காண முயன்றோர் பலர், பொருள் காண, முடியாத சொற்களில் ‘சோழ’ ஒன்றாகும் (நீர்) ‘சூழ்நாடு’ என்பது நாளடைவில் ‘சூழநாடு, சோழ நாடு என மாறியிருக்கலாமோ என்பது ஆராயத்தக்கது.[குறிப்பு 1] உலக்கை - ஒலக்கையாக மாறி வழங்கல் போல ‘சூ’ - ‘சோ’வாக மாறல், இயல்பே அன்றோ? இஃது ஆராய்ச்சிக்குரியது. சோழர்க்குரிய பெயர்களுள் கிள்ளி, வளவன், செம்பியன் என்பன சிறந்தவை. ‘கிள், தோண்டு, வெட்டு’ என்னும் பல பொருள்களைக் குறித்து, ‘நிலத்தைத் தோண்டிவளம் செய்பவன்’ என்னும்பொருளில் வந்திருக்கலாம். வளமுடைய நாட்டான் வளவன் எனப்பட்டான். ‘சிபி’ மன்னன் மரபினர் செம்பியன் (சிபியன், செபியன், செம்பியன்?) எனப்பட்டார். சென்னி என்பதும் சோழர் பெற்ற பெயராகும்.சென்னி-தலை;“சிறப்புடையது” என்னும் பொருள் கொண்டு, சென்னி நாட்டிற் சிறந்தவன், அரசன் என்னும் பொருள்களில் வழங்கப் பெற்றதுபோலும்!

அரசன் இலச்சினை: வழிவழியாகச் சோழர்க்கு உரியது புலி இலச்சினை. சோழர் புலிக்கொடி உடையவர். காடே இல்லாத சோழ நாட்டில் புலி ஏது? மிகப் பழைய காலத்தில் இருந்த நாட்டில் வேந்தன் எவனேனும் முதன் முதல் புலியைக் கொன்ற பெருஞ் செயலை மதித்து, அதனைச் சிறப்புக் குறியாகக் கொண்டிருக்கலாம்; பின்னவர் அதனையே தமது மரபு இலச்சினையாகக் கொண்டனர் போலும்! இக்குறியைப் பற்றிய விளக்கம் சங்க நூற்களில் காணப்படவில்லை. இடைக்காலத்தில் தெலுங்க நாட்டில் ஒரு பகுதியை ஆண்ட சோழர் சிங்க இலச்சினையைப் பெற்றிருந்தனர்.[8]

அரசு :சோழநாடு பண்டைக்காலத்தில், முன் சொன்னவாறு, பல சிறு பிரிவுகளாக இருந்தது. பிறகு கரிகாலன் போன்ற வீரமன்னர் காலத்தில் ஒர் அரசனிடமே அமைந்திருந்தது. அரசு தந்தைக்குப்பின் மகன் அடைவதென்ற முறையிலேயே நடைபெற்று வந்தது. சில சந்தர்ப்பங்களில் பட்டம் பெறும் இளைஞன் வலியற்றவனாயின், தாயத்தார் அவனைத் துரத்திப் பட்டத்தைப் பெறுதலும் உண்டு. ‘அரசனும் குடிகளும் ஒன்று பட்டுள்ள நாடே நாடு’ என்னும் திருக்குறள் கருத்திற்றான் பண்டை அரசு ஏறத்தாழ நடந்து வந்தது. அரசுக்கு நிலவரி, சுங்கவரி, வென்ற நாட்டுச் செல்வம் என்பனவே செல்வமாக அமைந்திருந்தன. சோழர் கும்பகோணத்தில் அரசு பண்டாரத்தை வைத்திருந்தனர்; அது மிக்க காவலைக் கொண்டிருந்தது.[9]

குழு-ஆயம்-மன்றம்: அரசனுக்கு உதவியாக ஐம்பெருங் குழுவும் எண் பேராயமும் இருந்தன. அமைச்சர், புரோகிதர், தானைத் தலைவர், தூதுவர், சாரணர் என்போர் கொண்ட அவை ஐம்பெருங்குழு எனப்படும். கரணத்தியலவர், கரும விதிகள், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர் கொண்ட அவை எண்பேராயம் எனப் பெயர் பெறும். இவையன்றி மன்றம் என்பது ஒன்றுண்டு. அங்கு அவை கூடும் என்று திருக்குறளும் பிற நூல்களும் பலபடியாகக் கூறுவதிலிருந்து, ஊரவை அரசியலிற் பங்கு கொண்டதே என்று கருதுதல் தவறாகாது. உறையூர் மன்றத்தில் மலையமான் மக்கள் விசாரிக்கப்பட்டனர்[10] என்பதிலிருந்து, ஊர் மன்றம் என்பது நீதிமன்றப் பணியிலும் ஈடுபட்டிருந்தமை தெளிவாதல் காண்க.‘உறையூர் அரசனான கோப்பெருஞ் சோழன் இறந்தபின், அவன் இருந்த மன்றத்தைப் பார்த்துக் கலங்கினேன்’ என்று பொத்தியார்[11]  வருந்திக் கூறலை நோக்க, அரசன் மன்றத்தில் இருந்து அரசியல் செய்த அழகு தெரிகிறதன்றோ? அறிஞர் ஊர் அவையை அடையும் பொழுது, தங்கள் பகைமையையும் பூசலையும் மறந்து, பொதுப்பணி செய்வதற்கு உரிய உள்ளத்தோடு இருப்பர் என்று பொருள்படத்தக்கவாறு பொருநர் ஆற்றுப்படை வரிகள் இருத்தல் காண்க.[12] அரசன், ஐம்பெருங்குழு, எண்பேராயம், ஊர் அவை இம்மூன்று குழுவினரையும் கலந்தே அரசியல் நடத்தி வந்தான் எனக் கோடலில் தவறில்லை. இத்தகைய அரசியல் அவை, கற்றார் அவைகளைப் பற்றியே வள்ளுவனார் வற்புறுத்திப் பாடியுள்ளார் என்பது ஈண்டு அறியத்தக்கது. ஊர்தோறும் தீயோர் தீமைகண்டு ஒறுப்பதற்குரிய வீறுசால் அவைகள் பண்டைத் தமிழகத்திலிருந்து முறை செய்தன.[13]

ஊர் மன்றம்: சிற்றுார்களிலும் சங்க காலத்தில் மன்றம் இருந்தது. ஊரின் பொதுச் செயல்களை ஆய்ந்து முடிபு கூற ஊரார் கூடிய இடமே மன்றம் எனப்பட்டது. அக்கூட்டம் பெரிய மரநிழலிற் கூடும்.அப்பொது இடத்தில் ஊரைப்பற்றிய செயல்களுடன், கூத்து முதலியனவும் நடைபெறல் வழக்கம். பெண்கள் நடிப்பர்.இவ்வூரவைச்செயல்கள் போர்க்காலத்தில் நிறுத்தப்பட்டு வந்தன.[14] இவ்வூர் அவைகள் இன்னின்ன செயல்களைச் செய்தன என்று திட்டமாக அதற்கு உரிய விவரங்கள் இன்று கிடைக்கவில்லை. ஆயினும், கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தொண்டை நாட்டை ஆளத் தொடங்கிய பல்லவர் பட்டயங்களில் இவ்வூரவைகள் இருந்தன என்பது குறிக்கப்பட்டிருத்தலால், இவை பெரும்பாலும் ஊராண்மை நடத்தி வந்தன என்று கோடல் தவறாகாது. ஊரவையார் குடவோலை முறையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதும் இங்கு அறியத்தகும்.

வரிவிதிப்பு: நிலவரி, தொழில் வளி, சுங்க வரி என்பன வழக்கில் இருந்தன. நிலவரியே பெரிய வரியாகும். நிலக்கிழவனே அரசியலின் முதுகெலும்பாகக் கருதப்பட்டான். இதனால் அன்றோ வள்ளுவனார்,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

என அழுத்தமாக அறைந்தார்? வெளிநாட்டு வாணிகம் சங்க காலத்திற் சிறந்திருந்தது. சுங்கச் சாலைகள் மிக்கிருந்தன. இவைபற்றிய விளக்கம் பட்டினப் பாலையிற் பரக்கக் காணலாம்.[15] “கடலுக்கு எதிரேயுள்ள அகன்ற சாலையில், உழைப்பிற் சிறந்த அரசியல் அலுவலாளர் அரசனுடைய பண்டங்களைக் கருத்தோடு பாதுகாக்கின்றனர்; நாள்தோறும் சுங்கம் வசூலிக்கின்றனர்; கதிரவன் குதிரைகளைப் போலச் சலிப்பின்றி உழைக்கின்றனர்; நாள் தோறும் அளவற்ற பண்டங்கள் கடலிலிருந்து கரைக்குக் கொண்டு வரப்படுகின்றன; கரையிலிருந்து ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது. ஒவ்வொரு பண்டப் பொதி மீதும் புவி இலச்சினை பொறிக்கப்படும். பண்டங்கள் பண்டசாலைகளில் அடைக்கப்படும்.......” இக்கூற்றால் அரசியலுக்கு வந்த வரிகளுள் சுங்கவருமானம் ஒன்றாகும் என்பது தெளிவாதல் காண்க. நில அளவைகளில் வேலி, மா என்பன இருந்தன என்பது தெரிகிறது. இதனால், பிற அளவைகள் இல்லை எனல் கருத்தன்று.

