செயலும் செயல்திறனும்/காலம், இடம் தேர்தல்

விக்கிமூலம் இலிருந்து

14. காலம், இடம் தேர்தல்

1. காலத்தின் இன்றியமையாமை

ஒருவினையைத் தொடங்குவதற்கும், அவ்வினை பழுத்து வருவதற்கும்,அது கனிந்து முற்றுப் பெறுவதற்கும் காலம் மிகவும் இன்றியமையாததென்பதை அனைவரும் அறிவர். அடுத்து, முயன்றாலும் ஆகுநாள் அன்றி, எடுத்த கருமங்கள் ஆகா என்பது வாக்குண்டாம் செய்யுளடி எச்செயலும் பருவத்தால் அன்றிப் பழா என்பது, அது கூறும் முடிவு. 'கண் இலான், மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே, ஆம் காலம் ஆகும், அவர்க்கு' என்று நல்வழி நவில்வதும் அதுவே.

பொருள்கருவி காலம் வினை இடனோடு ஐந்தும்

இருள்தீர எண்ணிச் செயல்.

(675)

என்று திருக்குறள், காலத்திற்கு மூன்றாவது முகாமை தருவது பற்றி முன்னரே கண்டோம்.

காலம் அறிந்தாங் கிடமறந்து செய்வினையின்
மூலம் அறிந்து விளைவறிந்து மேலுந்தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப்படும்.

என்பது குமர குருபர அடிகளின் நீதிநெறிவிளக்கம்.

திருக்குறளிள் 'காலம் அறிதல்' என்பது மிக நுட்பமான ஓர் அதிகாரமாக இடம் பெறுகிறது.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தால் செயின்

(484)



காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலங் கருது பவர்

(485)

என்னும் குறள்களில் காலம் கருதிச் செய்தால் இவ்வுலகையும் விலைக்கு வாங்கலாம் என்பார் திருவள்ளுவப் பேராசான். ஒருவன் தக்க கருவி 'கொண்டு, காலத்தை அறிந்து செயல்படுவானாயின், உலகில் செய்வதற்குக் கடினமான வினை என்பதே ஒன்றுமில்லை.

அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்

(483)

என்று திருவள்ளுவர் நெப்போலியனின் வீரக்குரலொடும், கிரேக்கப் பேரறிஞன் ஆர்க்கிமிடீசின் அறிவுக் குரலொடும், ஒன்றி முழங்குவார்.

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

(489)

என்னும் குறளிலும்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த விடத்து

(490)

என்னும் குறளிலும், வினைக்கு வேண்டிய கால உளவும் கூறுவார். இவ்வாறு அனைத்து அறிஞர்களின் உரையிலும் வினை செய்வதற்குரிய காலம் மிகுந்த இன்றியமையாத ஒன்றாகக் கூறப்பெற்றுள்ளதை நாம் மிக ஆழமாக மனத்தில் ஊன்றிக் கொள்ளுதல் வேண்டும். மற்றும் கழக நூல்களிலும் காலத்தின் முகாமை பலவாறு வருந்தியுரைக்கப் பெற்றிருப்பதைப் பரக்கக் காணலாம். வினைக்குப் பொருந்துவதாகிய காலம் நற்காலம் என்று சான்றோர் பாராட்டியுரைப்பர். எடுத்துக்காட்டாக சிற்சில இடங்களைப் பார்ப்போம்.

தொல்நலம் பெறூஉம் இதுநற்காலம் (அகம்.164)
காலத்தில் தோன்றிய கொண்மூப் போல(கலி. 82-2)
காலனும் காலம் பார்க்கும் (புறம் 41-)
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது(பதிற்.30-14)

எனவே, ஒரு வினை செய்வதற்குரிய காலம் என்று உண்டு என்று தெரிகிறது. பருவத்தே பயிர்செய் காற்றுள்ளபோதே, தூற்றிக் கொள், வெயில் உள்ளபோதே உலர்த்திக் கொள் என்பன போன்ற பழமொழிகளும் அவ்வுண்மையையே உணர்த்துகின்றன.

