செயலும் செயல்திறனும்/துணையாளரையும், பணியாளரையும் அமர்த்துதல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

23. துணையாளரையும், பணியாளரையும் அமர்த்துதல்
1. எல்லாவற்றையும் நாமே செய்ய முடியாது

நாம் தனியாக ஒரு சில செயல்களைச் செய்யலாமேனும் எல்லாவகைச் செயல்களையும் எப்பொழுதும் நாமே செய்துவிடமுடியாது. பெரும்பாலான செயல்களைப் பிறர் உதவியுடன்தான் செய்யமுடியும். தொடக்கத்திலோ, இடையிலோ இறுதியிலோ வேறு ஒருவரின் உதவி தேவைப்படாத எந்தச் செயலும் உலகில் இல்லை. குறைந்த அளவு இருவராகிலும் ஒரு செயலில் ஈடுபட்டே ஆதல் வேண்டும்.

அன்பிற்கிருவர், அறிவிற்கிருவர், கல்விக்கிருவர், கலைக்கிருவர், நட்புக்கிருவர், வாழ்க்கைக்கிருவர், செயலுக்கிருவர் என்று குறைந்தது இருவர் இருவராகச் சேர்ந்து இயங்கும் உணர்வுகளும், அறிவுக் கூறுகளும், செயல் கூறுகளுமே உலகில் உள்ளன. ஒரே ஒருவர் தனித்து இயங்கும் செயல் எங்கும் இல்லை. நாம் உயிராகப் பிறப்பெடுப்பதற்கே இருவர் செயல் தேவைப்படுகிறது. உண்ணுவதைக் கூட இன்னொருவர் உதவியின்றிச் செய்துகொள்ள இயலாது என்பதை எண்ணிப் பார்க்கவும்.

எனவே, நாம் ஒரு செயலில் ஈடுபடுவதற்கு இன்னொருவர் உதவி எந்த வகையிலும், எந்த நிலையிலும் கட்டாயம் தேவை என்பதைச் செயலின் முற்படுவார் எவரும் முன்னதாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். பணிக்குத் துணையாக இருப்பவர் பணித்துணையாளர் என்றும், பணியை நம்முடனோ, அல்லது நமக்காகவோ செய்பவர் பணியாளர் என்றும் கூறப்பெறுவர்.

2. பணித்துணையாளர்

பணித் துணையாளர், நம் குடும்ப உறுப்பினராகவோ, நம் நண்பராகவோ, அல்லது சம்பளம் வாங்கிக்கொண்டு செய்யும் ஒருவராகவோ, அல்லது நம் முதலீட்டுப் பங்கினராகவோ இருக்கலாம். ஆனால், கட்டாயம் அப்படிப்பட்ட ஒருவரின் உதவி நமக்குத் தேவை. நாமே செயலின் அனைத்துக் கூறுகளையும் கவனிப்பது மிகக் கடினம்.

துணையே தேவையில்லாத சிறுசிறு செயல்பாடுகளும் இருப்பினும், அவற்றில் ஈடுபடுபவருக்கே கூட முழுப்பயன் விளைந்துவிடாது.

இனி, செயல் துணையாளர் தவிர, செயலுக்குப் பணியாளர்கள், சம்பளம் பெறுபவராகவோ, அல்லது குத்தகைக்கு உழைப்பவராகவோ, ஊதியத்தில் கழிவு பெறுபவராகவோ இருத்தல் வேண்டும்.

இவ்விரு வகையினரிலும் செயல் துணையாளர்கள் பணித்துணையாளர் ஆகியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் நாம் மிகவும் கவனம் செலுத்துதல் வேண்டும். நம் குடும்ப உறுப்பினர்களாக அஃதாவது நம் உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நம் பிள்ளைகளாக இருப்பினும் நாம் செய்யப்போகும் வினைகளில் நம் போலவே அவர்களும் ஈடுபட்டு விடுவார்கள் என்று எண்ணிவிட முடியாது. நம் உணர்வு நோக்கம் அல்லது கொள்கை, ஆசை, பாசம், பேணுதல் உணர்வு, கடமையுணர்வு, பொறுப்புணர்வு முதலியவை வேறாக இருக்கலாம். அவர்களுடையவை வேறாக இருக்கலாம். இவை ஒன்றியிருப்பது கடினம். ஒரே அரத்தத் தொடர்புள்ளவர்களும் பெரும்பாலும் இவ்வகையில் வேறு வேறு தன்மையுடையவர்களாகவே இருப்பர். அவ்வாறில்லாமல் இவற்றுள் ஒரே தன்மையுடையவர்களைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினம். அவ்வாறு ஓரிருவர் தேர்ந்தாலும் அவர்கள் நம்முடன் ஒத்துப் போவார்கள். என்பதைச் சொல்லமுடியாது. ஏனெனில், அறிவுணர்வும், கொள்கை உணர்வும் உள்ள இருவர் பெரும்பாலும் மாறுபட்டே இயங்குவார்கள்.

3. பணியாளர் திறன்கள்

பொதுவாக, முழுச் செயல் அல்லது வினைத்திறம் கொண்டவர்கள் கீழ்க்காணும் உணர்வுகளில் மிக்கக் கூர்மை உடையவர்களாக இருப்பர்.

1. அறிவுண்ர்வு, 2. செயலறிவு, 3. செயல் திறம், 4. கடமை உணர்வு, 5. பொறுப்புணர்வு, 6. கண்காணிப்புணர்வு, 7. சிக்கன உணர்வு, 8. பேச்சுத் திறன், 9. தருக்கத் திறன், 10. சிறந்த தேர்வுணர்வு, 11. தூய்மை உணர்வு, 12. சுறுசுறுப்பு, 13. பசி பொறுத்தல், 14. தூக்கம் பொறுத்தல், 15. ஊக்கமுடைமை, 16 உழைப்புத் திறன், 7, பிறர் செய்யும் இடர்களுக்கு அஞ்சாமை, 18 பிறர் கூறும் பழிகளைப் பொருட்படுத்தாமை, 19 உடனுக்குடன் முடிவெடுக்கும் நுட்ப அறிவு, 20. தற்சார்புடைமை, 21. பிறர் கையை எதிர்பாராமை, 22. பேராசையின்மை, 23. மானவுணர்வு, 24. பெருமித உணர்வு, 25. பரபரப்பில்லாத அமைவான நடைமுஹை. 26. ஆடம்பரம் விரும்பாமை, 27 குடும்பவுணர்வு 28. உண்மையான நட்பு உணர்வு, 29. மெய்யான அன்புடைமை, 30. முன்கோபம் 31. யாருக்கும் கட்டுப்படாமை, 32. எளிதாக நம்பும் திறனும், எளிதாக நம்பாமையும்,

33. மன்னிக்கும் உணர்வு, 34. கஞ்சத் தனமின்மை, 35. கலையார்வம், 36. கணக்குத் திறம், 37 அழகுணர்வு, 38. எளிதில் இணங்கி வராத தன்மை, 39. சுவையுணர்வு, 40 எதிலும் அதிகப் பற்று வையாமை, 41. நினைவாற்றல் ஆகிய நாற்பத்தொரு திறன்களும் மிகக் கூர்மையாக அவர்களுக்கு இருக்கும். இவை ஏனோதானோ என்று வரையறுக்கப்பெற்ற உணர்வு நிலைகள் அல்ல. மனவியல், அறிவியல், தொழிலியல், இயல்பியல் முதலியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்பெற்றவை என்க.

இவற்றுள் எத்தனை உணர்வு நிலைகள் குறைவாகவோ மிகுதியாகவோ உள்ளனவோ, அத்தனை அளவில் அவர்கள் செயல் திறன் மாறுபட்டதாக இருக்கும். எனவே, இவற்றுள் பெரும்பான்மையும் பொருத்தமாக உள்ள ஒருவரே இருவரே வினைத் துணைவர்களாக முடியும். இவற்றுள் பெரும் பான்மையும் மாறுபட்ட உணர்வுடையவர்கள் கட்டாயம் தாம் ஈடுபடும் வினை உணர்வுகளில் ஒன்றியிருக்க இயலாது. அவர்கள் அரிமாவும் - வரிமாவும் போலவோ, மானும் ஆனும் போலவோ, குதிரையும் - கழுதையும் போலவோ, ஆடும் மாடும் போலவோ ஒன்றுபடாத தன்மை உடையவர்களாகவே இருப்பர்.

இவ்வுண்மையைச் சில எடுத்துக்காட்டு உணர்வுகளைப் பருப்பொருளாக மாற்றிக் காட்டி விளக்குவது எளிதாக இருக்கும் என்று கருதுகிறோம்.

4. திறனற்ற, திறனுள்ள இருவர் நிலை

மேலே கூறப்பெற்ற உணர்வுகளுள் அறிவுணர்வு வாய்க்கப் பெற்றவர்கள் எப்பொழுதும் எதையாவது அறிந்து கொள்வதில் துடிப்பாகவும், ஆர்வமுடையவர்களாகவும் இருப்பார்கள், அவ்வுணர்வு குறைந்தவர்கள் அவ்வாறி ல்லாமல், மந்தவுணர்வு உடையவர்களாக இருப்பர். இவ்விரு திறத்தாரும் ஒரு செயலில் துணைவர்களாக அமைந்து விடுவதாக வைத்துக் கொள்வோம். இதில் முன்னவர் பின்னவரைத் தம் உணர்வு நிலைக்கு இழுத்துக் கொண்டு போக வேண்டியிருக்கும். பின்னவருக்கு அது சுமையாகவும், வெறுப்பை ஊட்டுவதாகவும் இருக்கும். எனவே, நீண்ட நாள்களுக்குப் பின்னவர் முன்னவருடன் ஒத்துப் போக இயலாமல் பின் தங்கிவிடுவார்.

இனி, இரண்டாவதாக, செயலறிவுடைய ஒருவர் அஃதில்லாமல் உள்ளவருடன் இணைந்து இயங்குவதாக வைத்துக் கொள்வோம். பின்னவர் முன்னவரை எதற்கெடுத்தாலும் எதிர்பார்த்துச் செயலில் ஈடுபட வேண்டியிருக்கும். அது முன்னவர் செயலாற்றலுக்குத் தடையாக இருக்கும். எனவே, முன்னவர் பின்னவரை நெடுநாள்களுக்குத் தம்முடன்

வைத்து இருக்க இயலாமல் அவரை விலக்க நேரிடும். இதுவும் செயலுக்கு வெற்றியைத் தராது போகும்.