சிறைச்சாலை: மணிமேகலை புகாரில் சிறை வைக்கப்பட்டாள். அவள் சிறைக்கோட்டத்தை அறக்கோட்டம் ஆக்கினாள்.[16] பண்டைக்காலத்தில் சிறைச்சாலை ‘சிறைக்கோட்டம்’ என்று பெயர் பெற்று இருந்தது போலும்!

படை : சோழ மன்னரிடம் பண்பட்ட படைவீரர் இருந்தனர். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை இருந்தன. தானைத் தலைவர் எண்பேராயத்திற் பங்கு கொண்டவர். சேனாதிபதியர் (பிற்கால மகா சாமந்தர்) ஐம்பெருங்குழுவிற் பங்கு கொண்டவர். போரில் தன் வலியைக் காட்டிய பெருவீரன் ‘ஏனாதி’ என்னும் பட்டம் பெற்றான். அரசன் அப்பட்டத்தைத் தந்து அவ்வீரனைப் பெருமைப்படுத்தல் மரபு. அச்சிறு விழாவில் பட்டம் பெற்றவன் பொற்பூ மோதிரம் முதலியன பெறுதல் மரபு, ஏனாதிப் பட்டம் பெற்ற இருவர் புறநானூற்றில் புகழப்பட்டுள்ளனர்; ஒருவன் ஏனாதி-திருக்கிள்ளி[17][18] என்பவன். மற்றவன் ஏனாதி-திருக்குட்டுவன். ஏனாதி என்பது பெருமை தரும் பட்டப் பெயர். இவ்வீரர்கள் வீரச் செயல்களில் சிறந்து விளங்கினர். ஏனாதி-திருக்கிள்ளி' என்பதில் உள்ள ‘கிள்ளி’ என்பது சோழ அரசன் பெயராகும். பெரிய சாமந்தன் அல்லது அமைச்சன் அல்லது அரசியல் அலுவலாளன் தன் அரசன் பொதுப் பெயரையோ சிறப்புப் பெயரையோ வைத்துக் கொள்ளலைப் பிற்காலப் பல்லவர்-சோழர்-பாண்டியர் கல்வெட்டுகளிற் காணலாம். அங்ஙனமே பண்டைக் காலத்திலும் வைத்திருந்தனர் என்பதற்கு இஃதொரு சான்றாகும். அன்றி, சோழர் மரபினன் ஒருவனாகவே இவ்வீரனைக் கொள்ளினும் இழுக்காது. இந்த ஏனாதிப்பட்டம் கி.பி. 7,8,9-ஆம் நூற்றாண்டுகளிலும் சோழமன்னர் தம் தானைப் பெரு வீரர்க்கு வழங்கினர் என்பதற்குப் பெரிய புராணமே சான்றாகும். ஏன்? கி.பி.9-ஆம் நூற்றாண்டிற் பாடப்பெற்ற சுந்தரர் திருத் தொண்டத் தொகையே தக்க சான்றாகும்:

ஏனாதிநாதன்றன் அடியார்க்கும் அடியேன்”

என்றிவர் கூறுவதிற் காண்க. போர்ப் பயிற்சி அளிப்பதும் இவர் தம் தொழில் என்பதை பெரிய புராணத்தால் அறிகிறோம். இப்பட்டம் பிற்காலச் சோழர் ஆட்சியிலும் வழக்கில் இருந்ததைக் கல்வெட்டுகள் கொண்டு அறியலாம்.

அரசன் வேற்று நாட்டின் மீது போருக்குப் போகையில் வெற்றிவாள், கொற்றக்குடை, வீரமுரசு இவற்றை நன் முழுத்தத்திற் புறப்படச் செய்தல் வழக்கம், இங்ஙனம் செய்தல் வாள்நாட்கோள், குடைநாட்கோள், முரசு நாட்கோள் எனப்படும். அரசன் வஞ்சி சூடிப் பகைமேற் செல்லும் பொழுது தன் படைவீரர்க்குப் படைக்கலம் முதலியனவும், பரிசிலர்க்குப் பொருளும் கொடுப்பன் போரினை மேற்கொண்ட பின்னாளில் படைகட்குப் பெருவிருந்து செய்து மகிழ்விப்பன்.[19]

பட்டங்கள்: சேனைத் தலைவர்க்கு ஏனாதி என்ற பட்டம் அளித்தல் போன்றே அமைச்சர், கணக்கர், வேளாளர் முதலாயினார்க்குக் காவிதி என்ற பட்டமும், வணிகர்க்கு எட்டி என்ற பட்டமும் அளித்து அதற்கு அடையாளமாகப் பொன்னாற் செய்யப்பட்ட பூவினை அளிப்பர். அவை எட்டிப்பூ, காவிதிப்பூ எனப்படும்.[20]

வீரக்கல்: போரில் இறந்துபட்ட வீரர்க்குக் கல்நட்டு, பெயரும் பீடும் எழுதி, பீலிசூட்டிச் சிறப்புச் செய்தல் மரபு. இப்பழக்கத்தால் வீரர்க்கு உற்சாகமும் காண்போர்க்கு நாட்டுப் பற்றும் உண்டாதல் இயல்பு. இவ்வீரக் கற்கள் இருந்த இடங்கள் நாளடைவில் கோவில்களாக மாறிவிட்டன. வீரக்கல் நடுதல்பற்றித் தொல்காப்பியம் விரித்துக் கூறல் காணத்தக்கது. கல்லைக் காண்டல், தேர்ந்தெடுத்தல், நீராட்டல், உருவந்தீட்டல், நடுதல் விழாச் செய்தல் முதலிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. இதனை நன்கு விளக்கிய பெருமை சிலப்பதிகாரத்திற்கே உரியது. வஞ்சிக்காண்டத்தில் பத்தினிக்குக் கல் எடுத்துச் செங்குட்டுவன் செய்த பலவகைச் செயல்களை நோக்குக. இப்பழக்கம் இன்றும் ‘கல் நாட்டல்’ ‘கல் எடுத்தல்’ என்னும் முறைகளில் இல்லந்தோறும் நடைபெறல் காண்க. கல்லில் வீரனது அரிய செயல் குறிக்கப் பட்டிருக்கும்; இன்ன போரில் இறந்தான் என்பதும் செதுக்கப்பட்டிருக்கும். இத்தகைக் கற்கள் பல பிற்காலப் பல்லவர், சோழர் காலங்களில் எழுந்தன. அவை இப்பொழுது கிடைத்துள்ளன. இவ் வீரக்கல் வழிபாடு புறநானூறு,[21] புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றில் நன்கு விளக்கப்பட்டுள.

போர்: பழந்தமிழ் அரசர் பெரும்பாலும் தாமே போரில் கலந்து கொள்வர், போர் வீரர்க்குப் புறப்படுமுன் பெருஞ் சோறு வழங்குவர்; அவரவர்க்குரிய சிறப்புச் செய்வர், போர்க் களத்தில் வீரர்க்கு ஊக்க மூட்டுவர். அரசர் போரில் புண்பட்டு வீழ்வராயின், அவர் வீரர்கள் போரை நிறுத்திவிடுவர்.[22] தோற்ற அரசன் வடக்கிருத்தல் வழக்கம். வடக்கிருத்தலாவது - பட்டினி கிடந்து வடக்கிலிருந்து உயிர் நீத்தல். போரில் இறவாது, வேறுவகையில் இறந்த அரசனது உடலைக் குசைப்புல் மீது கிடத்தி, வாளாற் போழ்ந்து போரில் மடிந்ததாகக் கருதி எரித்துவிடல் மரபாம். இங்ஙனம் செய்யின், அவன் ஆவி வீரர் துறக்கம் எய்தும் என்பது அக்கால மக்கள் கருத்து.[23] தோற்ற அரசற்கு முடி அழித்துக் கடகம் செய்யப்படும்.[24] வாள், வேல், வில் என்பன போர்க்கருவிகள் ஆகும். போர் முரசம் ஒன்றுண்டு. போர் செய்யும் இரு திறத்தார்க்கும் போர் முறைக்கேற்ப அடையாள மலர்கள் உண்டு. மூவேந்தருள் இருவரை வென்ற ஒருவன் தன் மேம்பாடு விளங்கத் தோற்றவர் இலச்சினைகளைத் தன் இலச்சினையோடு சேர்த்து  வழங்கினான். அவன் ‘மும்முடி வேந்தன்’ என வழங்கப்பட்டான். யானைகள் கொடிகளை ஏந்திச் செல்லும் வீரர்கள் தலையிற் பூச்சூடி மார்பில் மாலை சூடி இருப்பர். புறப்புண்படின், அவர் வீடு மீளார். வீரர் இறந்துகிடப்பின், அவ்விடத்தில் அவர் மனைவியர் வந்து ஆகந்தழுவி உவகைக் கண்ணிர் விட்டு உடன் இறப்பர்; சிலர் கைம்மை நோன்பு நோற்பர். புண்பட்டுத் திரும்பிய வீரர்க்குப் பெண்டிர் பெருஞ்சிறப்புச் செய்வர். வென்ற அரசன் தோற்ற அரசனது நாட்டைக் கொள்ளையடித்தலும் உண்டு; அந்த அரசன் செல்வத்தைக் கவர்ந்து வந்து புலவர், பாணர், வீரர், விறலியர், கூத்தர் முதலியோர்க்குக் கொடுத்து மகிழ்வன். இச்செய்திகள் அனைத்தையும் புறநானூற்றுப் பாக்களிற் கண்டு தெளியலாம்.

