செயலும் செயல்திறனும்/உறுதி கொள்ளுதல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

15. உறுதி கொள்ளுதல்

1. உறுதியும் ஊக்கமும்

உறுதி என்னும் சொல் உறுதல் என்னும் வினைச் சொல்லை ஒட்டிப் பிறந்த சொல்லாகும். உறுதல் - உறுதி உறுதல் என்னும் சொல்லுக்கு, அடைதல், உண்டாதல், கிடைத்தல், கூடல், பொருந்துதல், சேர்தல், தங்குதல், வருதல், மிகுதல், ஒத்தல் முதலிய பொருள்கள் உண்டு.

ஒரு செயலைச் செய்யும் முன்னம் அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் உண்டாகும். அவ்வாறு உண்டான எண்ணம், அந்தச் செயல் செய்து முடிக்கப்படும்வரை உள்ளத்திலேயே தாங்கியிருத்தல் வேண்டும். இன்னும் சொன்னால் அந்த எண்ணம் உண்டாகி, தோன்றிய அளவோடு நில்லாமல், அந்தச் செயல் செய்து முடிக்கப்படும் வரை உள்ள கால நீட்டிப்பு, உழைப்பு மிகுதி, தேவை நிலைகள், எதிர்தாக்கங்கள் முதலியவற்றிற்கு ஏற்ற படி மேலும் மேலும் மிகுந்து வலிவாகிக் கொண்டே (அந்த உணர்வு) உள்ளத்தை விட்டுப் பெயராமல் அல்லது நீங்கி விடாமல் அல்லது குறைந்துவிடாமல் நிலைத்து நிற்க வேண்டும். அத்தகைய மிகுந்து வளரும் எண்ணத்தின் வலிவுணர்வுக்கே உறுதி என்று பெயர். இந்த உணர்வுக்கு ஊக்கம் என்று வேறு பெயரும் உண்டு. ஊக்குதல் - மிகுதல், அஃதாவது தோன்றிய அளவில் மெலியாது, மேலும் மேலும் வலிவு பெறுதல்.

2. எதிர் தாக்கம் ஏற்படுதல்

ஒரு செயலைச் செய்ய முற்படும் பொழுது அதற்கு வேண்டிய உழைப்பின் அளவு நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரு பெரிய கல்லைப் பார்த்தவுடன் அதை நாம் ஒருவரே புரட்டி அல்லது அப்புறப்படுத்தி அல்லது தூக்கிவிடலாம் என்று கருதலாம். ஆனால் அதை நெருங்கி அசைத்துப் பார்த்த பின்தான் இன்னொருவரும் அதற்கு வேண்டும் என்பது நமக்குத் தெரியவரும் இனி, இன்னொருவருடன் முயல்கின்ற பொழுதுதான் மேலும் ஒருவர் தேவைப்படுவது தெரியும். இப்படி ஒருவர் இருவராக அசைத்தசைத்துப் பார்த்தபின் மொத்தம் ஐந்துபேர் வந்துதான் அதை நகர்த்தமுடியும் என்று ஒரு நிலை ஏற்படும். இதுதான். அந்த வேலையைச் செய்வதற்குரிய உழைப்பு அளவு. இந்த அளவைக் கண்டுபிடிக்க ஓரளவு காலத்தை நாம் செலவிட்டிருக்கிறோம்.

இது நாம் நினைத்திருந்த காலத்திற்கும் மேலான காலத்தை எடுத்துக் கொண்டது. இது கால நீட்டிப்பு ஆகும். இந்த உழைப்பு அளவு முன்பே நமக்குத் தெரிந்திருந்தால் அந்தக் காலத்தை நாம் மீதி பண்ணியிருக்க முடியும் வேலையும் முன்னரே முடிந்திருக்கும்.

இனி, அந்தக் கல்லை ஐந்து ஆட்களைக் கொண்டு புரட்ட வேண்டி வந்து ஐந்து ஆட்கள் நமக்குக் கிடைக்காமல் போனால், இரண்டு ஆட்களையும் ஒரு கடப்பாரையையும் கொண்டு புரட்டி விடும்படி ஒரு நிலையும் இருக்கும். அப்பொழுது இரண்டு ஆட்கள் ஒரு கடப்பாரை நமக்குப் போதும். அது தேவைநிலை. அந்த நிலையும் நமக்கு முன்பே தெரிந்திருந்தால், மேலும் மூன்று ஆட்களைத் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அப்பொழுது காலம் இன்னும் நமக்குக் குறையும். முயற்சியும் குறையும்.

இனி, அந்தக் கல்லை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுதுதான் அது நிலத்தின் மேல் கிடப்பதாகத் தெரிந்திருக்கும். ஆனால் அதைப் புரட்ட முயற்சி செய்யும் பொழுதே, அது நிலத்தினுள் சில அடிகள் கீழே புதைந்திருப்பதும் நமக்குத் தெரிய வருவதாக வைத்துக் கொள்வோம். அதுதான் நம் செயலுக்கு நேர்ந்த எதிர் தாக்கம் ஆகும். அஃதாவது, நாம் ஒரு செயலை இயல்பாக எண்ணிச் செய்துவிட முயற்சி செய்கையில், நாம் நினைத்திராதபடி இயற்கையாகவோ, அல்லது ஓர் ஆள் வழியிலோ நமக்கு வரும் தடையோ, எதிர்ப்போ எதிர்தாக்கம் ஆகும்.