5. தேறிய பின் வேறுபடுவார் பலர்

இவ்வாறே பிற உணர்வு நிலைகளில் ஒருவரோடு ஒருவர் பொருத்தமில்லாற் போய்விடின், அவர்களின் வினை இணைவு நீண்ட நாளுக்கு நிலைத்திராமல் போகும். இனி, மேலே கூறப்பெற்ற அத்தனை உணர்வுகளிலும் பொருந்திய உணர்வுள்ளவர்களைக் காண்பது மிக மிக அரிது. இத்தனை நுண்ணுணர்வுகளும் பொருந்தியவர்களே அல்லாமல் பொருந்தாத பலரும் வினைக்கு முயல்வார்கள் என்பது உலகியலாக இருப்பதாலும், அவ்வாறு பொருந்தியவர்கள் இருவர் இணைவது மிகவும் அருமையாக அமைவதாலுமே, வினை வகையால் தொடக்கத்துப் பொருந்தியவர்கள், இடையிலோ இறுதியிலோ வேறுபட்டு விடுவதே நடைமுறை உலகியலாக உள்ளது என்று திருவள்ளுவப் பேராசிரியர் கருதுவர்.

எவைகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

(514)

இக்குறள் மொழிக்குச் சிறப்புப் பொருள் எழுதுகையில், நுண்ணுணர்வு சான்ற பரிமேலழகர், "கட்டியங்காரன் போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லாது, அதனைக் குற்றம் என ஒழிந்து, தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார்; வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம்” என்று விதந்து கூறினார் என்க.

6. அறிந்தும்அமைந்தும் செய்பவரே தேவை

இனி, வினைத்திறம் உடையாரையல்லது, நம்மாட்டு அன்புடையவர், என்பதற்காக உறவினரையோ, அல்லது அறிவுத்திறம் மட்டும் உடையார் என்பதற்காக நண்பரையோ வினையில் ஈடுபடுத்தக் கூடாது என்பது திருவள்ளுவப் பேராசான் கருத்தாகும்.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்

சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.

(515).

என்பது அவ்வாய்மொழி. இதற்குப் பரிமேலழகர் செய்யும் உபாயங்களை அறிந்து, செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவு செய்ய வல்லானையல்லது, வினைதான், இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று என்று பொருளுரையும்

‘அறிவு, ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது’ என்று சிறப்புரையும் தருவார்.

‘அறிந்தாற்றி’ என்னும் பண்பு இணைச்சொற்கள் அறிந்தும் ஆற்றியும் எனப் பிரிபட்டு ஒரு வினையைத் தானே அறிந்து கொள்ளும் திறத்தையும், வினைக்கிடையில் ஏற்படும் இடர்ப்பாடுகளைப் பொறுத்துத் தாங்கி அமைவுகொண்டு மேற்செல்லும் உள்ளத்தின் உண்மையையும் விளங்கி நின்றன என்க.

7. நுண்ணுணர்வு விளக்கங்கள்

இனி, இத்தலைப்பின் கீழ், தொடக்கத்தில் கூறிய செயல் திறம் உடையவர்களுக்கான கூர்மை உணர்வுகளெனும் நுண்ணுணர்வுகள் பற்றி, இன்னும் கொஞ்சம் விரிவாக அறிந்து கொள்வது, அவ்வுணர்வுடையவர்களை எளிதில் கண்டு தேர்வதற்குத் துணை செய்யும். ஆகையால், அவை பற்றிச் சிறிது விளக்குவோம்.

அங்குக் கூறப்பெற்ற நாற்பதோர் உணர்வுகளை மூன்று வகையாகப் பகுக்கலாம். அவை,

1. அகவுணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணவுர்கள்.

இவை உயிர்ப்படிநிலை வளர்ச்சியாலும், மரபு வளர்ச்சியாலும், இயற்கையாக அமைவன. இவையே இயற்கை கொடை (Natural Gif) அல்லது உளதாகும் அறிவு (Existant Wisdom) அல்லது உண்மை அறிவு (True Wisdom) (திருக்குறள் 373) என்று கூறப்பெறுகின்றன.

2. புறவுணர்வுக் கூறுகள் அல்லது செயற்கை உணர்வுகள்

இவை மாந்த முயற்சியால் அடையப் பெறுவன, இவற்றையே கற்றனைத்துறும் அறிவு என்கிறது திருக்குறள் (336)

3. உலகியல் உணர்வுக் கூறுகள் அல்லது

செயற்பாட்டு உணர்வுகள்

இவை சூழ்நிலைகளாலும், உலகியல் ஈடுபாடுகளாலும் மாந்தத் தொடர்புகளாலும், செயலீடுபாடுகளாலும் வளர்த்தெடுக்கப் பெறுவன. உலகம் தழீஇய ஒட்பம் (425) என்றதும் உலகத் தோடு அவ்வது உறைவது (425) என்றதும் இவையே என்க.

இம்மூன்று தலைப்புகளிலும், அங்குக் கூறப்பெற்ற உணர்வுக் கூறுகளைக் கீழ்வருமாறு பாகுபாடு செய்யலாம். இவற்றை மிகக் கவனமாகப் படித்து உணர்ந்து கொள்ளுதல், நமது அறிவுத் திறனையும், தேர்வுத் திறனையும் மிகுத்துக் கொள்வதாகும். அகவுணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணர்வுகள்:

1. இயற்கையறிவு:

(இவ்வறிவுக்கூறில் சிலசிறப்பறி வுணர்வுகள் அடங்கும். அவை வருமாறு)

அ. அறிவுத்திறன் - Cleverness

ஆ. ஆய்வறிவு - Intellect

இ. கூர்த்த அறிவு - Wisdom

ஈ. நுண்ணறிவு - Intelegence

உ. மூளைத்திறன் - Perception by the sense

ஊ. விளங்குதிறன் - Comprehension

எ. விளக்கு திறன் - elucidation

2. ஊக்கமுடைமை

3. உடனுக்குடன்

முடிவு எடுக்கும் நுட்ப அறிவுணர்வு - Presence of mind

புறவணர்வுக் கூறுகள் அல்லது செயற்கைக் கூறுகள்:

1. செயற்கையறிவு (இவ்வறிவுக் கூறில் சில சிறப்புணர்வுகள் அடங்கும். அவை வருமாறு.)

அ. கல்வியறிவு - education

ஆ. கற்றறிவு - erudition (having learned from books)

இ. கேள்வியறிவு - gathering knowledge by hearing asking and inquiry - wit

ஈ. சொல்லறிவு - Wit

2. சுறுசுறுப்புணர்வு

3. செயல்திறம்

4. கடமை உணர்வு

5. பொறுப்புணர்வு

6. கண்காணிப்புணர்வு

7. சிக்கன உணர்வு

8. பேச்சுத்திறன்

உலகியல் உணர்வுக்கூறுகள் அல்லது செயற்பாட்டு உணர்வுகள்

1. உலகியலறிவு:

(இவ்வறிவுக் கூறில் சில சிறப்பறிவுணர்வுகள் அடங்கும். அவை வருமாறு:)

அ. செய்தியறிவு - Knowledge

ஆ. செயலறிவு - Skill

இ. பொது அறிவு - General knowledge

2. சிறந்த தேர்வுணர்வு

3. பிறர்செய்யும் இடையூறுகளுக்கு அஞ்சாமை

4. பிறர் கூறும் பழிகளைப் பொருட்படுத்தாமை

5. ஆடம்பரம் விரும்பாமை

செயற்கை உணர்வுகள்

4. தற்சார்சார்புடமை

5. பேராசையின்மை

6. மானவுணர்வு

7. பெருமித உணர்வு

8. குடும்பவுணர்வு

9. உண்மையான நட்வுணர்வு

10. மெய்யான அன்புடைமை

11. முன்கோபம்

12. மன்னிக்கும் உணர்வு

13. கலையார்வம்

14. கணக்குத் திறம்

15. அழகுணர்வு

16. சுவையுணர்வு

17. நினைவாற்றல்

செயற்கைக் கூறுகள்:

9. தருக்கத்திறன்

10. தூய்மையுணர்வு

11. பசி பொறுத்தல்

12. தூக்கம் பொறுத்தல்

13. உழைப்புத் திறம்

14. பிறர் கையை எதிர்பாராமை

15. பரபரப்பில்லாத அமைவான நடைமுறை

16. எவர்க்கும் கட்டுப்படாமை

17. கஞ்சத்தன மின்மை

18. எளிதில் இணங்கி வராத தன்மை

19. எதிலும் அதிகப் பற்று வையாமை

செயற்பாட்டு உணர்வுகள்:

6. எளிதாக நம்பு திறனும் எளிதாக நம்பாமையும்.

இவற்றுள் அறிவுணர்வை மூன்றாகப் பகிர்ந்ததாலும் செயலறிவை உலகியலறிவுக்குள் அடக்கியதாலும் உணர்வு எண்ணிக்கையில் ஒன்று கூடியது என்க.

இவற்றுள் சில நுட்ப உணர்வுகளுக்கான விளக்கங்கள் வருமாறு (அகவுணர்வுக் கூறுகளில்)

2. ஊக்கமுடைமை : செயலுக்கு இதுவே அடிப்படையான முதலீடு போன்றது. பொருள் முதலைவிட இதனை முகாமைப்படுத்துவர் பெரும்பேராசான். உள்ளம் (ஊக்கம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும் , 592)

3. உடனுக்குடன் முடிவெடுக்கும் நுட்பவுணர்வு : இவ்வுணர்வு எச்செயலுக்கும் மிகு தேவையானது. கால நீட்டிப்பையும் வீண் இழப்பையும் இவ்வறிவுணர்வு தடுக்கிறது. செயல் திறத்துக்கு மிக அடிப்படையான உணர்வு இது.

4. தற்சார்புடைமை : என்பது எப்பொழுதும் பிறரையே சார்ந்திராமல், அஃதாவது பிறரையே நம்பியிராமல், தன்னையே சார்ந்து, அஃதாவது தன்னையே நம்பியிருக்கும் தன்மை. இது செயல்திறனுக்கு மிகத் தேவையானது. இவ்வுணர்வு இயற்கையாக அமைவது. உலகின் பெரும்பாலான மக்கள் பிறரையே சார்ந்து இயங்கும் தன்மையுடையவர்களாய் இருத்தலை எண்ணிப் பார்க்கவும்.

5. பேராசையின்மை : ஆசை இருக்கலாம். மேன்மேலும் பொருளிட்டும் ஆசை செயல்திறனைக் குறைத்துப் போலிச் செயல்களுக்கு வழிவகுக்கும்.

6. மானவுணர்வு : மானம் . தன்மானம் . இவ்வுணர்வு செயலாட்சிக்கு மிக இன்றியமையாதது. மாந்தனைத் தன் கொள்கை நோக்கிலிருந்து நெகிழ விடாமல் கட்டிக் காப்பது இவ்வுணர்வுதான்.

7. பெருமித உணர்வு : தந்நலத்தின் அடிப்படையில் கொள்ளும் செருக்குணர்வு இன்றிப் பொதுநல உணர்வின் அடிப்படையில் செய்யப்பெறும் செயலினால் தோன்றும் பெருமை, உண்ர்வு இது. செயல்களுக்கிடையில் எதிர்ப்படும் மனச்சோர்வைப் பேர்க்கும் ஒருவகைத் தென்பைத் தரும் மனவுணர்வு இது.