பெருநிலக் கிழவரும் அரசமரபினரும் கரிகள் மீது இவர்ந்து சென்றனர். தானைத் தலைவர்கள் தேர்களிற் சென்றனர்.

சில வேளைகளில் அரசர் போருக்கு முன் வஞ்சினம் கூறிச்செல்லல் மரபு. சோழன் நலங்கிள்ளி என்பான் போருக்குப் புறப்பட்ட பொழுது கூறியதாவது: “பகைவர் மெல்ல என்னிடம் வந்து ‘எமக்கு ஈயவேண்டும்’ என்று இரப்பாராயின், பழைமையாகிய எனது அரசாட்சி தருதல் எளிது; இனிய உயிரையும் கொடுப்பேன் அமைச்சர், படைத் தலைவர் முதலியோரது வலியுடைமை எண்ணாது என் உள்ளத்தை இகழ்ந்த அறிவற்றவன், யாவரும் அறியும்படி துயிலும் புலியை இடறின குருடன் போலப் பிழைத்தும் போதல் அரிதாகும். அப்பகைவனை யான் வெல்லாவிடின், பொதுப் பெண்டிரது பொருந்தாத சேர்க்கையில் எனது மாலை துவள்வதாகுக’![25] என்பது. இப்பாடலால், சோழன் நலங்கிள்ளியின் அறவுணர்ச்சியும் ஒழுக்க மேம்பாடும் வீரவுணர்ச்சியும் நன்கறியலாம் அன்றோ?

அரசன் பற்றிய விழாக்கள்: அரசன் பிறந்த நாள் விழா ஒவ்வோர் ஆண்டிலும் சிறப்பாகக் கொண்டாடப் பெறும். அப்பொழுது அரசர்கள் மங்கலவண்ணமாகிய வெள்ளணி அணிந்து, செருச்செய்தல், சிறைசெய்தல், கொலைசெய்தல் முதலிய செற்றச் செயல்கள் செய்யா தொழிந்து, சிறைவிடுதல், சிறை தவிர்தல், புலவர் முதலிய தக்கார்க்கு வேண்டுவன தருதல், இரவலர்க்கீதல் முதலிய அறச்செயல்கள் செய்வர். இது பெருமங்கலம் எனவும், வெள்ளணி எனவும் கூறப்படும்.இங்ஙனமே அரசன் முடிபுனைந்த நாள் தொடங்கி ஒவ்வோர் ஆண்டிலும் முடிசூட்டு நாளும் கொண்டாடப்பெறும். இது முடி புனைந்து நீராடுதலின், மண்ணுமங்கலம் எனப்பெயர் பெறும்.[26] இதன் விரிவு தொல்காப்பியத்துட் காணலாம்.

முத்தமிழ் வளர்ச்சி: போர் ஒழிந்த ஏனை நேரங்களில் எல்லாம் அரசன் புலவருடனே இருந்து காலத்தை இன்பமாகக் கழித்தல் மரபு. புலவர் அவனுடைய சிறந்த இயல்புகளைப் புகழ்வர் குற்றங்கண்ட இடத்துக் கடிவர். இதற்குக் கோவூர் கிழாரே சான்றாவர். போர் ஒரே மரபினருக்குள் நடப்பினும் புலவர் சந்து செய்ய முற்படுவர்; பெரும்பான்மை வெற்றி பெறுவர். அரசன் போரில் வெற்றி பெற்று மீளின், அவனது பெருஞ் சிறப்பைப் பாடுவர்; அவன் இறப்பின், புலவர் சிலர் உடன் இறப்பர். அரசனது நாளோலக்கம் சிறப்புடையது. அங்கே ஆடுமகளிர், பாடுமகளிர், பாணர், கூத்தர் முதலியோர் ஆடல்பாடல்களில் பங்கெடுத்துக் கொள்வர். இப்பாணரால் இசைத்தமிழ் வளர்ந்தது. கூத்தரால் நாடகத் தமிழ் வளர்ந்தது; புலவரால் இயற்றமிழ் வளர்ந்தது. இங்ஙனம் ஒவ்வொரு மரபினரும் (சோழர் உட்பட) முத்தமிழைப் போற்றி வளர்த்தனர். தன்னைக் காணவரும்புலவர், பாணர், கூத்தர் முதலியோர்க்கு அரசன் அவரவர் தகுதிக்கேற்றவாறு பரிசில் வழங்குவன்; பெரிய புலவராயின், யானையும் நல்குவன். சிறந்த புலவரைப் பல மாதங்கள் இருந்து போகும்படி அரசனே வற்புறுத்து வான். அரண்மனையில் எப்பொழுதும் விருந்தும் இசையும் கூத்துமே குடிகொண்டிருக்கும்.அரசன் எல்லாரையும் உடன் வைத்து உண்ணுதல் வழக்கம். இரண்டாம் கரிகாற் சோழன் அரண்மனைச் செய்திகளைப் பொருநர் ஆற்றுப் படையில் பரக்கக் கண்டு தெளியலாம்.[27] குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறச்செயலைப் புறப்பாட்டால் நன்கறியலாம்.[28]

பெண்பாற் புலவர்: சங்ககாலப் புலவர் ஏறத்தாழ 700ஆவர். அவருட் பெண்பாலரும் இருந்தனர். அவருள் - ஒளவையார், ஆதிமந்தியார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், வெள்ளி வீதியார், வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி,குறமகள் குறியெயினி, காவற்பெண்டு, கழாற்கீரன் எயிற்றியார், காமக்கணிப் பசலையார், நக்கண்ணையார், நன்னாகையார், பூங்கண் உத்திரையார், பொன்முடியார், மாறோகத்து நப்பசலையார், போந்தைப் பசலையார், அள்ளுர் நன்முல்லையார், பாரிமகளிர், பத்தினி (கண்ணகி), பூதப்பாண்டியன் மனைவி முதலியோர் குறிப்பிடத் தக்கவர், இவருள் காக்கை பாடினியார் யாப்பிலக்கணம் செய்தவர் எனின், அம்மம்ம! அக்காலப் பெண்புலவர் பெருமையை என்னென்பது!

பாடினியர் இசைத்தமிழை வளர்த்தனர், கூத்தியார் நாடகத் தமிழை வளர்த்தனர். இவர் அனைவர்க்கும் அாசன் பரிசில் வழங்கிச் சிறப்புச் செய்வது வழக்கம். புலவர் அனைவருடைய பாக்களும் தன்மை நவிற்சியே உடையவை; அஃதாவது, உள்ளதை உள்ளவாறு உரைப்பவை: உயர்வு நவிற்சி அற்றவை படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை. ஆதலின், அக்கால அரசர் புலவரைப் போற்றித் தம் தாய்மொழியையும் போற்றினர். கடியலூர் ருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை பாடியதற்காக 15 நூறாயிரம்  பொன் பரிசில் பெற்றார் என்று சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியிற் பாடியுள்ளார். பதிற்றுப் பத்தைப் பாடிய புலவர் பலர் உயர்தரப் பரிசுகளும் ஊர்களும் பெற்றனர். இக்கூற்றுகளில் பாதியளவேனும் உண்மை இருத்தல் கூடும். இங்ஙனம் பண்டை அரசர், புலவரைப் போற்றினமையாற்றான் பல நூல்கள் வெளிவந்தன. நமது பேறின்மை காரணமாகப் பல இக்காலத்து இல்லா தொழிந்தன. பரிசில் பெற்ற புலவன் மற்றொரு புலவனைத் தன் வள்ளலிடத்தே ஆற்றுப்படுத்தும் முறை அழகியது. கூத்தன் வேறொரு கூத்தனைத் தன் புரவலன் பால் ஆற்றுப்படுத்தல், பொருநன் வேறொரு பொருநனைத் தன் அரசனிடம் ஆற்றுப்படுத்தல், பாணன் மற்றொரு பாணனை இங்ஙணம் ஆற்றுப் படுத்தல் முதலியன பத்துப்பாட்டு எனும் நூலில் கண்டு களிக்கலாம். அரசன் எல்லார்க்கும் பேருதவி புரிந்து வந்தமையின் புலவர்க்குள்ளும் பாணர்க்குள்ளும் ஒற்றுமை நிலவி இருந்தது. ஒரு புலவன் மற்றொரு புலவனை மனமாரப் புகழ்ந்து பாடியிருத்தலை அப்பாக்களில் காணலாம்.இங்ஙனம் அரசர்பால் தண்ணளியும் புலவர்பால் ஒற்றுமையும் இருந்தமையாற்றான், அக்காலத்தில் முத்தமிழும் செழித்தோங்கின. தமிழர் தருக்குடன் வாழ்ந்தனர். இந்தியாவின் பெரும் பகுதியைப் பிடித்தாண்ட பிந்து சாரனிடம் தமிழகம் அடிமைப்படாதிருந்தது!

