பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/கூத்தன் தப்பினான்

விக்கிமூலம் இலிருந்து

5. கூத்தன் தப்பினான்

பITரிடமோ காண்பிக்க வேண்டிய கோபதாபங்களை யெல்லாம் தங்களுடன் அகப்பட்டுக் கொண்ட கூத்தனிடம் காண்பிக்க ஆரம்பித்துவிட்டார்கள் சேந்தனும் குழல்வாய் மொழியும். கூத்தன் இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவித்தான். இன்னும் சில நாழிகைகளில் அவர்கள் பேசிப் பேசித் தன்னை உயிரோடு சித்திரவதை செய்து விடுவார்களோ என்று நினைத்து அஞ்சுகிற அளவுக்கு அவனைப் பாடாய்ப் படுத்திவிட்டார்கள். தன் குட்டு வெளிப்பட்டு அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டால் என்ன ஆகுமோ என்ற பயமும் கூத்தனுக்கு ஏற்பட்டுவிட்டது. ஈழ மண்டலப் படைத் தலைவர் வந்து விசாரணை செய்யும் முன்பே குழல்வாய்மொழியும், சேந்தனும், தன்னை இன்னாரென்று புரிந்துகொள்ள நேர்ந்தால் தனக்கு அது பெருத்த அவமானமாகிவிடும் என்பதைக் கூத்தன் உணர்ந்துகொண்டான். அப்படியில்லாமல் படைத்தலைவர் வந்து விசாரணை செய்த பின் அகப்பட்டுக் கொண்டாலும் அவமானம்தான். மேலும், முன்கூட்டியே அந்தக் கப்பலிலிருந்து தப்பிக் கரையேறினால் அதனால் ‘கூத்தனுக்கு எவ்வளவோ நன்மை உண்டு. நா. பார்த்தசாரதி 60?

‘கூத்தன் நேரம் எப்போது வாய்க்கப்போகிறதென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சிந்தனை கூர்மை யாகித் தப்பும் வழிகளை ஒவ்வொன்றாகச் சிந்தித்தது. சாத்திய அசாத்தியங்களை ஆராய்ந்தது. சற்றே அதிகமான துணிச்சலும் உண்டாகியிருந்தது. தப்புவதற்காக எப்படிப்பட்ட காரியத்தை வேண்டுமானாலும் செய்வதற்கு உறுதி பூண்டிருந்தான் அவன். நண்பகலில் உச்சி வெயில் கொடுமையாக இருந்தது. கரையிலிருந்த காட்டின் காற்றும், நீரின் குளிர்ச்சியும் அந்த வெம்மையைச் சிறிது தணிக்க முயன்றன. அப்போது கூத்தன் தப்புவதற்கு ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லோரும் உணவு உட்கொண்டு முடிந்து சிறிது நேரம்தான் ஆகியிருந்தது. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு அல்லவா? சேந்தன் மேல்தளத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த இடத்திலேயே ஒரு பாய்மரக் கம்பத்தில் சாய்ந்துகொண்டு காலை நீட்டிக் கண்ணயர்ந்திருந்தான். குழல்வாய்மொழி கீழ்த்தளத்திலிருந்த தனது அறைக்குள் இருந்தாள். மற்றக் கப்பல் ஊழியர்கள் எல்லோரும் சேந்தனைப் போலவே மேல்தளத்தில் அயர்ந்து போய்க் கிடந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத் துங்காமல் உட்கார்ந்திருந்த ஆள் கூத்தன் ஒருவன்தான்.