2. காலம் என்பது என்ன ?

இனி, காலம் என்பது என்ன? நல்ல காலம், கெட்ட காலம் என்று கணியர்கள் குறிப்பிடுகின்ற காலமா? வினை விளை காலம் ஆகலின் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறாரே அந்த ஊழ் என்னும் பொருள் தருகிற காலமா, இல்லை; வேனில், கதிர், முன்பணி, பின்பணி, கார், இளவேனில் என்னும் பருவ காலங்களா? இல்லை; காலை, பகல், மாலை, முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு என்று குறிப்பிடுகின்ற பொழுதுகளா? இல்லை. நமக்கு வந்து வாய்க்கும் குழந்தைமை, இளந்தை, இளமை; வாலை, நடுமை, முன்முதுமை, பின்முதுமை போன்ற வாழ்க்கைக் காலங்களா? அல்லது இவை எல்லாம் பொருந்திய ஒரு சேர்க்கைக் காலமா என்று முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு வினையைத் தொடங்குவதற்கு ஏற்ற காலம் என்பது முழுமையாக, நாம் எடுத்துக் கொண்ட வினையையே பொறுத்தது. நாம் செய்ய எடுத்துக் கொண்ட வினை என்ன? அதால் யார்யார்க்கு எத்தகைய வகையில் எவ்வளவு பயன் கிடைக்கும்? அதற்கு யார் யாரைத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அந்த வினை செய்வதற்குப் பொருத்தமான சூழ்நிலையைக் காலத்தாலும் இடத்தாலும் முடிவு செய்ய வேண்டும். அதற்கு, அவ்வினை செய்ய வேண்டிய கால கட்டாயத்தை முதலில் உறுதி செய்ய வேண்டும். செய்யப் பெற வேண்டிய வினை அந்தக் காலச் சூழலுக்குப் பொருத்தமானதா, அந்த இடத்திற்குப் பொருத்தமானதா என்று ஆராய்ந்து முடிவு செய்தல் வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையே அவ்வினைக்கு இயைந்த சூழ்நிலை என்று முடிவு செய்து கொள்ளுதல் வேண்டும். அந்தச் சூழ்நிலை இயையுமானால், அதுவே அதற்கேற்றது என்று தெரிவு செய்தல் வேண்டும். நம் வினைக்கு அது வந்து பொருந்துமானால், அதுவே அதற்கேற்றது என்று தெரிவு செய்தல் வேண்டும். நம் வினைக்கு ஒரு பெருத்த முதலீடு தேவைப்படுவதாயின், அம் முதலீடு நமக்கு வந்து வாய்க்கும் காலமே, சூழலே அதற்கேற்ற காலம் ஆகும். அல்லது, அதற்குரிய கருவிகள் நமக்கு வந்து வாய்க்குமானால் அதுவே அதற்கு ஏற்ற காலம் என்றும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். அல்லது அவ்வினைக்குரிய துணைவர்கள் வந்து பொருந்துவார்களானால், அதுவே அவ்வினைக்குத் தக்க காலம் என்று கருதிக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒரு வினைக்குரிய, தேவையான பொருள், கருவி, துணை என்னும் மூவகைக் கூறுகளில் ஒன்றோ இரண்டோ, தானாக, அல்லது தாமாக வந்து பொருந்தும் காலமே அவ்வினை தொடங்குவதற்கு ஏற்ற காலம் என்று துணிதல் வேண்டும்.

இவற்றுள் நாம் எடுத்துக் கொண்ட வினைக்கு ஒன்று பொருந்தும். ஒன்று பொருந்தாமல் இருக்கும். அஃதாவது நம் வினைக்கேற்ற பொருள் கிடைத்திருக்கும். கருவிகள் கிடைக்கா, கருவிகள் கிடைக்கும். ஆள்கள் கிடைக்க மாட்டார்கள். இனி, பொருளும் கருவியும், ஆள்களும் கிடைத்திருக்கும். ஆனால், அவ்வினை தொடங்குவதற்கு அந்தச் சூழ்நிலை பொருத்தமில்லாமல் போகும். அந்நிலையிலும் அவ்வினையைச் செய்ய நாம் துணிந்து விடக்கூடாது. அஃதாவது நாம் வெல்ல வாணிகம் செய்யவிருப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்குரிய முதலீடும், கடையும் கருவிகளும், போதிய ஆட்களும் இருக்கலாம். ஆனால் அது மழைக்காலமாக இருக்கும். அந்தக் காலச் சூழ்நிலை நம் வெல்ல வாணிகத்திற்கு ஏற்றதாக அமையாதன்றோ? எனவே, அந்நிலையில் பருவக் காலமே நமக்கு ஏற்றமென்று கருதிக் கொள்ளுதல் வேண்டும்.