இசையும் கூத்தும்: இவற்றின் விரிவைச் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் விளக்கமாகக் காணலாம். அக்காதைக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய விளக்கவுரையே ஊன்றிப் படித்தற்குரியது. ஏறக்குறையக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டினரான அவர் கி.பி.2ஆம் நூற்றாண்டு நூலாகிய சிலப்பதிகாரத்திற்கு, உரை எழுதினர். அவர் காலத்தில் பலவகைக் கூத்து நூல்களும் இசை நூல்களும் இருந்திராவிடில், அவர் உரை வரைந்திருத்தல் இயலாதன்றோ? அந்நூல்கள் இருந்தமைகொண்டே சங்க காலத்து இசை நாடக மேம்பாட்டை நாம் நன்று உணரலாமன்றோ? நாடக மகள் அரசர்க்குரிய நடன வகைகள், பொது மக்கட்குரிய நடன வகைகள், பாடல், தோற்கருவி.துளைக்கருவி.நரம்புக் கருவிகளைக் கொண்டு பாடல், ஒவியம் தீட்டல், பூ வேலை செய்தல் முதலிய பல கலைகளில் பல்லாண்டுகள் பழகித் தேர்ச்சியுறல் வேண்டும் என்று மணிமேகலை கூறுகின்றது.[29] பலவகை யாழ் வகைகள் விளக்கப்பட்டுள்ளன. ஆடல் ஆசிரியன், இசை ஆசிரியன் முதலிய ஆசிரியன் மார் குறிக்கப்பட்டுள்ளனர். அரங்கேற்று காதையிற் குறிக்கப்பட்ட பல செய்திகள் இன்று அறியுமாறில்லை எனின், அக்கால இசைச் சிறப்பையும் நடனச் சிறப்பையும் என்னெனக் கூறி வியப்பது!

இசைக்கருவிகள்: அக்காலத்து இருந்த இசைக் கருவிகளாவன : அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாள்முழவு, காலை முழவு என ஏழுவகையாற் பகுக்கப்படும். பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப் பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடுதும்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுனிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலிய தோற் கருவிகளும், வங்கியம், குழல் என்னும் துளைக் கருவிகளும்; பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நரம்புக் கருவிகளும் பிறவும் ஆகும்.

இசை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையாலும் பிறக்கும் பண்விகற் பங்களும் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்றாகிய இசைகளும் தமிழ்ப் பாணர்களால் அறிந்து பாடப்பெற்று வந்தன. 

பலவகைக் கூத்துகள்: வேதியல், பொதுவியல் என்னும் இருதிறமுடைய அகக்கூத்து, புறக்கூத்துகளும், குரவை, களிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு தோற்பாவை என்னும் வினோதக் கூத்துகளும்; அம்மானை, பந்து, கழங்காடல், உந்தி, சாழல், பல்லாங்குழி, அவலிடி, கொற்றி, பிச்சிவாரிச்சி, சிந்துப் பிழுக்கை, குடப் பிழுக்கை, பாண்டிப்பிழுக்கை, பாம்பாட்டி, ஆலங்காட்டாண்டி[குறிப்பு 2] முதலிய பலவகை வரிக்கூத்துகளும் பிறவும் சங்க நாளில் நடிக்கப்பெற்று வந்தன.[30]

நகர வாழ்க்கை: புகார் போன்ற பெரிய நகரங்களில் செங்கல், சுண்ணாம்பால் ஆகிய மாடமாளிகைகள் மிக்கு இருந்தன. அவற்றின் சுவர்கள் மீது தெய்வங்கள், விலங்குகள் இவற்றைக் குறிக்கும் வியத்தகு ஒவியங்கள் தீட்டப் பெற்று இருந்தன.[31] பல மாளிகைகள் அழகிய பூஞ்சோலைகள் சூழப்பெற்றிருந்தன. அச்சோலைகளில் ஆழமற்ற கிணறு அல்லது குளம், பளிங்கு அறை அல்லது அழகிய அறை, செய்குன்று இன்ன பிறவும் இன்ப விளையாட்டுகளுக்காக அமைக்கப்பட்டிருந்தன.[32]

மணமுறை: சங்க நூல்களில் இருவகை மணமுறைகள் கூறப்பட்டுள; ஒன்று பழந்தமிழர் மணமுறை; பின்னது சிலப்பதிகார காலத்தது. முன்னதில் (1) இசைக்கருவிகள் ஒலிப்பு (2) கடவுள் வணக்கம் (3) மணப் பெண்ணைப் பிள்ளை பெற்ற பெண்டிர் நால்வர் கூடி அரிசியும் மலரும் கலந்த நீரால் ‘பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுக’ என வாழ்த்தி நீராட்டல், (4) அன்றிரவே மணமக்களை இல்லறப்படுத்தல், (5) மனவிருந்து ஆகிய இவையே சிறப்பிடம் பெற்றுள்ளன.[33] “இம்மணமுறையில், (1) எரிவளர்த்தல் இல்லை (2) தீ வலம் வருதல் இல்லை; (3) தக்‌ஷிணை பெறப் புரோகிதன் இல்லை. இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்” என்று திரு.பி.டி. சீனிவாச ஐயங்கார் அவர்கள் கூறியுள்ளது கவனித்தற்குரியது.[34]

சிலப்பதிகாரம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. அந்நூலில் கோவலன், கண்ணகி மணம் முதற்காதையுள் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் பெண்கள் யானை மீது சென்று மாநகரத்தார்க்கு அறிவித்தலே புதுமையானது.[குறிப்பு 3] அத்திருமணத்தில் (1) மாமுது பார்ப்பான் மறை வழி காட்டல் (2) தீ வலம் செய்தல், (3) பாலிகையின் தோற்றம் என்பன புதியவை. அம்மறையவன் ‘சமணப் பெரியோன்’ என்பர் ஆராய்ச்சியாளர். ‘கோவலனும் கண்ணகியும் சமணர் ஆதலின், வேத முறைப்படி மணந்திரார்-சமண முறைப்படியே மணந்தனராவர்’ என்பர் அவ்வறிஞர். மணம் முடிந்த பிறகு மன மக்கள் வாழ்த்தப் பெற்றனர். பின்னர் அனைவரும் சோழ வேந்தனை வாழ்த்தி மண நிகழ்ச்சியை முடித்தனர்’ என்பது சிலப்பதிகாரத்துள் கூறப்பட்டுள்ளது.

பூம்புகார்: இந்த நகர வருணனை சிலப்பதிகாரம் ஐந்தாம் காதையுள் தெளிவுற விளக்கப்பட்டுள்ளது. நகரம் காவிரியாற்றின் வடகரையில் அமைக்கப்பட்டது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்னும் இரண்டு பிரிவுகளை உடையது. இரண்டிற்கும் இடையில் திறந்த வெளி உண்டு. அங்கு மரத்தடிகளில் கடைகள் இருந்தன. மருவூர்ப் பாக்கத்தில் கடற்கரையை அடுத்து உயர்ந்த மாடமாளிகைகள் இருந்தன. செல்வாக்கு நிறைந்த யவனர் மாளிகைகள் இருந்தன; வாணிகத்தின் பொருட்டு வந்திருந்த பல மொழி மக்கள் தம்முள் வேற்றுமையின்றி நெருங்கி வாழ்ந்து வந்தனர். பலவகை மணப்பொருள்கள், பட்டாடை, பருத்தியாடை , கம்பள ஆடை முதலியன, பலவகைப் பூமாலைகள், இவற்றைச் செய்யும் மக்கள், கூலவாணிகர், மீன்வாணிகர் உள்ளிட்ட பலவகை வணிகர்; பொற்கொல்லர், கன்னார், கருமான், தச்சன் முதலியோர், ஒவியம் திட்டுவோர், கற்றச்சர், மாலுமிகள் முதலிய பலதிறப்பட்டவரும் மருவூர்ப்பாக்கத்தில் உறைந்தனர். பட்டினப்பாக்கத்தில் அரசன் மாளிகை உடைய அகன்ற அரசர் தெருவும் தேரோடும் தெருவும் அங்காடித் தெருவும் இருந்தன. செல்வத்திற் சிறந்த வணிகர், நிலக்கிழவர், மறையவர், மருத்துவர், சோதிடர் முதலியோர் வாழ்ந்தனர். அரண்மனையைச் சுற்றிக் கரிவிரர், பரிவீரர், சேனைத் தலைவர் முதலியோர் உறையும் தெருக்கள் இருந்தன. புலவர், பாணர், இசைவாணர், மாலை தொடுப்பதில் வல்லார், முத்து வேலை செய்வோர், நாழிகை கூறுவோர், அரண்மனை அலுவலாளர் முதலிய பல திறத்தவரும் பட்டினப் பாக்கத்தில் உறைந்தனர்.

