தமிழ் வளர்த்த நகரங்கள்/தமிழ் வளர்த்த தில்லை

விக்கிமூலம் இலிருந்து
15. தமிழ் வளர்த்த தில்லை

இலக்கியத்தில் இறைமணம்

சங்ககால இலக்கியங்களிலிருந்து தற்கால இலக் கியங்கள்வரை எந்த நூலை நோக்கினாலும் அதில் இறை மணம் கமழாமல் இருப்பதில்லை. முழுதும் இறை மணமே கமழும் இயல்புடைய இலக்கியங்களைச் சமய நூல்கள் என்பர் சான்றோர். பெரும்பாலும் தில்லை மாநகரம் வளர்த்த தமிழெல்லாம் சமயத்தமிழ், அதிலும் சைவத்தமிழ் என்றே சொல்ல வேண்டும்.

‘திருமுறைகளைக் காத்த தில்லை

தேவாரம் பாடிய மூவர்பெருமக்களும் தில்லைக்கு எழுந்தருளிச் சிற்றம்பலக்கூத்தனேச் செந்தமிழ்ப் பதிகங்களால் சந்தமுறப் பாடினர். அவர்கள் தம் பாடல்களை எழுதிய ஏடுகளையெல்லாம் தில்லைவாழ் அந்தணரிடத்தேயே ஒப்புவித்து மறைந்தார்கள். திருவாசகம் அருளிய மணிவாசகருடைய பாடல்களே இறைவனே ஏட்டில் எழுதி அவ் அந்தணாளர்களிடமே கொடுத்தான். இவையெல்லாம் தில்லைப் பொன்னம்பலத்திலேயே ஒருபால் மறைத்து, வைக்கப் பெற்றிருந்தன. அச்செய்தியைத் திருகாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரின் நல்லருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளின் வாயிலாகத் தஞ்சை மன்னனாகிய இராசராசன் அறிந்தான். அவன் தில்லைக்கு வந்து அவற்றை எடுத்துத் தருமாறு தில்லை வாழ் அந்தணர்களை வேண்டினன். அவர்கள் அவ்வேடுகளே இங்குவைத்துச் சென்ற அடியார்களே வந்தால்தான் எடுத்துத் தருவோம் என்றனர்.

திருமுறை கண்ட சோழன்

அது கேட்ட இராசராசன் சமய குரவர் திருவுருவங்களைப் பல்லக்கில் வைத்து அலங்கரித்துக் கொண்டுவந்து நிறுத்தினான். உடனே அவர்கள் ஏடுகள் வைத்திருந்த அறைக்கதவைத் திறந்தனர். கறையான் புற்றுக்களால் மூடப்பட்டிருந்த அவ்வேடுகளை எடுத்துத் தூய்மை செய்து பாடல்களை வெளிப்படுத்தினான். நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டே அவற்றைத் திருமுறைகளாக வகுக்குமாறு செய்தான். அப்பாடல்களை நாடெங்கும் பரப்பினான். திருக்கோவில்களிலெல்லாம் பண்ணோடு ஒதுமாறு பண்ணினன். இச் செயலால் இராசராசன் ‘திருமுறை கண்ட சோழன்’ என்று பெருமையாகப் பேசப் பெற்றான். ஆகவே சைத்திருமுறைகள் பன்னிரண்டலுள்ளே முதல் எட்டுத் திருமுறைகள் தில்லையிலிருந்தே இடைக்கப் பெற்றன. அவற்றைக் காத்தளித்த பெருமை, தில்லைக்குரியதே.

தில்லையில் பெரியபுராணம்

பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் தில்லையிலேயே பாடப்பெற்றது. ஆசிரியராகிய சேக்கிழார் அதனைப் பாடுதற்குத் தில்லைக் கூத்தனே, ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தருளினான். தமிழகத்தின் ஐந்நூறு ஆண்டு வரலாற்றை அறிவதற்குக் கருவியாயுள்ள பெரிய புராணத்தைத் தந்த பெருமையும் தில்லைக்குரியதே. இந்நூல் சிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற காவியங்களோடு ஒப்பாக வைத்து மதிக்கத்தக்க உயர்ந்த காவியமாகும்.