நாம் ஒரு செயலைச் செய்ய வெளியே புறப்பட்டுக் கொண்டிருப்போம். உடனே மழை வரும் புறப்பட முடியாமல் போகும். இஃது இயற்கை எதிர்தாக்கம் நாம் ஒரு வாணிகம் செய்ய ஓர் இடத்தைத் தேர்ந்தெடுப்போம். அதே இடத்துக்குப் பக்கத்தில் இன்னொருவர் அதே வாணிகத்தைச் செய்ய முற்படுவார். அஃது ஆள் எதிர்தாக்கம். இவ்வாறன்றி வேறு ஒருவர் நம் மேல் பொறாமை கொண்டு அல்லது பகைகொண்டு, நாம் செய்ய எடுத்துக் கொண்ட செயலுக்கு முட்டுக்கட்டை போடுவார். அல்லது தடை செய்வார். அல்லது நம் வேலையைக் கெடுக்கும்படியான சூழலை உருவாக்குவார். இவையெல்லாம் ஆள் எதிர்தாக்கந்தாம்!

இவ்வாறு ஒவ்வொரு செயலுக்கும் அஃது எந்த வகைச் செயலாக இருந்தாலும், அதற்கு இயற்கையாகவும் செயற்கையாகவும் பல தடைகள், எதிர்ப்புகள், கேடுகள், தேவை நிலைகளில் பற்றாக்குறைகள், உழைப்பு அளவை நிறைவு செய்ய இயலாமை முதலிய நிலைகள் கட்டாயம் முழு அளவிலோ சிறு அளவிலோ நாம் எடுத்துக்கொண்ட வேலைக்குத் தக்கபடி வந்தேதான் தீரும் எதிர்ப்பு வராத எந்தச் செயலும் உலகத்தில்

இல்லை. அறிவியலில் ஓர் உண்மை உண்டு. ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்ச் செயல் உண்டு என்பதை நாம் எப்பொழுதும் எந்த நிலையிலும் மறந்துவிடக் கூடாது. உலகமும் அதிலுள்ள அனைத்து ஆற்றல்களும் நேர் ஆற்றல் - எதிராற்றல் என்ற அளவிலேயே இயங்குகின்றன என்று நாம் முன்பே அறிந்திருக்கிறோம். அந்த உண்மை எல்லாச் செயல்களுக்குமே பொதுவானது.

3. உடலும், உள்ளமும்

எனவே ஒரு செயலைச் செய்யத் தொடங்கியவுடன் அதற்கு ஏற்படும் தடைகளைப் பார்த்து நம் உள்ளம் சோர்ந்துவிடும். துவண்டுவிடும். வருத்தம் கொண்டுவிடும். பின்னர் படிப்படியாக இந்தச் செயலே வேண்டாம் என்று அமைந்துவிடும். ஆனால், அவ்வாறு சோர்ந்துவிடாமல் துவண்டு விடாமல், வருத்தம் கொள்ளாமல், அமைந்துவிடாமல், மேலும் மேலும் அந்தச் செயலை செய்வதில் ஆர்வமும் முனைப்பும் கொண்டு ஈடுபடுதல் வேண்டும் அதையே உறுதி ஊக்கம் என்னும் சொற்கள் குறிக்கின்றன.

இந்த இரண்டு சொற்களும் நம்முடைய இரண்டு வகையான தன்மைகளைக் குறிக்கின்றன. உறுதி என்பது உடலுணர்வுத் தன்மையையும், ஊக்கம் என்பது உள்ள உணர்வுத் தன்மையையும் குறிக்கும். அவ்வாறு குறித்தாலும் உடலில் உள்ளமும் உள்ளத்தோடு உடலும் பொருந்தியிருப்பதால், பொதுவாக இரண்டின் தன்மைகளையுமே இவ்விரண்டு சொற்களும் குறிக்கக் கூடியன. அவ்வாறு ஒன்றுக்கே உரிய சொல்லை இன்னொன்றுக்குக் குறிக்கும் பொழுது, அதனதன் இயல்பான தன்மைகள் இன்னும் மிகுந்து தோன்றும்படியான உணர்வுகளை அவை உணர்த்துவதை அறிந்து மகிழலாம்.

அஃதாவது 'உடல் உறுதியாக இருக்கிறது' என்கிற பொழுது இயல்பான நிலையில் உடல் நலமாக இருப்பதை அஃது உணர்த்தும். ஆனால் 'உடல் ஊக்கமாக இருக்கிறது' என்கிறபொழுது அது நலமாக மட்டுமின்றி அச்செயல் செய்யும் கிளர்ச்சியுடனும் இருக்கிறது என்பதை அஃது உணர்த்தும். அதேபோல், 'உள்ளம் ஊக்கமாக இருக்கிறது' என்கிற பொழுது, இயல்பான நிலையில் அது செயல் செய்யும் விருப்பத்தில் - ஆர்வத்தில் அஃது இருக்கிறது என்பதை உணர்த்தும். 'உள்ளம் உறுதியாக இருக்கிறது' என்னும் பொழுது, 'அச்செயல் செயல் முடிக்கும் வரை அந்த விருப்பம் தளராமல் இருக்கும்' என்பதை அஃது உணர்த்தும். தமிழில்தான் இத்தகைய நுண்பொருளை உணர்த்தும் சொற்களை நாம் பார்க்க முடியும்.

ஆகவே, நாம் எந்தச் செயலைச் செய்வதற்கு முற்பட்டாலும், அந்தச் செயல் முடியும்வரை, அதனால் வரும் எவ்வகை இடர் பாடுகளையும்,

எதிர்ப்புகளையும், தொல்லைகளையும் பற்றாக்குறைகளையும் கால நீட்டிப்பையும் கண்டு, சோர்வு கொள்ளாமல், அச்செயலைத் தொடங்கிய அதே ஆர்வத்துட்ன், இன்னுஞ் சொன்னால் மேலும் மேலும் மிகுந்த முனைப்புடனும் உள்ள உறுதியுடனும் உடல் ஊக்கத்துடனும் செய்து முடிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.இதனை இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கமாகப் பார்ப்போம்.

