உள்ளடக்கத்துக்குச் செல்

செயலும் செயல்திறனும்/ஒருவினை செய்பவர் துணை வருவாய் கருதி வேறு வினைகளில் ஈடுபட விரும்புதல்

விக்கிமூலம் இலிருந்து

22. ஒருவினை செய்பவர் துணை வருவாய் கருதி வேறு வினைகளில் ஈடுபட விரும்புதல்

1. தேவைகள் ஆசைகள்

உயிர்களுக்குத் தேவை என்பது ஓர் இயற்கை நிலை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உடல் தேவை என்னும் ஒர் இயற்கை நிலையை மட்டுமே தம் முழு வாழ்வாக அமைத்துக் கொண்டுள்ளன. உள்ளத் தேவையும் அறிவுத் தேவையும் சிறவாமல், உடல் தேவை மட்டுமே சிறப்பாய் அமைந்த ஐயறிவு உயிர்க் கூறுகளுக்கு அத்தேவையுணர்வின் நிறைவே அவற்றின் வாழ்வெல்லையாகும். உடலின் தேவைகள் உணர்வும், ஊறுணர்வும். எனவே, உணவுத் தேவையும் ஊறுணர்வு ஆகிய உயிர்ப்பெருக்க உணர்வுத் தேவையுமே பறவையினங்களின் விலங்கினங்களின் வாழ்வாக அமைந்து கிடக்கின்றன. உள்ள உணர்வுத் தேவையும் அறிவுணர்வுத் தேவையும் அறவே அவற்றுக்கில்லை. அஃதாவது உணவுத் தேரைக்காகவும் ஊறுணர்வுத் தேவைக்காகவும் அவற்றின் உடல்கள் இயங்குகின்றன. எனவே இரை தேடுவதும் உடல் இணைவுத் துணை தேடுவதுமே அவற்றிற்குப் போதுமான வாழ்வியல் உணர்வுகளாம். அவ்வுணர்வுகளின் தேவையை நிறைவு செய்வதே அவற்றுக்கான வாழ்க்கை முயற்சியர்கும்; அவற்றின் செயல் வெற்றியுமாகும்.

ஆனால், ஆறறிவு படைத்த மாந்தர்களுக்கு உடல் தேவையுடன் இன்னுஞ்சொன்னால் அதனை அடிப்படையாகக் கொண்டு உள்ள உணர்வும் அறிவுணர்வும் அவர்களின் கூடுதல் தேவைகளாக ஆகி, அவர்தம் வாழக்கையை மேலும் சிறப்புடையதாக ஆக்குகின்றன. உள்ளத்தின் தேவை ஆசையைப் பற்றி வளர்கிறது. அறிவுத்தேவை ஒரு நோக்கத்தை குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு தொடர்கிறது.

உள்ளத்தின் தேவை ஆசையாக முகிழ்த்து, அன்பாக மலர்ந்து, அருளாக மணந்து, ஈகமாக அஃதாவது தன்னை இழந்து கொண்டு கனிவும் நிறைவும் பெறுகிறது.

அறிவின் தேவை யாதாம் ஒரு குறிக்கோளாய்த் தோன்றி உழைப்பாய் உரம்பெற்று, உலகநலமாக மலர்ந்து தொண்டாக மணந்து, வீரமாக விளைந்து, செயற்கரிய செய்து புகழ்க் கனிவு பெறுகிறது.

இவ்விரண்டு உணர்வுக் கூறுகளும் விளக்கமும் வளர்ச்சியும் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் அறவே இல்லை. மாந்த இனம் பெற்ற பேறுகள் இவை. இயற்கைப் பேராற்றலால் மாந்தச் சிறப்புயிர்களுக்கு வழங்கப்பெற்ற கொடைகள் இவை.

2. உள்ளத் தேவையும் அறிவுத் தேவையும்

உள்ளத்தின் தேவை, நீர்போல், வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஒடும் தன்மையது. இயங்கும் வல்லமையுடையது.

அறிவின் தேவை, நெருப்பு போல், பற்றிப் படரக் கூடியது. பொருள்களை உட்கவர்ந்து தன்னைக் கரைத்துக் கொள்ளும் தன்மையுது. அடங்கும் ஆழ்மை உடையது.