3. தெரிந்து செய்தல்

திருக்குறளில், செயல் நிலைகளை முறைப்படுத்தும் அதிகார வரிசை சிறிது உற்று நோக்குவதற்குரியது.

எந்தச் செயலைச் செய்யப் போகின்றோம் என்பதைத் தேர்ந்து கொள்வதைத் தெரிந்து செயல்வகை என்னும் அதிகாரத்தால் கூறுவர் குறளாசான்.

அதன்பின், ஒன்று, அச்செயலின் வலிமை, இரண்டு அதைச் செய்வதற்கு முனைந்த நம்முடைய வலிமை, மூன்று அச்செயலைச் செய்ய முற்படுங்கால், இயல்பாகவே அதற்கு வந்து வாய்க்கின்ற பகைவர்களின் அல்லது எதிர்ப்பாளர்களின் வலிமை, நான்கு, அச்செயலுக்கு என நமக்குத் துணை வருவோரின் வலிமை ஆகிய நான்கு கூறுகளையும் உள்ளடக்கி நிற்கும் கருத்துகளையெல்லாம் வலியறிதல் என்னும் அதிகாரத்துள் விரித்துரைப்பார் திருவள்ளுவர் பெருமான்.

அதையடுத்து அவர் கூறுவது காலம் அறிதல் அதிகாரம் அதன்பின் இடன் அறிதல், இவற்றையெல்லாம் நன்றாக ஆராய்ந்து அறிந்தபின், அவ்வினைக்குரிய துணைவர்களைத் தேர்தலாகிய தெரிந்து தெளிதல், அவ்வினை நிலை நுட்பங்களையும், கொண்டு செய்விப்பார்களையும் செய்முறைகளையும் கூறும் தெரிந்து வினையாடல் ஆகிய அதிகாரங்கள் ஒன்றன்பின் ஒன்று முறையே சொல்லப்பெறுகின்றன.

எனவே காலம் அறிதல், இடனறிதல் ஆகிய இரண்டு அறிவுத் தேர்வு நிலைகளும், வினைக்கு நடுவாக அறிய வேண்டிய நுட்பங்கள் ஆகும் என்று கண்டு கொள்ளுதல் வேண்டும். காலத்தை உணர்ந்த பின் காலத்தாழ்ச்சி கூடாது.

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது

- (671)

என்பதை என்றுமே மறத்தல் கூடாது.

4. அனைத்து நலன்களும் பொருத்துதல்

வினைக்குரிய சூழல் அமைவது கடினம். மிகவும் கடினம். அது வாய்ந்தபின் உடனே அது செய்யப்பெறுதல் வேண்டும். வாழ்க்கை நிலையாமை உடையது. எனவே அடுத்து வரும் காலத்துள், நமக்கு இன்றிருக்கும் ஊக்கம் தொடர்ந்து இருக்கும் என்று சொல்ல முடியாது. இன்று நமக்குள்ள உடல் நலம், மனநலம், அறிவுநலம், கருவிநலம், செல்வநலம்,துணைநலம், காலப்பொருத்தம், இடப்பொருத்தம் முதலியன இனிவரும் காலத்தின் மாறுபடலாம். எப்பொழுதும், ஒவ்வொரு

நொடிப்பொழுதும், இயற்கை நிலைகள் மாறுபட்டுக்கொண்டே இருக்கும் தன்மை வாய்ந்தன என்பதை முதற்கண் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

