பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/இருளில் எழுந்த ஓலம்
7. இருளில் எழுந்த ஒலம்
“பிட்கவையும் கூட்டிக்கொண்டு வாருங்கள். மூன்று பேரூறாக ஓடிப்போய்ப் பார்க்கலாம். அந்த அறியாப்பெண் நா. பார்த்தசாரதி - 6+3
எங்கே த.விக்கிறாளோ?’ என்று இராசசிம்மன் சக்கசேனாபதியைத் துரிதப்படுத்தினான். அத்தனை ஓசை களுக்குமிடையே அந்தப் பெண் குரலின் ஒலம் இன்னும் அவர்கள் செவிகளில் விழுந்துகொண்டுதான் இருந்தது.
ஓர் உயிரைக் காப்பாற்ற உதவும் திருப்பணியில் இந்த ஏழையின் உடல் எந்த விதத்திலானாலும் தன்னை இழக்கத் தயாராயிருக்கிறது என்று கூறிக்கொண்டு தாமாகவே எழுந்து வந்தார் புத்த பிட்சு. அந்த மழையையும் காற்றையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மூன்று பேரும் சிறிது துாரம் ஒடிப்போய் தேடிப் பார்த்தார்கள். அதற்குமேல் ஓடுவதற்குப் பாதையே இல்லை. ஏரி உடைப்பெடுத்துக் குறுக்கே பாய்ந்து கொண்டிருந்தது. “இனி நம்மால் ஆவது ஒன்றுமில்லை. அவளுக்கு வகுத்த வினைப்பயனின்படி ஆகும்” என்று சொல்லிக்கொண்டே திரும்பி நடந்தார் பிட்சு. அவர்களும் திரும்பி நடந்தார்கள். பிட்சு மறுபடியும் நிம்மதியாகத் துரங்கினார். பாம்புப் பயத்தை மறந்து சக்கசேனாபதி கூடத் தூங்கத் தொடங்கிவிட்டார். தண்ணீரைத் தாங்குகிற பளிங்குக் கிண்ணம் மாதிரி உணர்ச்சிகளை உணர்ந்தும் அவற்றுக்கு இரையாகாமல் வாழ இந்த இரண்டு வயதான மனிதர்களும் எங்கேதான் கற்றார்களோ என்று விழித்திருந்த இராசசிம்மன் எண்ணி வியந்தான். அந்தப் பெண்ணின் ஒலம் நின்றுவிட்டாலும் கேட்டுக்கொண்டே இருப்பதாக விழித்திருந்த அவன் செவிகளுக்குப் பிரமை உண்டாயிற்று. காற்றிலும், மழையிலும், இருளிலும் அந்தக் காட்டுக் கட்டிடத்தில் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் தன்மேல் தானாகவே ஒரு வெறுப்பு உண்டாயிற்று அவனுக்கு. -
மழை பெய்த ஈர மண்ணில், அனுபவமில்லாத சிறு பிள்ளை விளையாட்டுத்தனமாகக் கீறி வைத்த அரைகுறைச் சித்திரங்கள் மாதிரி இருக்கிறது, இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை வாழ்வின் உணர்ச்சிகளில் ஒன்றிலாவது முழுமையின் ஆழத்தைப் பார்க்கவில்லையே! பொறுப்பில், வீரத்தில், வெற்றியில்-எதிலும் முழுமை தெரியவில்லையே. அன்பு அல்ல காதல்; காதலும் அல்ல பாசம், இவற்றில்கூட முழுமையாக வாழவில்லை நான் எத்தனை நாட்களை இப்படிக் கழிக்க
முடியும்? கல்பகோடிக் காலம் வாழவேண்டாம். ஒரு திங்கட் காலம் வாழ்ந்தாலும் ஏதாவதொரு உணர்ச்சியில் முழுமையாகத் தோய்ந்து வாழவேண்டும், ஊழியூழியாக வாழ்வதைவிட இந்தச் சிறிது காலத்து முழுமை உயர்ந்தது, பெரியது இணையற்றது.