8. குடும்ப உணர்வு : ஒருவரை நன்னெறிக்கண், மரத்திற்கு வேர்போல் நின்று நிலை நிறுத்தும் உணர்வு இது செயலாக்கத்தால்

தட்டுக் கெட்டுத் தடுமாறாமல், இது மனத்திற்கு ஊட்டமளிக்கும் உணர்வாகவும், மனச்சோர்வு அகற்றும் மருந்தாகவும் செயலில் ஈடுபட்ட ஒருவர்க்கு உதவுகிறது.

9. உண்மையான நட்புணர்வு : செயலில் திறமையாக ஈடுபட விரும்புவார் உண்மையான நட்புணர்வு கொண்டவராகவே இருப்பார். போலிகளைத் தவிர்க்கவும், மெய்யான நண்பர்களைத் தமக்குத் துணையாக ஏற்கவும் இவ்வுணர்வு அவர்க்குப் பாதுகாப்பாக நின்றுதவும்.

10. மெய்யான அன்புடைமை : அன்பு மெய்யாக இல்லையானால் அஃது உண்மையான பயன் தருவதில்லை. போலியான அன்பு போலி விளைவுகளையே உண்டாக்கும்.

11. முன்கோபம் : கோபம் - கடுஞ்சினம் முன்கோபம் சில நொடிப்பொழுதே வந்து தோன்றி இருந்து மறைவது, இஃது நன்னெறியாளர்களுக்கு ஒரு காப்புணர்வாகத் தோன்றுகிறது. இவ்வுணர்வு இல்லையானால் பிறர் இழுத்த இழுப்புக்கு ஒருவர் ஆட்பட்டுச் சூழலை வென்றெடுக்கவும் தவிர்க்கவும், மீளவும் முடியாமல் போகும். இது திறமையானவர்களுக்கும் நல்லவர்களுக்கும் இயற்கை தரும் ஒரு தற்காப்புக் கருவியாகப் பயன்படுகிறது.

12. மன்னிக்கும் உணர்வு : கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டுபவர் என்றார் அறப் பேராசிரியர். ஒருவர் ஒரு செயலுக்குத் தடையாக இருப்பதைச் சுட்டவும் கண்டிக்கவும் பின் அவர் அத்தவற்றை உணர்த்து திருந்திய விடத்து அவரைப் பொறுத்துக் கொள்ளவும் உதவும் உணர்வு, இது. திருந்தியவர் மீண்டும் செயலுக்கு நல்ல துணையாக உதவும் நிலையில் வளர்ந்து நிற்பதால், அவரை மன்னிக்கும் மனப்பாங்கு ஒரு செயல்திறம் உடையவர்க்குக் கட்டாயம் தேவையாகிறது.

13. கலையார்வம் : கலையார்வம் இல்லையானால் ஒரு செயலைச் செப்பமாகவும் திறமையாகவும் தூய்மையாகவும் பிறரைக் கவரும் வகையில் சிறப்பாகவும் செய்ய இயலாது. மேலும் இக் கலையார்வமே ஒரு செயலுக்கு இடையில் வரும் மனச் சோர்வைப் போக்கி, மேலும் மேலும் அவரை அசசெயலில் இன்னும் சிறப்பாக ஈடுபட ஊக்கி உதவுகிறது. வெறும் தொழிலறிவு வறட்சியானது. அதைச் செழுமையுடடையதாக்கி வளமை தர இவ்வுணர்வு மிகவும் தேவையாகிறது. எனவே, செயலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு இவ்வுணர்வு இருக்கிறதா என்று பார்த்தல் வேண்டும்.

14. கணக்குத்திறம் : உலகில் உள்ள அனைத்துச் செயல்களுமே கணக்கை அடிப்படையாகக் கொண்டவையே. உலகப பெரும் உருண்டை சுழல்வதும், கதிரவ மண்டில இயக்கமும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகின் கண் நிகழும் செயற்பாடுகளும் உயிர்களின் தோற்றமும், வாழ்வும் முடிவும், அவ்வுயிர்களின் அனைத்து உடற்கூறுகளும், அவற்றின் பல்வேறு வகையான இயக்கங்களும் ஆகிய அத்தனை வினைகளும் கணக்கியல் கூறுகளை அடிப்படைகளாகக் கொண்டவையே. கணக்கின்றி ஒர் அணுக்கூறும் இயங்குவதில்லை. இந்த அரும்பெரும் உண்மையை அனைவரும் உற்று நோக்கி உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

அனைத்து மூல ஆற்றல்களும் கணக்கை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. அக்கணக்கறிவைக் கொண்டுதான் ஆற்றல்களை அறிய முடிகிறது. அளக்க முடிகிறது. பயன்படுத்த முடிகிறது.

இனி, ஆற்றல்களின்றிப் பொருள்களும் இல்லை. எனவே அப்பொருள்களும் கணக்கை அடிப்படையாகக் கொண்டே தோன்றுகின்றன; வடிவம் எய்துகின்றன; இயங்குகின்றன; இணைகின்றன; மாறுதலுறுகின்றன; மறைகின்றன. பின் மீண்டும் தோன்றுகின்றன. அறிவு என்னும் உணர்வே கணக்கை அடிப்படையாகக் கொண்டதுதான்.

பொருள்களைப் பார்க்கின்ற ஒளித்திறன் அளவைக் கண்கள் பெறவில்லையானால், பொருள்களைத் நம்மால் பார்க்க இயலாது. ஒசையைக் கேட்கின்ற ஒலித்திறன் அளவை நம் செவிகள் பெற்றிருக்கவில்லையானால் பொருள்களின் அசைவொலியை நாம் கேட்க முடியாது. அவ்வாறுதாம் நம் ஐம்புலன் உணர்வுகளும். எனவே அறிவே கணக்குதான்.

இனி, கணக்குத் தொடர்பு இல்லாதவனாகவாக நாம் கருதிக் கொண்டிருக்கும் பிற கலையறிவுகள், அழகுணர்வுகள், இலக்கிய இலக்கண உணர்வுகள், நிலைகள், பிற வாழ்வியல் நிலைகள், உணவு முறைகள் அனைத்தும் கணக்கியலை அடிப்படையாகக் கொண்டனவே.

கணக்கில்லையானால் அழகில்லை; ஒவியமில்லை; சிற்பமில்லை; இசையில்லை; பிற கலைகள் இல்லை; இலக்கியமில்லை; இலக்கணமில்லை; ஏன், நாம் பேசும் மொழிகளும், பறவைகள், விலங்குகள் இவற்றின் ஒலிகளும், நம் எழுத்தும் எழுத்தொலிகளும் கூட கணக்கியலையே அடிப்படையாகக் கொண்டவையே.

அகர ஒலிக்கு ஒரு மாத்திரை, ஆகார ஒலிக்கு இரு மாத்திரை என்பனவும், அம்மாத்திரை எழுத்துகளால் ஆன மொழிகளும், அவற்றின் இலக்கண அமைப்புகளும், பாடல்களின் நிரையசை நேரசை அளவுகளும், அகவல், செப்பல் முதலிய ஓசை அளவுகளும் கணக்கே, கணக்கே, கணக்கே!

ஓர் உயிர் பிறப்பதும் கணக்கு அது வளர்வதும் கணக்கு அது வாழ்வதும் கணக்கு மறைவதும் கணக்குதான். கணக்கின்றிக் கணமும் இல்லை. காலமும் இல்லை; இடமும் இல்லை!

இனி, இன்னோர் உண்மையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இக் கணக்கு அமைப்புகளின் பிறழ்ச்சிகளே - பிசகுகளே அழிவுகள் என்பதை நாம் அறிதல் வேண்டும்.

இயற்கை இயக்கப் பரப்பில் எங்கோ ஓரிடத்தில் நிலவும் கணக்கியல் பிறழ்ச்சியே பருவக் கோளாறுகள், புயல்கள், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், கடல் கொந்தளிப்புகள், உலகழிவு முதலிய கொடுநிகழ்ச்சிகள்.

உடலியக்கத்தின் கணக்குப் பிறழ்ச்சிகளே - பிசகுகளே - நோய்கள். இடையழிவுகள், இறப்புகள் முதலிய கொடுநிகழ்ச்சிகள்!

எனவே, கணக்கே உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் வினைகளுக்கும் செயல்களுக்கும் மூல அடிப்படையானது. ஆகவே, கணக்கறிவு செயலறிவுக்கு செயலுக்கு மிக மிக இன்றியமையாதது என்பதை அறிதல் வேண்டும். இந் நுட்பங்களை மிக நுண்ணியதாக உணர்ந்துதான் நம் திருவள்ளுவப் பேராசான் மாந்த உயிரியக்கத்திற்கு மொழி முகாமையானது; அம்மொழிக்கும் முகாமையானது கணக்கறிவு என்னும் பொருளில்,

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு

(392)

என்று கணக்கிற்கு மொழியினும் முதலிடம் கொடுத்துப் பேசுகிறார். இன்னும், அவர் அருளித் தந்த திருக்குறள் என்னும் மெய்ப்பொருள் ஆக்கத்தில், கணக்கறிவு பற்றிக் கூறும் உணமைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவனவாகும். இவற்றை ஒரு சிறிது கூறி மேல் செல்லுவோம்.

கணக்கறிவு இல்லையானால் செயல் ஆக்கம் கெடும். அதன்பின் அந்தச் செயலைச் செய்வதற்கு நேர்மையல்லாத களவு வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் என்பார் திருவள்ளுவர். கணக்கறிவை அவர் அளவு என்னும் சொல்லால் உணர்த்துவர். எதையும் அளந்து

பார்த்து, அஃது அதற்குரிய அளவுடன் செய்யப் பெறுதல் வேண்டும் என்பது அவர் குறிப்பு. அதனை வெறும் அளவு என்று குறிப்பிடாமல், அளவென்னும் ஆற்றல் என்று வலியுறுத்தியும், திறன் என்று அகலப்படுத்தியும், கூறுவார் அவர். இங்குதான் செயல்திறன் முழுமை பெறுகிறது என்பததைக் கவனிக்க வேண்டும்.

"எந்தச் செயலையும் அளவு என்னும் கணக்குத் திறனுடன் செய்ய இயலாதவன், காரறிவை அஃதாவது விளக்கமற்ற அறிவை உடையவனாவான். அவன் செயல்களில் நேர்மை, உண்மை இருக்கா, திருட்டுத்தனமான செயற்பாடுகளே இருக்கும். இத்தவறான நடைமுறை, அளவு என்னும் கணக்குத் திறன் உடையவர்களிடத்தில் இருப்பதில்லை என்னும் பொருளைத் தருகிறது. கீழ்வரும் குறள்,

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல்.

