உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/இடையாற்றுமங்கலத்தில் ஓர் இரவு

விக்கிமூலம் இலிருந்து

30. இடையாற்றுமங்கலத்தில் ஒர் இரவு

இடையாற்றுமங்கலத்துக்குப் போய் அங்கே நிலவறையில் மகாமண்டலேசுவரர் ஒளித்து வைத்திருக்கும் ஆயுதங்களைக் கோட்டாற்றுப் படைத்தளத்துக்குக் கிளப்பிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று தளபதி தனக்குக் கட்டளை இட்டபோது ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதன் அதற்கு உடனே ஒப்புக் கொள்ளவில்லை.

“மகா சேனாதிபதி அவர்கள் கூறுவதுபோல் இது அவ்வளவு இலேசான காரியமாகப் படவில்லையே எனக்கு? இடையாற்றுமங்கலத்துக்குப் போய் நிலவறைக்குள் புகுந்து ஆயுதங்களை வெளியேற்றிப் பறளியாற்றைக் கடந்து இங்கே கொண்டுவர விடுகிற அளவுக்குப் பாதுகாப்புக் குறைவாக மகாமண்டலேசுவரர் வைத்திருக்கமாட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது!” என்று தன் சந்தேகத்தைத் தெரிவித்தான் அவன்.

“குழைக்காதரே! நீங்கள் சொல்வது சரிதான். இது ஒன்று மட்டுமில்லை; மகாமண்டலேசுவரருக்கு எதிராக நாம் எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும், அது நமக்கு இலேசான

காரியமாக இருக்காது. கடினமாகத்தான் இருக்கும். =2}চলrিéb கடினமாக இருக்குமென்பதற்காக நாம் சும்மா இருந்துவிடவும் கூடாது, முடிந்ததைச் செய்து தானாக வேண்டும்.”

“என்னால் முடிந்தவரை முயன்று பார்க்கிறேன். உதவிக்கு இங்கிருந்தும் சிலரை அழைத்துக் கொண்டு போகிறேன்” என்று குழைக்காதன் இணங்கியதும், தளபதி அவனுக்குச் சில விவரங்களை விளக்கினான். நிலவறைக்குள் எப்படிப் போவது, எவ்வாறு ஆயுதங்களை வெளியேற்றுவது என்பதையெல்லாம் விவரித்துச் சொன்னான். அன்றிரவு அங்கே படைத்தளத்திலேயே தங்கி விட்டு மறுநாள் வேறு சிலரையும் அழைத்துக் கொண்டு இடையாற்று மங்கலத்துக்குப் புறப்பட்டுவிட்டான் குழைக்காதன்.

பறளியாற்றைக் கடப்பதற்கும் ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கும் சொந்தமாக ஒரு தனிப் படகை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென்றும் இடையாற்றுமங்கலத்தில் அவர்கள் பிரவேசிக்கும் நேரம் இரவு நேரமாயிருக்க வேண்டுமென்றும் தளபதி வற்புறுத்திச் சொல்லியனுப்பி யிருந்தான். ஆபத்துதவிகள் தலைவனும், அவனோடு சென்றவர்களும் அந்தி மயங்குவதற்குச் சில நாழிகைக்கு முன்பே பறளியாற்றங்கரையை அடைந்து விட்டார்கள். அவர்கள் வேண்டுமென்றே மெதுவாகப் பயணம் செய்து வந்ததனால்தான் அவ்வளவு நாழிகையாயிற்று. இல்லையானால் இன்னும் விரைவான நேரத்திலேயே அங்கு வந்திருக்க முடியும். இடையாற்றுமங்கலத்துக்குப் பக்கத்தில் பறளியாற்றின் இக்கரையில் கிழக்கு மேற்காகச் சிறிதுதுாரத்துக்கு ஒரே ஆலமரக்காடு. ஆலமரங்களென்றால் சாதாரண ஆலமரங்கள் இல்லை. ஒவ்வொரு மரமும் படர்ந்து பரந்து, வளர்ந்து, பற்பல விழுதுகளை இறக்கிக்கொண்டு மண்ணின் மேல் தனக்குள் ஊன்றிக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் வயதான மரம். இத்தகைய மூத்த முதிர்ந்த ஆலமரங்களைத் தொன்மூதாலயம் என்று பழைய கவிகள் புகழ்ந்திருந்தார்கள். அந்தப் பகுதியின் நதிக்கரை மண்ணில் வெயிலின் கதிர்கள் படக்கூடாதென்று இயற்கை தானாகவே அக்கறைகொண்டு வேய்ந்து வைத்த பசுமைப் பந்தல் போல் மண்ணுக்கு