முழுமையைப் பற்றி நினைத்தபோது அவனுக்கு மதிவதனியின் நினைவு வந்தது. இடுப்பில் இடைக் கச்சத்துடன் சேர்த்துப் பிணைத்துக்கொண்டிருந்த சிறிய பட்டுப் பையைத் திறந்தான். இருளிலும் தன் நிறத்தையும், ஒளியையும் தனியே காட்டும் அந்தப் பொன்னிற வலம்புரிச் சங்கை எடுத்தான். பித்தன் செய்வதுபோல் கண்களில் ஒற்றிக்கொண்டான். கைவிரல்களால் வருடியவாறு மடியில் வைத்துக் கொண்டான். கப்பலில் தான் பாடிய கவிதை நினைவு வந்தது அவனுக்கு. உணர்ச்சித் துடிப்பைச் சொற்களின் நளினமாக்கிய விந்தையை நினைத்தபோது மட்டும் மனத்தில் முழுமை தோன்றுவது போலிருந்தது அவனுக்கு அரசாட்சியையும் வெற்றி தோல்விகளையும் எண்ணிப் பார்த்தபோது அவன் உணர்ச்சிகளில் முழுமை தோன்றவில்லை.
‘அருமை அன்னையும் மகாமண்டலேசுவரரும் தன்னிட மிருந்து எதிர்பார்த்த கடமைகளை நினைத்தபோது அவற்றில் முழுமை தோன்றவில்லை. ஏனென்றால் அந்தக் கடமைகளை அவன் இன்னும் நிறைவேற்றவேயில்லை. இடையாற்று மங்கலத்தின் அழகிய சூழ்நிலையில் குழல்வாய்மொழி என்ற பெண்ணோடு பழகிய பழக்கத்தை நினைக்கும்போதும் முழுமை ஏற்படவில்லை. மதிவதனி என்ற பெண்ணைச் சந்திக்க நேராமலிருந்தால் ஒருவேளை இடையாற்றுமங்கலத்து அழகியாவது, கனகமாலை என்ற பேரெழில் நங்கையாவது அவனைக் கவர்ந்திருக்கலாமோ, என்னவோ? வெள்ளத்தில் பழைய தண்ணிர் அடித்துக்கொண்டு போகப்படுகிற மாதிரி அவன் மனத்தின் அரைகுறை நினைவுகளையெல்லாம் மதிவதனி என்ற முழுமை இழுத்துக்கொண்டு விட்டதா? அல்லது அந்த முழுமையில் அவன், மூழ்கி விட்டானா? பார்க்கப்போனால் முழுமையான வாழ்வு என்பது தான் என்ன? என்னைப்போல் அரச குடும்பத்தில் பிறந்தவனுக்குப் போர்களும், அவற்றில் வெற்றி வாகை சூடுவதும் தான்
முழுமையான வாழ்வு என்று அரசியல் அறம் சொல்லலாம். அப்படிச் சொல்லுவது இதற்கு இலக்கணமாக இருக்கலாம். ஆனால் அது மட்டும் எனக்கு முழுமையான வாழ்வாகத் தோன்றவில்லையே? முழுமையாவது மண்ணாங்கட்டியாவது! அரசனாகப் பிறந்தாலென்ன ? ஆண்டியாகத் தோன்றினாலென்ன? பிறப்பது மண்ணில்தானே? வாழ்வதும் மனிதனாகத்தானே! மனிதனுடைய வாழ்க்கை; அது ஒரு ஒட்டைப் பானை. ஒரு பக்கம் முழுமை கண்டால் இன்னொரு பக்கமாக ஒழுகி விடுகிறதே! ஒன்றை நிறைவாக அனுபவித்தால் இன்னொன்றை இழக்கவேண்டியதுதான். நிறைவு, முழுமை யெல்லாம் அமர வாழ்க்கையில்தான் உண்டு போலிருக்கிறது. தேனிக்களை விரட்டாமல் தேனடையிலுள்ள தேனைக் குடிக்க முடியுமா? வாழ்விலுள்ள துன்பங்களைப் போக்காமல், குறைகளை நீக்காமல் முழுமையும் நிறைவும் காண்பது எங்கே? ‘அறத்தையும், அன்பையும், கருணையையும் கொண்டே வாழ்ந்துவிட என் தாய்க்கு ஆசை. அறிவையும், சூழ்ச்சியையும் கொண்டே வாழ்ந்துவிட மாகமண்டலேசுவரருக்கு ஆசை, படைகளையும் போர்க்களங்களையும், உடல் வன்மையையும் கொண்டே வாழ்ந்துவிட வல்லாளதேவனுக்கு ஆசை. இந்த ஆசைகள்தான் முழுமையான வாழ்வா? குழல்வாய்மொழி என்ற பெண்ணுக்குக் கூட என்னையும் எனது அரசபோக ஆடம்பரங்களையும் தனதாக்கிக்கொள்ளும் ஆசையிருக்கிறது. என்னுடைய பதவியும், பெருமையும், தகுதியும் தெரியாமலே என்மேல் அன்பு செலுத்தவும் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு என்மேல் இருக்கும் அன்போ எனக்கு அவள் மேலிருக்கும் அன்போதான் முழுமையானதா?