4. ஒருவந்தம்

ஊக்கம் என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர், "மனம் மெலிதலின்றி, வினை செய்தற்கண் கிளர்ச்சி உடைத்தாதல்" என்று பொருள் தருகிறார். ஒரு செயலிலோ, நோக்கிலோ உள்ளமானது படிந்து அல்லது பற்றி அதைப் பெயராது அதிலேயே இறுதிவரை உறுதி கொண்டிருப்பதால், அதற்கு ஒருவந்தம் என்றும் ஒரு சொல் திருக்குறளில் ஆளப்பெறுகிறது (563, 593)

ஒரு செயல் முயற்சி கொண்டு உழைக்குங்கால், அதில் ஊதியம் வரவில்லையென்றோ, அல்லது முன்னரே இட்ட முதல் இழந்துவிட்டோமே என்றோ, ஊக்கமுடையவர்கள் துன்பப்பட மாட்டார்கள். மேலும் மேலும் முயற்சி செய்வார்கள்.

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்

(593)

இதில் திருவள்ளுவர் ஊக்கம், ஒருவந்தம் எனும் ஏறத்தாழ ஒரே பொருளுடைய இரு சொற்களையும் ஒரே இடத்திலேயே கையாள்வது இன்னும் கவனிக்கத்தக்கது. உறுதியை உறுதியாகக் கைக்கொள்ளுபவர் என்று இதற்குப் பொருள். இதைக் கூற வந்தவர், முதல் உறுதிக்கு 'ஊக்கம்' எனும் சொல்லையும் இரண்டாவது உறுதிக்கு, 'ஒருவந்தம்' எனும் சொல்லையும் அமைத்துப் பேசுகிறார்.

இனி, உடல் படிப்படியாக நலம் பெறுதலைத் தேறுதல் என்று சொல்லுகிறோம். இவன் உடல் தேறிவருகிறது என்பது வழக்கு இனி, எவரோ ஒருவரின் மறைவால், மிகுந்த துயரமுற்ற இன்னொருவர் செயலற்று இருக்கும் நிலையை மனமுடைதல் என்று குறிக்கும் நாம், அவர் மீண்டும் ஊக்கம் பெற்று வருவதை மனம் தேறி வருகிறார். என்றும் கூறுகிறோம். இங்கு உடலும் மனமும் தேறி வருவது அல்லது தேறுதல் பெற்று வருவது, ஊக்கம் பெற்று வருவதையே ஆகும். எனவே ஊக்கத்திற்குத் தேறுதல் என்றும் ஒரு சொல் உண்டு.

அன்பறிவு தேற்றம்.

(513)

இங்குத் தேற்றத்திற்கு, மனம் கலங்காத உறுதி என்று பொருள். செயலுக்குரிய ஒருவனைத் தேறும் பொழுது அஃதாவது,

தேர்ந்தெடுக்கும்பொழுது, அவன் அன்பும், அறிவும், மனம் கலங்காத உறுதியும், பொருளாசை இன்மையும் உடையவனாக இருக்கின்றானா என்று பார்க்க வேண்டும் என்பது குறள்.

இனி, திருக்குறளில் இன்னொரு சிறந்த குறிப்பும் உள்ளது. அதைப்பற்றி நாம் கொஞ்சம் விரிவாகவே தெரிந்து கொள்ள வேண்டும்.

5. அறிவு, உள்ளம், உடல்

மக்களுக்கு உறுதியாக இருக்க வேண்டியவை மூன்று. அறிவு, உள்ளம், உடல். இந்த மூன்று பொருள்களும் உறுதியாக இருந்தால்தான், இந்த உலக வாழ்க்கை மிக நிறைவாகவும், சிறப்பாகவும் நடைபெறும். அறிவுஉறுதி என்பது, ஒரு செயலையோ பொருளையோ பற்றித் தெரிந்திருக்கின்ற அறிவு, அதில் ஈடுபாடு கொண்ட பின் தவறாகவோ நெகிழ்ச்சி அடைந்தோ போகுமானால், அந்த அறிவால் பயனில்லை. அஃது உறுதியற்ற அறிவாகும். நாம் தெரிந்த அறிவுநிலை இறுதிவரை சரியானதாகவே இருந்தால்தான் அஃது உறுதியான அறிவு ஆகும். அதேபோல் நம் உடலும் ஒரு செயலைத் தொடங்கும் பொழுது இருப்பதுபோல், அச்செயல் முடிவடையும்வரை உறுதியோடு இருத்தல் வேண்டும். அதுவே உடலுறுதி. இனி, இரண்டிற்கும் மேலாக உள்ளம் உறுதியுடன் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அறிவுறுதியும் குலையாதிருக்கும். உடலுறுதி குறைந்தாலும் சரி செய்து கொள்ளலாம். உள்ள உறுதியிழந்து போனால், அறிவும், உடலும் உறுதியாக இருந்தும் பயனில்லை. படிப்படியாக அவையும் உறுதி குலைந்து போகும். உள்ளம் உறுதியாக இருப்பின், அறிவும் உடலும் தொடக்கத்தில் உறுதியற்றிருந்தாலும் கூட படிப்படியாக அவை உறுதிபெற்று விடமுடியும். எனவே உறுதி என்னும் உணர்வுக்கே உள்ளந் தான் நிலைக்களன் ஆகும். ஆகையால், உறுதி என்பதற்கு உள்ளம் என்றே பெயர் கொடுத்து விடுவார் திருவள்ளுவர்.