புகார் சிறந்த துறைமுகத்தைப் பெற்றிருந்தது. அரசரது பெருஞ் செல்வ நகரம், மாலுமிகள் நிறைந்த நகரம், கடல் சூழ்ந்த உலகமே வறுமை உறினும் தான் மட்டும் வறுமை உறாதது; வெளிநாட்டுப் பொருள்களும் உள்நாட்டுப் பொருள்களும் வண்டிகளில் போதலையும் வருதலையுங் கான, பல நாட்டுப் பண்டங்களையும் சாலையாகப் புகார் நகரம் காட்சி அளித்தது. அக்கோ நகரத்தின் செழுமை இமயம் அல்லது பொதியம் போன்ற உறுதிப்பாடு உடையதாகும்.[35] இந்நகர வருணனை பட்டினப்பாலையிற் காண்க. பெரிய கப்பல்கள் புகார்த்துறைமுகத்தை அடைந்து  பண்டங்களை இறக்கும்.[36] நகரக் கடைவீதியில் உயர்ந்த மாடமாளிகைகள் உண்டு. அவற்றைச் சுற்றிலும் நாற்புறங்களிலும் மேடைகள் உண்டு. அவற்றை அடையப் படிக்கட்டுகள் உண்டு. அம்மாளிகையில் பல அறைகள் சிறியவும் பெரியவுமாக இருக்கும். அவற்றுக்கெல்லாம் கதவுகள் உண்டு. சுவர்களில் சாளரங்கள் உண்டு. மேல் மாடங்களிலிருந்து செல்வ மகளிர் கரங்களைக் குவித்து முருகனை வணங்கும் காட்சி-உயர்ந்த மலைப் பாங்கரில் செங்காந்தள் மலர்க்கொத்துகள் இருத்தலைப் போல இருக்கும். முருகக் கடவுள் ஊர்வலம் வரும்பொழுது இசையும் நடனமும் இடம் பெறும் பலவகைக் கருவிகளின் ஒசையும் தெருக்களில் ஒன்றுபடும்; ஆடலும் பாடலும் நடைபெறும்.[37]

நகரத்தின் பல பகுதிகளிலும் பலவகைக் கொடிகள் காட்சி அளிக்கும். சில கொடிகள் வழிபாடு பெறத்தக்கவை. சில வெள்ளைக் கொடிகளுக்கு அடியில் உயர்தரப் பொருள் கொண்ட பெட்டிகட்கு வழிபாடு நடைபெறும். பல கலைகளில் வல்லார் கொடி நட்டுப்பிறரை வாதுக்கழைப்பர். துறைமுகத்தில் கப்பல் மீதுள்ள கொடிகள் காற்றில் அசைந்தாடும் தோற்றம் அழகியதாக இருக்கும். வேறு பல கடைகளில் அவற்றின் தன்மையை உணர்த்தத்தக்க கொடிகள் கட்டப்பட்டு இருக்கும்.[38]

இன்றைய புகார்[குறிப்பு 4]: மாயூரத்திலிருந்து காவிரிப்பூம் பட்டினம் போகும் பாதையில் 20 கி.மீ. அளவில் கைகாட்டி மரம் ஒன்று இருக்கின்றது.அதிலிருந்து கடற்கரைவரை ஒரே சாலை 5 கிமீ தொலைவிற் போகின்றது. அதன் இருபுறமும் வீடுகள் இருக்கின்றன. அங்கிருப்பவர் பழங்குடி மக்கள். இரண்டு அக்கிரகாரங்கள் இருக்கின்றன. அங்கு மறையவர் இருக்கின்றனர். சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதைகள் மேடு பள்ளங்கள் உடையன. சாலைக்கு இடப்புறமே சிறு குடியிருப்புகள் மிகுதியாக இருக்கின்றன. சாலைக்கு இருபுறத்திலும் பழைய உறை கிணறுகள் காணக் கிடக்கின்றன. ‘இங்கு நாங்கள் கிணறுகள் தோண்டுவதில்லை. இவையெல்லாம் பழைய காலத்துக்கிணறுகள்’ என்று அங்குள்ளவர் கூறுகின்றனர். நெடுந்தெருவிற்கு இடப்புறம் சிறிது தொலைவில் பெருந்திடல்கள் இருக்கின்றன; ‘இவை அக்கிரகாரம் இருந்த இடம்; வேளாளர் தெரு இருந்த இடம் என்று எங்கள் பாட்டனார் சொல்லக்கேட்டோம்’ என்று 80 வயதுடைய கிழவர் ஒருவர் சொன்னார். அந்தத் திடல்களைச் சுற்றிலும் வயல்கள் இருக்கின்றன. திடல்கள் மட்டும் தோண்டப்பட்டில. எங்குத் தோண்டினும் பழைய செங்கற்கள், மட்பாண்டச்சிதைவுகள் காணக் கிடக்கின்றன. அவற்றுள் சில, புதுவையை அடுத்துள்ள அரிக்கமேட்டில் கிடைத்த மட்பாண்டச் சிதைவுகளை ஒத்துள்ளன. ஓரிடத்தில் பழைய செங்கற்கள் 3 மீ ஆழத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்றை அளந்தேன்; நீளம் 23 செமீ அகலம் 15 செ.மீ. கனம் 4 செ.மீ. அதற்கும் புதிய கற்களுக்கும் வேறுபாடு நன்கு தெரிகிறது.

கோவில்கள்: இவ்வைந்து கி.மீ. நீளமுள்ள பாதை நெடுகப் பல சிறிய பழைய கோவில்கள் இருக்கின்றன. இவை பலவகைப்பட்டவை (1) கீற்றுக் கூரையும் சுவர்களும் உடைய கோவில்கள் (2) மண் சுவர்களும் கீற்றுக் கூரையும் உடைய கோவில்கள் (3) செங்கற் சுவர்களும் ஒட்டுக் கூரையும் கொண்ட கோவில்கள், ஒரே அறை, அதைச் சுற்றிலும் நாற்புறமும் அகன்ற திண்ணை; அறையுள்ளே சுதையால் இயன்ற சிலைகள் சுவர்கள் மீது கடவுளர் ஒவியங்கள், சில உள்ளறைகளில் கற்சிலைகள் இருக்கின்றன. கூரை மீது கலசம் கொண்ட கோவில்கள் பல. சில இடங்களில் மூன்று கலசங்கள் இருக்கின்றன. இத்தகைய பழைய கோவில்கள் பிற இடங்களில் காண்டல் அருமை.

ஏறக்குறைய இவற்றைப் போலவே பழைய சங்ககாலக் கோவில்கள் பல இருந்திருக்கலாம் என்றெண்ணுதல் தவறாகாது. சில கோவில்களில் சிலை இல்லை; சுவர் மீது கடவுள் உருவம் திட்டப்பட்டுள்ளது. அதற்கு வழிபாடு நடந்து வருகிறது. இங்ஙனமே தாண்களிலும் கடவுளர் உருவங்கள் காண்கின்றன. இவற்றை நோக்கிய பொழுது எனக்குக் கந்திற்பாவை நினைவிற்கு வந்தது.

காவிரிக்கு வலப்புறம்: காவிரிக்கு அப்பால் மேடான இடம் பரந்து கிடக்கிறது. அதுவே பழைய பூம்புகார் நகரத்தின் சிறந்த பகுதி என்று அங்குள்ளார் கூறுகின்றனர். அம்மேட்டின் மீது பரதவர் குடில்கள் அமைத்து வாழ்கின்றனர். அவ்வழி வந்த அம்மை ஒருத்தியைக் கண்டு அங்குத் தோண்டிப் பார்த்தீர்களா?' என்று கேட்டேன். அவ்வம்மை, ‘அங்கு அகழ்ந்தது இல்லை’ என்று விடையிறுத்தாள். நான் திடுக்கிட்டேன். ஏன்?

“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

என்ற குறள் நினைவிற்கு வந்தது.இக்காலத்தில் பண்டிதரும் பயன்படுத்தாத அகழ்தல் என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கல்வி அறிவற்ற ஓர் அம்மை எளிமையாக உச்சரித்தாள் என்பது வியப்பே அன்றோ? பூம்புகார் அழிந்தாலும் பூம்புகார்க் காலத்துத் தமிழ்ச் சொல் அழியவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன். சங்க முகத்துறையில் தமிழ் உணர்ச்சியுடையார் நிற்பின், சங்ககால நினைவு எழும்  என்பதிலோ - மாதவி பாடிய கானல் வரிப்பாடல் நினைவு எழும் என்பதிலோ ஐயம் இல்லை; இல்லை!!