எது முழுமை? எது நிறைவு? அழியாதது எது? பரிபூரண மான வாழ்வு எது? என்னைப்போன்று பெரிய அரச மரபின் வழித்தோன்றலாக வந்த ஓர் இளைஞனுக்கு அது எப்படிக் கிடைக்கும்? என்று இப்படி உருக்கமான பல நினைவுகளை மனத்தில் அசைபோட்டுக் கொண்டிருந்தான் இராசசிம்மன்.
பொழுது விடிவதற்குச் சிறிது நேரத்துக்குமுன் சக்கசேனாபதியும் புத்தபிட்சுவும் தூக்கம் விழித்து எழுந்திருந்த போது வாசற்படியில் சாய்ந்து உட்கார்ந்தவாறே இராசசிம்மன்
கண்ணயர்ந்திருப்பதைக் கண்டனர். அவன் மடியில் சிறிய குழந்தை ஒன்று படுத்துத் துங்குவதுபோல் அந்தச் சங்கு கிடப்பதை பார்த்துச் சக்கசேனாபதி சிரித்துக்கொண்டார்.
முதல் நாள் காற்றும், மழையும் ஒய்ந்து போயிருந்தன. எனினும், அந்த மழையும் புயலும் உண்டாக்கிய சீரழிவுகளும் அலங்கோலங்களும் கண்பார்வை சென்ற இடமெல்லாம் தெரிந்தன. வானம் அழுக்கு நீக்கி வெளுத்து விரித்த நீலத்துணி போல் வெளிவாங்கியிருந்தது. அவர்களுடைய குதிரைகள் நனைந்து நிறங்கலைந்த மேனியோடு கட்டடத்துக்கு அருகில் ஒண்டிக்கொண்டு நின்றன. குமாரபாண்டியனைத் தொட்டு எழுப்புவதற்காக அருகில் சென்றார் சக்கசேனாபதி, ஆழ்ந்த தூக்கமில்லாமல் கண்களை முடிச் சோர்ந்து உட்கார்ந்திருந்ததால் அவருடைய காலடி ஓசையைக் கேட்டே விழித்துக்கொண்டான் அவன் சங்கை எடுத்துப் பட்டுப்பைக்குள் போட்டுக் கொண்டு எழுந்து நின்றான். சக்கசேனாபதியைப் பார்த்து, “அடடா பொழுது விடியப் போகிறது போலிருக்கிறது. நாம் புறப்படலாமா? நண்பகலுக்குள் எப்படியும் தமனன் தோட்டத்தில் இருக்கவேண்டும் நாம்” என்றான்.
“அவசரப்படாதீர்கள், இளவரசே! நேற்று மழையிலும் காற்றிலும் மரங்கள் ஒடிந்து பாதையெல்லாம் சீர்கெட்டிருக்கிறது. ஏரி உடைப்பினால் வேறு வழிகள் அழிந்திருக்கலாம். முதலில் சிறிது தொலைவு சுற்றித் திரிந்து பாதைகளைச் சரிபார்த்துக்கொண்டு வருவோம்” என்றார் சக்கசேனாபதி,
“தம்பி! பெரியவர் சொல்கிறபடி கேள். நிதானமாகப் பாதையைப் பார்த்துக்கொண்டு புறப்படுவதுதான் நல்லது! அவசரம் வேண்டாம். நானும் உங்களோடுதான் வரப் போகிறேன்” என்று புத்தபிட்சுவும் கூறினார். .