உள்ளத்தின் தேவையாகிய ஆசை துய்ப்பின் மேல் செலுத்தச் செலுத்த மிகுந்த வேகத்தில் எம்பிப் பாயும் ஆற்றலுடையது. அதுவே உடல் தோற்றத்திற்கும் அதன் இயக்கத்திற்கும் அடிப்படை

அறிவின் தேவையாகிய பொருளறிவுணர்வு, நுகர்வின் மேல் செலுத்தச் செலுத்த ஊன்றி ஒன்றும் தகைமையுடையது. அதுவே உயிர் மலர்ச்சிக்கும் பிறவி முடிவுக்கும் அடிப்படை.

உள்ள உணர்வே ஆற்றலாகிறது (Energy).

அறிவுணர்வே பொருளாகிறது (Matter)

உள்ளம் அறிவைத் துணைதேடும்

அறிவு உள்ளத்தின் துணைநாடும்.

உள்ளம் (ஆற்றல் Energy) அறிவிலும் (பொருள் Matter) ஊன்றும் தன்மையது; அதேபோல் அறிவு (பொருள்) உள்ளத்தொடும் (ஆற்றலோடும்) இணையும் தன்மை உடையது. ஒன்றுக்கொன்று கவர்ச்சி உண்டு ஏனெனில் உள்ளம் பெண் தன்மையது. அறிவு ஆண்தன்மையுது

அத்துடன், ஒன்றின் வலி மிகுந்தால் அஃது இன்னொன்றைத் தன்வயப்படுத்தும். எனவே உள்ளம் (ஆற்றல் Energy), அறிவாகவும் (பொருள் Matter)அறிவு (பொருள்) உள்ளமாகவும் (ஆற்றலாகவும்) மாறும்.

உள்ளம் அறிவில் ஊன்றி வலுப்பெறும்பொழுது உள்ளத்தின் அலைவால் (அஃதாவது ஆசையால் பொருள் இயங்குகிறது; செயல் தொடங்குகிறது. அதனால் உலகமும் நடைபெறுகிறது.

அறிவு உள்ளத்தோடு (ஆற்றலொடு Energy) இணைந்து வலுப்பெறும் பொழுது அறிவின் அழுத்தத்தால் உள்ளம் அமைவுறுகிறது; செயல் நிலை பெறுகிறது; உலகம் ஒடுங்குகிறது.

3. செயல் செய்யச் செய்ய ஆசை தோன்றும்

எனவே, செயல் செய்யச் செய்ய ஆசை பற்று தோன்றிக் கொண்டே இருக்கும். ஆசை (பற்று) தோன்றத் தோன்றச் செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வுண்மைகளைக் கீழ்வரும் ஒண்தீங் குறள்களால் நன்கு புலப்படுத்துவர் மெய்ப்பொருளாசிரியராகிய திருவள்ளுவர்,

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞசான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து. (361)

சென்றவிடத்தான் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. (422)

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். (367)

அவாஇல்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். (368)

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (005)

இவ்வுண்மைகளை ஒரு தேவையளவில் மட்டும் இங்குக் கூறவேண்டியுள்ளதால் இம்மட்டோடு நிறுத்திக் கொள்ளுவோம்.

இவற்றின் கொள்பொருளாக நாம் அறிய வேண்டுவது என்னவெனில், செயல் செய்யச் செய்ய ஆசை அடங்காமல் மேலும் அதன் பயனாகிய விளைவு நலன்களிலேயே மனம் ஈடுபட்டு நிற்கும் என்பதுதான்.

4. பல்வகைத் திறன்கள்

எனவே, ஒரு வினையில் ஈடுபட்டார், அதிலுள்ள வருவாயையும் பிறநலன்களையும் பெறப்பெற, இன்னும் ஆசையாலும் திறமையாலும் உந்தப்பெற்று, மேலும் மேலும் தாம் மேற்கொண்ட வினையிலேயே ஆழமாகவும் அகலமாகவும் ஈடுபட விரும்புவதுடன், தமக்கு அக்கம் பக்கத்திலுள்ளாரைக் கண்டு, அவர்கள் ஈடுபடும் நல்ல வருவாயும் நலன்களும் உள்ள பிற வினைகளிலும் கால் வைக்க விரும்புவது பெரிதும்

இயற்கை உணர்வாக உள்ளது. அவ்வாறு விரும்புவது பிழையன்று என்பதுடன், தம் திறமையும் ஆர்வமும் அவ்வாறு ஈடுபட இடங்கொடுப்பின், அது சிறப்பாகவும் கருதப்பெறும்.