உள்ளம் உடைமை உடைமை (592) - உறுதி,
உள்ளத்து அனையது உயர்வு (595), உறுதி - ஊக்கம்.
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை (600) உறுதி - ஊக்கம்.
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை (97)- உறுதி,
உரன் நசைஇ, உள்ளம் துணையாக (1263) - உறுதி.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ (798) - உறுதி.

ஒருவனுக்குச் செல்வம் என்பது வேறு இல்லை. உள்ளத்தின் உறுதியே செல்வம் ஆகும். மற்றபடி பொருளைச் செல்வம் என்பதெல்லாம் சரியன்று. உள்ள உறுதி இருந்தால் எவ்வளவு பொருளையும் திரட்டிவிட முடியும். உள்ள உறுதியில்லாமல் பொருள் மட்டும் இருந்து பயனென்ன? பொருள் ஒரு சமயத்தில் ஒரேயடியாகப்

போய்விடுமே! அதுபோல், உள்ளத்தில் உறுதி இருந்தால் அஃது எப்பொழுதும் ஒருவரை விட்டுப் போகாது என்பார் திருவள்ளுவப் பேராசான்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

(592)

இனி, இன்னுஞ் சொன்னால் அறிவு என்பது வேறு ஒன்றும் இல்லை. உள்ள உறுதிதான் அறிவு ஆகும். உள்ளத்தில் உறுதியில்லையானால் அந்த அறிவுதான் எதற்கு மேலும் உறுதியில்லாத உள்ளம் உடைய ஒருவனை மாந்தன் என்று கூற முடியாது. மரம் என்றுதான் கூற முடியும். மரத்திற்கு அறிவும், செயல் முயற்சியும் இல்லாதது போலவே இவனுக்கும் அவை இல்லையாகிவிடும் என்பார் திருவள்ளுவர்.

உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்

மரம் மக்கள் ஆதலே வேறு

(600)

உரம் என்பது அறிவு. உள்ள வெறுக்கை என்பது உறுதியின் மிகுந்த - தன்மை.

மேலும் உறுதி, அஃதாவது ஊக்கம் இல்லாத அறிவு செயலுக்குப் பயன்படாது. வெறும் அறிவால் மட்டும் பயனில்லை. இது செயலுக்குப் பயன்பட வேண்டும். எனவே, மேலும் மேலும் அறிவைப் பெறுவதையே ஒருவன் விரும்பிக் கொண்டிராமல், இதுவரை பெற்ற அறிவுக்குரிய செயலைச் செய்து கொண்டே மேலும் அறிவு பெறுவதுதான் வாழ்க்கைக் குரிய பயனைத் தருவது ஆகும்.

6. தன்னை அறிவித்தல்

இனி, ஒருவன் பிறந்து, தன்னை உலகுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வறிவித்தல் நில்ைத்து நிற்றல் வேண்டும். அதற்குத்தான் புகழ் என்று பெயர். புகழை ஒளி என்றும் கூறுவர்.

ஒளிதொழுது ஏத்தும் உலகு.(970)

இப்புகழே கூட ஒருவர்க்கு உள்ள உறுதியால்தான் ஏற்படும் என்பார் திருவள்ளுவர். உள்ளத்தில் உறுதி இருந்தால்தான், அறிவு செயலாக மலர்வதற்கு ஊக்கம் தோன்றும் அறிவு செயலாக மலர்ந்தால்தான். அது பலராலுல் போற்றப்பெறும். அதுதான் புகழாகும். எனவே உள்ளத்தில் உறுதி இல்லையானால் புகழ் ஏற்பட வழியில்லை, உள்ள உறுதியற்றவன் எந்தச் செயலையும் செய்ய இயலாது. புகழும் பெறமுடியாது. எனவே,

ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை(971)

.

7. செயலுறுதி

மன உறுதி உள்ளவன், ஒருபொழுதும் தான் மேற்கொண்ட செயலை, அது தொல்லை கொண்டது, இழப்புத் தருவது, கடினமுடையது. பல இடர்ப்பாடுகளை அடுக்கடுக்காகத் தருவது என்பன போன்ற காரணங்களுக்காகக் கைவிட மாட்டான். செயலுக்கே உள்ள உறுதிதான் அடிப்படை மற்றனவாகிய செயலுக்குரிய பொருள்,துணை, கருவிகள், இடம், காலம் எல்லாம் மனவுறுதிக்குப் பின்னால் வைத்து எண்ணத் தக்கவைதாம். இத்தகைய துணைப் பொருள்கள் இல்லை என்றாலும் மனவுறுதி இருந்தால் அவற்றை ஒவ்வொன்றாகப் படிப்படியாகத் தேடிக்கொள்ள முடியும். ஆனால் மன உறுதியை யாரும் புறத்தே இருந்து தேடிக் கொள்ள முடியாது. அஃது அகத்தேயே பிறவி முதல் இருப்பது உயிருடன் கலந்தே ஒருவன் அதைப் பெறுகிறான். வினைக்குத் தேவையான பிறபொருள்கள் உலகியல் பொருள்கள். ஆனால் மனவுறுதி உயிரியல் கூறு. எனவே தனக்கு இயல்பாகவே வந்து வாய்த்த இயற்கை உணர்வான உள்ள உறுதியை உலகில் முயற்சி செய்தால் கிடைக்கக்கூடிய பிற துணைப் பொருள்களுக்காக இழந்துவிடக் கூடாது என்பார் திருவள்ளுவப் பேராசான்.

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.