தில்லையில் உமாபதிசிவனார்

சைவ சமய சந்தான குரவருள் ஒருவராகிய உமாபதிசிவனர் தில்லையைச் சேர்ந்தவரே. அவர் தில்லைவாழ் அந்தணருள் ஒருவராவர். அவருக்குத் தில்லைக்கூத்தன் திருமுகம் எழுதினன். புலைக்குலத்தில் தோன்றிய பெத்தான் சாம்பான் என்னும் பத்தி மிக்க தொண்டனுக்கு முத்திநெறி காட்டுமாறு திருமுகப் பாசுரம் எழுதியனுப்பினான்

‘அடியார்க்(கு) எளியன்சிற் றம்பலவன் கொற்றங்
குடியார்க்(கு) எழுதியகைச் சீட்டு-படியின்மிசைப்
பெத்தான்சாம் பானுக்குப் பேதமறத் திக்கைசெய்து
முத்தி கொடுக்க முறை’

என்பது தில்லைக்கூத்தன் அருளிய திருப்பாட்டு.

உமாபதிசிவர்ை உதவிய நூல்கள்

இத்தகைய உமாபதிசிவனார் சைவசமய சாத்திரங்களாகிய மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள்ளே எட்டினை இயற்றியவர். சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, உண்மை நெறி விளக்கம், கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, சங்கற்ப கிராகரணம் என்னும் எட்டுமே அவர் இயற்றியவை, இவையன்றித் திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம், கோயிற் புராணம், திருத்தொண்டர் புராண சாரம் ஆகியவற்றையும் உமாபதிசிவனாரே பாடி யளித்தார். சேக்கிழார் காலத்தை யடுத்து வாழ்ந்த உமாபதிசிவனார் சேக்கிழார் புராணத்தைப் பாடித் தந்திராவிடின் அவரது வரலாற்றைத் தமிழர் அறிதற்கு வழியில்லாது போய்விடும். இவர்பாடியருளிய கொடிக்கவி பாடிக் கொடியேற்றல் நன்று.

தில்லையில் இரட்டையர்

அறுநூறு ஆண்டுகட்கு முற்பட்டவராகிய இரட்டைப் புலவர்கள் இருவரும் தில்லையடைந்தனர். அவர்கள் கூத்தப்பெருமானைத் தலைவகைக் கொண்டு ‘தில்லைக் கலம்பகம்’ என்ற நூலைப் பாடினார். பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளனர்.

தில்லையில் குமரகுருபரர்

முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டவராகிய குமர குருபரர் தில்லைக்கு ஒருகால் வந்தார். அப்போது தில்லை யிலிருந்த புலவர் சில்லோர், ‘இவர் இலக்கணமறியா தவர் ; யாப்பிலக்கணம் கற்காமலே செய்யுள் யாக் கின்றவர்’ என்று இகழ்ந்தனர். அதனையறிந்த குமர குருபரர் யாப்பிலக்கண நுட்பங்களெல்லாம் புலப் படுமாறு ‘சிதம்பரச் செய்யுட் கோவை’ யென்னும் சிறந்த நூலைப் பாடினர். பின்னர்ச் சிதம்பர மும் மணிக்கோவை, தில்லைச் சிவகாமியம்மை இரட்டை மணிமாலை ஆகிய நூல்களையும் தில்லையில் இருந்த பொழுதே பாடினார்.