ஒரு திடமான முடிவுடன் அவன் எழுந்தான். ஒசைப் படாமல் அடிமேல் அடிவைத்து மெல்ல நடந்து, கீழ்த்தளத்துக்கு இறங்கிப் போனான். குழல்வாய்மொழியின் அறை திறந்துதான் இருந்தது. கூத்தனுக்கு உடம்பெங்கும் வியர்த்தது. ஒரு கையால் வாளின் துனியைப் பற்றிக் கொண்டே ஒரமாக ஒதுங்கி நின்று மெதுவாகத் தலையை நீட்டி அறைக்குள் எட்டிப் பார்த்தான். குழல்வாய்மொழி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். கூத்தன் விருட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து கதவை உட்புறத்தில் தாழிட்டுக் கொண்டான். அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த பெரிய தந்தப்பெட்டியைத் திறந்தான். பெட்டிக்குள் மகாமண்டலேசுவரரின் அருமைக் குமாரிக்குச் சொந்தமான பட்டுப் புடவைகளும், மற்ற அலங்காரப் பொருள்களும் அடுக்கடுக்காக இருந்தன. அவற்றில் ஒரு புடவையும் பட்டுக்கவசமும் எடுத்துக்கொண்டு குழல்வாய் மொழியின் தூக்கம் கலைந்து அவள் எழுந்துவிடாமல் மெதுவாக நடந்து

அதே அறையின் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றில் போய் மறைந்தான் கூத்தன்.

அவன் மறைந்த இடம் பெண்கள் கப்பலில் தங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக மறைவிடம்போல் பட்டுத் திரைகளால் தடுக்கப்பட்டிருந்த ஒதுக்கிடமாகும். அவன் அந்தத் திரைமறைவில் போன சிறிது நேரத்துக்கெல்லாம் தற்செயலாக விழித்துக்கொண்ட குழல்வாய்மொழி படுக்கையில் எழுந்திருந்து உட்கார்ந்துகொண்டாள். தான் காற்றுக்காகத் திறந்து வைத்துவிட்டுப்படுத்துக்கொண்ட அறைக்கதவை எப்போது யார் உட்புறம் வந்து தாழிட்டிருக்க முடியுமென்ற சந்தேகம் அவளுக்கு ஏற்பட்டது. படுக்கையில் உட்கார்ந்தபடியே அறைக்குள் நான்கு பக்கமும் மேலோட்டமாகப் பார்த்து, வேறு யாரும் தன் அறைக்குள் இல்லையென்று தீர்மானித்தாள் குழல்வாய்மொழி. ஆனால் அதே சமயம் தன்னுடைய கலிங்கங்களும் (ஆடைகளும்) அலங்காரப் பொருள்களும் அடங்கிய தந்தப்பெட்டி திறந்து கிடந்ததைப் பார்த்தவுடன் அவளுடைய சந்தேகமும், பயமும் மேலும் வளர்ந்தன. அவள் முதுகுக்கு நேரே பின்புறம்தான் அந்த மறைவிடம் இருந்தது. எழுந்திருந்து வாசல் கதவைத் திறந்து சேந்தனையாவது, கூத்தனையாவது கூப்பிட்டு அறையை நன்றாகச் சுற்றிப்பார்க்கச் சொல்லலாமென்று நினைத்தாள் குழல்வாய்மொழி.

எழுந்திருப்பதற்காகப் படுக்கையிலிருந்து வலது காலை எடுத்து வைத்தாள் அவள். திடீரென்று பின்பக்கமிருந்து இரு மென்மையான கைகள் முரட்டுத்தனமாக அவள் வாயைப் பொத்தின. பயந்து வீரிட்டு ஓவென்று கூக்குரலிட நினைத்தாள் குழல்வாய்மொழி. முடியவில்லை. அவளது மென்மையான பொன்னிற உடல் பயத்தால் நடுங்கியது. கண்விழிகள் பிதுங்கின. தலையைச் சிரமப்பட்டுத் திருப்பிப் பின்புறம் பார்த்தாள். வனப்பே வடிவமாக ஒரு பெண் நின்று கொண்டு அவளை அந்தப் பாடுபடுத்திக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் உடுத்தியிருந்த பட்டுப்புடவையையும், கச்சையையும் (மார்பணி) குழல்வாய்மொழி கவனித்தாள். அவை தன் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை என்று தெரிந்தது. “ஒரு பெண்ணுக்கா அவ்வளவு துணிவு: ஒரு பெண்ணின் கைகளுக்கா அந்த

முரட்டுத்தனம்?"-பயத்துக்கும் நடுக்கத்துக்கும் ஊடே இப்படி ஒரு பெண்ணிடம் நடுங்கி நிற்கிறோமே என்ற ஆச்சரியமும் அவளை ஆட்கொண்டது.