சாய்க்காடு: இது பாடல்பெற்ற சிவனார் கோவிலாகும். இது பெரு வழியில் ஏறக்குறைய ஒன்றரைக் கல் தொலைவில் உள்ளது. கோவிலுக்கு எதிரே பெரிய குளம் இருக்கிறது. அதைச் சுற்றி நீண்ட கூடம் கூரையுடைய தாய்ச் செல்கிறது. கோவிலுக்குக் கோபுரம் இல்லை. சுற்றுச் சுவர் பழுதுபட்டிருக்கிறது. கோவில் மாடக் கோவில் ஆகும். சிவனார்க்கு நேர் எதிரே உள்ள சிறு வாசல் யானை புக முடியாதது. அம்மனுக்கு எதிரே உள்ள வாசலே பொது வாசலாகும். அந்த வாசல் கல்தேர் உருளைகளுடனும் கற்குதிரைகளுடனும் காட்சி அளிக்கின்றன. தேருக்கு இரண்டு பக்கம் வாயிற் படிகள் இருக்கின்றன. அப்படிகள் மீது ஏறியே கோவிலுக்குள் செல்ல வேண்டும். பிராகார மட்டத்திற்கு உட்கோவில் மட்டம் ஆறடி உயரமானது. இவ்வழகிய கோவில் ‘சிலந்திச் சோழன்’ கட்டியதென்று அர்ச்சகர் அருளிச் செய்தார். கோவிலைச் சுற்றி முள் நிறைந்திருக்கின்றது. கோவில் நன்னிலையில் இராததற்கு தமிழ் மக்கள் - சிறப்பாகச் சைவ நன்மக்கள் கவனிப்பின்மையே காரணம் எனலாம். ‘சிவனடியார் பலர் புகழ்ந்து பாடிய சாய்க்காடு - பாடலும் ஆடலும் அறாத சாய்க்காடு என்று கி.பி. 650-இல் வாழ்ந்த திருஞான சம்பந்தர் பதிகம் பெற்ற இக்கோவில் பழைமை வாய்ந்தது என்பதில் ஐயமில்லை. இஃது சிலந்திச் சோழன் கட்டியதெனின், இதன் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு எனக்கூறல் தவறாகாது. பூம்புகாரின் ஒரு பகுதி கடல் கொண்ட பின், எஞ்சிய பகுதிக்கும் சாய்க்காட்டிற்கும் இடையே காடு வளர்ந்து விட்டது என்பதை இயற்பகை நாயனார் வரலாற்றால் இனிதுணரலாம்.

பல்லவன் ஈச்சரம்: சாய்காட்டுக் கோவிலுக்கு அரை கி.மீ. தொலைவில் கடற்கரை நோக்கிப் போகும் பாதையில் இருப்பது பல்லவன் ஈச்சரம் என்னும் திருக்கோவில் ஆகும். இதுவும் பாடல் பெற்றது.கி.பி.650-லேயே இஃது இப்பெயர் பெற்றதெனின், அதற்கு முந்தியே இக்கோவில் பல்லவ அரசன் ஒருவனால் கட்டப் பெற்றதாகவோ - வழிபாடு செய்யப் பெற்றதாகவோ இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது அன்றோ? எனவே, இக்கோவில் கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய கோவிலாகும் என்பதில் ஐயமில்லை; மூல லிங்கம் பட்டை இட்டதன்று. கோவில் நகரத்தாராற் புதுப்பிக்கப் பட்டதாகும். திருச்சுற்றில் உள்ள பிள்ளையார் கோவில் துரபி துரங்கும் சிங்கம் வடிவில் அமைந்துள்ள அழகு பார்க்கத்தக்கது.

பூம்புகாரின் பிற்சிறப்பு: இக்கோவில் ‘பல்லவன் ஈச்சரம்’ எனப் பெயர் பெற்றமையாலும், பெரிய பல்லவ வேந்தனாகிய மஹேந்திரன் காலத்தில் இஃது இருந்தமை யாலும், அவனுக்கும் முற்பட்ட காலத்திலே இஃது இயன்றதாதல் வேண்டும். அஃதாவது இடைப் பட்ட பல்லவர் காலத்திலேனும் (கி.பி. 350-600) கட்டப் பெற்றதாதல் வேண்டும். அங்ஙனமாயின், அக்காலத்தே காவிரிப்பூம் பட்டினம் தன் பழம் பெருமையுடன் இருந்திருத்தல் வேண்டும் என்பது தானே பெறப்படுகின்ற தன்றோ? என்னை? கி.பி. 450-இல் வாழ்ந்த புத்ததத்தர் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பித்திருத்தலாலும், இயற்பகை நாயனார் காலத்தில் பூம்புகார் சிறப்பாக இருந்திருத்தலாலும், தேவார காலத்திலும் மாடமாளிகைகள் இருந்தன என்று சம்பந்தர் கூறலாலும் என்க. எனவே, இடைக்காலப் பல்லவர் காலத்திலும் பிற்காலப் பல்லவர் காலத்திலும், ஏறத்தாழக் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முடியவேனும் பூம்புகார் சிறப்புற்ற நகரமாகவும் துறைமுகமாகவும் இருந்திருக்கலாம் என்று கோடலில் தவறில்லை. 

கடல் வாணிகம்: அயல்நாட்டு வாணிகம் சிறப்புற நடந்து வந்ததால் பல நாட்டு வாணிகர் தம் உற்றார் உறவினருடன் புகாரிற் கூடி வாழ்ந்தனர். பரிகள் மிகுதியாக வந்து இறங்கின. மிளகுப் பொதிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன; வடமலைகளிலிருந்து மணிகளும், பொன்னும், மேற்கு மலையிலிருந்து அகிலும் சந்தனமும், தென்கடலிலிருந்து முத்துகளும், மேற்கடலிலிருந்து பவளம், கங்கைச் சமவெளிப் பொருள்களும் காவிரிச் சமவெளிப் பொருள்களும் வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஈழத்திலிருந்து உணவுப் பண்டங்களும் கடாரத்திலிருந்து (மலேயா) பலவகைப் பண்டங்களும் மூட்டை முட்டையாக இறக்குமதி ஆயின.[39]

இச்செய்திகளைப் பெரிப்ளுஸ், என்னும் நூலுடனும், பிளைநி, தாலமி முதலியவர் வரைந்த நூல்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் நூற்செய்திகள் அனைத்தும் உண்மை என்பதை அறியலாம். ‘இந்திய நாட்டு அரசர் அந்தப்புரங்கட்கு ரோம வணிகர் ஆண்டுதோறும் அழகிய நங்கையரைக் கொண்டு செல்கின்றனர்’ என்று பெரிப்ளூஸ் ஆசிரியர் கூறியிருத்தல் காண்க.[40] இஃது உண்மை என்பதைச் சில இந்திய நாடக நூல்கள் மெய்ப்பிக்கின்றன.[41] ரோமர் தயாரித்த பட்டயத்தில் இந்தியத் தொடர்பான செய்திகளில் திண்டிஸ் (தொண்டி), முசிரிஸ் (முசிறி) என்பன காணப்படுகின்றன.[42] ஏராளமான ரோம நாணயங்கள் தமிழகத்தின் கீழ்க்கரை ஓரமாகக் கிடைத்தலை நோக்க, யவனர் முதலிய மேனாட்டார் இங்குத் தங்கி வாணிகம் செய்தமை நன்கு விளங்கும். ‘சீனத்திற்கும் மேற்கு நாடு கட்கும் நடந்த கடல் வாணிகத்தில் தென் இந்தியா நடுவிடமாக இருந்து பல நூற்றாண்டுகள் செழித்த வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது’ என்று கூறும் சீனர் குறிப்புகளும் நினைவு கூர்தற்குரியன. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த கடல் வழி வாணிகமே உயர்ந்ததாகும். பண்டை வாணிகத்தில் ரோமப் பேரரசு ஆண்டுதோறும் இந்தியா, சினம், அரேபியா ஆகிய நாடுகட்கு ஏறத்தாழ 10,87,500 பவுன்கள் பெறத்தக்க பொன்னையும் வெள்ளியையும் கொடுத்து வந்தது.[43] பருவக் காற்று நிலையும் ரோமர் போக வாழ்க்கையும் கடல் வாணிகத்தைப் பெருக்கியது. இதற்கு நடுநாயகம் அலெக்சாண்ட்ரியாவாக இருந்தது. அகஸ்டஸ் பேரரசர்க்குப் பிறகு அரேபியத் துறைமுகங்கள் தம் செல்வாக்கை இழந்தன. எகிப்திற்கும் இந்தியாவிற்கும் நேரே வாணிகம் நடக்கலாயிற்று. பெரிப்ளுஸ் காலத்தில் இந்நேர்வழி உண்டாகிவிட்டது. பண்ட மாற்றம் நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து பருத்தியும் பட்டும் சிறப்பாகச் சென்றன. இவ்விரண்டும் அலெக்சாண்ட்ரியாவில் இருந்த தொழிற்சாலைகளில் ஆடைகளாக நெய்யப்பெற்றன. பதிலுக்குக் கண்ணாடிப் பொருள்கள், உலோகத் தகடுகள் மெல்லிய ஆடைகள் இன்னபிறவும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன.[44][45] இந்தியாவிற்கும் ரோமப் பெருநாட்டிற்கும் நடந்த வாணிகத்தின் சிறப்பைப் பெரிப்ளுஸ் நூலிலும் தாலமி வரைந்துள்ள நூலிலும் இருந்தே நன்கறியலாம். ரோம நாட்டிலிருந்து வரும் பொருள்களைச் சுமத்ரா, மலேயா முதலிய இடங்கட்கு மேல் கரை நாட்டிலிருந்து கொண்டு சென்றவர் தமிழரே. ஆவர். அவர்கள் அக்காலத்தில் திரை கடல் ஓடி வாணிகம் செய்தனர்.[46] இத்தகைய செழுமையான வாணிகம் அலெக்சாண்ட்ரியப் படுகொலை நிகழ்ச்சிவரை செம்மையாக நடைபெற்று வந்தது.

