உண்மை நெறி விளக்கம்
Appearance
நூலாசிரியர் குறிப்பு
[தொகு]- இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவம் ஆவார். இவர் சிதம்பரத்தில் பிறந்தவர். தீட்சிதர் எனும் தில்லைவாழ் அந்தணர் குலத்தவர். தில்லை நடராசருக்குப் பூசைசெய்யும் உரிமைபெற்றவர். ஆனாலும், தன் ஆசிரியராக மறைஞான சம்பந்தர் என்பவரையே கொண்டார். மறைஞான சம்பந்தர், முழுதுயர் ஞானி. அவர் உயர்குலத்தில் பிறந்தவராயினும், சாதிவேறுபாடு கருதாது சித்தர் போன்று எளிமையாக வாழ்ந்தவர்; தெருத்திண்ணையே அவரின் வீடு. அன்புடையோர் எவராயினும், அவர் எச்சாதியைச் சேர்ந்தவராயினும் சாதிபேதம் கருதாது, அவரிடம் கூழ்வாங்கி உண்டு வாழ்வு நடத்தியவர். அத்தகையவரைத் தம்குருவாகக் கொண்டதனால் தம்குலத்தவராலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டார். ஆகவே, சிதம்பரத்தைவிட்டு அதன் அருகே உள்ளே கொற்றவன் குடியினைத் தம் இருப்பிடமாக மாற்றிக் கொண்டார். (இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ள இடம்.) எனவே, கொற்றவன்குடி உமாபதி சிவம் எனஅழைக்கப்பட்டார்.
- மறைஞான சம்பந்தர் எனும் இவரின் ஆசிரியர், அருணந்தி சிவத்தின் மாணவராவார்; அருணந்தி சிவம் மெய்கண்டாரின் மாணவர் ஆவார்.
- மெய்கண்ட சந்தானத்தில், மெய்கண்டார், அருணந்தி, மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம் ஆகிய நால்வரும் சந்தானகுரவர் எனப் போற்றி உரைக்கப்பெறுவர். இவர்களின் வாழ்க்கை வரலாறுகளைச் சந்தனாச்சாரியார் புராண சங்கிரகம் எனும் நூலில் நாம் காணலாம்.
- இந்நூல் தசகாரியங்கள் எனப்படும் பத்துநிலைகளைச் சுருக்கமாக விளக்குவதால் இது 'உண்மைநெறி விளக்கம்' எனப்பட்டது. ஆறு திருவிருத்தங்களால் ஆனது. 'துகளறுபோதம்' எனும் நூலின் சுருக்கமாகவும் இந்நூலைக் கருதுவர்.
- மேலும் இவர் சிவப்பிரகாசம், நெஞ்சுவிடுதூது, வினாவெண்பா, திருவருட்பயன், சங்கற்ப நிராகரணம், போற்றிப் பஃறொடை எனும் பிற ஆறு தத்துவ நூல்களையும் இயற்றியுள்ளார்.
- இவையே அன்றிக் கோவிற்புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராண சாரம், திருப்பதிக்கோவை முதலிய நூல்களையும் இயற்றினார் என்றும் கூறுவர்.
உமாபதி சிவாச்சாரியார் அருளிய
[தொகு]உண்மைநெறி விளக்கம் மூலம்
[தொகு]திருப்பாட்டு: 1 (மண்முதற்)
[தொகு]- மண்முதற் சிவமதீறாம் வடிவுகாண் பதுவே ரூபம்
- மண்முதற் சிவமதீறாம் மலஞ்சட மென்றல் காட்சி
- மண்முதற் சீவமதீறாம் வகைதனில் தானி லாது
- கண்ணுத லருளா னீங்கல் சுத்தியாய்க் கருது மன்றே.
- மண் முதல் சிவமது ஈறாம் வடிவு காண்பதுவே ரூபம்
- மண் முதல் சிவமது ஈறாம் மலம் சடம் என்றல் காட்சி
- மண் முதல் சிவமது ஈறாம் வகைதனில் தான் நிலாது
- கண்ணுதல் அருளால் நீங்கல் சுத்தியாய்க் கருதும் அன்றே.
திருப்பாட்டு: 2 (பாயிருள்)
[தொகு]- பாயிரு ணீங்கி ஞானந் தனைக்காண்ட லான்ம ரூபம்
- நீயுநின் செயலொன் றின்றி நிற்றலே தெரிச னந்தான்
- போயிவன் றன்மை கெட்டுப் பொருளிற்போ யங்குத் தோன்றா
- தாய்விடிலான்மசுத்தி யருணூலின் விதித்த வாறே.
- பாய் இருள் நீங்கி ஞானம் தனைக் காண்டல் ஆன்ம ரூபம்
- நீயும் நின் செயல் ஒன்று இன்றி நிற்றலே தெரிசனம் தான்
- போய் இவன் தன்மை கெட்டுப் பொருளில் போய் அங்குத் தோன்றாது
- ஆய் விடில் ஆன்ம சுத்தி அருள் நூலின் விதித்தவாறே.
திருப்பாட்டு: 3 (எவ்வடிவுகளுந்)
[தொகு]- எவ்வடி வுகளுந் தானா மெழிற்பரை வடிவ தாகிக்
- கவ்விய மலத்தான் மாவைக் கருதியே வொடுக்கி யாக்கிப்
- பவ்வமீண் டகலப் பண்ணிப் பாரிப்பா னொருவ னென்றே
- செவ்வையே யுயிருட் காண்டல் சிவரூப மாகு மன்றே.
திருப்பாட்டு: 4 (பரையுயிரில்)
[தொகு]- பரையுயிரில் யானெனதொன் றறநின்ற தடியாம்
- பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்
- உரையிறந்த சுகமதுவே முடியாகு மென்றங்
- குண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன் றின்றித்
- தரைமுதலிற் போகாது நிலையினில் நில்லாது
- தற்பரையி னின்றழுந்தா தற்புதத்தினி னாகுந்
- தெரிவரிய பரமானந் தத்திற் சேர்தல்
- சிவனுண்மைத் தெரிசனமாய்ச் செப்பும் நூலே.
திருப்பாட்டு: 5 (எப்பொருள்வந்)
[தொகு]- எப்பொருள்வந் துற்றிடினு மப்பொருளைப் பார்த்திங்
- கெய்துமுயிர் தனைக்கண்டிவ் வுயிர்க்கு மேலாம்
- ஒப்பிலருள் கண்டுசிவத் துண்மை கண்டு
- உற்றதெல்லா மதனாலே பற்றி நோக்கித்
- தப்பினைச்செய் வதுமதுவே நினைப்புமது தானே
- தகுமுணர்வும் பொசிப்புமது தானே யாகு
- மெப்பொருளு மசைவில்லை யெனவந்தப் பொருளோ
- டியைவதுவே சிவயோக மெனுமிறைவன் மொழியே.
திருப்பாட்டு: 6 (பாதகங்கள்)
[தொகு]- பாதகங்கள் செய்திடினும் கொலைகளவு கள்ளுப்
- பயின்றிடினும் நெறியல்லா நெறிபயிற்றி வரினுஞ்
- சாதிநெறி தப்பிடினும் தவறுகள்வந் திடினும்
- தனக்கெனவோர் செயலற்றுத் தானதுவாய் நிற்கில்
- நாதனிவ னுடலுயிரா யுண்டுறங்கி நடந்து
- நானாபோ கங்களையுந் தானாகச் செய்து
- பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்
- பெருகுசிவ போகமெனப் பேசுநெறி யிதுவே.