(287)

மேலும், ஒருவன் எதையும் அளவிட்டுக் கணக்குப் பண்ணிச் செய்யப் பழகுவானானால், அவனிடத்தில் அறிவுணர்வு நிலைப்பெற்றிருக்கும். எதையும் நேர்மையாகவும் உண்மையாகவுமே அவன் செய்வான். நேர்மைப் பிறழ்ச்சி அவனிடத்தில் இருக்காது. எப்படி வேண்டுமானாலும் அஃதாவது தவறான அல்லது தீய வழிகளைக் கடைப்பிடித்தேனும் அச்செயலைச் செய்துவிட வேண்டும் என்னும் ஒர் அறமற்ற உணர்வே அளவிட்டுச் செய்யாதவனிடத்தில் வளரும். எனவே, என்றென்றும் அவன் உள்ளத்தில் களவுணர்வும். (திருட்டுணர்வும்) கரவு உணர்வும் (வஞ்சக உணர்வும்) நிலையாக இருந்து கொண்டிருக்கும்” என்னும் பொருளை உணர்த்துகிறது, இன்னொரு குறள்,

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.

(288)

"அளவு பண்ணிக் கணக்கறிவுடன், செய்வதைக் கடைப்பிடிக்காதவன், தவறான, பொய்யான, நேர்மையற்ற திருட்டு உணர்வில் மேலும் மேலும் விருப்பமும் ஆர்வமும் உடையவனாகி, அதனையே தொடர்ந்து கடைப்பிடித்து ஒழுகுவான்" என்று இன்னொரு திருக்குறளில் உணர்த்துவார் பேராசான்.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்

(286)

எனவே, "இந்நேர்மையற்ற வழிகளில் செயல்களைச் செய்து, அதனால் வருகின்ற செல்வம் கூடி வருவதுபோல் தோன்றி விரைவிற் படிப்படியாகக் குறைந்து இல்லாமற் போய்விடும்” என்று அவர் எச்சரிக்கை செய்கிறார்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

(283)

என்பது, அது.

"ஆகவே, களவும் கரவும் இல்லாத மற்ற நேர்மையான வழிகளில் செயல்களைச் செய்யப் பழகிக் கொள்ளாதவர்கள் தாம் எதையும் அளவுப்படுத்திச் செய்யாமற் போவதால், அவற்றைச் செய்யத் தொடங்கிய அடுத்த பொழுதிலேயே தம் செயல் நிலையினின்று வீழ்ந்து விடுவர்” என்று முடிவாகவும் தெளிவாகவும் சொல்லுவார், அற முதல்வர்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.

(289)

வரவு செலவு அளவு

இனி, எப்பொழுதுமே ஒரு செயலால் வருகின்ற வருமான அளவையும் அவ் வருமானத்தால் செய்கின்ற செலவுகளின் அளவையும் கணக்குப் பார்த்து, அச்செயலைச் செய்யும் திறமற்றவர்கள் பலவகையான செயல் தாழ்ச்சிகளுக்கு உட்படுவர் என்பதையும், அவ்வாறு கணக்கிட்டுச் செயல் செய்கையில் வருமான அளவு குறைந்திருப்பினும், செலவு அளவு கூடாமல் இருப்பின் தாம் தொடங்கிய செயலுக்கோ, தமக்கோ கேடு வராது என்பதையும் மிகவும் நுண்ணியதாகக் கீழ்வரும் குறளில் உணர்த்திக் காட்டுவர், வாழ்வியல் பேராசான்.

ஆகாறு அளவு இட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை

(478)

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பது பழமொழியன்றோ? எனவே, வரவானாலும், செலவானாலும் கணக்குப் பண்ணிச் செய்திட வேண்டுவது எத்துணை இன்றியமையாததாக இருக்கிறது. இனி, வரவை விடச் செலவுக்குக் கணக்கறிவு அஃதாவது அளவையறிவு முகாமையானது என்பதை அறிதல் வேண்டும்.

கல்வி அளவு

கற்பதைக்கூட எண்ணிப் பார்த்து, அளவு பண்ணி, எதைக் கற்க வேண்டும், எவ்வளவு காலம் கற்க வேண்டும், எத்துணை அளவு கற்க வேண்டும் என்று ஆய்ந்தறிந்து கற்க வேண்டும் என்பது திருக்குறள். கல்விக்கு எல்லையில்லை; எனவே, காலமும் இல்லை, சாகும் வரை

கற்றுக் கொண்டேதான் இருக்க வேண்டும் (397) என்றாலும், இந்தக் காலத்திற்குள் இதைக் கற்க வேண்டும் என்பது ஒர் அளவறிவாகும். அதே போல் இதற்காக இதை இந்தக் காலத்திற்குள், இந்த அளவு, இந்த வகையில் கற்க வேண்டும் என்பதும் ஒரு கணக்கறிவாகும். இதைத்தான் திருவள்ளுவப் பெருமான்,

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றம் கொடுத்தற் பொருட்டு.

(725)

என்பார், 'அவையஞ்சாமை' அதிகாரத்துள் இக்கருத்துக் கூறப்பெறினும், வாழ்க்கை அளவில் அதன் முழுமைக்கும் பயன்படக்கூடிய கல்விக் கூறுகள் பல. செயலும் அதைத் திறமையாகச் செய்ய வேண்டிய திறனும் அக் கூறுகளில் அடங்குவதாகும். கணக்கறிவே ஒரு கல்விக் கூறாயினும், பிறவற்றைக் கற்பதற்கும் அந்தக் கணக்கறிவு, அளவை அறிவு இன்றியமையாததாகும் என்று கூறுகிறார், பேராசிரியர்.

ஈகை அளவு

கல்விக்கு அளவறிதல் தேவை போலவே, நம்மிடம் உள்ள ஒரு பொருளை ஒருவர்க்கு ஈயும் போதும் அவ்வளவை யறிவு தேவை என்பது திருக்குறள்.

சாவை விடக் கொடியது இல்லை; அதுவும் பிறர்க்கு ஈகின்ற செயல் இயலாத பொழுது இனியதாகப் போய் விடுகின்றது; அஃதாவது பிறர்க்கு ஈயாத விடத்து, இறந்து போவதே நல்லது, இனியது, என்னும் பொருள் பட,

சாதலின் இன்னாத தில்லை; இனிததுரஉம்

ஈதல் இயையாக் கடை

(230)

என்றும்;

மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று (222)

என்றும்;

இல்லை யென்று ஒருவர் தம்மிடம் சொல்லிக் கேட்பதற்கு முன்னர், நாம் அவர் குறிப்பையறிந்து கொடுப்பது சிறந்தது, அதுவே நல்ல குடியிற் பிறந்தாரது நாகரிகச் செயல்.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள

(223)

என்றும்,

'கொடுத்துக் கொடுத்து உயர் நிலையில் தாழ்ந்து ஏழையாகப் போயின. பின்னும் அக் கொடுத்தல் பண்பில் விலகா திருப்பதே பழைமையில் சிறந்த பெருமையுடைய குடியாளனுக்குச் சிறப்பு' என்று பொருள் தரும்,

'வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று'

(955)

என்றும், ஈதலுக்குச் சிறப்பிலக்கணம் கூறிய அதே திருவள்ளுவப் பேரருளாளர்,

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கும் நெறி.

(477)

என்றும், அளவையறிவு கொண்டு ஈகையை வளமைப்படுத்துகிறார்.

எந்தத் தேவைக்கு, எவர்க்கு எவ்விடத்து, எவ்வளவு ஈயவேண்டும் என்று மதிப்பிட்டு ஈகின்ற கணக்கியலறிவும் ஒருவர்க்கு தேவை என்பதை வலியுறுத்துகின்றார்.

பெரும்பாலும் ஒருவர்க்கு பொருள் செயலாலேயே வரும். பெரும் பொருள் சிறந்த நேர்மையான உயர்ந்த வருவாயைத் தருகின்ற செயல்களாலேயே வரமுடியும். அப்பொழுதுதான் அவர் செல்வராகத் திகழமுடியும். அவ்வாறு செல்வராகத் திகழ்கின்ற பொழுதுதான், அவர் ஈகையறத்தைச் செப்பமாகச் செய்ய முடியும். பொருள் நிறைய வருகின்றதே அல்லது இருக்கின்றதே என்பதற்காகக் கண்டவர்க்குச் கண்டபடி, கண்டவிடத்துக் கண்டவாறு ஈந்து விடக்கூடாது; அக்கால் கணக்கறிவோடு, அளவை அறிவோடு நடந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும் என்பது திருவள்ளுவர் கோட்பாடாகும். எனவே, கணக்கறிவு, ஈகைக்கும் தேவை என்று வலியுறுத்தப்படுகிறது.

வாழ்க்கை அளவு

எனவே, வாழ்க்கை முழுமைக்கும் எல்லா நிலைகளிலுமே கணக்கறிவு மிகமிகத் தேவையான ஒன்றாகும் என்பதில் ஐயமே இல்லை.

வாழ்க்கை, அஃது எத் திறத்தினதாயினும், எத் தரத்தினதாயினும், எந்த வகையினதாயினும், அதிலும் கட்டாயம் ஓர் அளவியலறிவு, கணக்கியலறிவு தேவை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.

(479)

என்பது திருவள்ளுவம்.

இதில் அளவறித்து வாழுதல் என்பது, அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப் பொருள்கள் மூன்றையும், அவற்றின் உட்கூறுகளையும், அவற்றின் கருப்பொருளையும், காரணப் பொருள்களையும் உள்ளடக்கியது என்க. இஃதோர் அளவையறிதல் என்னும் கணக்கியலையே கொண்டதாகும்.

எனவே, வாழ்க்கை நிலைகள் முழுமைக்கும் கணக்கியலறிவு எத்துணை இன்றுயமையாதது என்பதைத் தெள்ளிதின் உணர்ந்து கொள்க.

15. அழகுணர்வு: அழகுணர்வு இல்லாமற் போயின் எந்தச் செயலும் செப்பமாக இராது கவர்ச்சியுடன் திகழாது. எந்தச் செயலாக இருப்பினும், அது சில கருவிகளைக் கொண்டே இயங்க வேண்டும். அந்தக் கருவிகள் செப்பமாக இராமல் போனால், செயலும் செப்பமாக இருக்க முடியாதன்றோ? எனவே, அழகுணர்வை செப்பத்தை அளவிடும் ஒரு கருவியாகவே இயற்கை கொடுத்திருக்கிறது. அழகுணர்வுதான் செப்பத்தையும், ஒழுங்கையும், மன ஈடுபாட்டையும், செயலூக்கத்தையும், பொருள் காப்புணர்வையும், உரிமைப் பிடிப்பையும் நமக்குத் தருகிறது. ஒரு பொருள் அழகாக இல்லையானால் நாம் அதை விரும்பமாட்டோம் விரும்பாத பொருளைக் காக்க மாட்டோம் காக்கப் பெறாத பொருளுக்கு நாம் ஏன் உரிமை கொண்டாடப் போகிறோம்? எண்ணிப் பாருங்கள். இவ்வுணர்வும் இயற்கையாக அமைதல் வேண்டும்.