விண்ணையும், விண்ணுக்கு மண்ணையும் தெரியவிடாமல் அடர்ந்து செழுமையாய்ச் செம்மையாய்த் தண்மையாய் வளர்ந்திருந்தன. அந்த ஆலமரங்கள்.

அந்த இடத்தில் இடையாற்றுமங்கலத்தை ஒட்டிப் பறளியாற்றங்கரையில் சிறிது தொலைவுவரை பரவி நிற்கும் இயற்கையின் எழில்களை, பசுமையின் செல்வங்களைவளமையின் வகைகளை-உண்மையாக அனுபவிக்க வேண்டுமானால் ஓவியனின் கண்களும், கவியின் உள்ளமும், ஞானியின் உள்ளுணர்வும், குழந்தையின் பேதைமையும் வேண்டும்-அறிவின் எல்லைக் கோடாகிய மகாமண்டலே சுவரரின் இருப்பிடத்தைச் சுற்றிலும் இயற்கை செலுத்துகிற மரியாதைகள்தான் இப்படி மலர்ச் செடிகளாகவும் மரக் கூட்டங்களாகவும், பசுமைப் பெரும் பரப்பாய்த் தோன்றிப் பிரகிருதி என்னும் காணாக் கவிஞன் எழுதாத எழுத்தால் இயற்றி வைத்த பயிலாக் கவிதைகளாய்ப் பரந்து கிடக்கின்றனவோ? இவ்வளவு அழகிலும் அந்தச் சூழ்நிலையில் பறளியாற்று நீர் ஒலி, பறவைகளின் குரல்கள், மரங்கள் ஆடும் ஓசை தவிர செயற்கையான வேறு மண்ணுலக ஒசைகளே இல்லாத ஒரு தனிமையின் அடக்கம் இடையாற்றுமங்கலம் நம்பியின் மன ஆழத்தில் விளங்கிக் கொள்ள முடியாத தன்மைபோல் வியாபித்திருந்தது.

மங்கலம் என்றால் திரு நிறைந்தது, தூயது, அழகியது என்று பொருள். இடையாற்றுமங்கலம் அந்தப் பொருட் பொருத்தப் பெருமையைக் காப்பாற்றிக் கொண்டு காட்சியளித்தது. . . . . . . .

ஆபத்துதவிகள் தலைவனும் அவனுடன் வந்தவர்களும் பறளியாற்றங்கரை ஆலமரக் கூட்டத்தின் இடையே துழைந்தபோது, மாலை நேரமாக இருந்தாலும் பெரிதும் ஒளி குன்றி இருள் படர ஆரம்பித்திருந்தது. வழக்கமாகக் கரையிலிருந்து இடையாற்றுமங்கலத்துக்குப் படகு புறப்பட்டுப் போகும் நேரடியான துறை வழியே செல்வதற்கு அவர்கள் தயங்கினார்கள். ஆற்றில் சிறிது தொலைவு தள்ளிக் குறுக்கு வழியாகப் படகைச் செலுத்திக் கொண்டு போய்

இடையாற்றுமங்கலம் விருந்தினர் மாளிகைக்குப் பின்புறம் இறங்குவதற்கு ஏற்றாற் போல் செல்வதற்குத் திட்ட மிட்டிருந்தனர் அவர்கள். அதற்கு முன்னேற்பாடாகத் தங்களுக்கு வேண்டிய படகோட்டி ஒருவனை படகோடு புறப்படவேண்டிய இடத்தில் மறைந்து காத்திருக்கும்படி ஏற்பாடும் செய்திருந்தனர். இருட்டிச் சில நாழிகைகள் கழிந்தபின் புறப்படலாமென்று சொல்லி, நதிக்கரை நாணற்புதரிலும் தாழை மரங்களின் அடர்த்தியிலும் படகும் படகோட்டியும் மறைந்திருக்கச் செய்துவிட்டு -ஆலமரக் காட்டில் சுற்றித் திரிந்துகொண்டிருந்தார்கள் அவர்கள். -