தில்லையில் படிக்காசர்

ஏறத்தாழ இருநூற்றைம்பது ஆண்டுகட்கு முற் பட்ட படிக்காசுப்புலவர் தில்லையை அடைந்து பொன்னம்பலத்தில் அமர்ந்த சிவகாமியன்னையிடம், “எனக்கு ஏதேனும் கொடு; உன்னைப் பாடியவர்க்கும் பாடாத பிறர்க்கும் ஏதேதோ அளித்தாய் என்று கூறுகின்றனர்: எனக்கு ஏதும் கொடுத்திலேயே ?” என்று வேண்டிப் பாடினார். உடனே சிவகாமியன்னை பஞ்சர்க்கரப் படியில் ஒரு பொற்காசினை வைத்து, அதனை எடுத்துக்கொள்ளுமாறு பணித்தாள். ‘அதனா லேயே நமச்சிவாயப் புலவர், படிக்காசுப் புலவரெனப் பாராட்டும் பேறு பெற்றார்.

மகாவித்துவானும் நாவலரும்

சென்ற நூற்றாண்டில் விளங்கிய பெரும் புலவராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தில்லை யமக அந்தாதி பாடிச் சிறப்பித்தார். இவர் காலத்தில் வாழ்ந்த ஆறுமுக நாவலர் தில்க்லமாககளில் தங்கித் தம் பேச்சாலும் எழுத்தாலும் சைவத்தையும் தெய்வத் தமிழையும் வளர்த்தார். அவருடைய தமிழ் நாவன்மையைக் கண்டு வியந்த துறைசையாதீனத் தலைவராயிருந்த மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் ‘நாவலர்’ என்ற பட்டமளித்துப் பாராட்டினர். இவர் தில்லை மாநகரில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்னும் தமிழ்ப்பள்ளி யொன்றை நிறுவித் தமிழையும் சமயத்தையும் பரப்பினர். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் போன்ற நூல்களுக்கு எளிய கடையில் சிறந்த உரைநடை வரைந்து ‘வசனநடை கண்ட வல்லாளர்’ என்று தமிழுலகம் போற்றும் பெருமை யுற்றார். இவர் சிதம்பர மான்மியம் என்னும் நூலையும் ஆக்கினார்.

தில்லையில் இராமலிங்கர்

இதே காலத்தில் வாழ்ந்த அருட்பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகள் பல்லாண்டுகள் தில்லை மாநகரிலேயே தங்கித் தெய்வத்தமிழை வளர்த்தனர். இவரும் சிறந்த பாவன்மையும் நாவன்மையும் படைத்தவர். ஒருகால் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஆறுமுக காவலரிடம், “சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை துறவு பூண்டதனாலன்றோ தங்கட்கு நாவலர் என்ற பட்டமும் எனக்கு மகா வித்துவான் பட்டமும் கிட்டின; இந்நாளில் இவ்விரு பட்டத்திற்கும் உரியவர் இராமலிங்கம் பிள்ளேயே” என்று கூறினார். இத்தகைய இராமலிங்க அடிகள் தில்லைக்கூத்தனைப் பல்லாயிரம் அருட்பாக்களால் பாடிப் பரவினர். அவையெல்லாம் திருவாசகத்தைப் போல், கற்பவர் கேட்பவர் உள்ளத்தைக் கரைந்துருகச் செய்யும் உயர்ந்த மாண்புடையன.

தில்லையில் மீனாட்சி கல்லூரி

இந்த நூற்றாண்டில் செட்டி நாட்டரசர் அண்ணாமலைச்செட்டியார் தில்லைமாநகரில் மீனாட்சி தமிழ்க் கல்லூரியை நிறுவினர். இக்கல்லூரியின் தலைவராக டாக்டர் உ. வே. சாமிநாதையர் நியமிக்கப் பெற்றார். இவருக்கு உதவியாகப் பல தமிழ்ப் புலவ்ர்களும் நியமிக்கப்பெற்றனர். 1920ஆம் ஆண்டில் மீனாட்சி கலைக்கல்லுரரியாகத் தோன்றிய கல்விக்கூடம். படிப்படியாக வளர்ச்சியுற்று 1938-ல் அது அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக உருவாயிற்று. தமிழ், ஆங்கிலம், வடமொழி, விஞ்ஞானம், இசை, தத்துவம் முதலிய பல துறைக்கலைகளும் கற்பிக்கும் கழகமாக இருந்தாலும் சிறப்பாகத் தமிழர் கலைகளையும் பண்பாட்டையும் காத்து வளர்க்கும் தமிழ்ப்பல்கலைக்கழகமாகவே தழைத்தோங்கி வருகிறது.