இன்றிருக்கும் மனநிலை நாளை இராது. இன்றுள்ள உடல்நலம் அடுத்தநாள் இராது. உடல் நலம் கெடலாம். அல்லது நமக்கேதாவது ஏதங்கள் வரலாம். பலவாறான தடைகள் வரும். இன்று ஒருவன் நமக்கு உதவி செய்வதாகச் சொல்லிச் செல்வான். நாளை வரும்பொழுது அவ்வாறு செய்ய இயலவில்லை என்று சொல்வான். எனவே காலம் மிக மிக இன்றியமையாதது. மேலும் இன்று நம் வினைக்குரியதாக நாம் திரட்டி வைத்திருக்கின்ற செல்வம் நாளை கை தவறிப் போகலாம். திருடு போகலாம். செலவழிக்கப்பட்டுவிடலாம். அல்லது வேறு தேவைகள் வந்து அதனை அவற்றுக்கென ஒதுக்க வேண்டிய கட்டாயம் வரலாம். எனவேதான் வினைக்கு வாய்த்த அல்லது வாய்க்கும் காலம் மிக மிக இன்றியமையாதது.

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்

(489)

என்னும் குறட்பாவிலும்,

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்

(333)

அஃதாவது, நில்லா இயல்பினை உடையது செல்வம். அது வந்து வாய்க்குமானால், நிலைக்கின்ற செயல்களை அங்கே, அப்பொழுதே செய்யத் தொடங்கிவிட வேண்டும் என்றும் குறளாசான் வலியுறுத்துவார்.

மேலும் நம் உடல் நலமும், நமக்குற்ற பருவமும், காலம் என்ற அடிப்படையில் கவனிக்கப் பெற வேண்டிய முகாமையான கூறுகளாகும். நாம் ஒரு செயலைச் செய்து முடிக்க இருபது ஆண்டுகள் ஆகும் என்றால், இருபது ஆண்டுகளுக்குப் பின் நம் நிலை, அகவை, உடல் நிலை எவ்வாறு இருக்கும் என்று கணித்துவிட வேண்டும். கழி முதுமையில் அவ்வாறு நெடிய முயற்சிகளைச் செய்ய நினைத்தாலும் செய்யவியலாது. அதற்குக் காலம் இடந் தராது என்பதை உறுதியாக எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

ஏராளமாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் நமக்கிருந்தால் போதா. காலமும் நமக்கு வேண்டும். மீளமுடியாத நோய்வாய்ப்பட்ட ஒருவன், நோய் நீங்கிச் செய்ய வேண்டிய பலவாறான வினைகளைத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல.

(337)

என்றும்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்செனறு செய்யப் படும்

(335)

என்றும் திருவள்ளுவப் பேராசான் காலம் கருதுதலை நிலையாமையுள் அடக்கி, நாம் வாழ்கின்ற காலத்தையும் எண்ணிப் பார்க்க வலியுறுத்துவார்.

எனவே காலம் என்பது வேளையோ, பருவமோ, நம் அகவையோ வினைக்குரிய சூழலோ என்றில்லாமல் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு வாய்ப்புக் கூறு என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும்.

5. இடம் என்றால் என்ன?

இனி இடனறிதல் என்னும் நுட்பத்தையும் நாம் நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும். பொதுவாக இடம் என்பது நிலம் சார்ந்த பரப்புக்கூறு (Place) என்றே பொருள்பட்டாலும், தன்னிலை, முன்னிலை, படர்க்கை என்றும் நம் சான்றோர்களால் பகுத்துக்கூறும் திறன் வியந்து நோக்குதற்குரியது.

வினை செய்வதற்குரிய இடம், அதற்குரிய கருவிகள், கிடைக்கும் இடம், அதற்குரிய வினையாள்கள் அல்லது தொழில் வினைஞர்கள் வாழ்விடம், அத்தொழிலால் அல்லது வினையால் உருவாகும் பொருள்களை விலைபோக்குதற்குரிய இடம், பொருள் வாய்ப்பு வசதிகள் நிறைந்த இடம் முதலிய அனைத்தையும் உள்ளடக்கிப் பொருள் தருவதாகும் ஒரு நில எல்லையையே இடம் என்னும் சொல் சுட்டும்.