தன்னோடு கூட வந்தவர்களைக் கிழே நிறுத்திவிட்டு ஒரு பெரிய ஆலமரத்தின் மேல் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு தாவி ஏறினான் ஆபத்துதவிகள் தலைவன். மிக உயரமான உச்சிக் கிளையில் ஏறித் தலைக்குமேல் குடைபோல் மூட்டம் போட்டிருந்த இலைகளின் அடர்த்தியை விலக்கிக் கொண்டு தலையை நீட்டிப் பார்த்தான். பறளியாற்றுக்கு அப்பால் இடையாற்றுமங்கலம் தீவும், மகாமண்டலேசுவரர் மாளிகையும், அதன் சுற்றுப்புறங்களும் நன்றாகத் தெரிந்தன. தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் இரவில் தீவுக்குள் போய் நிலவறையில் புகுந்து ஆயுதங்களைக் கடத்திக்கொண்டு எப்படி வெளியேறித் தப்புவது? என்று மனத்தில் முறையாகத் திட்டத்தை வகுத்துக்கொண்டே, ஆலமரத்துக் கிளையில் நின்று மகாமண்டலேசுவரர். மாளிகையையும், அதன் சுற்றுப்புறங்க்ளையும் கண்காணித்தான் அவன். நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. எவனோ கண்ணுக்குத் தெரியாத மாயாவி ஒருவன் தன் முரட்டுக் கைகளால் ஒளித்து வைத்திருந்த கறுப்புப் போர்வையை எட்டுத் திசையிலும் எடுத்து விரித்துப் போர்த்துவதுபோல் உலகத்தை இருள் தழுவிக்கொண்டு வந்தது. இருள் மாயாவியின் பயங்கரமான சூனியத்தனத்துக்கு வாழ்த்தொலி வழங்குவது போல் ஆந்தைகளின் குரல்கள் பலவாகப் பரந்து மூலைக்கு மூலை ஒலித்தன. இருட்டில் நடமாடும் பிசாசுகளைப் போல் மகர நெடுங்குழைக்காதனும் அவனோடு வந்திருந்தவர்களும் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். இருட்டில் சில நாழிகைகள் கழிந்ததும்,

தாழை மரங்களின் மறைவில் நாணற் புதருக்குள் மறைக்கப்பட்டிருந்த படகை அதிகம் ஒலியுண்டாக்கிவிடாமல் மெல்ல வெளிக் கிளப்பிக்கொண்டு வந்தான் அதற்கு உரியவன். மகர நெடுங்குழைக்காதனும், அவனோடு இருந்தவர்களும் படகில் ஏறி அமர்ந்து கொண்டார்கள். படகு பறளியாற்றில் நகர்ந்து முன்னேறியது. பழக்கமில்லாத அந்தப் புதிய படகோட்டி படகை மெதுவாகச் செலுத்திக்கொண்டு போய் இடையாற்று மங்கலத்துக் கரையில் விருந்தினர் மாளிகைக்குப் பின்புறம் புதர் அடர்ந்த பகுதியில் நிறுத்தினான். படகு நின்ற இடத்துக்கு நேரே விருந்தினர் மாளிகையின் பின்புறத்து வாயில் கதவு அடைத்திருந்தது. கதவுக்குக் கீழே வரிசையாகப் படிகள். படிகளில் நாலைந்தை நீரில் முழுகச் செய்து பறளியாறு பாய்ந்து கொண்டிருந்தது.