16. சுவையுணர்வு:

மாந்தனுக்குச் சுவையுணர்வும் மிகவும் இன்றியமையாத ஒர் இயற்கை உணர்வாகும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுவையுணர்வு அவ்வளவாகத் தெரிவதில்லை. பொறிகளின் கூர்மையான உணர்வுகளுள் ஒன்று சுவையுணர்வு. அறிவுணர்வு கூர்மையெய்த எய்த பொறிகளும் கூர்மையான புலன் உணர்வுகளைப் பெறுகின்றன. அக்கால் பார்வையுணர்வு, நுகர்வுணர்வு, சுவையுணர்வு, செவியுணர்வு, மெய்யுணர்வு ஆகிய ஐம்புலன் உணர்வுகளும் துல்லியமான உணர்வுகளாக வளர்ச்சியுறுகின்றன. நாச்சுவை இழிவன்று. உடல் நன்கு இயங்குவதற்கு உணவு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாதது உணவுக்குச் சுவையும். சுவையுணர்வு, நல்ல உணவைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. இயற்கைப் பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு சுவையுடையன. அறிவுணர்வு உள்ள ஒருவனுடைய

உடலுக்குத் தேவையான சாரப் பொருள்களே அவனுக்கு நல்ல சுவையான மனவுணர்வைத் துரண்டி, உணவை விருப்பமாகவும் தேவையான அளவினதாகவும் ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. உடலுக்குக் கேடு தரும் கண்ட பொருள்களையெல்லாம் ஏற்றுக் கொள்வதைத் தடுத்து நிறுத்துகிறது. எனவே, நல்ல செயலாளன் ஒருவன், நல்ல சுவையுணர்வு கொண்டவனாகவும் இருக்கிறான் என்பதை உலகியலால் தெரிந்து கொள்க.

17. நினைவாற்றல்:

செயலுணர்வுக்கு நினைவாற்றல் மிக இன்றியமையாதது. நினைவாற்றலின்றிச் செயல் தொடர்ச்சி இருப்பதில்லை. செயல் தொடர்ச்சி இல்லையானால், செயல் நிறைவுறுவதில்லை. பொதுவாக உள்ள நினைவுத்திறன், செயல் திறன் உடையவர்களுக்கு நல்ல ஆற்றலுடன் இயங்குதல் வேண்டும்.

இங்கு இதுவரை ஒருவர்க்கு இயற்கையாக அமைகின்ற அகவுணர்வுக்கூறுகளின் விளக்கங்களைக் கண்டோம் இனி, செயற்கைக் கூறுகளாக உள்ள புறவுணர்வுக்கூறுகளின் விளக்கங்களைக் காண்போம்.

1.1. கல்வியறிவு:' ஆசிரியர் வழிப் பள்ளிகளில் கற்பிக்கப் பெறும் அறிவு.

1-2. கற்றறிவு: நூல்கள்வழித் தன் முயற்சியால் தானே படித்து அறிந்து கொள்ளும் அறிவு.

13. கேள்வியறிவு : உலகியல் வழிப் பிறர் வாயிலாகவும், உசாவியும், தானே பட்டும் (அனுபவித்தும் அறிந்து கொள்ளும் அறிவுத்திறன்.

1-4.சொல்லறிவு: உணர்ந்ததைத் தகுந்த சொற்றொடர்களால் வெளிப்படுத்தும் திறன். இஃது ஒரு செயலைப் பற்றித் தான் தெரிந்ததைப் பிறர்க்குத் தெளிவாக உணர்த்தவும் உணரவும் பயன் தரும்.

2. சுறுசுறுப்புணர்வு: பொறிகளும், புலன்களும் எப்பொழுதும் எதனையும் ஏற்றுச் செய்யும் இயங்குதிறன்

3. செயல்திறம்: எதையும் நிறைவுறச் செய்யும் செயலாற்றல்.

4. கடமை உணர்வு: கொடுக்கப்பட்ட செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வமும் அக்கறையும் கலந்த செயலுணர்வு.

5. பொறுப்புணர்வு: ஒரு செயலைக் குறிப்பிட்ட திட்டப் படியும்,

குறித்த காலத்திற்குள்ளும் செப்பமாகவும் நிறைவாகவும் செய்ய வேண்டும் என்னும் செயலறுதி.

6. கண்காணிப்புணர்வு: செயல் சிதைவுறாமல் செப்பமாகச் செய்யப் பெறுகிறதா என்று அடிக்கடி மேற்பார்வையிடுகின்ற காப்புணர்வு.

7. சிக்கன உணர்வு: முதலீடு சிதைந்து போகாமல் செயலுக்கே பயன்படும்படி, பிறதுறைச் செலவுகளைக் கட்டுப்படுத்திக் காக்கின்ற கட்டுப்பாட்டுணர்வு.

8. பேச்சுத் திறன் செயலைப்பற்றிப் பிறர்க்கு நன்கு விளக்கவும், விளங்காத நிலைகளைத் தெளிவாக எடுத்துக் கேட்கவுமான சொல் ஆற்றல்.

9. தருக்கத் திறன் சரியெது சரியல்லாததெது என்று கருத்து வழி ஆய்கின்ற கருத்துத்திறன்.

10.துய்மையுணர்வு: பணியைத் துய்மையாகச் செய்யவும், பணிக் கருவிகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவுமான உணர்வு.

11-12. பசி பொறுத்தல், தூக்கம் பொறுத்தல்: பணி நிலையை முகாமையாகக் கருதி, பசி, கண்விழிப்பு, சோர்வு முதலிய உடல் நலிவுகளைப் பெரிதாகப் பொருட்படுத்தாத ஊக்கவுணர்வு செயல் திறனுடையவர்கள் இவற்றைப் பெரிதாகக் கருத மாட்டார்கள்.


மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்; கண்துஞ்சார்;
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;
கருமமே கண்ணாயி னார்.

என்னும் குமரகுருபரரின் நீதிநெறி விளக்கச் செய்யுளை ஒர்க.

13. உழைப்புத்திறம்: உள்ளத்தாலும், உடலாலும் உழைக்கின்ற உணர்வும் வலிமையும் உடைய வன்திறம்.

14. பிறர் கையை எதிர்பாராமை: பொருளுக்கோ, செயலறிவுக்கோ, வேறு வகை உதவிகளுக்கோ பிறருடைய கைகளை எதிர்ப்பார்த்துக் காத்திராத தன்மை.

15. பரபரப்பில்லாத அமைவான நடைமுறை சுறுசுறுப்பு வேறு; பரபரப்பு வேறு. எதிலும் பரபரப்பான நடைமுறை செயல்

செப்பத்திற்குதவாது; பொருள் இழப்பும், வினைத்தொய்வும் இதனால் விளையும். அமைவான நடைமுறையே செயலுக்கு ஏற்றது.

16. எவர்க்கும் கட்டுப்படாமை: இவ்வுணர்வு அறிவு தழுவாமல் வெறும் மன அளவாக மட்டும் செயல்பட்டால் அது செருக்கு எனப்பெறும். இதுவே அறிவு தழுவிய உணர்வாக இயங்கினால் அது பயனுடைய உணர்வாக நின்று செயலுக்கு உதவும். ஒருவர்க்கு எளிதில் கட்டுப்பட்டு விடுகிற உணர்வை விட, எளிதே கட்டுப்படாத உணர்வே செயலுக்கு உரித்தானதாகும்.

17. கஞ்சத்தனமின்மை: கஞ்சத்தனம் என்பது சிக்கனத்தின் போலியான ஒருவுணர்வு. பொருட் பொறுப்பினால் இயங்குவது சிக்கனம் பொருளாசையால் இயங்குவது கஞ்சத்தனம். முதலது கடமையை உறுதிப்படுத்தித் தொடர்ந்த செயலுக்குத் துணையாக இயங்கும் உணர்வு. இரண்டாவது கடமை நன்கு நிறைவேறாமல், துணையாளரைப் பிரித்துத் தனிப்படுத்திச் செயலை நிறைவேற்றாமல் செய்யும் ஒர் உணர்வு.

18. எளிதில் இணங்கி வராத தன்மை: இப்படிப்பட்டவர்களிடத்துத்தான் செயல் பிடிப்பு, செயலுறுதி இருக்கும். ஒரு பணியில் ஈடுபட்டவர்கள் வேறு பணிக்கு எளிதில் மாறி விடுகிற உணர்வு செயலுக்குப் பயன்படாது. இத்தகையவர்களைத் துணையாகவோ, பணியாளர்களாகவோ கொள்ளக்கூடாது.

19. எதிலும் அதிகப் பற்று வையாமை: பற்றில்லாமல் எதிலுமே ஈடுபட இயலாது. ஆனாலும் செயல்திறம் உடையவர் எதிலுமே அதிகப்பற்று வைத்தலாகாது. ஒன்றை ஏற்கவும், ஒன்றைத் தவிர்க்கவும் ஆன உணர்வே செயலுக்கு உகந்தது.

இங்குக் கூறப்பெற்ற 19 உணர்வுகளும், ஒருவர் செயற்கையாக படிப்படியாக வருவித்து வளர்த்துக் கொள்ளும் உணர்வுகளாகும். அடுத்து வரும் 6 உணர்வுக்கூறுகளும், உலகியலால் ஒருவர் அறிந்து கொள்ளும் உணர்வுகளாகும். காலப்போக்கில் பட்டறிவால் ஒருவர் இவற்றைத் தாமே பெற்றுக் கொள்ள முடியும். எனவே, இது உலகியலறிவு எனப்பெறும். அதனையும் ஒரு சிறிது விளக்குவோம்.

1-1. செய்தியறிவு: பல வகையான செய்திகளை பற்றியும் அறிந்து கொள்ளுதல்.

1-2. செயலறிவு: பல வகையான செயற்பாடுகளைப் பற்றியும்

அறிந்திருத்தல்.

1-3. பொது அறிவு: செய்திகள், செயல்பாடுகள் இல்லாமல் பொதுவான இயற்கை செயற்கை நிகழ்ச்சிகள் உலகியல் உளவியல், அறிவியல், அரசியல், பொருளியல், வரலாறு, இலக்கியம் போன்றவற்றில் உள்ள ஈடுபாடு.

2. சிறந்த தேர்வுணர்வு: ஒரே வகையான பல பொருட் கூறுகள், செயல் கூறுகளில் சிறந்தவற்றைத் தேர்ந்து கொள்ளுகிற அறிவுணர்வு.