(661)

எனவே வினைத்திட்பத்திற்கே, அஃதாவது உறுதியான செயலுக்கே அவனிடமுள்ள மனவுறுதியே காரணமாக அமைகிறது. ஆகையால் மனவுறுதியே (திட்பமே) வினை உறுதி (வினைத்திட்பம்). வினை உறுதியையே எல்லாரும் போற்றுவர். வரவேற்பர்; புகழுவர்; அதற்குத் துணை நிற்பர். வினை உறுதியே இல்லாதவனை எவரும் பாராட்ட மாட்டார்கள். விரும்ப மாட்டார்கள்; வெறுத்து ஒதுக்கி விடுவார்கள். அவனிடம் வேறு உறுதிப்பாடுகள் இருக்கலாம். அஃதாவது பொருள் இருக்கலாம் அறிவு இருக்கலாம். ஆள்துணை இருக்கலாம். கருவி முதலிய உலக உறுதிப் பொருள்கள் இருக்கலாம். ஆனால் உலகம் ஒருவனிடம் எதிர்பார்ப்பன இவையன்று. அவனின் உள்ள உறுதியையே! அவ்வுள்ள உறுதி இல்லாத பொழுது அவனைப் பயனற்றவனாகவே உலகம் கருதும், அவனின் பிற சிறப்பியல்களை அது விரும்புவதில்லை என்பார் திருவள்ளுவர்

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு.

(470)

இந்த வினைத்திட்பம் என்பதே மனத்திட்பம்தானே! எனவே வினைத்திட்பம் செயல் உறுதி, செயல்திறன் எல்லாமும் மனத்திட்பத்தைப் பொறுத்தே அமைந்திருக்கும் என்க.

8. பொருத்தமானதும், பொருத்தமில்லாததும்

இனி, இத்தகைய உள்ள உறுதி, சில செயல்களை மேற்கொள்ளுவதால் மேலும் மேலும் வலிவு பெறும். வேறு சில செயல்களைச் செய்வதால் சிறிது சிறிதாகக் குறைந்து மெலிவு பெறும் என்னும் ஓர் உண்மையையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும். எந்தச் செயல் நம் உள்ளத்தை மேலும் மேலும் வலிவுபெறச் செய்கிறதோ, அந்தச் செயலே நமக்குப் பொருத்தமான செயல் என்று கொள்ள வேண்டும். அந்தச் செயலையே நாம் தொடர்ந்து செய்யவும் வேண்டும்.

இனி, எந்தச் செயலால் நம் உள்ளம் படிப்படியாக உறுதி தளர்ந்து வருகிறதோ, அந்தச் செயலை நாம் உடனே கைவிட்டு விடவேண்டும். அதை நினைக்கவும் கூடாது என்பார் திருவள்ளுவர். இதுபோலும் கூரிய நுட்பங்களை நாம் திருக்குறள் தவிர வேறு எந்த நூலிலும் பார்க்க இயலாது.

இந்த உண்மையைக் கூறும்போது, திருவள்ளுவர் நமக்கு அது விளங்க வேண்டும் என்பதற்காக வேறொரு நமக்கு நன்றாய் விளங்கும் ஒர் உண்மையைப் பொருத்திக் காட்டுவார்.

நாம் நல்ல நிலையில் அஃதாவது இன்பமாகவும், மகிழ்வாகவும் இருக்கின்ற பொழுது சில நண்பர்கள் வந்து, நம்மோடு பொருந்தியிருந்து, நட்புப் பாராட்டித் தாங்கள் உண்மையான நண்பர்கள் போல் நம்மோடு மகிழ்ந்திருப்பர். ஆனால் துன்பம் வரும்பொழுது அவர்கள் நம்மை விட்டு ஏதோ காரணம் கூறிவிட்டு, அந்தத் துன்பத்தில் பங்கு கொள்ள மாட்டாதவர்களாய், விலகி விடுவார்கள். அந்த நிலையில் நம் உள்ளம் அவர்களை நினைந்து மிகவும் வருந்தும் அது நாம் பெற்ற துன்பத்தை விட மேலும் துன்பமாக இருக்கும். அபொழுது நம் உள்ளம் சிறுத்து விடும். ஊக்கம் குறைந்துவிடும். அத்தகைய நண்பர்களை நாம் உடனே விட்டு விலகிவிட வேண்டும். அவர்கள் நட்பை நாம் மேலும் விரும்பக்கடாது. அதுபோலவே நம் உள்ள உறுதியைக் குலைக்கின்ற சிறுக்கச் செய்கின்ற - தாழ்ச்சியடையச் செய்கின்ற - செயல்களை நாம் விரும்பக் கூடாது. அவற்றை முன் தெரியாமல் மேற்கொண்டிருந்தாலும் தெரிந்த பின்னாவது அவற்றைத் தவிர்த்துவிட வேண்டும் என்பார், திருவள்ளுவர்.

உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

இதில் உள்ளம் என்பது ஊக்கம், உறுதி. நம் உள்லத்தின் உறுதியைக் குறைக்கின்ற செயல்களை நினைக்கவும் வேண்டா என்கிறார். இதற்குப் பொருள் எழுதுங்கால் பரிமேல் அழகர், "உள்ளம் சிறுகுவன ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும், பயனில்லனவும் ஆம்" என்பார்.

9. நம்மினும் பொருள் வலியாரோடு ஈடுபடலாகாது.