“நீங்கள் எல்லோரும் இப்படியே இந்த இடத்தில் இருங்கள். நான் முன்பக்கமாக விருந்தினர் மாளிகைக்குள் புகுந்து வந்து இந்தப் பின்புறத்துக் கதவைத் திறந்து விடுகிறேன்” என்று மற்றவர்களை அங்கேயே நிறுத்தி விட்டு முன்புறம் சென்றான் மகர நெடுங்குழைக்காதன். மரங்களிலிருந்து உதிர்ந்திருந்த இலைச் சருகுகளில் கால் பதித்தால் எழுகிற சலசலப்பு ஒலி கூடக் கேட்கவிடாமல், பம்மிப் பம்மி நடந்துபோய் விருந்தினர் மாளிகையில் புகுந்து விட்டான் அவன். காவல் வீரர்களெல்லாம் அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவு தள்ளியிருந்த மகாமண்டலேசுவரர் மாளிகையைச் சுற்றியிருந்தார்கள். அரசுரிமைப் பொருள்கள் காணமல்போன சமயத்தில் மட்டும் தொடர்ந்து சில நாட்களுக்குத் தீவைச் சுற்றிலும் எல்லா இடங்களிலும் காவல் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. பின்பு நாளாக ஆக அந்தக் காவல் ஏற்பாடு சுருங்கித் தீவின் பிரதான மாளிகை அளவில் நின்று விட்டிருந்தது. அதனாலும் செறிந்து, கனத்த இருட்டும் மரங்களின் அடர்த்தியும் தனக்குச் சாதகமாக இருந்ததனாலும் ஆபத்துதவிகள் தலைவன் இடையாற்றுமங்கலத்தில் அந்த இரவில் அதிகம் துன்பப்படவில்லை. ஒருவன் வைத்து விட்டுப்போன பொருளை அவனே திரும்பி வந்து அடையாளமாக எடுத்துக் கொண்டு போகிற மாதிரிக் காரியம் சுலபமாக நடந்தது.

சொல்லி விட்டிருந்தபடியே எல்லாவற்றையும் செய்தான். விருந்தினர் மாளிகைக்குப் பின்புறம் படகை நிறுத்தி, அதற்கு நேரே இருந்த கதவையும் திறந்து வைத்துக் கொண்டது, அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. அவன் முன்னேற்பாடாகக் கையோடு கொண்டு வந்திருந்த தீப்பந்தத்தைக் கூட நிலவறைக்குள் கொண்டு போய்த் தீக்கடையும் கற்களைத் தட்டிக் கொளுத்திக்கொண்டான். விறகுக் கட்டைகளை மணிக்கயிற்றால் கட்டுவது போல் இரண்டொரு நாழிகைக்குள் அங்கிருந்த ஆயுதங்கள் கட்டப்பட்டன. கட்டப்பட்டதற்கு ஆகிய காலத்தில் நான்கில் ஒரு பங்குகூட அவற்றைப் படகில் கொண்டு வந்து வைப்பதற்கு ஆகவில்லை. விருந்தினர் மாளிகைக்குள் புகுந்து குறுக்கு வழியாகப் பின்புற வாயிலை ஒட்டி நின்ற படகில் கொண்டுவந்து அடுக்கிவிட்டார்கள். படகில் பாரம் அதிகமாகிவிட்டது. தன்னைத் தவிர இன்னும் ஓர் ஆள்தான் ஏறிக்கொள்ள முடியும் என்று படகோட்டி உறுதியாகச் சொல்லிவிட்டான். அக்கரைக்குப் போய் அடர்த்தியான ஆலமரக் காட்டில் ஆயுதங்களை எங்காவது ஒரு மறைவான இடத்தில் ஒளித்து வைத்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டால் பின்பொரு நாளிரவில் வசதியான வாகனத்தோடு வந்து அவைகளைக் கோட்டாற்றுப் படைத்தளத்துக்குக் கொண்டு. போய்விடலாமென்பது குழைக்காதனின் திட்டம். தன் திட்டப்படி செய்து வெற்றிகரமாக நடந்து, தளபதியிடம் செல்வாக்குப் பெறலாம் என்று அவன் நம்பினான். மனத்தையும், சிந்தனைகளையும், அறிவையும் நம்பாமல் உடல் வன்மையாலேயே வெற்றிகளைக் கணக்கிட்டுக் கொண்டு போகும் மனம் அவனுக்கு. -