3. பிறர் செய்யும் இடையூறுகளுக்கு அஞ்சாமை: பெரும்பாலும் இவ்வுலக உயிரியக்கமே ஒரு போட்டி உணர்வுடனேயே இயங்குகின்றது. ஒன்றினை ஒன்று முந்தப் பார்ப்பதும் வெல்லப் பார்ப்பதும் இயற்கை இப்போட்டியில் பின்தங்கும், அல்லது தோல்வியுறும், அல்லது வெற்றி பெற வலிவில்லாத உயிர்கள், வென்ற அல்லது வெல்லுதிறம் உடைய, அல்லது போட்டியில் ஈடுபட்ட பிற உயிர்களைப் பொறாமை உணர்வு கொண்டு தாக்குதல், ஊக்கமிழக்கச் செய்தல், இடையூறு விளைவித்தல், அழித்தல் ஆகிய முயற்சிகளால் பின் தங்கவோ அல்லது போட்டியினின்று விலகிக் கொள்ளவோ செய்யும். இஃது உயிர்களின் வாழ்வியல் போராட்டமாக இருக்கிறது. மாந்தர்களும் இதற்கு விலக்கல்லர். இன்னும் சொல்வதானால் மாந்தரின் அறிவு வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும், அறிவியல் வாழ்வுக்கும் ஏற்ப, இவ்வடிப்படையான இயற்கைப் போட்டிகள், மிக வலிந்தும், சூழ்ச்சியாகவும், நயவஞ்சகமாகவும் நடைபெறுவதை உணரலாம்.

இப்போட்டி முயற்சிகள், பொருள், புகழ், அதிகாரம், ஆட்சி முதலிய கூறுகளில் மிகுந்து தோன்றுகின்றன. செயல் கூறுகள் பொருளியலை அடிப்படையாகக் கொண்டு இயங்குவன ஆகையாலும், பொருளியலே வாழ்வியலுக்கு அடிப்படையாக அமைந்த கூறாக உள்ளதாலும், செயல் கூறுகளிலேயே, போட்டிகள், பொறாமைகள், கீழறுப்புகள், வஞ்சகங்கள் முதலிய மாந்த அறிவு முயற்சிகளின் பெரும் பகுதிக் கூறுகள் இயங்குகின்றன.

எனவே, செயல் நிலைகளில் இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் பஞ்சமே இல்லை. அவரவரும் தமக்காகச் செய்யும் செயல் முயற்சிகளைவிட, தம் அண்டை அயலார் செய்யும் முயற்சிகளில் அதிகக் கவனமும் பொறாமையும் வைத்திருப்பது இயற்கையாகவே அமைந்திருக்கிறது. இஃது உயிர்களின் கூர்தலறபடிநிலை (பரிணாம) வளர்ச்சிகளில் ஒன்றாகவே அமைந்திருக்கிறது. விலியவரைப் பார்த்து

அவர் போல், மெலியவராகிய தாமும் முன்னேற, இஃதும் ஒரு வழியாக உயிர்களின் இயங்கியல் கூறாக அமைந்திருக்கிறது. உலகில் இரண்டு மாந்தர்களே எஞ்சியிருந்தாலும் ஒருவரை ஒருவர் அழிக்கவே முயற்சி செய்வர். தம்மைப்போல் இன்னொருவர் இருக்க அல்லது இயங்க, அவருக்குப் பிடிப்பதில்லை. உயிரியலின் இயங்கியல் கோட்பாடு இப்படித்தான் அமைந்திருக்கிறது. ஒரே ஒரு தனி மாந்தனுக்குள்ளேயே கருத்தளவிலும், உள்ளுறுப்புகளின் அளவிலும் கூட இப்போட்டி முயற்சிகளும் நடந்து கொண்டுதாம் இருக்கின்றன.

ஆகவே, செயல் நிலைகளில் எதிர்ப்புகளையும் பிறர் குறுக்கீடுகளையும் கொண்டு அஞ்சத் தேவையில்லை. அதனை ஒரு செயல் போட்டி என்றும், அஃது இயற்கை என்றுமே கருதிக் கொள்ளல் வேண்டும்.

4. பிறர் கூறு பழிகளைப் பொருட்படுத்தாமை: இதுவும் முந்திய வகை முயற்சியுணர்வே எனலாம். ஒருவரின் செயல் வலிமைக்கு எதிராக நின்று இயங்க முடியாதவர்கள், அல்லது இயங்கத் தெரியாதவர்கள், கருத்தளவில் எதிர் நின்று இயங்கும் உணர்வு இது. பொறாமைப்படுவது, எள்ளுவது, இழிப்பது, பழிப்பது, எதிர்ப்பது, பகைப்பது ஆகியன கருத்தளவானும், போட்டியிடுவது, இடையூறு விளைவிப்பது, வஞ்சிப்பது, ஏமாற்றுவது, அழிப்பது ஆகியவை செயலளவானும் நிகழுபவையாகும். எனவே இதுவும் உயிரியங்கியல் செயல்நிலை முயற்சிகளுள் ஒன்றேயாகும் என்று கருதி அதனைப் பொருட்படுத்தாத உணர்வை ஒரு செயலாளன் பெறுதல் வேண்டும் என்பது.

5. ஆடம்பரம் விரும்பாமை: ஆடம்பரம் என்பது அளவி மீறிய தேவைகளும், அவற்றைப் பெறுவதும் துய்ப்பதுமான கவர்ச்சியான செயற்பாடுகளே. இதுவும் பிறர்க்கு எரிச்சலூட்ட வேண்டும் எனபதற்காகவும் அவர்களுக்குத் தம்மின் மேனிலைகளை உயர்த்திக்காட்ட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தம்மைப் பார்த்து மனம் அழிய வேண்டும் என்பதற்காகவும் செய்யப் பெறும் போலிமை முயற்சிகள், இதுவும் பொறாமை உணர்வின் வெளிப்பாடே. எனவே இந்தச் செயலை உண்மையான செயல் விரும்பிகள் செய்யக்கூடாது என்பது.

6. எளிதாக நம்பு திறனும், எளிதாக நம்பாமையும்: முரண்பாடுகள் போல் தோன்றும் இவ்வுணர்வு ஒரு செயல் திறமுடையவனுக்கு மிகவும் தேவையான இரு எதிர் உணர்வுகளாகும்.

இவ்வுலகின் எல்லா வகைச் செயற்பாடுகளிலும் ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வைத்தே இயங்க வேண்டியுள்ளது. சிலரிடம் கொள்ளும் இந்நம்பிக்கையால் நன்மையும், சிலரிடம் கொள்ளும் நம்பிக்கையால் தீமையும் நேரலாம். இவ்விளைவுகளை முன்கூட்டியே உணர்ந்து கொள்வது கடினம். ஏனெனில் ஒருவர் மனத்தை அதன் உணர்வு நிலைகளை இன்னொருவர் முன்கூட்டியே சரியாக மதிப்பிட்டு அறிந்து கொள்ளுதல் இயலாது. அவற்றைப் பழகியே அறிதல் இயலும். அப்பழக்கத் தொடர்புக்கு முன் அவரொடு கொள்ளும் தொடக்க ஈடுபாட்டுக்கு அவரை நம்பவும் செய்தல் வேண்டும்; நம்பாமலும் இருத்தல் வேண்டும். அவரை முழுமையாக நம்பி விடுவதும், முழுமையாக நம்பாமலிருப்பதும் பின்வரும் பழக்கத் தொடர்புக்கு வாய்ப்பு அமையவும் அமையாலிருக்கவும் செய்து விடலாம். எனவே படிக்கட்டுகளில் நடப்பது போல், அடுத்துள்ள படிக்கட்டில் ஒருகால் வைத்து ஏறியே, அதற்கடுத்த படிக்கட்டில் இன்னொரு கால் வைப்பதான ஒரு முயற்சியாக இஃது இருக்க வேண்டும். முதலில் இரண்டு கால்களையும் ஒரு சேரவே அடுத்த படியில் வைக்காமல், இரண்டில் ஒன்றை முதலில் வைப்பது நம்பாமையையும், படி உறுதி என்று தெரிந்தபின் அடுத்த காலையும் எடுத்துவைப்பது நம்பிக்கையையும் குறிக்கும்.

இவ்வாறு மாறி மாறி நம்பிக்கையுடனும், நம்பாமையுடனும் செயலுறவில் ஒருவரிடம் பழகுதல் வேண்டும் படிக்கட்டுகளையெல்லாம் தாண்டிக் கடந்து ஒருவர் மேல் உள்ள சமதளத்துக்கு வந்துவிட்ட பின், இரண்டு கால்களையும் பாவ விடுவதுபோல், இருநிலை உணர்வுகளையும் தாண்டி அஃதாவது பழக்கக் காலத்தைத் தாண்டி முற்றும் நம்பிக்கை நிலையையோ முற்றும் நம்பாமை நிலயையோ ஒருவர் பெறுவது இயல்பாக ஆகிவிடும் என்க.

இனி செயல்கள் பலவகைப்பட்டனவாக இருப்பதால், அவற்றுக்குத் துணையாளர்களும், பணியாளர்களும் அவ்வவ் வகைச் செயல்களுக்கேற்பப் பலவகைப்பட்டவர்களாகவே இருப்பர்; இருத்தலும் வேண்டும்.

எனவே, மேலே கூறப்பெற்ற அனைத்து உணர்வுக் கூறுகளிலும் நாம் மேற்கண்ட செயல்களுக்கு மிகவும் தேவையான, அல்லது பொருந்துவதான உணர்வுக் கூறுகளைக் கொண்டவர்களையே நாம் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

இருப்பவர்கள் அல்லது கிடைப்பவர்களைக் கொண்டு செயல்படுவதென்பது வேறு. செயலுக்கு வேண்டியவர்கள் அல்லது பொருந்தக் கூடியவர்களைத் தேடிப்பிடித்து அமர்த்திச் செயலைச் செய்தல் அல்லது செய்வித்தல் என்பது வேறு. முன்னது பொது பின்னது சிறப்பு. ஒரு செயலை முன்னவர் போலவே செய்வது என்பது பொது. அவரை விட இன்னும் சிறப்பாகச் செய்வது என்பது சிறப்பு அதுவே வாழ்வில் பெருமை சேர்ப்பதும் ஆகும்.

பெருமை உடையவர் ஆற்றுவார், ஆற்றின்

அருமை உடைய செயல்

(975)பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்

கருமமே கட்டளைக் கல்.

(550)

என்னும் பொய்யா மொழிகளை ஒர்க, இவற்றுள்உள்ள 'அருமை', 'பெருமை' இரு சொற்களும் சிறப்புறச் செய்வதையும் குறிப்பனவாகும்.

நாம் செய்யும் அனைத்துச் செயல்களும், பொதுவாக நான்கு வகைப்பட்டன. உலகின் அனைத்துச் செயல்களையுமே இந்நான்கு கூறுகளுக்குள் அடக்கிவிடலாம்.

1. வாழ்வியல் நிறைவுச் செயல்கள் - அடிட்பபடைச் செயல்கள்:

இவை வாழ்வியலுக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் இவற்றை மட்டுமே நோக்கி அவற்றை நிறைவுறுத்துவதற்காகச் செய்யப்பெறும் செயல்களாகும். இவற்றை மட்டுமே செய்வதால் ஒருவர் எவ்வகைச் சிறப்பும் பெறுவதில்லை. இவை மாந்தராகப் பிறந்த அனைவரும் செய்யக் கூடிய செயல்களே ஆகும்.