{{gap}ஒரு செயலை நம்மோடு ஒத்தவராக உள்ளவரின் துணை கொண்டே செய்ய வேண்டும் என்னும் ஒரு நுட்பம் இங்குக் கவனிக்கத் தக்கது. நம்மிடம் ஒர் ஆயிர உருபா முதல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நம்மோடு இணைத்து செயல்பட விரும்பும் ஒருவரிடம் அதைவிடப் பலமடங்கு பொருள் இருந்தால், அவரிடம் நாம் சேர்ந்து ஒரு வினையில் ஈடுபடலாகாது என்கிறார் பேராசான். மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது பலருக்கு இது விளங்காது. அவர்கள் எப்படி நினைப்பார்கள். "நம்மிடம் கொஞ்சம் பொருள்தானே உள்ளது. அவரிடம் உள்ள நிறைய பொருளை ஏன் பயன்படுத்திக் கொண்டு அவ்வினையைச் செய்யலாகாது?’ என்று நினைப்பார்களாம். ஆனால் இறுதியில் என்ன நேருமாம். பொருள் வலிவு படைத்தவர், சிறு பொருள் உடைய நம்மைத் தொடக்கத்தில் நாம் ஈடுபடுத்திய சிறு முதலீட்டைத் தந்து நம்மை விலக்கிவிடுவார்களாம். அப்பொழுது நமக்கு முன்பிருந்த உறுதி குலைந்து உள்ளம் துணுக்குற்றுச் சுருங்கிவிடும் என்கிறார். அதனால் தொடக்கத்திலேயே அவ்வாறு ஊக்கத்தைக் குறைத்து விடுகின்ற செயல்களில் ஈடுபட எண்ணாதே ஆசைப்படாதே என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய நிலைகள் நண்பர்கள் வழியாகத்தான் ஏற்படும். ஆகையால், நட்பாராய்தல் என்னும் அதிகாரத்தில் இந்த உண்மையைச் சொல்லுகிறார். பெரும்பாலும் ஒரு செயலைச் செய்கிற பொழுது. எல்லாரும், தனக்கு நெருக்கமான நண்பர்களைக் கலந்து கொண்டும், இயன்றால் அவர்களில் ஓரிருவரைத் துணைக் கொண்டுந்தாம் செயல் செய்ய முற்படுவர். ஆகையால் நட்பாராய்தல் அதிகாரத்தில் அதைச் சொல்வதே பொருத்தம் என்று கருதி அங்கே அதைச் சொன்னார். என்க.

10. செயலே பெருமையாகாது; பயனே பெருமை

இனி, இன்னொரு நிலையிலும் நம் உள்ளம் சிறுத்துப் போவதுண்டு. அஃதாவது நாம் செய்கின்ற செயலால் பலருக்கும் பயன் ஏற்பட வேண்டும். அல்லது நமக்காவது பயன் ஏற்பட வேண்டும். பிறர்க்கும் பயன்படாமல் நமக்கும் பன்படாமல் செய்கின்ற செயல் எதற்கு? நாம் . ஒரு மதுக்கடை வைத்து வாணிகம் செய்கிறோம். அதனால் யாருக்குப் பயன்? பலருக்கும் தீமை தரும் செயல் அது. அதனால் நமக்கும். பயனில்லை. மது விற்கும் காசு நமக்கு வருகிறதே, அது பயன். இல்லையா என்று கேட்கலாம். காசு வருவதே பயனாகாது. அதன் பயன் நோக்கித்தான் செயலைப் பெருமைக்கு உரியதா இல்லையா என்று பார்க்க வேண்டும். ஒருவன் செய்யும் செயலே பெருமையாகாது. ஒரு புறம் இருக்கும் பெரிய கல்லை இன்னொருபுறம் பரட்டித் தள்ளுகிறோம் என்றால் அச்செயலால் பயன் இருக்க வேண்டும் மற்றபடி கல்

அங்கிருந்தால் என்ன? வேறு இடத்தில் இருந்தால் என்ன? அந்தக் கல், நாம் நடக்கும் வழியை அடைத்துக் கொண்டு கிடந்தால், அதை அப்புறப்படுத்தலாம். அதனால் பயனுண்டு. மற்றபடி அக்கல் எங்குக் கிடந்தால்தான் என்ன? அதுபோல் கள் குடிக்கின்றவனிடம் உள்ள காசுகள் விற்பவனுக்கு வருகிறது. அதனால் என்ன பயன்? இருவருக்கும் அந்தக் காசால் கெடுதலே வருகிறது. கல் இடம் பெயருகிறது.போலக் காசும் இடம் பெயருகிறது. பயன் என்ன? ஒரு செயல் யாருக்காவது பயன் தர வேண்டும். வெறும் செயலே. பயனாகி விடாது. ஒருவன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதில் பெருமையில்லை. அவன் என்ன தொழில் செய்து அதைச் சம்பாதிக்கிறான் என்பதில்தான் பெருமை உள்ளது.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்

கருமமே கட்டளைக் கல்.

(505)

எனவே பெருமையை அளக்கப் பயன்படுவது செயல்தான். செயலை அளக்கப் பயன்படுவது பயன்! பயனுடைய செயலைத்தான் எல்லாரும் பெருமையாகக் கருதுவார்கள். தீமை தருவது பயனாகாது. நன்மை தருவதைத்தான் பயன் என்று கொள்ள வேண்டும். அறிவு ஆக்கத்திற்கும் உலக ஆக்கத்திற்கும், உதவுவதும் அதுதான். அதையே பயன் என்று சொல்வார்கள். அழிவைத் தருவது பயனாகாது.

அழிவது உம் ஆவது உம் ஆகி வழிபயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல்.