பெரும்பாலும் அறிவுடையவர்கள், தம் ஆற்றலுக்கும், ஆர்வத்திற்கும், இயல்கின்ற தன்மைக்கு ஏற்ப, ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் சிறந்து விளங்குவது இயலுவதாகவே உள்ளது. தொழில் திறமும் கலைத்திறமும் பல்வேறு வகைப்பட்டனவாக இருப்பினும், பெரும்பாலான தொழில்களும் கலைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவே. எனவே, ஒன்றில் ஈடுபட்டால் அதற்கு இணையான அல்லது தொடர்பான தொழிலிலோ கலையிலோ ஈடுபடுவது பிழையாகாது; சிறப்பே ஆகும். ஒன்றில் இருக்கும் பொதுவான அறிவுத் திறனைச் சிறப்பான அறிவுத் திறனாக வளர்த்துக் கொள்வதென்பது அத்துணைக் கடினமானதன்று. சிறிது முயற்சியிலேயே பெரிதும் பயன் தருவது ஆகும். எடுத்துக்காட்டாக நூற்பும் (Spinning) , நெய்வும் (Weaving) அவை தொடர்பான அனைத்துத் தொழில்களும் சாயத்தோய்ப்பு (Dyeing), உருஅச்சடிப்பு (Disign Printing) முதலியவை இணைவானவையும் இணக்கமானவையுமான தொழில்களே. அதேபோல், ஓவியமும், சிற்பமும் இணைவுக் கலைகளே. ஒளிப்படப்பிடிப்பும் (Photography), படக்கட்டை (Block Making) செய்வதும் இணைவானவையே. இவைபோல் உள்ள தொழில்களும் கலைகளும், கலைத் தொழில்களும் அறிவியல் தொழில்களும் நிறைய உள.

5. துணைத் தொழிலானால் இணைத் தொழில்

இவ்வடிப்படை உண்மைகளை உணர்கின்ற அளவில் நாம் தெரிந்து கொள்ள வேண்டுவது என்னெனில், ஒருவர் ஒரு துறையில் திறமையுற்று, அது தொடர்பான செயலில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியுடன் நல்ல வருவாயை உடையவராக இருந்து, அவர் மேலும் வருவாயை ஈட்ட விரும்பி, வேறு ஏதாகிலும் துணைத் தொழிலில் ஈடுபடக் கருதினால், அவர் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கு அல்லது செயலுக்குத் தொடர்புடைய அல்லது இணைவுடைய தொழிலில் அல்லது செயலிலேயே ஈடுபடுவது நல்லது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.

தனிநிலையில் ஈடுபட விரும்புவார்க்கும் இந்த முறைதான், பொது நிலையில் ஈடுபட விரும்புவார்க்கும் இந்த முறைதான் உகந்தது என்று நாம் அறிதல் வேண்டும். பொது நிலையில் அஃதாவது பொதுத் தொண்டில் ஈடுபட விரும்புவார் ஒருவர் தம் துணை வருவாயைப்

பெருக்கிக் கொள்ளக் கருதும் பொழுது, அப்பொதுத் தொண்டுக்குத் தொடர்பில்லாத ஒரு வினையில் அல்லது செயலில் ஈடுபாடு கொண்டால், அப்பொதுத் தொண்டும் கெடும்; அவருடைய தொழிலும் கெடும். இரண்டையும் கெடுத்துக் கொள்வது செயல் திறமாகாது என்பதை நாம் தெளிதல் வேண்டும் எடுத்துக்காட்டாக, இலக்கியத் திறமுடைய ஒருவர் தம் இலக்கியப் படைப்புப் பணியுடன் ஒரு துணைவினை செய்ய விரும்பும்பொழுது, வேறு வாணிகத்தில் ஈடுபடுவது, அவ்விலக்கியப் பணிக்கும், அவர் தொடங்கவிருக்கும் வாணிகத்திற்கும் ஒரேபொழுதில் கேடு செய்து கொள்வதாகும். அவர் வாணிகம் செய்து பொருளிட்ட விரும்பினால், அவரின் இலக்கியப் பணிக்குத் தொடர்புடைய பொத்தக அச்சீட்டகமோ, வெளியீட்டகமோ விற்பனையகமோ தாம் அவருக்குத் துணைத் தொழில்களாக அமைய முடியும். அவ்வாறாக சிலர், அவர்களுக்குத் தொடர்பற்ற தொழில்களில் ஈடுபடுவது, அவர் முன்னேற்றத்தைக் கெடுத்துவிடக் கூடியதாகிவிடும்.