தொடங்கற்க எவ்வினையும்..... இடங்கண்ட பின் அல்லது (491) என்பது திருவள்ளுவப் பேராசானின் முதல் அறிவுரை,

இடனறிந்து செய்யாதவிடத்து, நம் எண்ணங்கள் வலிவிழக்கும். பகைவரது எண்ணம் வலிவு பெற்றுவிடும், என்பது, ஒரு கருத்து.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து

துன்னியார் துன்னிச் செயின்

(494)

என்னும் குறளுள், பகைவரது எண்ணங்கள் முறியடிக்கப்பெற வேண்டுமாயின், நாம் வினைமேற் கொள்ளும் இடத்தைச் சரியாகத் தேர்ந்து எடுத்துக்கொள்ளுதல் வேண்டும் என்பார் திருவள்ளுவர்.

இங்கும் இடம் என்பது பாதுகாப்பான, வினை செய்வதற்குரிய பகைவர்கள் எளிதில் நெருங்க இயலாத முயற்சிகளுக்கேற்ற வாய்ப்புகள் மிகுந்த இடம் என்று பொருள்படுவதாகும்.

ஞாலங் கருதினும் கைகூடும் காலங்

கருதி இடத்தாற் செயின்

(483)

என்பதை நன்கு எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

முதலைக்கு வலிவு அது தண்ணிரில் உள்ள பொழுதே, அது நிலத்துக்கு வருமானால் தன் வலிவை இழந்துவிடும். அதுபோல் தன்வலிவு மிகக்கூடிய இடமே வினைக்குரிய இடம் என்று கருதிக் கொள்ளுதல் வேண்டும்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்

நீங்கின் அதனைப் பிற -

(495)

இவ்விடத்தில் நாம் கவனிக்க வேண்டியது நெடும்புனல் என்பது. அஃதாவது புனல் (தண்ணிர்) என்று மட்டும் குறிக்காமல் நெடும்புனல் என்று குறித்தது. ஆழமான தண்ணீர் எப்பொழுதும் வற்றாமல் இருக்கும் நீர்நிலை, இட அளவாக நீண்டு விரிந்த நீர்ப்பரப்புள்ள இடம் முதலிய அனைத்துப் பொருள்களையும் குறிக்கவே என்க. ஒரு காலத்து நிறைந்திருந்தது. அடுத்த காலத்தில் வற்றிப் போகும் நீர்நிலை முதலை வாழ்வதற்கு ஏற்ற இடமன்று. ஒரு குறுகிய நீர்நிலையாகவும் அஃது இருந்தால் போதாது. அதுபோல் ஆழமற்ற நீர்நிலையும் அதற்கு ஏற்றதன்று. எனவே தான் நெடும்புனல் என்று குறித்தார் பேராசான்.

இவ்வாறு வினை செய்கிறவன், வினை செய்யப் பொருத்தமான இடத்து, அவன் வினைக்குரிய பொருள், கருவி, துணை முதலியவை எப்பொழுதும், எந்த நிலையிலும் தாழ்ச்சியின்றிக் கிடைத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். சான்றாக வட்டிக்கடை வைக்கின்ற ஒருவன், செல்வர்கள் வாழ்கின்ற இடத்தையோ, ஊரையோ அவன் வினைக்கென்று தெரிவு செய்தல் கூடாது. அங்கு வட்டிக்குப் பணம் பெறுவார் எவரும் இரார் இருப்பினும் பேரளவில் இருத்தல் இயலாது. அதேபோல் மிகுந்த ஏழைகள் உள்ள இடமும் ஊரும் அத்தொழிலுக்குரிய இடம் ஆகாது. ஏழைகளுமாக இல்லாமல், பணக்காரர்களுமாகவும் இல்லாமல், நடுத்தர வருமானமுள்ளவர் வாழ்கின்ற இடமாக, ஊராக அல்லது பகுதியாக அஃது இருத்தல் வேண்டும்.