(461)

என்பார் திருவள்ளுவர். எனவே பயனுடைய செயல்களைச் செய்வதே தக்கது. அதனாலேயே உள்ளம் ஊக்கம் பெறும் இல்லெனின் உள்ளம் ஊக்கமழிக்கும்.உறுதி குலையும் சிறுகும். இறுதியில் அழிந்தே போகும். உள்ளத்தை அழிக்கின்ற செயலை நாம் செய்து ஊக்கத்தை இழந்துவிடக் கூடாது.

11. ஊக்கம் இல்லாதவர்கள்

ஊக்கம் இல்லாதவரை மக்கள் விரும்பமாட்டார்கள். போற்ற மாட்டார்கள் என்று முதலில் கண்டோம். இனி ஊக்கமில்லாதவர்கள் மக்களே ஆகமாட்டார்கள். விலங்குகளுக்குக் கூட அவர்களை இணைவைத்து பேசமுடியாது. பறவைகளுக்கும் அவர்கள் இணையாக மாட்டார்கள். ஏதாவது ஒன்றோடு பொருத்திச் சொல்ல வேண்டுமே என்றால் அவர்கள் நிலைத்திணையாகிய மரம், செடிகொடிகள் முதலிய ஓரறிவு உயிர்களாக இருப்பவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.என்.பார் பேராசான்.

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை, அஃதில்லார்

மரம்;மக்களாதலே வேறு.

(600)

இவர்களுக்கும் மரத்திற்கும் உள்ள வேறுபாடு ஒன்றே ஒன்றுதானாம். அஃது இவர்களுடைய வடிவந்தான். அஃதாவது மக்களைப் போன்ற வடிவம். மற்ற தன்மைகளெல்லாம் மரத்திற்கு உரிய தன்மைதான் என்று இக்குறளின் இரண்டாம் அடி அவர்களை மேலும் இழிவுப்படுத்துகிறது.

பறவைகள், விலங்குகள் முதலிய அனைத்தும் அவ்வவற்றின் பிறவிகளுக்கும், உயிர்த்தன்மை, உடல் தன்மைகளுக்கும் ஏற்ப ஊக்கமுடையனவாய் இருக்கின்றன; முயற்சியுடன் இயங்குகின்றன. எந்த ஒரு பறவையோ, அல்லது விலங்கோ, பிறிதொரு பறவையோ விலங்கோ ஈட்டிக் கொண்டு வந்து கொடுத்துத் தின்பதில்லை. நாம் கட்டிப் போட்டு வளர்க்கும் ஆடுமாடுகளும் கூண்டில் அடைத்து வளர்க்கும் கிளி, பூவை (மைநாகப்புள் - நாகணவாய்ப்புள், (அஃதாவது மைனா, முதலிய பறவைகளும் கூட, அவற்றைக் கட்டவிழித்தும், கூண்டைத் திறந்தும் வெளியே போக விடுவித்து விட்டால், அவை தத்தமக்குரிய உணவுப் பொருள்களைத் தாமே தேடிக் கொள்ளும் திறமை உடையன அன்றோ? ஈரறிவு உயிரியாகிய எறும்புகூட தனக்கு வேண்டிய உணவைத் தானே தேடிக் கொள்கிறது. ஆனால் உலகில் பல மக்கள், ஊக்கமற்றவர்களாக இருந்து பிறர் உழைப்பால்தானே வாழ்கிறார்கள்.

ஒரு வீட்டில் ஐந்து அல்லது ஆறு பேர்கள் இருந்தால், அவர்களில் ஒருவர் அல்லது இருவர் உழைப்பில்தாமே மற்றவர்கள் உண்ண வேண்டியிருக்கிறது. இப்படி ஆட்டுக்குடும்பத்தில் பார்க்க முடியுமா? நாய்க் குடும்பத்தில் பார்க்க முடியுமா? குருவிக் குடும்பத்தில் பார்க்க முடியுமா? முடியவே முடியாது. அக்குடும்பங்களில் உள்ள உறுப்பினர்கள் அனைவருமே அவரவர்களுக்குரிய உணவுக்காக அவரவர்களுமே ஊக்கமுடன் உழைக்கின்றனர். எனவே உழைப்பில் ஊக்கம் உறுதி. இல்லாதவர்களைப் பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ இணை வைத்துச் சொல்ல முடியாது.

இனி, ஓரறிவுள்ள மரம் போன்றவையும் தத்தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தம்வேர்களாலும், இலைகள் போன்றவற்றாலும் தேடிக் கொள்கின்றனவே என்றால், அஃது அவ்வாறில்லை. அவை அவ்வாறு உண்பதற்கு ஏற்றவாறு அருகில் நீர் இருத்தல் வேண்டும்; அல்லது யாரேனும் நீர் கொணர்ந்து ஊற்றவோ எருப்போடவோ வேண்டும். அல்லாக்கால் அவை பிழைத்திருக்க முடியாது. நீர் இல்லாமல் காய்ந்து விடும். காடுகளிலும் மலைகளிலும் உள்ள மரங்களும் கூட நிலத்தடியில் நீரோட்டம் இல்லையானால் உயிர் வாழ முடியாது. எனவேதான் திருவள்ளுவப் பேராசான் உள்ள ஊக்கத்துடன் ஒடியாடித் தேடி உண்ண முடியாதவர்களை, உழைக்காதவர்களை மரம் என்கிறார்.

ஊக்கமே செல்வம், ஒருவன் பொருள் இல்லாதவனாக இருக்கலாம்.

ஆனால் ஊக்கம் உறுதிப்பாடு இல்லாதவனாக இருக்கக் கூடாது. உள்ள ஊக்கமும் உடல் உழைப்புமே மாந்தத் தன்மைகள். இந்தத் தன்மைகளே மாந்தனுக்கு உயிரியக்கம் ஆகிறது; எனவே அத்தன்மைகள் இல்லாதவனை உயிருள்ளவன் என்று கூற முடியாது; இருப்பவன் என்றும் கூற இயலாது. இல்லாதவனே அவன்.