இங்ஙணம் நடைபெற்று வந்த வாணிகத்திற் கீழ்க்கரை ஒரமாக நடந்த பகுதியில் பெரும் பங்கு கொண்டவர் சோழரே யாவர். சோழ நாட்டுத் துறைமுகங்களில் கடலோரமே செல்லத்தக்க கப்பல்கள் பல இருந்தன. ‘சங்கரா’ என்னும் பெயர் கொண்ட பெரிய கப்பல்களும் இருந்தன. கங்கை முதலிய இடங்களுக்குச் சென்ற கப்பல்கள் ‘சோழந்தி’ எனப் பெயர் பெற்றன.[46] இக்குறிப்பால் சோழரிடம் கடலோரமே செல்லத்தக்க சிறிய கப்பல்களும், பெரிய கப்பல்களும் கடல் கடந்து செல்லத்தக்க பெரிய கப்பல்களும் இருந்தன என்பது நன்கு விளங்குகிறதன்றோ? இக்கப்பல்கள் இருந்தமை பட்டினப்பாலையாலும் மணிமேகலையாலும் (இலக்கிய வகையாலும்) நாம் நன்குணரலாம்.[47] இங்ஙணம் பெருத்த கடல் வாணிகம் கிழக்கிலும் தெற்கிலும் செய்து வந்த தமிழ் மக்கள் இந்து - சீனம், சுமத்ரா, ஜாவா முதலிய இடங்களில் வாணிகத்தின் பொருட்டுக் குடியேறியிருந்தனர் என்பதில் ஐயமுண்டோ? இதைத்தான் அறிஞர் ஆதரித்து விளங்க வரைந்துள்ளார்.[48]

பண்டங்கள் சில: பூம்புகாரில் விற்பனைக்கு இருந்த பொருட்களுட் சில அடியார்க்கு நல்லாரால் ஊர்காண் காதை உரையிற் குறிக்கப் பெற்றன. அவை அறிதலால் அக்கால வாணிகச்சிறப்பையும் அவ்வாணிகம் செய்த தமிழ் மக்களது ஒப்புயர்வற்ற நாகரிகத்தையும் நன்குணரலாம்.

“அருமணவன், தக்கோலி, கிடராவன், காரகில் எனப்பட்ட அகிலின் தொகுதியும்; கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்பி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, துரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு[குறிப்பு 5], பொன் எழுத்து, குச்சரி, தேவகிரி, காத்துலம். இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி எனப்பட்ட துகிலின் தொகுதியும்; மலையாரம், தீ முரண் பச்சை, கிழான் பச்சை, பச்சை வெட்டை, அரிசந்தனம், வேர், சுக்கொடி எனப்பட்ட ஆரத் தொகுதியும்: அம்பரேச்சம், கத்துரி, சவ்வாது, சாந்து குங்குமம், பனிநீர், புழகு, தக்கோலம், நாகப்பூ இலவங்கம், சாதிக்காய், வசுவாசி, நீரியாசம், தைலம் எனப்பட்ட வாசனைத் தொகுதியும்; மலைச்சரக்கு, கலை, அடைவு சரக்கு, மார்பு, இளமார்பு, ஆரூர்க்கால், கையொட்டுக்கால், மார்ப்பற்று, வாராசான், குமடெறிவான், உருக்குருக்கு, வாறோக சூடன், சீனச்சூடன் எனப்பட்ட கற்பூரத் தொகுதியும் முதலாயின.”[49]

கைத் தொழில்கள்: சோழநாட்டில் பட்டாடை, பருத்தியாடை முதலிய நெய்யப்பட்டன; நூல் நூற்றல், பெண்கள் தொழிலாக இருந்தது. பாம்பின் பட்டை போன்ற பலவகை மெல்லிய ஆடைகள், பலநிற ஆடைகள் என்பன அழகுற நெய்யப்பட்டன. இக் கைத் தொழில் உறையூரில் சிறப்பாக நடந்ததென்று பெரிப்ளுஸ் கூறுதல் காண்க. கண்ணாலும் காண்டற்கரிய நுண்ணிய இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைகளும் உண்டென்று பொருநர் ஆற்றுப்படை அறைகின்றது. ஆடையின் உயரிய தன்மையை மணிமேகலையும் வியந்து கூறலைக் காணலாம். உயரிய ஆடைகள் வெளிநாடுகட்குச் சென்றமை நோக்க, நாட்டில் பெரும் பகுதியோர் நெய்தற்றொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்னல் மிகையாகாது. நகரச் சிறப்புக் கூறியவிடத்துப் பலவகைத் தொழிலாளரும் குறிப்பிடப் பெற்றனராதலின், அவர் செய்து வந்த பலவகைத் தொழில்களும் இந்நாட்டில் நடைபெற்றன என்பதை நன்கு உணரலாம். உள்நாட்டு வாணிகம் பெரிதும் பண்டமாற்றாகவே இருந்ததென்னலாம். நெல்லே பெரும்பாலும் நாணயமாக இருந்தது. நெல்லைத் தவிர, அவரவர்க்குத் தேவையான பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருள்களைப் பெறும் பழக்கமும் இருந்து வந்தது. பிற்காலச் சோழ அரசியலிலும் நெல்லே சிறந்த பண்ட மாற்று வேலையைச் செய்து வந்தது. நாணயங்கள் இரண்டாம் படியினவாகவே கருதப்பட்டன.

சமய நிலை: சோழநாடு தொன்று தொட்டுச் சைவ நாடாகவே இருந்து வந்தது. அதற்கு அடுத்தபடியாக வைணவம் இருந்து வந்தது. பிற்காலக் களப்பிரர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் சிற்றரசாக இருந்த சோழரும் பல்லவரைப் போலவோ, பாண்டியரைப் போலவோ, சமயம் மாறினர் என்று கூற இதுகாறும் சான்று கிடைத்திலது. சிவன், முருகன் கோவில்கள், திருமால் கோவில் ஆகியன இருந்தன. இந்த நாட்டிற்கு புதியனவாகப் புகுந்த வடநாட்டுக் கொள்கைகள் பரவிய பிற்காலத்தில், இந்திரன், பலதேவன் முதலியோர்க்கும் அருகன், புத்தன் முதலிய தேவர்க்கும் கோவில்கள் தோன்றின. புகாரில் பல சமயங்கள் இருந்தன. பல சமயப் புலவர் இருந்தனர். ஆனால் அச்சமயங்கள் போரிட்டில; புலவர் போரிட்டிலர். எல்லாச் சமயத்தவரும் தத்தமது சமயக் கோட்பாடுகட்கேற்ற நேரிய வாழ்வை நடத்தி வந்தனர்.

கலப்புச் சமயம்: தொகை நூல்களில் பழைய பாக்கள் உண்டு. அவற்றில் பழந்தமிழர் தெய்வங்களே பேசப்பட்டி ருக்கும் திணைக்குரிய தெய்வங்களே பேசப்பட்டிருக்கும். பிற்காலப் பாக்களில் வடவர் வருகையால் ருத்ர வழிபாடு ஏற்பட்ட காலத்தில் பல கதைகள் புகுந்தன. அக்கதைகள் அனைத்தும் பிற்காலப் பாக்களில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. சிவன் முப்புரம் எரித்தமை, சகரர் கடலைத் தோண்டியது; இராமாயணக் கதைகள், மகாபாரதக் கதைகள் இன்னோரன்ன பிற வடநாட்டுக் கதைகள், சிலப்பதிகாரம். மணிமேகலை என்னும் கடைச்சங்கத்து இறுதிக்கால நூல்களில் பாகவத புராணச் செய்திகள், விசுவாமித்திரன் நாய் இறைச்சியை உண்டது. அகல்யை வரலாறு. வாமன அவதாரக் கதை இன்ன பிறவும் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன.

வடமொழியாளர் சங்க காலத்தில் நன்கு நிலைத்து விட்டனர் என்பதைப் பலவிடத்தும் குறித்தோம். அவர்கள் சிறந்த கல்வி, கேள்விகளில் வல்லுனராக இருந்தனர். நான்கு வேதங்களிலும் அவை தொடர்பான பிற நூல்களிலும் புலமை பெற்றிருந்தனர். அவர்கள் பழக்கத்தால் சங்க காலத்துச் சோழ மன்னருட் சிலர் வேத வேள்விகளைச் செய்தனர் என்பது தெரிகிறது. பெருநற்கிள்ளி என்பவன் இராஞ்சூயம் (இராஜசூய யாகம்) செய்தவன். அதனால் இவன் வடநூற் கொள்கைப்படி பேரரசன் என்பது பெறப்படுகிறது. இத்தகைய அரசர்கள் அந்நான்மறையாளர்க்குச் சில ஊர்களை மானியமாக விட்டிருந்தனர் போலும்! அவருள் ஒருவன் சோணாட்டு பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயன் என்பவன். இவன் கெளண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவன் ஓதல், ஒதுவித்தல் முதலிய ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்க’த்திலும் சிறந்தவன்; சிறந்த கொடையாளி. தமிழ்ப் புலவர்களை நன்கு ஆதரித்தான். இவனை ஆவூர் மூலங்கிழார் என்னும் நல்லிசைப் புலவர் பாராட்டிப் பாடியுள்ளார். அப்பாடலில் வேள்வியைப் பற்றிய பல விவரங்கள் தெரிகின்றன. இக்குறிப்பால் வேத வேள்வி தமிழ்நாட்டில் செய்யப்பட்டது என்பதும், அறிவுடைத் தமிழர் அதனை நன்கு அறிந்திருந்தனர் என்பனவும் நன்கு விளங்குகின்றன.[50]

சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதைச் சமண காவியமான சிலப்பதிகாரமும் பெளத்த காவியமாகிய மணிமேகலையுமே கூறுகின்றன எனின், அக்காலத் தமிழர் அங்ஙனமே கருதினர் எனக் கோடலில் தவறில்லை அன்றோ? இதனாற் பெரும்பாலான தமிழர் சைவர் என்பது கூறாதே அமையும் அன்றோ? வேங்கடமும் திருவரங்கமும் சிறந்த வைணவத் தளிகளாகச் சிலப்பதிகாரம் கூறலை நோக்கின் ஆய்ச்சியர் குரவையை அழுத்தமாக ஆராயின், சங்ககாலத்தில் வைணவமும் போற்றத்தக்க சமயமாக இருந்தது என்பதை நன்கறியலாம். இந்த இரண்டுடன் மேற்சொன்ன வேத சமயமும் சங்ககாலத் தமிழரிடம் கலக்கத் தொடங்கியது என்பது நடுநின்று ஆராய்வார் நன்கறிதல் கூடும்.