குதிரைகளை அங்கேயே விட்டுவிட்டு மூவரும் வழிகளைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். பெரிய பெரிய
தேங்கி வழியெல்லாம் சேறும் சகதியுமாக இருந்தது. ஏரி உடைத்துக்கொண்டு பாய்ந்தோடிய நீர்ப்பிரவாகம் சில இடங்களில் பாதையைப் பயங்கரமாக அறுத்துக் குடைந்தி ருந்தது. காற்றும் மழையும் கொண்ட கோபத்திற்கு ஆளாகி
அந்தக் காட்டின் அமைதியான அழகு தாறுமாறாகித் தோற்றமளித்தது.
“கண்ணுக்குத் தெரிகிற காட்சிகளைப் பார்த்தால் நேற்றிரவு அந்தப் பெண் உயிர் பிழைத்திருக்க முடியுமென்று என்னால் நம்பமுடியவில்லை. பாவம்! அவள் தலையில் எழுதியிருந்தது அவ்வளவுதான் போலிருக்கிறது” என்று புத்தபிட்சு பரிதாபமான குரலில் கூறினார். அவர் தம் வார்த்தையைச் சொல்லி முடிக்கவும், “அதோ பாருங்கள் அடிகளே! யாரோ விழுந்து கிடக்கிறாற் போலிருக்கிறது” என்று முகத்தில் பயமும், வியப்பும் படரச் சக்கசேனாபதி ஒரு புதரைக் கைநீட்டிக் காட்டிக் கூச்சலிடவும் சரியாக இருந்தது. முதல் நாளிரவு தண்ணிர் பாய்ந்து ஓடிய அடையாளம் அங்கே தெரிந்தது. மரக்கிளைகளின் முறிவுகளும் செடி கொடித்துறுகளும் அடர்ந்து பின்னிக் கிடந்த புதரில் தண்ணிர் இழுத்துவந்து செருகினாற்போல் அந்த உடல் கிடந்தது. தோற்றத்திலிருந்து பெண்ணுடல்தான் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
“அந்தப் பாவிப் பெண்ணாகத்தான் இருக்கும். நேற்று நான் எவ்வளவு ஆதரவோடு அவளிடம் பேசினேன். எப்படியாவது அவளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் என் உள்ளத்தில் உறுதியாயிருந்தது. ஆனால் புத்த பகவான் திருவுள்ளம் வேறாயிருந்திருக்கிறது. அடப் பாவமே! நேற்றே நான் சொல்லியபடி கேட்டிருந்தால் இப்படி ஆகியிருக்காதே! வாருங்கள் போய்ப் பார்க்கலாம்” என்று முன்னால் ஓடினார் புத்தபிட்சு. இராசசிம்மனும், சக்கசேனாபதியும் அவருக்குப் பின்னால் ஓடினார்கள். பிட்சு அந்தப் பெண்ணின் உடைகளைச் சரிசெய்துவிட்டு, “அவள்தான் ஐயா! அநியாயமாகச் செத்துத் தொலைந்திருக்கிறாள்!” என்று கூறிக்கொண்டே, அந்த உடலைப் புதருக்குள்ளிருந்து வெளியே தூக்கி வந்து முகம் தெரியும்படி தரையில் கிடத்தினார். சக்கசேனாபதியின் விழிகளில் அநுதாபம் மின்னியது. - - கண்களில் சந்தேகமும் பீதியும் மிளிரக் கொஞ்சம் கீழே குனிந்து அந்த முகத்தை உற்றுப் பார்த்தான் இராசசிம்மன். அவன் முகம் பயத்தால் வெளிறி வாய் கோணியது. அடுத்த கணம் அவன் வாயிலிருந்து வெளியேறிய ஒரு பெயர் அந்தக் காடு முழுவதும் எதிரொலித்து அலறிக் கொண்டிருந்தது.