தில்லையில் தமிழ்ப்பல்கலைக்கழகம்

தில்லைமாநகரின் கிழக்கே அமைந்துள்ள சிறந்த பதிகளாகிய கொற்றவன்குடிக்கும் திருவேட்கனத்திற்கும் நடுவே அண்ணாமலைப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கொற்றவன் குடி, சைவசித்தாந்த சாத் திரங்கள் எட்டினை அருளிய உமாபதிசிவனார் உறைந்து, தமிழும் சமயமும் வளர்த்ததலமாகும். திருவேட்களம் திருவருட்செல்வர்களாகிய அப்பரும் ஞானசம்பந்தரும் தங்கியிருந்து பண்ணாரும் இன்னிசைப் பாமாலை தொடுத்த தூயதலமாகும். இத்தகைய ஞானங்கமழும் பூமியில் அமைக்கப்பெற்ற பல்கலைக்கழகம், தமிழகத்திற்கே தனிச்சிறப்பை அளிப்பதாகும். நாலாயிரம் மாணவர்கட்கு மேல் தங்கியிருந்து பல துறைக் கலைகளையும் பயிலும் இடம் பாரதநாட்டிலேயே இஃதொன்றுதான்.

பல்கலைக்கழகத்தில் பைந்தமிழறிஞர்கள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மிகச் சிறப்புவாய்ந்தது. தமிழகத்தில் பெரும்புலவர்களெனப் பெயர்பெற்ற பேரறிஞர்கள் பலரும் இத்துறையில் பணிசெய்தனர்; இன்றும் பணியாற்றுகின்றனர். டாக்டர் உ. வே. சாமிநாதையருக்குப் பின், நெல்லை நாட்டின் நல்லறிஞராக விளங்கிய கா. சுப்பிரமணியபிள்ளை, டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார், மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், மகாவித்துவான் ரா. இரா கவையங்கார், நாவலர் ந. மு. வேங்கடசாமிநாட்டார், ஒளவை சு. துரைசாமிபிள்ளை, டாக்டர் அ. சிதம்பர நாதன்செட்டியார் முதலான பல தமிழ்ப்பேரறிஞர்கள் இருந்து தமிழ்ப்பணியாற்றினர். இன்று தமிழகத்தில் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தமிழ்ப்பணியாற்றும் பன்னூறு புலவர்கள், இப்பல்கலைக்கழகம் தந்த செல்வங்களே. இன்றும் இத்துறையினைத் திறம்பட நடாத்தி வருவோர் பேராசிரியர் தெ. பொ. மீனட்சி சுந்தரனாரும் பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியாரும், பேராசிரியர் கோ. சுப்பிரமணியபிள்ளை யுமேயாவர். இத்துறையினைப் போன்றே பிற கலைத் துறைகளையும் தக்க பேரறிஞர்களைக்கொண்டு மிக்க சிறப்பாக வளர்த்து வருகிறது.

இவ்வாறு பதினேந்து நூற்றாண்டுகளாகச் சைவத் தமிழையே வளர்த்து வந்த தெய்வத் தலமாகிய தில்லைமாககரம் இந்த நூற்றாண்டில் தமிழின் பல துறைகளையும் நலம்பெற வளர்த்து வருகிறது. இலக்கியம், சமயம், தத்துவம், இசை முதலிய பல துறைகளிலும் தமிழறிஞர் பலர் இருந்து அரும்பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களை உருவாக்கித் தந்து, நாடெங்கும் நற்றமிழ் வளர்தற்கு உற்ற துணையாக ஒளிர்கின்றது. ஆதலின் தில்லைமாககரம் என்றும் தமிழ் வளர்க்கும் தனிப்பெருநகரமாக நின்று நிலவுகின்றது.