வினையால் வினையாக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று (678)

என்னும் திருக்குறளின் கருத்தை நாம் ஒர்தல் வேண்டும். செய்கின்ற வினையாலேயே அதுபோலும் பிறிதொரு வினையை முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அது மதங்கொண்ட யானையால் அன்ன பிறிதோர் யானையைப் பிணித்ததோடு ஒக்கும். என்பது திருவள்ளுவப் பெருந்தகை கூறும் ஒரு வினையளவு ஆகும் என்க. இத்திருக்குறளுக்குச் சிறப்பு விளக்கமாகப் பரிமேலழகர், தொடங்கிய வினையானே பிறிதும் ஒரு வினையை முடித்தற்கு உபாயம் (உளவு ஆமாறு எண்ணிச் செய்க செய்யவே, அம்முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம் என்றார்.

6. இரண்டு படகுகளில் கால் வைத்தல்

இனி, அவ்வாறு செய்ய முற்படுங்கால், நாம் கவனிக்க வேண்டிய கூறுகள் பல. அவற்றுள், ஒன்று, நாம் முன் தொடங்கிய வினையிலேயே முழுதும் ஈடுபட்டுள்ளோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டியது. ஒரு வினையில் ஒருவர் முழு நிலையில் ஈடுபாடு காட்டாமலேயே இன்னொரு வினைக்குத் தாவக்கூடாது. முதலில் தொடங்கிய வினையில் முழு அளவும் முழு முயற்சியும் காட்டுவதே, அதை முழுமையாகச் செய்வதாகும். அதை விட்டுவிட்டு, இடையிலேயே இன்னொரு வினையைச் செய்யத் தொடங்குவது இரண்டு வினைகளையும் கெடுத்து விடுவதாகும். இரண்டு படகுகளில் கால் வைப்பதாகும்.

இனி, அடுத்து, நாம கவனிக்க வேண்டுவது, நாம் முதலில் தொடங்கிய வினை முழுவதுமாகச் செய்யப்பெற்று வந்தாலும், நாம் புதிதாகத் தொடங்கவிருக்கும் வினை முன்னதற்குத் தொடர்புடையதா என்று கருதியும் ஆராய்ந்தும் பார்ப்பது, அவ்வாறு பார்த்துத் தெளிந்த பின்னர், நாம் துணையாகத் தொடங்கவிருக்கும் புதிய செயலுக்குப் போதுமான வலிவும், சூழலும், காலமும், முதல் செயலை ஊறுபடுத்திக் கொள்ளாத அளவில் அமைந்துள்ளனவா என்று கவனிக்க வேண்டுவது. அஃதாவது, நம் முதற்பணிக்கு ஈடுபடுத்திய பொருள் போக, புதிதாகத் தொடங்கவிருக்கும் துணைப் பணிக்கு அல்லது வினைக்குப் போதுமான பொருளியல் வலிவும் ஆள்துணையும் நமக்கு இருக்கின்றனவா என்று கருதிப்பார்ப்பது. அவ்வாறில்லாமல், முதல் செயலில் உள்ள பொருளியலைப் பகிர்ந்தளிக்க வேண்டி வரும் என்றால், அந்நிலைப்பால், முதல் செயலும் இரண்டாவது செயலும் கெடுவதற்கு வாய்ப்பு உண்டன்றோ? இதுவே வலி கருதுவதாகும்.

இனி, முதலில் தொடங்கிய செயல் அல்லது தொழில் ஓர் இடத்தில் இருந்து கண்காணிக்கப் பெறவும், பின்னர் தொடங்க விருக்கும் தொழில் பிறிதோர் இடத்திலிருந்து மேலாண்மை செய்யப் பெறவும் இருப்பது, நம் முழு ஈடுபாட்டுக்குத் தடையாக அமைந்து விடுவதாகும். இது போன்ற நிலைகளைக் கருதிப் பார்ப்பதே சூழல் கருதுவதாகும்.