படகோட்டி ஓர் ஆள்தான் ஏறிவர முடியும் என்று சொன்னவுடன். “ஆற்றில் வேகம் அதிகமில்லை; நீங்களெல்லாம் மெதுவாக நீந்தி அக்கரைக்கு வந்துவிடுங்கள். நான் படகில் போய் விடுகிறேன்” என்று தன்னோடு வந்தவர்களுக்கு உத்தரவு போட்டுவிட்டுப் படகில் ஏறிக்கொண்டான் குழைக்காதன். ‘கவிழ்ந்து விடுமோ என்று பயப்படுகிற அளவு பாரம் இருந்ததனால் நத்தை ஊர்வதைவிட மெதுவாகப் படகு செலுத்தப்பட்டது. அதன் காரணமாக ஆற்றில் குதித்து நீந்த

ஆரம்பித்தவர்கள் படகு நடு ஆற்றைக் கடப்பதற்கு முன்பே அக்கரையை அடைந்து விட்டார்கள்.

“மகாமண்டலேசுவரரையும், அவருடைய சாமர்த்திய சாலியான அந்தரங்க ஒற்றனையுமே கண்களில் விரல்விட்டு ஆட்டி ஏமாற்றியிருக்கிறேன் நான். கேவலம், இந்த இடையாற்றுமங்கலத்தில் வேலைப் பிடித்துக் கொண்டு நிற்கும் நாலைந்து யவனக் காவல் நாய் களா என்னைப் பிடித்துவிடப்போகின்றன? நீ சும்மா பயப்படாமல் படகை ஒட்டிக் கொண்டு போ, அப்பா!’ என்று படகோட்டிக்குத் தைரியமூட்டிக் கொண்டிருந்தான் குழைக்காதன். அவனுடைய அந்த இருமாப்பான பேச்சின் ஒலி அடங்குவதற்கு முன் இருப்புறமும் நெருங்கி வந்த ஆபத்துக்கள் அவன் ஆணவத்தை அடக்கி முற்றுப்புள்ளி வைத்தன. சற்றுமுன் அவனால் நாய்கள் என்று வருணிக்கப்பட்ட இடையாற்றுமங்கலம் மாளிகையைச் சேர்ந்த யவனர் காவல் வீரர்கள் வலது பக்கத்திலும், இடது . பக்கத்திலுமாக இரண்டு படகுகளில் வேகமாக வளைத்துக் கொண்டு அவனது ஆயுதங்கள் நிறைந்த படகை அணுகிக் கொண்டிருந்தனர். ஆபத்துதவிகள் தலைவன் தன்னை நெருங்கும் ஆபத்தை எண்ணி மலைத்தான். படகை வேகமாக ஒட்டிக் கொண்டு கரைக்குப் போய்விட முடியாமல் பாரம் தடுத்தது. அகப்பட்டுக் கொண்டாலோ அதைவிடக் கேவலம் வேறு இல்லை. அவனுக்கு மட்டும்.கேவலமில்லை. அவனால் தளபதியின் பெயருக்கும் கேவலம், அவன் திகைத்தான். கள்ளிப்பழம் போல் சிவந்து கொடுமை குடியிருக்கும் அவன் கண்கள் கொடுரமாக உருண்டு புரண்டு விழித்தன. ஏற்கெனவே கடுமையான முகத்தில் கொடுமை வெறி கூத்தாடியது, அடுத்த கணம் முன்புறம் பார்த்துப் படகைச் செலுத்திக் கொண்டிருந்த படகோட்டியின் முதுகுக்குமேல் பிடரியைத் தன் இரும்புக் கரங்களால் பிடித்துத் தலைக்குப்புறத் தண்ணிரில் தள்ளினான். படகோட்டியின் அலறல் தண்ணிர் ஒசையில் சிறிதாக மங்கி விட்டது. படகின் ஒரு மூலையைக் காலால் ஓங்கி மிதித்து அது கவிழத் தொடங்கியதும் தண்ணீரில் பாய்ந்து மூழ்கினான் குழைக்காதன்.