6. தேரும் படகும்

இன்னும் நன்றாக எண்ணிப் பார்ப்போமானால், அவ்வினை நிகழும் இடம், மக்கள் போதிய வருமானம் இல்லாதவர்களாகவும், அதேபொழுது தொழில் ஆர்வம் உள்ளவர்களாகவும் துணிந்து கடன் பெற்று முதலீடு செய்து தொழில் இயற்றும் ஊக்கமுடையவர்களாகவும் நிறைந்திருக்கின்ற இடமாக இருத்தல் வேண்டும். இன்னும் பார்ப்போமானால் அவர்கள் செய்யும் தொழிலுக்குரிய வருமானமும் அங்குக் கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் பணத்தை வட்டிக்கு வாங்கித் தொழில் செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு கடனை அடைக்க இயன்றவர்களாய் இருக்க முடியும்.

அவ்வாறில்லாதவர்கள் வாழ்கின்ற இடத்தில் வட்டித் தொழில் செய்தால் அது வெற்றி பெறாது. இழப்புதான் ஏற்படும்.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து

(496)

வலிந்த கால்களை உடைய தேராயினும் அது கடலில் ஓட இயலாது. இனி, கால்கள் இல்லாத படகு, தண்ணீரில்தான் ஓடும். அது நிலத்தில் ஓட இயலாது. எது, எது எங்கு இயங்க இயலுமோ, அது அது அங்குதான், அதற்குரிய இடத்தில் தான் இயங்கும். வினையும் அப்படிப் போன்ற நிலையை உடையதுதான் என்று அறிதல் வேண்டும்.

எனவே, வினை செய்பவன், அதற்குரிய காலத்தையும் இடத்தையும் நன்கு தேர்ந்து, அவ்வினையைத் திறம்பெறச் செய்தல் வேண்டும் என்று தெரிந்து கொள்க

7. காலத்தில் சில நுட்பம்

இனி, காலம் கருதுதலில் இன்னொரு நுட்பமான செய்தியையும் நாம் நன்றாக விளங்கிக் கொள்ளுதல் மிக மிக இன்றியமையாததாகும்.

காலம் கருதுதல் இடத்திற்கு இடம், வினைக்கு வினை மாறுபடும் அல்லது வேறுபடும் அளவுடையது. சில நேரம் காலத்தை மேலோட்டமாகக் கருதுதல் வேண்டும். ஆனால் சில நேரமோ காலத்தை மிக முகாமையாகக் கருத வேண்டும்.

ஒரு சந்தைக்குப் போய்ச் சில பொருள்களை நாம் வாங்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். அதன் பொருட்டு நாம் கருதியாக வேண்டிய காலம், சந்தை நடைபெறும் காலமாகும். அஃதாவது சந்தை, பொதுவாகக் காலை 10 மணி முதல் கூடத் தொடங்கி முன்னிரவு 8 மணி வரை நடைபெறும் என்றால், அதுவே சந்தைக்குச் செல்ல வேண்டிய காலமாகும். அந்த இடைப்பொழுதில் நாம் எந்த நேரத்திலாவது சந்தைக்குச் சென்று பொருளை வாங்கலாம். அது நாம் மற்ற வினைகளைச் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட காலத்தைப் பொறுத்து அமைத்துக் கொள்ள வேண்டியதாகும். அந்நிலையில் நாம் முன்பின்னாகச் செயல்படலாம். அதில் தவறில்லை. ஆனால் நாம் குறிப்பிட்ட ஒரு காலத்தில், அஃதாவது மாலை 6 மணிக்குப் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்றிருந்தால், அதற்குக் கட்டாயம் அந்த நேரத்தில் போயே ஆகவேண்டும். அந்த நேரத்திற்குப் பின்னர் காலந்தாழ்த்தி நாம் போவது, நமக்கு ஒன்று இழுக்கை உண்டாக்கும். இரண்டு, பொதுமக்களுக்கு நம்மேல் இருக்கும் நம்பிக்கையைக் குறைக்கும். எனவே, அவ்விடத்தில் காலம் கருதுதல் மிகவும் இன்றியமையாததாகும். இனி, ஒருவேளை, நாம் 6 மணிக்குப்