இனி, மூன்றாவதாகக் காலம் கருதுவதென்பது, நாம் முன் தொடங்கிய செயல் அல்லது வினை பகலில் செய்வதாக இருக்கையில், இரண்டாவதாகத் தொடங்கும் துணைவினை, இரவில் செய்யப் பெறுவதாக இருக்குமானால், அதுவும் நம் இயக்கத்துக்குத் தடையாக இருக்கும் என்று கருதுவதும் அதுபோல் பிறவும் ஆகும் என்க.

7. அமைந்து ஆங்கு ஒழுகுதல்

மேற்கூறிய இரண்டாம் நிலையிலும் மூன்றாம் நிலையிலும் நாம் ஈடுபாடு கொள்ளும்பொழுது, நம் ஆர்வம் ஈடுபாடு, உடல் நலம் முதலியவையெல்லாம் தொடக்கத்தில் நன்றாகவே இருந்தாலும், போகப்போகப் படிப்படியாக ஒவ்வொன்றாகக் குறைவுப்பட்டு, இறுதியில் அனைத்தும் ஒரு நிலையில் வலுவற்றதாகப் போய்விடலாம் அன்றோ! அக்கால் உள்ளதும் கெட்டதடா நொள்ளைக்கண்ணா? என்றாகிவிடும் எனவேதான்,

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். (474)

என்பார் திருவள்ளுவப் பேராசான். இக்குறள்மணி, பொருட்பாலில் அரசியலில், வலியறிதல் அதிகார்த்துள் சொல்லப் பெற்றதால்,

அரசர்க்குச் சிறப்பானதாகவும், பிறர்க்குப் பொதுவானதாகவும் பொருள் கொள்ளத் தக்கதென்று எண்ணுதல் வேண்டும் அமைந்தாங்கு ஒழுகான் என்பது, ஏற்கனவே அமைந்த அல்லது அமைத்துக் கொண்ட ஒரு செயலிலேயே முழுமையாகத் திறம்பட ஒழுகாமல் இருப்பவன் என்று பொருள் தருவது. இவ்விடத்தில் ஒழுகுதல் என்பது ஈடுபடுதலைக் குறிக்கும். அளவறியான் என்பது, தன் திறமறியாமல் பிற பிறவற்றையெல்லாம் எண்ணி, ஏங்கி அவற்றுள் ஈடுபாடு கொள்ள விரும்புபவனின் மிகுதுடிப்பினால், அகலக் கால் வைக்கும் அறியாமை. தன்னை வியந்தான். என்பது, தன்னை அளவுக்கு மேல் திறமையும் ஆற்றலும் நிறந்தவனாகக் கருதிக் கொள்ளுதலும், அவற்றால் பெறவிருக்கும் வருவாயைக் கருதி மகிழ்தலும் வியத்தலும் ஆகும். விரைந்து கெடும் என்பது, அவ்வாறானவன் படிப்படியாக ஆனால் உறுதியாகவும் விரைவாகவும் தாழ்ந்துபோவான் என்பது.

உலகில் இரண்டு, மூன்று வினைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறமுடையவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இனி, ஒரே பொழுதில் எட்டும், பத்தும் பத்துக்கும் மேற்பட்டவுமான செயல்களிலும் கருத்துச் செலுத்தும் வல்லமையுள்ள எண் கவனகர் (அட்டவதானி)களும், பதின் கவனகர் (தசாவதானி)களும், பற்பதின் கவனகர் (சதாவதானி)களும் கூட இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் கவன (அவதானிப்பு) அடிப்படையில் சிறப்புறுவோர்களே தவிர, செயல்கள் அடிப்படையில் அல்லர். செயல்களைக் கவனிப்பது வேறு செயல்களைச் செய்வது வேறு; இனி, செயல்களைத் திறம்பட நுட்பமாகவும், செப்பமாகவும், திட்பமாகவும் செய்வதோ அவற்றினும் வேறு என்று கருதுதல் வேண்டும். மேலும், அக்கவனகர்கள் கூட ஓர் எல்லைப்பட்ட நேரத்தில், தங்களுக்குப் பயிற்சியுள்ள செயல்களில் மட்டுமேதான் கவனம் செலுத்தமுடியும். எந்நேரத்தும் எல்லாவகைச் செயல்களிலும் எவரும் தங்கள் கவனத்தைச் செய்து விடுதல் அரிதினும் அரிதாகும். ஆளுமைக்குரிய செயல்கள் பற்பல. அவற்றின் ஏற்றத்தாழ்வுகள் அறிந்து, அவை காலத்தொடும் இடத்தொடும் சூழலொடும் பொருந்துமாறு வெற்றியுடன் ஒரு செயலைச் செய்து முடிப்பதற்குத் தனித்திறம் வேண்டும். அஃது பயிற்சியால் மட்டும் வருவது அன்று. இயற்கையாகவும் அமைவது என்க.