பா.தே.33

தண்ணிர்ப் பரப்பில் வேகமாக நீந்தினால் தெரிந்துவிடும் என்பதற்காக மூச்சடக்கிக் கரையைக் குறிவைத்து நீரின் ஆழத்திலேயே முக்குளித்து நீந்தினான் அவன். கடத்திக் கொண்டு வந்த ஆயுதங்களோடு படகைக் கவிழ்த்தது பற்றி அவனுக்குக் கவலை இல்லை. யவனக் காவல் வீரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு மானத்தையும், பெருமையையும் கவிழ்த்து மூழ்கடித்துக் கொண்டு கேவலப்பட்டு நிற்க் நேர்ந்துவிடக் கூடாதே என்பதுதான் இப்போது அவனுடைய ஒரே கவலை. எத்தனையோ ஆபத்துக்களைக் காத்து உதவ வேண்டியவன் அவன். இப்போது அவனுடைய ஆபத்துக்கு உதவ ஆளின்றி ஆபத்தில் மூழ்கி வேகமாக நீந்திக் கொண்டிருந்தான். கனமான பருத்த சரீரம் உடைய அவனுக்குத் தண்ணிரில் மூழ்கி மூச்சடக்குவது கடினமாயிருந்தது. இடையிடையே தலையை வெளியே நீட்டி மூச்சுவிட்டுக் கொண்டு மறுபடியும் மூழ்கி நீந்தினான். ஒருவழியாக ஆய்ந்தோய்ந்து போய்த் தள்ளாடிக் கொண்டே கரையை அடைந்து விட்டான். அங்கே முன்பே நீந்தி வந்திருந்தவர்கள் நாண்ற் புதரில் புதுங்கிக் காத்திருந்தார்கள். குழைக்காதனுக்கு நீந்திவந்த களைப்புத் தீர ஒய்வு கொள்ளக்கூட நேரமில்லை. தன் ஆட்களையும் கூட்டிக் கொண்டு,ஆலமரக் காட்டில் புகுந்து ஓட்டம் எடுத்தான். -

மறுநாள் உலகைப் போர்த்த மெல்லிருட்டுப் போர்வை விலகும் அருங்காலை நேரத்தில் மகர நெடுங்குழைக்காதனும் அவன் ஆட்களும் கோட்டாற்றுப் படைத்தளத்தில் தளபதிக்கு முன்னால் நின்றார்கள். குழைக்காதன் கூறியவற்றையெல்லாம் கேட்டு முடித்த வல்லாளதேவன் பெருமூச்சோடு பேசினான். “குழைக்காதரே! நீங்கள் படகை மட்டும் பறளியாற்றில் தலைக்குப்புறக் கவிழ்க்கவில்லை. நீங்களே கவிழ்ந்து விட்டீர்கள். நம்முடைய திட்டத்தையும் கவிழ்த்து விட்டீர்கள். ஆனாலும் பரவாயில்லை. இதை நான் மன்னித்துத்தானாக வேண்டும்.”

, “மகாசேனாதிபதிக்கு என் நிலை புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். அந்த ஆபத்தான சூழ்நிலையில் படகைக் கவிழ்த்து விட்டு நான் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை.”

“படகோட்டி என்ன ஆனான்?” o

“அவன் அநேகமாக நீந்தித் தப்பியிருப்பான். அவன் அகப்பட்டுக் கொண்டாலும், தப்பினாலும் அவன் மூலம் நம்முடைய எந்த இரகசியமும் வெளிவராது. அவன் எனக்கு மிகவும் வேண்டியவன். ‘உன் வாயிலிருந்து இரகசியம் வெளியேறினால் கழுத்திலிருந்து தலையை வெளியேற்றி விடுவேன்’ என்று முன்பே பயமுறுத்தி வைத்திருக்கிறேன்.”

“எப்படியானால் என்ன? ஆயுதங்களை அங்கிருந்து வெளியேற்றியாயிற்று. இனிமேல் கவலை இல்லை. நீங்கள் வழக்கம் போல் அரண்மனையில் போய் இருங்கள். மகாராணியாரைப் பாதுகாத்து வரவேண்டும். மகாமண்டலே சுவரருடைய செயல்களிலும் உங்கள் கண்காணிப்பு மறைமுகமாக இருக்கட்டும்” என்று சொல்லி, மகரநெடுங்குழைக்காதனை அரண்மனைக்கே மீண்டும் அனுப்பிவைத்தான் தளபதி.