போக முடியாதபடி ஒரு தடை வந்து, அந்தப் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்ள 6 மணிக்கே போக முடியாமற் போகுமானால், கொஞ்ச நேரம் காலந்தாழ்த்திப் போனாலும் அதனால் குற்றமாகிவிடாது. அவ்வாறு காலந்தாழ நேர்ந்ததற்குரிய அமைவை நாம் பொதுமக்களிடம் விளக்கிக் கூறி அவ்விழுக்கும் அந்நம்பிக்கைக் குறைவும் வராதவாறு காத்துக் கொள்ளவியலும். அதனால் நாம் செய்யப் புகுந்த வினை ஒன்றும் தடைப்பட்டு விடாது. இவ்வகையில் காலந் தவறுதல் அவ்வளவு கேடு தந்து விடாது.

ஆனால், நாம் சரியாக 6 மணிக்குச் செல்லும் தொடர் வண்டியைப் பிடித்தாக வேண்டும் என்றிருந்தால், கட்டாயம் நாம் 5 1/2 மணிக்கே நிலையத்திற்குப் போயாக வேண்டும். இனி, 5 1/2 மணிக்கு நாம் அங்குப் போய் சேர வேண்டுவதாக இருந்தால், நாம் வீட்டிலிருந்து 5 மணிக்கே புறப்பட்டாக வேண்டும். அப்பொழுது தான் நாம் வண்டி நிலையத்திற்குப் போய் முன்கூட்டியே சீட்டு வாங்கவோ, அல்லது ஒதுக்கப்பெற்ற இடத்தைத் தேடிப் பார்த்து அமரவோ முடியும். இங்குக் காலத்தாழ்ச்சி நமக்கு மிகக் கேடாகவும், நாம் செய்யவிருக்கும் வினைக்கு மிகவும் இடையூறாகவும் போய்விடுவது தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே காலங் கருதுதலை எந்தவிடத்தில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். எந்த இடத்தில் சிறிது கை நெகிழ்ந்தாலும் அதில் தளர்ச்சி காட்டினாலும் அதில் தாழ்வில்லை. எந்த இடத்திலும் காலத்தைத் தவறவே விடக்கூடாது, மாறாக, முன்கூட்டியே செயல்பட வேண்டும் என்றெல்லாம் நன்கு உணர்ந்து தேறுதல் வேண்டும் என அறிக.

8. காலத்தாழ்ச்சி எப்பொழுது இருக்கலாம்

காலத்தாழ்ச்சி அல்லது காலம் வரும் வரை அமைந்திருத்தல் என்பதுவும் கூடக் காலங்கருதுதல் என்னும் செயலுக்குள்ளேயே அடங்கும். காலத்தாழ்ச்சியோ கால அமைவோ, அந்தச் செயலை மேலும் நன்கு அஃதாவது இன்னும் திறம்படச் செய்வதற்குத்தான் பயன்படுவதாக இருக்க வேண்டுமே தவிர, அந்தச் செயலை நெகிழ்த்து விடுவதற்காக, அதில் மெலிவு தோன்றி விடுவதற்காக இருந்துவிடக்கூடாது.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து

(486)

என்பார் திருவள்ளுவப் பேராசான், சண்டைக்கு விட்ட ஆட்டுக்கடா, தன் முனைப்பில் சிறிது பின்வாங்குதல், காலத்தைச் சிறிது தளரத் தாழ விடுதல், ஏற்கனவே அந்த வினையின் பொருட்டுத் தான் கொண்ட உள்ள உறுதியை வலிமைப்படுத்தி, மேலும் முனைப்பாகத் தாக்குவதற்கே ஆகும் என்பது அவர் கருத்து. அஃதாவது முன்னினும் வலிவு

பெறுவதற்காகக் காலத்தைத் தாழ்த்தலாம். இடத்தைக்கூட மாற்றலாம். மழைக்காலத்தில் சதுப்பு நிலத்தில் தொடங்கும் போர் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பை உறுதியாகத் தரும் என்று சொல்ல முடியாது. ஆகையால், அங்குக் காலத்தைப் பின் தள்ளுவதும், இடத்தை மாற்றியமைப்பதும் தவறாகா என்று அறிதல் வேண்டும்.