அந்தப் பெண் ஒரு கையால் குழல்வாய்மொழியின் வாயைத் திறக்க முடியாதபடி அழுத்திப் பொத்திக்கொண்டே, இன்னொரு கையால் கூர்மையான வாளை அவள் முகத்துக்கு நேரே காட்டி, “இடையாற்றுமங்கலத்து அழகியே! உன் பயம் அநாவசியமானது. கொஞ்சம் என் முகத்தையும், குரலையும் கவனித்துப் பார். நான் யாரென்பது தெரியும். உன் உயிருக்கோ, உடலுக்கோ என்னால் ஒரு துன்பமும் ஏற்படாது. ஆனால் நீ மட்டும் கூச்சல் போட்டு என்னைக் காட்டிக் கொடுக்க முயன்றாயோ, நான் எப்படி நடந்து கொள்வேன் என்று உறுதியாகச் சொல்ல முடியாது” என்று கூறினாள். குழல்வாய் மொழி நன்றாகத் தலையைத் திருப்பி மருண்ட விழிகளால் அந்த முரட்டுப் பெண்ணின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுக்கு அந்த உண்மை புரிவதற்குச் சில விநாடிகள் தேவைப்பட்டன. ஆகா! இந்தக் கீச்சுக்குரலும் அழகு முகமும் கூத்தனுடையவை. அல்லவ்ா? கூத்தன் ஆணா பெண்ணா? இப்போது நான் காண்பதுதான் அவனுடைய உண்மைக்கோலமா? அல்லது காலைவரையில் கண்ட ஆண் கோலம்தான் உண்மையா? என்று எண்ணி மனம் குழம்பினாள் குழல்வாய்மொழி, அவளுடைய நினைவுகள் தடுமாறின.

“இன்னும் நன்றாக உற்றுப் பார்த்தால் என்னை நீ தெளிவாய்த் தெரிந்துகொள்ளலாம், அம்மா! எந்த வல்லாள தேவனின் தங்கையைப் பற்றி நேற்று நீங்கள் சேந்தனிடம் மிக அலட்சியுமாக விசாரித்தீர்களோ, அந்தப் பெண் பகவதிதான் இப்போது உங்களைப் பயமுறுத்திக்கொண்டு நிற்கிறாள்” என்று சிரித்துக்கொண்டே அந்தப் பெண் தன்னைப் பற்றிக் கூறியபோது குழல்வாய்மொழியின் கண்கள் ஆச்சரியத்தால் அகன்றன. பகவதி மேலும் பேசினாள்: “இன்னும் கேள்! நீயும் சேந்தனும், சந்திப்பதற்கு முன்பே நான் குமாரபாண்டியரைச் சந்தித்துவிடுவேன். அப்படிச் சந்தித்தால் உங்கள் வரவைப் பற்றிச் சொல்கிறேன். என்னை இதே கப்பலில் பிரயாணம் செய்ய