புகாரில் பெளத்த விகாரம், சமணப்பள்ளி முதலியன இருந்தன. இருதிறத்துப் பெரியாரும் தங்கள் சமய போதனைகளைப் பண்பட நடத்தி வந்தார்கள். பெருஞ் செல்வனாக விளங்கிய கோவலன் சமணன், இளங்கோ அடிகள் சமணர் மணிமேகலை செய்த கூலவாணிகன் சாத்தனார், பெளத்தர். மாதவியும் மணிமேகலையும் பெளத்த பிக்குணிகளாயிருந்தனர். இவற்றை நன்கு நோக்குகையில், சங்க காலத் தமிழகத்தில் அவரவர் விரும்பியவாறு சமயக் கொள்கைகளைப் பின்பற்ற முழுவுரிமை பெற்றிருந்தனர் என்பது நன்கு தெரிகிறதன்றோ?

சங்க காலத்துக் கோவில்கள்: சிவன், முருகன், திருமால், பலதேவன், மாசாத்தன் இவர்க்கும்; கற்பகத்தரு வெள்ளையானை, வச்சிரப்படை, ஞாயிறு, திங்கள் முருகன் வேல் இவற்றுக்கும் கோவில்கள் இருந்தன;  வர்த்தமானர்க்கும் புத்த தேவர்க்கும் கோவில்கள் இருந்தன. நாடு முழுதும் கிராம தேவதைகட்கும் வீரர்க்கும் பிறர்க்கும் சிறிய கோவில்கள் இருந்தன. இவை யாவும் செங்கல், மண், மரம், உலோகம் இவற்றால் ஆன கோவில்களே ஆகும்.

இடுதல், சுடுதல் முதலியன: இறந்தவர் உடலை எரித்தல் உண்டு; புதைத்தல் உண்டு; தாழியிற் கவித்தல் உண்டு. தாழியிற் கவித்தலே மிகப் பழைய வழக்கம். இடுதல், சுடுதல் என்பன பிற்பட்டவை. இவை பிற்பட்டவை ஆயினும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் பழக்கமே ஆகும். இறந்தவர் உடலை அடக்கம் செய்த இடத்தில் சிறு கோவில்கள் எழுப்புதல் மரபு. “குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன” இறந்தார் கோவில்கள் புகாரில் இருந்தன என்று மணிமேகலை கூறுதல் காணலாம். பத்தினிப் பெண்டிர் கணவருடன் இறத்தல் மரபு. அப்பெண்டிர்க்கும் கோவில்கள் எழுப்புதல் மரபாக இருந்தது. மனைவியர் கணவருடன் இறத்தல் தொன்று தொட்டு இருந்து வரும் தமிழ்நாட்டுப் பழக்கமாகும். ‘அங்கனம் இறவாதவர் தீக்குளிப்பர்; அதுவும் ஆற்றாதவர் மறுபிறப்பில் அக்கணவனைக் கூடற்குரிய முறையில் கைம்மை நோன்பு நோற்பர்” என்று மணிமேகலையில் மாதவி கூற்றாக வருதல் நோக்கத் தக்கது.

சோழர் பேரறிவு: சோழ அரசர் குறிப்பிட்ட நாள்களில் பல சமயத்தவரையும் அழைத்துத் தத்தமது சமயத்தைப் பற்றி விளக்கச் சந்தர்ப்பம் அளித்து அவற்றைப் பொது மக்கள் கேட்க வசதியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாம். இதனை மணிமேகலை இந்திரவிழவூரெடுத்த காதையிற் காணலாம். சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காஞ்சியிலும் பல சமயப் பெருமக்கள் இருந்தனர். ஒவ்வொரு தலைநகரத்திலும் இக்காட்சியைக் காணலாம். இப்பெருந்தன்மை வாய்ந்த செயல்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

எனவும்,

“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”

எனவும், வகுத்த வள்ளுவனார் சட்டப்படி சோழப் பேரரசர் நடந்து வந்தனர் என்பதை நன்கு உணர்த்துகிறதன்றோ?


  1. Gazetteer of the Tanjore Dt.,Vol. I, p.15
  2. Tanjore Manual, pp.4-5; Trichinopoly Manual pp.2-3.
  3. புறம் 40.
  4. பொருநர் ஆற்றுப்படை வரி 245-246.
  5. N.M.V. Nattars ‘cholas,’ p.97.
  6. A.R.E. 1919, Part II No.2
  7. பட்டினப்பாலை, வரி, 128.
  8. Ep. Indica, vol. 1 l, p.338.
  9. அகம், 60.
  10. அகம், 46.
  11. Ibid, 220.
  12. வரி. 187-188.
  13. Agam, S. 256; R. Raghava Iyengar's ‘Tamil Varalaru’, pp. 119-120.
  14. Puram, 373 மென்றோள் மகளிர் மன்றம் பேனார்.
  15. வரி, 118-137.
  16. மணிமேகலை, காதை 19.
  17. புறம், 167.
  18. புறம், 394.
  19. N.M.V. Nattar's ‘cholas’, p. 101.
  20. Ibid.
  21. புறம், 221,223,232,250,264,306,314,339,335.
  22. புறம், 62.
  23. மணி-காதை 23 வரி, 13-20.
  24. புறம், 40.
  25. புறம், 73.
  26. N.M. Nattar’s Cholas', pp. 101-102.
  27. வரி, 84-89, 102-121
  28. புறம், 34.
  29. காதை 2, வரி 18-32.
  30. N.M.V. Nattar’s ‘Cholas’, pp 104-105.
  31. மணிமேகலை : காதை 3.
  32. மணிமேகலை : காதை 19
  33. அகம், 86, 136.
  34. Vide his “History of the Tamils” p.80.
  35. சிலப்பதிகாரம், காதை I, வரி 14-19; காதை II, வரி 1-10
  36. புறம், S. 30.
  37. பட்டினப்பாலை, வரி 142-158.
  38. பட்டினப்பாலை, வரி. 159-183.
  39. பட்டினப்பாலை, வரி 184-193.
  40. Periplus Sec. 49.
  41. Reinand’s article in Journal Asiatic, 1863, i. 301-302; K.A.N. Sastry's cholas, vol.I.
  42. Ibid, p. 183.
  43. Warmington’s ‘The Commerce between the Roman Empire & India’ pp. 274-276.
  44. Rostoviziffs ‘Social and Economic History of the Roman Empire,’ p.93; Sastry’s cholas’ vol. 1, p. 102
  45. Warmington, pp. 128-131.
  46. 46.0 46.1 Periplus, Sec. 60 and Schoff’s, notes.
  47. பட்டினப்பாலை, வரி 29-32; மணிமேகலை, காதை வரி 29-34.
  48. ‘Periplus’, p. 261.
  49. N.M.V. Nattar’s ‘Cholas’.
  50. புறம், 166.
  1. இது பொருத்தமுடைய, பொருள் அன்று. இதன் பொருளை உணரப் பழைய எகிப்திய, கிரேக்க, மிநோவ வரலாறுகளை ஆராய்தல் நன்று.
  2. திருவாலங்காட்டில் சிவபிரான் ஆடிய நடனத்தின் பெயர்போலும் !
  3. இப்பழக்கம் இன்றும் பூவாளுர் - செட்டிமாரிடம் இருக்கிறது. அவர்கள் தம்மைக் ‘காவிரிப்பூம்பட்டினத்துச் செட்டிமார்’ என்று கூறுகின்றனர்.
  4. இப்பண்டைநகரம் இருந்த இடத்தையான் 12.3.43சென்று பார்வையிட்டேன்.இதற்கு உதவிபுரிந்தவர் திருவெண்காட்டுத் திருக்கோவில் பொறுப்பாளர் திருவாளர் பாலசுப்பிரமணிய முதலியார், கணக்கப் பிள்ளை சிதம்பரநாத முதலியார், புவனகிரி சிதம்பரநாத முதலியார் என்னும் பெருமக்களாவர்.
  5. இவ்வகைத் துகிலைத் தயாரித்தவர் தேவாங்கர் எனப்பட்டனர் போலும்!