இனி, நாம் ஒரு வினை முடிவதற்குரியதாக ஒரு காலத்தைத் தேர்ந்தெடுத்துக் காத்துக் கொண்டிருக்கையில், அவ்வினை அக்குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே கனிந்து முடியும் என்னும் நிலை தோன்றினால், குறிப்பிடப்பெற்ற காலத்திற்காகக் காத்துக் கொண்டிராமல், வினை வந்து சூழ்வுற்ற காலமே அதற்கு ஏற்ற காலம் என்று கருதி, அப்பொழுதே அவ்வினையைச் செய்யத் தொடங்கிவிடுதல் வேண்டும். இவ்விடத்தில் இடத்தையும் கூட அவ்வாறு கருதுதல் வேண்டும்.

எய்தற் கரிய(து) இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.

(489)

என்பது திருவள்ளுவம் இடம் என்பது சில நேரம் காலத்தையும் சுட்டுவதாக அமையும். மேல் காட்டப் பெற்ற குறளில் அந்நிலை என்பது காலத்தையும் இடத்தையும் இணைந்து சுட்டும் ஒரு பொருள் பொதிந்த சொல்.

9. இயற்கை இயைபு

இனி, ஒரு செயல் நடைபெற மாந்த முயற்சியும் இயற்கையின் இயைபு நிலையும் பொருந்தி வருதல் வேண்டும் என்பதை நாம் மேலும் தெரிந்து கொள்ளுதல், செயல் திறனுக்கு உரிய இன்னொரு நுட்பக் கூறாகும். மழைக் காலத்தில் விதைப்பது என்பது இயற்கையை அறிதலும் மாந்த முயற்சியும் இயைபுபட்ட ஒரு செயலுக்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். எனவே, காலம் கருதுதல் என்பது இயற்கையால் வந்துறும் காலம் என்றும் பொருள் தருவதாகும். தரவே, எய்தற்கரியது இயைவது என்பது இயற்கையாக ஏற்படுத்திக் கொடுக்கும் பருவக் காலங்களையும் வானியல், கோளியல் ஆகியவற்றால் அமையும் காலத்தையும் ஒருவாறு குறித்ததாகவும் பொருள் கொள்ளலாம். இனி, இயற்கையின் இயைபு நிலை என்பது, நமக்கு மட்டுமே இயைந்த செயலாகவன்றி, நம் அனவரையும் இயைபுப்படுத்தி இயங்கும் ஒரு பொதுநிலைச் செயலாகவே இருக்க முடியும் ஆகலின், அது வகுத்துக் கொடுக்கும் காலத்தையே நாம் எதிர்பார்த்து நம்பியிராமல், நம் முயற்சியையும் நாம் கருதியிருத்தல் வேண்டும் என்பதற்காகவே,

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

(619)

என்றார் பேராசான். இது பருவ மழையை எதிர்பார்த்து விதைத்த ஒருவன், அது தப்பியவிடத்து, கிணற்றடி நீருக்கும் முயற்சி செய்வது போன்றதாகும். ஊழ் என்பது மூவகைச் செயற்பாட்டு எதிர் விளைவைக் குறிக்கும் ஒரு பொருள் பொதி சொல்லாகும் ஊழ் வேறு விதி வேறு. தேவையான விடத்து, இது மிக விரிவாக விளக்கப்பெறும் இக்கால், காலங் கருதுதல் என்பது இயற்கை வழியமைந்த ஒர் இயைபு நிலையை உணர்தலும் ஆகும் என்னும் அளவிற்கே இக்கருத்தைக் கவனித்தல் தகும். ஆனால், இயற்கை இயைபுக்குக் காத்திருந்து, மாந்தன் தன் முயற்சியால் அமைத்துக் கொள்ளும் காலத்தைக் கருதாமல் இருந்து விடுதல் கூடாது என்று உணர்ந்து கொள்க.