2. வாழ்வியலுடன் கூடியஆளுமை செயல்கள் சிறப்புச் செயல்கள்:

முன்னர் கூறிய வாழ்வியல் நிறைவுச் செயல்களுடன் கலை, கல்வி, வாணிகம், வீரம், ஆட்சி முதலி ஒன்றனுள்ளோ, ஒன்றுக்கு மேற்பட்டனவற்றுள்ளோ ஈடுபட்டுச் சிறப்புறச் செய்யும் செயல்கள்.

3. வாழ்வியலுடன் ஒரு கொள்கை நோக்கிய செயல்கள் செயற்கரிய செயல்கள் :

இவை வாழ்வியல் நிறைவுச் செயல்களுடன், தம் அறிவுக்கும், உணர்வுக்கும் உகந்ததும், தமக்கன்றிப் பிறருக்கும் பயன்படுவதும் ஆன ஒரு கொள்கையை எடுத்துக் கொண்டு, செய்யும் அரிய செயல்களாகும். இவற்றுள் சமயம், மாந்த உரிமை, பொதுநலம், மாந்த மேம்பாடு

முதலியவை நோக்கிச் செய்யப் பெறும் செயல்கள் அடங்கும்.

4. வாழ்வியலைப் பெரிதாகக் கருதாமல், முழுவதுமாக ஒரு கொள்கை நோக்கிய செயல்கள். ஈகச் தியாகச் செயல்கள்:

இவை தந்நலம் கருதாமல் பொதுநலம் கருதி ஈகவுணர்வால் மூன்றாம் பகுதியில் கூறப்பெற்ற செயல்களைச் செய்வதாகும்.

இந்நான்கு வகைச் செயல்களுக்குமே துணையாளர்களும், பணியாளர்களும் தேவை. ஆனால் ஒவ்வொரு வகைச் செயலுக்கும் உரிய துணையாளர்களையும் பணியாளர் களையும் தேறுவதுதான் மிகவும் கடினமானது. ஆனால் அதனைச் செயலுக்கு முன் நிற்பவர்கள் திறம்படச் செய்துதான் ஆகவேண்டும். இல்லெனில் செயல் செய்வது கடினம் சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். (6.64) என்னும் திருக்குறட்பாவில் செயலருமை நன்கு கூறப்பெற்றிருப்பதை நன்றாக மனத்தில் இறுதிக் கொள்ளுதல் வேண்டும். சரியான துணையாளர்களும் பணியாளர்களும் அமையாத விடத்து, அச்செயல் இன்னும் பல மடங்கு கடுமையாகப் போய்விடும் என்று உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அதனால்தான் திருவள்ளுவப் பேராசானும்,

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

(517)

என்றும்

செய்வானை நாடி வினைநாடி காலத்தொடு

எய்த உணர்ந்து செயல்.

(516)

என்றும்

வினைக்குரிமை நாடிய பின்னை அவனை

அதற்குரியன் ஆகச் செயல்

(518)

என்றும் கூறி, வினைமுடிக்கத் தகுதியுடையவனையும் செய்யத் தகுந்தவனையும், வினையைத் தன்னுடையது என்று உரிமையுடையவனாகக் கருதுபவனையும் துணையாளாகவும் பணியாளாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

இனி, மேற்கூறிய நான்குவகைச் செயற்பாடுகளுள், முதல்வகைச் செயற்பாடுகளுக்கு அத்துணைத் திறமையுடைய ஆள்கள் தேவையில்லை. அஃதாவது ஒரளவு துணையாளராகவும் பணியாளர்களாகவும் இருந்தால் போதும்.

இரண்டாவது வகைச் செயற்பாடுகளுக்குத் துணையாக வரவேண்டியவர்கள் முதலாம் நிலையுடையவர்களை விடக் கூரிய அறிவுடையவர்களாகவும் சீரிய வினைத்திறம் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டுவது இன்றியமையாதது.

இனி, மூன்றாவது நான்காவது வகைச் செயற்பாடுகளுக்கோ கூரிய திறப்பாடுகளுடனும், உயரிய பண்புகள், பட்டறிவுகள், செயலறிவுகள், நடுநிலையுணர்வு, அவாவின்மை, பொருள் நசையின்மை, தந்நல மறுப்பு, ஈகவுணர்வு முதலியவை கட்டாயம் தேவையன்றோ? எனவே அத்தகைய உணர்வுடையவர்களையே நாம் தேர்ந்தெடுத்துத் துணையாளர் களாகவும் பணியாளர்களாகவும் அமர்த்துதல் வேண்டும்.

துணையாளர்களும் பணியாளர்களும் செப்பமற்றவர் களாக இருப்பின் வினைத்தொய்வு ஏற்படும். அதனால் சிறு சிறு அளவிலோ, பேரளவிலோ, ஒவ்வொரு முறையிலுமோ, ஒட்டுமொத்தமாகவோ இழப்புகள் நேரும் என்பதையும் சில நேரங்களில் இழப்புகளும் ஏதங்களும் கூட நேரும் என்பதையும் உறுதியாகத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

இனி, துணையாளர்களுள் உறவினர்கள் முதலானவர்கள் நல்ல உறவினர்கள் நல்ல துணையாளர்களாக இருப்பார்கள். அவர்கள் பொது நல உணர்வுள்ளவர்களாக அமையாதவிடத்து, வினைக்குத் தொல்லையாகவும் தடையாகவுமே அமைந்துவிடுவர். அவர்கள் நம்பிக்கை யுடையவர்களாக இருத்தல் மிக மிக இன்றியமையாதது.

உறவினர்கள் நல்ல உணர்வுடையவர்களாகக் கிடைக்காவிடில், நல்ல நண்பர்கள் துணையாக அமையலாம். நல்ல நண்பர்களைத் தேறுவது மிக்வும் கடினம். பெரும்பாலும் நல்ல நண்பர்கள் எனத் தகுதியுடையவர்கள், ஒருவரோ இருவரோதாம் அமைய முடியும். அன்பர்கள் எனப்படுபவர்கள் வேறு; நண்பர்கள் எனப்படுபவர்கள் வேறு. அன்பர்கள் எல்லாரும் நண்பர்கள் ஆகிவிட மாட்டார்கள். நல்ல நண்பர் என்பவர் மனைவிக்கு உள்ள உணர்வுடையவர்களாகவே இருப்பதும் இன்றியமையாதது.

நல்ல நட்புக்குரியவனே நல்ல நண்பனையும் பெற முடியும். நட்பு இருபுறத்தும் ஒன்றுபோல் இருக்கும் உணர்வுடையது. திருக்குறளில் நட்பைப்பற்றி நிறையக் கருத்துகள் கூறப்பெறுகின்றன. ஒவ்வொரு கருத்தைப் பற்றியும் ஒன்றிரண்டு அதிகாரங்களில், பத்து, இருபது. குறட்பாக்களாக எடுத்துக் கூறிய திருவள்ளுவப் பேராசான், நட்புணர்வைப் பற்றி மட்டும், நட்பு, நட்பாராய்தல் பழைமை, தீநட்பு,

கூடாநட்பு என்னும் ஐந்து சிறப்பதிகாரங்களையும் இகல், பகை மாட்சி, பகைத்திறந் தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை ஆகிய ஐந்து பொதுவதிகாரங்களையும் பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் ஆகிய இரண்டு பெண் வழி நட்பதிகாரங்களையும் ஆகமொத்தம், பன்னிரண்டு அதிகாரங்களில் நூற்று இருபது குறட்பாக்களை எடுத்துக் கூறுவது பெரிதும் கவனிக்கத் தக்கது. நட்புக்குத் திருவள்ளுவப் பெருமான் ஒரு சிறப்பிலக்கணம் கூறுவார்.அதை அனைவருமே மனத்தில் இருத்திக் கொள்வது நல்லது.

நாடாது நட்டலின் கேடுஇல்லை; நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.

(797)

என்பது அது. அஃதாவது நட்பு என்பது பிரிவு இல்லாதது. பிரிவு இருந்தால் முன்னர் கொண்ட தொடர்பு, நட்பு என்று பெயர்பெறாது. ஏதோ ஒன்றுக்காக ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகியிருக்கிறார் என்பதே பொருள். இணைந்தவுடன் எவரிடத்துப் பிரிவு என்பது (அஃதாவது தொடர்பு அறுவது இல்லையோ, அதுவே நட்பாகும். எனவேதான் ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார் அவர்.

எனவே, ஏதோ ஒரு செயலின் பொருட்டாக ஒன்று சேர்பவர் நண்பர் என்று கொள்ளப் பெறார். நண்பராக இருந்துதான் அவரை ஒரு செயலின் பொருட்டாக இணைக்கவோ துணையாகக் கொள்ளவோ வேண்டும். பழகுகின்ற எல்லாரையுமே நண்பராகக் கருதிச் செயலுக்குத் துணையாகக் கொண்டுவிடக் கூடாது. இதில் செயலுக்கு முனைந்தவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் செயல் தொடங்குகின்ற வரையில் ஒன்றாக இணைந்து நின்றவர்கள் அது தொடங்கி நடைபெறுகையில் வேறாகப் பிரிந்து விடுவதுதான் உலகில் பேரளவில் நண்டபெறுகிறது என்பது திருவள்ளுவர் கருத்து.

எனைவகையான் தேறிய கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்,

(541)

என்னும் குறளை முன்னரே உணர்ந்திருக்கின்றோம் அன்றோ?

8. துணையாளர்க்கும் பணியாளர்க்கும் உள்ள வேறுபாடுகள்

நல்ல துணையைளர்களை அமர்த்துதல் தொடர்பாக இதுவரை சில விளக்கங்களைப் பார்த்தோம். இனி, நம் செயலுக்குத் தக்கப் பணியாளர்களை அமர்த்துதல் தொடர்பாக மேலும் சில கருத்துகளைப் பார்ப்போம். அதற்கு முன்துணையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும்

உள்ள சில வேறுபாடுகளையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

துணையாளர்கள் என்பவர்கள், தொடங்கியுள்ள நம் செயலுக்குத் துணையாக இருந்து இயங்கும் தகுதி படைத்தவர்கள். அவர்கள் நம்மைப் போலவே செயல் நிலைக்கு உறுப்பாக இருப்பவர்கள். முதலீடு, உழைப்பு, ஊதியம் அல்லது இழப்புப் பகிர்வு முதலியவற்றுள் நம்மோடு ஒன்றி நின்று பங்கு பெறுபவர்கள் நமக்கு பகரமாக இயங்குபவர்கள்.

ஆனால் பணியாளர்கள் எனப்படுபவர்கள், நாம் அமைக்கின்ற செயலில் தொழில் செய்பவர்களாக அமர்த்தப்பெறுபவர்கள். அவர்களுக்கு நம் செயலைப் பற்றியோ, செயல் நோக்கத்தைப் பற்றியோ கவலையில்லை. இன்னும் தொழிலில் ஊதியம் வருவதைப் பற்றியும் இழப்பு வருவது பற்றியும் அவர்களுக்குக் கவலை இருக்காது. அவ்வாறு கவலைப்படுவதுபோல நடந்து கொண்டாலும் அதில் உண்மையிருக்காது. ஒருவேளை உண்மையிருந்தாலும் அக்கவலையோ அக்கறையோ நீடித்து அல்லது நிலைத்து இருக்காது. அவர்கள் உண்டு அவர்களின் பணி உண்டு என்றே பெரும்பாலும் இருப்பார்கள்.