விட்டதற்காக நான் உனக்கு எவ்வளவோ நன்றி சொல்ல வேண்டியதிருக்க இப்படிக் கத்தியைக் காட்டிப் பயமுறுத்துகிறேனே என்று கோபிக்காதே. இப்போது செய்திருப்பது போல் உன் வாயை அடக்காமல் விட்டிருந்தால் இந்தச் சமயத்தில் வியப்பு மயமான உன் உள்ளத்து உணர்ச்சிகள் என்னை நோக்கி எவ்வாறு வார்த்தைகளாக வெளியேறுமோ? என்னென்ன கேள்விகள் என்னிடம் நீ கேட்பாயோ? எப்படி எப்படிச் சீறுவாயோ? அவற்றை அறிந்துகொள்ளும் ஆவல் எனக்கு இல்லை. நான் இப்போது இந்தக் கப்பலிலிருந்து அவசரமாகத் தப்பிச் செல்லப்போகிறேன். இதோ இந்தக் கீழ்த்தளத்திலிருந்து கயிற்றைக் கட்டிக்கொண்டு பின்புறமாகக் கடலில் இறங்கிச் சிறிது தூரம் நீந்திக் கரை சேர்ந்துவிடுவேன். அதற்குள் கூச்சல் போட்டு நீ என்னைக் காட்டிக் கொடுத்து விடலாமென்று நினைக்காதே! கூச்சல் போடவோ, நகரவோ முடியாமல் உன்னை இந்த அறையில் கட்டிப்போட்டு விட்டுத்தான் நான் புறப்படுவேன். ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் இவ்வளவு கொடுமையாக நடந்து கொள்ள முடியுமா? என்று என்னைப் பற்றிக் கேவலமாக நினைக்காதே! சந்தர்ப்பம்தான் காரணம், அம்மா. வாயை அடைக்காமலும் கத்தியைக் காட்டாமலும் இருந்தால் நீயே எனக்குப் பயப்படமாட்டாய். அதனால்தான் நான் இப்படி நடந்து கொள்ள வேண்டியதாயிற்று.”

இவ்வாறு சொல்லிக்கொண்டு குழல்வாய்மொழியைப் படுக்கையில் தள்ளிக் கட்டிலோடு கட்டிலாகக் கயிற்றினால் கட்டி விட்டாள் பகவதி. குழல்வாய்மொழியின் மென்மையான கொடியுடல் வீர ரத்தம் ஒடும் தளபதியின் தங்கையை எதிர்த்துத் திமிறிக்கொண்டு போராட முடியவில்லை. ஆகவே கட்டுண்டாள்.

அவள் கண் காணவே அறைக்கதவைத் திறந்து கொண்டு கப்பலின் பின்புறத்து வழியே கயிறு கட்டி இறங்கிக் கடலில் பாய்ந்து விட்டாள் பகவதி. கயிற்றைப் பிடித்துக்கொண்டு இறங்குமுன் கடைசியாக நிமிர்ந்து பார்த்து, “இடையாற்று மங்கலத்துப் பெண்னே! நாராயணன் சேந்தன் வந்தால் கூத்தன் தன்னுடைய கூத்தை முடித்துக்கொண்டு போய் விட்டான்’ என்று சொல்லிவிடு!” என்று பகவதி கூறிச் சென்ற சொற்கள் குழல்வாய்மொழியின் உள்ளத்தைக் கொதிக்க வைத்தன. ‘ஏமாற்றப்பட்டோம் என்று நினைக்கும் போது குழல் வாய்மொழிக்கு வேதனையாக இருந்தது.

கட்டிலோடு கட்டியிருந்த கட்டுக்களை நெகிழ்க்க முயன்றாள் முடியவில்லை. அரை நாழிகைக்குப் பின் சேந்தன் தூக்கம் கலைந்து எழுந்த சோர்வோடு கொட்டாவி விட்டுக் கொண்டே கீழ்த்தளத்துக்கு வந்தான். அங்கே குழல்வாய்மொழி இருந்த நிலையைப் பார்த்ததும் பெரியதாகக் கூக்குரலிட நா எழுந்தது அவனுக்கு. அதை வலுவில் அடக்கிக் கொண்டு, கட்டுக்களை அவிழ்த்துத் தன் நினைவற்றுத் துவண்டு கிடந்த குழல்வாய்மொழிக்கு மூர்ச்சை தெளிவித்தான். நிதானமாகஆனால் கலவரமுற்ற மனத்தோடு “என்ன நடந்தது?’ என்று அவளிடம் கேட்டான். அவள் கோ வென்று வாய்விட்டுக் கதறி அழுதுவிட்டாள். அவன் அழுகையைத் தணித்து ஆறுதல் கூறி மெல்ல நடந்ததை அறிந்தான் சேந்தன். ‘கூத்தன் தன்னுடைய கூத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டான்” என்று அவள் அதைச் சொல்லி முடித்தபோது, “எனக்கு அப்போதே தெரியும் !” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னான் சேந்தன்.