உடைய ரெனப்படுவது ஊக்கம்; அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

(591)

என்பது திருக்குறள், ஊக்கம் என்னும் உள்ள உறுதியை ஒருவன் பெற்றிராமல், வேறு, நல்ல உடல், நிறைந்த செல்வம் முதலியவற்றைப் பெற்றிருப்பானாயினும், அவன் இல்லாதவனே, இருப்பவன் ஆகான் என்று அழுத்தந் திருத்தமாக இக்குறள் அறைகின்றது.

12. பெருமையும் புகழும் இல்லாத வாழ்க்கை

உள்ள உறுதியே செல்வம், பிற செல்வங்கள் ஒருவனிடம் ஏதோ ஒரு வகையில் வந்து சேர்ந்தாலும், அவை அவன்பால் தொடர்ந்து நில்லாமல், படிப்படியே அவனை விட்டு நீங்கி விடும் (592). ஆனால் உள்ள உறுதி இருந்து அதற்குரிய முயற்சி இருந்துவிட்டால், முன்னொருகால் வந்த செல்வத்தை அவர்கள் இழந்து விட்டாலும், அதற்காக அவர்கள் வருந்த மாட்டார்கள்; மீண்டும் அச்செல்வம் வந்து சேரும்படியான ஊக்கத்தை இழந்து போகாமல் அவர்கள் உறுதியுடையவர்களாகவே இருப்பார்கள் (593).

உள்ளத்தில் உறுதியும் அதனால் முயற்சியும் உள்ளவர்களிடம் , செல்வம்தானாக வந்து சேரும் (594) உள்ள உறுதியில்லாதவர்கள் முயற்சியில்லாதவர்களாகையால், அவர்களிடம் செல்வம் வராது; அதனால் அவர் பிறர்க்கு எதையும் தந்து உதவ இயலாது; அவ்வாறு தருவதால் வரும் பெருமையை, புகழைப் பெற முடியாது (598). பெருமையும் புகழும் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை?

திருக்குறளில் ஊக்கம் உடைமை என்னும் அதிகாரத்தைத் தொடர்ந்து மடி இன்மை சோர்வு - சோம்பல் இல்லாமல் இருத்தல்), ஆள்வினை உடைமை இடைவிடாத உடல் முயற்சியோடு இருத்தல் இடுக்கண் அழியாமை துன்பங்களைக் கண்டு அஞ்சாமல், மேலும் மேலும் உறுதியுடையவராய் இருத்தல்) ஆகிய அதிகாரங்கள் தொடர்ந்து வருகின்றன. இவை அனைத்துத் தன்மைகளும் உள்ள உறுதியை, வேறு வேறு துணை உணர்வுகளைக் கொண்டு வலுப்படுத்தும் கருத்துகளைத் தெரிவிப்பனவாகும். சோம்பலோ, சோர்வோ உள்ளத்தின் உறுதியைக் கெடுத்துவிடும்; எந்தக் காரணத்தாலும் உள்ள உறுதியைத் தளர்வடையச் செய்துவிடக் கூடாது; உறுதியுடன் முயற்சி செய்தால் எதையும் செய்துவிட முடியும். முயற்சிகளுக் கிடையில் எத்தகைய துன்பம் எவ்வளவில் வந்தாலும் அதற்காக உள்ளம் சோர்ந்து விடக்கூடாது;

உறுதி இழந்துவிடக்கூடாது; என்றெல்லாம் அவற்றுள் கருத்துகள் கூறப்பெற்றுள்ளன.

ஆகவே அனைத்து முயற்சிகளுக்கும், செயல்களுக்கும் உள்ள உறுதியே மிகத் தேவையானது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளல் வேண்டும்.

இனி, உள்ள உறுதி, அறிவு உறுதி, உடல் உறுதி இம்மூன்றும் இருந்தால் மட்டும் ஒரு செயல், வினை நடந்துவிட முடியாது. அவற்றுடன் உழைப்பும் வேண்டும். செயலுக்குரிய பொறி, இயந்திரம் ஒன்றை வாங்கி அமைத்துவிட்டோம். பின்னர் அஃது இயங்க வேண்டுமே இயங்கினால்தானே செயல் நடைபெறும். எனவே உடல் இயந்திரம் போன்றது. நோயற்ற நல்ல உடல் பழுதற்ற நல்ல இயந்திரத்திற்குச் சமம் உள்ள உறுதியும் அறிவு உறுதியும் மின் ஆற்றலைப் போன்றன. மின் ஆற்றலுக்கு நேர் மின்னோட்டமும், எதிர் மின்னோட்டமும் தேவை. இவ்வாறு இயந்திரமும் மின்சாரமும் கிடைத்த பின், அவ்வியந்திரமாகிய உடலை உள்ளத்தாலும் அறிவாலும் இயக்க வேண்டியதுதானே! அவ்வியக்கமே செயலாகும். நல்ல உறுதியான உள்ளமிருந்தாலும் போதாது நல்ல அறிவிருந்தாலும் போதாது; நல்ல உடல் இருந்தாலும் போதாது. இவை மூன்றும் நன்றாக ஒன்றுபட்டு இயங்கி, அஃதாவது நன்றாக உழைத்து, நல்ல செயல்களை விளைவிக்க வேண்டும். எனவே, இனி, உழைப்பைப் பற்றிச் சிறிது விளக்கமாகப் பேசுவோம்.