எனவே செயல்திறமுள்ளவர்கள் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றியும், அவர்களை இயக்குவது பற்றியும் மிகு கவனம் செலுத்துதல் இன்றியமையாதது. தொழிலை அல்லது செயலைப் பொறுத்த வரையில், அதன் பின்புலம், பொருள், தொழில், திறன் எவ்வளவு வலியனவாக இருப்பினும், பணியாளர்கள் என்றும் கூறு திறமையாக அல்லது வலிவாக அல்லது செயலுக்குத் தடையில்லாத தன்மையுடையதாக அமையவில்லையானால் தொழில் அல்லது செயல் கெட்டுவிடும் என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். பணியாளர்களைப் பொறுத்த அளவில் அவர்களை, அவர்களின் மனஉணர்வை, செயல் திறத்தை, பழகுமுறையை, பொறுப்புகளை, அவர்கள் ஏற்றுக் கொள்ளும் தன்மையை நாம் முதலில் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் அவர்களை நடுநிலையான உணர்வுடன் நாம் நன்கு மதிக்கவும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

பணியாளர்கள் நம் அடிமைகளல்லர். ஒரு வகையில் அவர்கள் நம் செயலுக்குத் துணை நிற்கும் துணையாளர்களைப் போன்றவர்களே. அவர்களை நம் துணையாளர்களாகவே கருதுவதில் தவறில்லை. நம் செயல் நலன்களை நாம் எவ்வளவு பெரிதாகக் கருதுகிறோமோ, அதேபோல் அவ்வளவில் அவர்களின் நலன்களையும் நாம் கருதிப் பார்த்தல் வேண்டும்.

அவர்கள் நம்மேல் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு, நாமும் அவர்கள் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் நம் செயல்களின் மேல் அதிக அக்கறையும் ஆர்வமும் கொண்டு உழைக்க முன் வருவார்களானால் நாமும் அவர்களின் அக்கறைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ற மதிப்பும், பெருமையும், வெகுமதியும் தந்து அவர்களைப் போற்றிக் கொள்ளுதல் வேண்டும். நாம் செய்யும் செயல்களில், அக்கறையும் ஆர்வமும் ஊக்கமும் கொள்ளாத பணியாளர்களைப் பணிக்கு அமர்த்திக் கொண்டு, நம்மையும் வருத்திக் கொண்டு, நாம் செய்யும் செயலுக்கும் ஊறுவிளைவித்து விடுதல் கூடாது.

பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தொடக்கத்திலேயே மிகு கவனம் செலுத்துதல் நல்லது.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

(510)

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

(514)

என்னும் திருக்குறள் கூற்றுகள் ஒவ்வொரு பணியாளரையும் தேர்வதற்கு முன் நாம் மனத்தில் இருத்திக் கொள்ளக் கூடிய எச்சரிக்கைக் கருத்துகளாகும்.

"நன்றாக ஆராய்ந்து பாராமல் ஒருவரை நாம் பணியாளராக வைத்துக் கொள்ளலாம் என்று தெளிவுறுதலும், அவ்வாறு தெளிந்து தேர்ந்து கொண்டவர்மேல் நாம் அடிக்கடி ஐயப்பட்டுக் கொள்ளுதலும், இடைவிடாத துன்பத்தையே நமக்குத் தருவதாகும்” என்பதும்,

நாம் ஒருவரை அறிவு, அன்பு, பண்பு, வினைத்திறம், நடைமுறை, ஈடுபாடு, பொறுப்பு முதலிய அனைத்து நிலைகளாலும் தகுதியானவர் என்று பணிக்கு அல்லது வினைக்குத் தேர்ந்தெடுத்தாலும், அவரை வினைக்கு அமர்த்திய பின் தம் தகுதி நிலைக்கூறுகளில் நாம் எதிர்பார்த்த அல்லது முன்னிருந்த தன்மையில் வேறாக இயங்குபவர்கள் பலர் ஆக இவ்வுலகில் உள்ளனர்; ஆகையால் அவரும் மாறி போகலாம் என்பதும், தாம் எண்ணி ஆராய்ந்து பார்க்கத் தகுந்தன.

9. பணியாளர் குணங்கள்

ஒருவரை நம் வினைக்கு அல்லது தொழிலுக்கு பணியாளராக அமர்த்துதற்கு முன்னர் அவரைப் பற்றிய கீழ்க்காணும் குணநலன்களில் மிகு கவனம் செலுத்துதல் வேண்டும்.

1. அவர் நம் செயலில் ஈடுபட்டுப் பணியாற்றுதற்குப் போதிய கல்வியறிவு செயலறிவு ஆகிய இரண்டும் முழுமையாகப் பெற்றிருத்தல் வேண்டும்.

2. செயலில் தொடர்ந்து ஈடுபடுவதற்குரிய உடல் நலத்துடன் விளங்குதல் வேண்டும்.

3. அவர் தம் உடன் பணியாற்றும் பணியாளர்களுடன், மேலாளர்களுடன் இணக்கமாகப் பணியாற்றுதற்குரிய மனநலம், பண்புநலன், ஒத்துப்போகும் தன்மை ஆகியவற்றுடன் இருத்தல் வேண்டும்.

4. ஊக்கமுடன் உழைப்பவராகவும், தாழ்ச்சி, வீழ்ச்சி, இகழ்ச்சி முதலிய தொய்வுகளைப் பொருட்படுத்தாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பொய், திருட்டு, வஞ்சகம், ஏமாற்றுதல், புறம் பேசுதல், பணியாளர்களைக் கலைத்தல், அணி சேர்த்தல், போராட்டக்குணம் ஆகியவை அற்றவராக இருத்தல், நயன்மையான குறைபாடுகளைச் சுட்டினால் அவற்றை ஏற்றுக் களைந்து கொள்ளும் மனவுணர்வு பெற்றிருத்தல் முதலிய குண நலன்களுடன் விளங்குதல் வேண்டும்.

6. கூடியவரையில் தந்நலவுணர்வு மிக்கில்லாதவராகவும், பொதுநலவுணர்வில் ஆர்வமுடையவராகவும், நடுநிலை, நேர்மை உணர்வுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

7. தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்தவற்றுக்காகச் செருக்கடையாமல் பிறர்க்கும் அவற்றைத் தெரியச் சொல்லித் தருபவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணிகளை ஏவித்தான் செய்ய வேண்டும் என்றிராமல் தாமே அறிந்து கொள்ளவும், அறிந்தவற்றை எடுத்துச் செய்யவும், அவற்றைப் பதற்றமோ சிதர்வோ இல்லாமல் பொறுமையாகவும் திறமையாகவும், நுட்பமாகவும், செப்பமாகவும், கலையுணர்வுடன் அழகாகவும் செய்யத் தெரிந்தவராகவும், அவ்வாறு தெரியா விடத்து அவற்றுள் ஆர்வமுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

9. தமக்கு ஏதாவது பணித் தொடர்பான மனக்குறைகள் இருப்பின், அவற்றை வேறு யாரிடமும் கூறாமல், பணிப் பொறுப்பாளர்களிடம் நேரடியாகக் கூறித் தீர்வு காண விரும்புகிற தன்மை உடையவராக இருத்தல் வேண்டும்.

10. கூடியவரை குடி, சூதாட்டம், பொழுதுபோக்குக் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபாடு, இன்பநாட்டம், ஆடம்பரம் முதலியவற்றில்

தொடர்பும், அவை பொருட்டுப் பணத் தேவையும் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.

11. மணந்தவராக இருந்தால் குடும்பத்தில் ஈடுபாடும் அன்பும் அக்கறையும் உடையவராகவும், மணவாதவராக இருந்தால் தான்தோன்றியாகத் திரியாமல் இல்லறவொழுக்கத்தில் நாட்டமுடையவராகவும் இருத்தல் வேண்டும்.

12 ஆண் பணியாளர்களாக விருப்பின் உடன் பணியாற்றும் பெண் பணியாளர்களிடம் அமைவாகவும், பண்பாகவும், ஒழுக்கமாகவும் இயங்கவும், பெண் பணியாளர்களானால் ஆண் பணியாளர்களிடம் அடக்கமாகவும் வாயாடாமலும் அதே பண்புடனும் ஒழுங்குடனும் இயங்கவும் வேண்டும்.

10. சில இயலாமைகள்

இங்குக் கூறப்பெற்ற தகுதிகள் சிறப்பானவையே தவிர, பொதுநிலைக்கு இத்தகுதிகள் முழுவதும் உடையவர்களையே தேடிக் கொண்டிருக்க இயலாது. இவற்றுள் மிகுதியும் தகுதியுடையவர்களாகத் தேறும்பொழுது செயலும் மிகு சிறப்புடையதாக இருக்கும். அவ்வாறின்றிக் குறைவான தகுதியுடைய பணியாளர்களாக உள்ளவர்களை நாம் ஊக்குவித்து, முழுத் தகுதியுடையவர்களாக வளர்த்தெடுத்துக் கொள்ளவும் முடியும் என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

அத்துடன், நமக்கு வாய்த்த துணையாளர்களாயினும் பணியாளர்களாயினும், நாம் முன்னர் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒருவர் தகுதிக் குறைவானவராக இருந்தாலும், அல்லது தம் தகுதிகளை வளர்த்தெடுத்துக் கொள்ள இயலாத தன்மையுடையவராக இருந்தாலும், அவரை உடனே தவிர்த்து விட்டு, வேறு தகுதியாளரைப் பணியில் அமர்த்திக் கொள்வதில், நாம் கவனம் செலுத்தாமலோ தயக்கம் காட்டிக் கொண்டோ இருந்துவிடக் கூடாது. ஒருவேளை ஒருவர் தகுதியுடையவராக இருந்து, நமக்குப் பொருந்தாத உணர்வுடைய வராகவோ, மாறான போக்கினை யுடையவராகவோ இருந்தாலும், நாம் அவ்வாறானவரையும் உடனடியாக அப்புறப்படுத்தவும் வேண்டும்.

பெரும்பாலும் திறமையான செயலாற்றல் உள்ளவர்களிடத்தில், சிற்சில பொருந்தாத தன்மைகளும் இருக்கவே செய்யும். அவ்வாறே, திறமைக் குறைவானவர்களிடம் நமக்குப் பொருந்திய சிற்சில கூறுகளும் இருக்கலாம். அவ்வாறான நிலைகளில் முன்னவர்களைவிடப் பின்னவர்களை நாம் பணிக்கு அமர்த்திக் கொள்வது பிழையாகாது என்பதையும் நாம் எண்ணிப் பார்த்தல் நல்லது.