8. எதையும் ஆசையால் செய்யலாகாது

எனவே, ஒரே சமயத்தில் ஒரு செயலில் மட்டுமல்லாமல் இரண்டு மூன்று செயல்களிலும் ஈடுபடும் திறமுடையவர்கள் பொருள் வருவாய் கருதிப் பல வினைகளில் நாட்டங்கொள்வது இயலுவதே. இதைத் திறமையாலும் அறிவாற்றலாலுமே செய்ய வேண்டும். அவையாலன்றி ஆசையால் செய்யலாகாது. புதிய புதிய செயல்கலில் ஈடுபட்டுப் பொருள் திரட்டும் நோக்கம் கொண்டார் சிலர், ஒரே சமயத்தில் இரண்டு

படகுகளில் கால் வைத்துப் பெரிதும் துன்பப்படுவர். சில நேரம் பிறிதொரு தொழிலில் ஈடுபட்டு, முதலில் செய்து கொண்டிருந்த செயலிலும் திறம் குன்றி, வருவாய் இழந்து, துன்பப்படுவர். அவர்கள் அரசனை நம்பிக் கணவனைக் கைவிட்ட பெண்ணைப் போல, இல்லதை நாடி உள்ளதையும் இழந்து இடர்ப்பட வேண்டும்.

ஒரு செயலைச் செய்து இதனால் கிடைக்கும் சிறு வருவாயையும், அடுத்துச் செய்ய விரும்பும் பிறிதொரு வினையால் இழந்து போகின்றவர்கள் இவ்வுலகில் பலர்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை,

போகாறு அகலாக் கடை.

(478)

என்னும் பொய்யாமொழியில், போகாறு என்று குறிப்பது செலவை மட்டுமன்றிச் செயலிடுபாட்டின் அகலத்தையும் குறிக்கும் என்றும் கருதுதல் வேண்டும். ஆகவே,

{{block_center|

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.

(463)

என்பார் திருவள்ளுவப் பேராசான். இதற்குச் சிறப்புப் பொருள் எழுதுகையில், பரிமேலழகர், "வலியும் காலமும் இடனும் அறியாது, பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல” என்பார். இங்குப் பிறர் மண் என்றது அரசர்க்குப் பொருந்துவது போல், பிற செயல் என்பது வினை செய்வார்க்கும் பொருந்தும் என்க.

9. அளவறிந்து வாழ்தல்

மேலும் தம் கை முதலீட்டையும், தம் வலிவையும் அறியாது, ஆசைப்படுகின்ற வினையிலெல்லாம் மேல் வருவாய் கருதி ஈடுபடும் ஒருவர், தொடக்கத்தில் அவ்வாறு ஓரளவு பெற்றாலும், போகப்போக, ஆய்ந்து பார்க்கையில் உள்ளதுபோலத் தோன்றியது இல்லை ஆகிவிடும் என்பார் பேராசிரியப் பெருமான்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் (479)

என்பது அவர் எச்சரிக்கை.

எனவே, இவ்வனைத்து வகையானும் எண்ணிப் பார்த்தே நம் ஆற்றலையும், பொருள் முதலையும், துணை வலிமையையுமே அளவாக எண்ணிப் பிறிதொரு வினையில் ஈடுபடலாமேயன்றி, ஆசையை அளவாகக் கொண்டு, ஒரு வினை செய்வார், பொருள் வருவாய் கருதி வேறொரு வினையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது கூடாது என்க.

இனி, செயல்பாடு கொள்வார், தமக்குத் துணையாளர்களையும், பணியாளர்களையும் எவ்வாறு தேர்தல் வேண்டும் என்பது பற்றிச் சில கூறி, இத்தொடரை முடிப்போம்.