கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்/எதினிய நகர அடிமைகளின் வாழ்வு

விக்கிமூலம் இலிருந்து

9. எதினிய நகர அடிமைகளின் வாழ்வு

ஏதென்ஸ் நகரில் காணப்பட்ட வெளிநாட்டு மக்கள் தொகுதி அதிகமாகும். அவர்கள் வெளி நாடுகளான திரேஸ் (Thrace) ஆசியா முனை (Asia minor), லெவண்டு (Levant) முதலான பல்வேறு நாடுகளிலிருந்து தூக்கிக் கொண்டு வரப்பட்டவர்களும், போரில் வென்று அடிமைகளாக்கிக் கொண்டு வரப்பட்டவர்களும், விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளும் ஆவர். ஆனால், இம் மக்கள் தொகுதியில் மிகுதியாக உள்ளவர் விலக்குப் பணி வாங்கப்பட்ட அடிமைகளே ஆவர். அடிமை வாழ்வு அங்குப் பழக்கத்திலே அமைந்து விட்டது. அடிமைப்படுவோரும் ஒப்புக்கொண்டு அமைத்துக் கொண்ட பழக்கமாகும். அடிமை வாழ்வு தக்கதா அன்றா என்பதைப் பற்றி அவர்கள் சிந்தித்ததும் இல்லை. ஆனால், நாமார்க்கும் குடியல்லோம் என்பது தமிழரது தனிப்பண்பாகும். அரிஸ்டாடில் போன்ற பெரிய பெரிய மெய்ஞ்ஞானிகளும் அடிமைகளை வைத்துக்கொண்டு வேலை வாங்கி வந்ததாகத் தெரிகிறது. இவ்வடிமைகள் அரசியல் முறையில் உரிமை அற்றவராய், நாகரிக வாழ்வு எய்தப் பெருதவராய் வாழ்ந்தனர். கிரேக்கர் மற்றொரு கிரேக்கருக்கு அடிமைப்படுதல் மட்டும் அவர்கள் வெறுத்தனர். சுந்தரர் தம்மை அடிமை கொள்ள வந்த வேதியரை நோக்கி, ‘ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க் கடிமை ஆதல் பேச இன்று உன்னைக் கேட்டோம்’ என்று கூறியது இப்பொழுது நம் நினைவிற்கு வருகிறது. இதனால் தம் இனத்தவர் ஒருவர்க்கொருவர் அடிமைப்படுதலை எக்காலத்திலும் விரும்பிலர் என்பது புலனாகிறது. அடிமைகளுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை மிகக் கொடூரமானது. அடிமைகள் எப்போதேனும் சாட்சி சொல்ல நேர்ந்தால் அச்சாட்சியில் உண்மை வெளிவரும் வரையில் அவர்கள் பெரிதும் துன்புறுத்தப்பட்டனர்.

பல அடிமைகள் கொடுமைகள் அனுபவித்தாலும், அவர்களையும் காக்கச் சில சட்டதிட்டங்களும் ஏதென்ஸ் நகரில் இருந்தன. உடையில் அடிமைக்கும் அடிமையில்லாத குடிமகனுக்கும் வேறுபாடு இராது. இருவரும் தெருவில் செல்லும்போது, யார் அடிமை என்று தீர்மானிக்க முடியாது. எந்த அடிமையும் தூக்குத் தண்டனை பெறமாட்டான். அவனுக்குச் சிறைவாசம் மட்டும் கிடைக்கும். ஏதென்ஸ் நகரில் பிரம்பால் அடித்துத் தண்டிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அதனை ஓர் அடிமை பெற நேர்ந்தால் ஐம்பது அடிக்குமேல் இருத்தல் கூடாது என்னும் சட்டமும் அவர்கள் கொண்டிருந்தனர். அடிமைகள் எனப்படுவோர் உடையும் உணவும் பெறுபவரே அன்றி ஊதியம் பெறுபவரல்லர். ஆனால் சிற்சில அடிமை ஆட்கள் தம் மனம் வஞ்சியாது உண்மையாகப் பணிபுரியின், அதனைப் பாராட்டி ஊதியம் அளித்தலும் ஏதென்ஸ் நகரத்தில் இருந்து வந்தது.

வீட்டில் வேலை செய்யும் அடிமைகள் அடிமைகளாகக் கருதப்படாமல் குடும்பத்தில் சேர்ந்த ஒருவராகவே கருதப்பட்டனர். வீட்டு வேலை யாவற்றையும் அவர்கள் கையில் ஒப்படைப்பதும் உண்டு கடைகளில் வேலை புரியும் அடிமைகள் தமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில், வேறு இடங்களிலும் சென்று வேலை செய்து வருவாய் பெற ஏதென்ஸ் நகரினர் இடங் கொடுத்திருந்தனர். இவ்வாறுவேலை செய்து தேடிய பொருளைச் சேமித்து வைத்துத் தம்மை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினரோ, அந்தத் தொகையை முதலாளிக்குச் செலுத்தி விடுதலை பெற இவர்களுக்கு வசதி இருந்தது; சிற் சில இடங்களில் அடிமைகள் பல்லாண்டு உழைத்து நற்பெயர் எடுத்தால் அவர்களிடமிருந்து யாதொரு பணமும் பெறாமல் விடுதலை செய்தலும் உண்டு. இவ்வாறு விடுதலை பெற்ற அடிமைகள் ஏதென்ஸ் நகரை விட்டுப் போய் விடவேண்டுமென்னும் நியதியும் இல்லை. அவர்கள் அவ்வூரிலேயே இருந்து கொண்டு, அவ்வூர் வாசிகள் பெறக்கூடிய உரிமை, வசதி, இன்பம் ஆகியயாவும் பெற்று மகிழ்வாக வாழ வசதி அளித்திருந்தனர். இவர்களுள் விடுதலை பெற்ற ஓர் அடிமை, ஏதென்ஸ் நகரில் பிறந்த சவுக்கார் போல, அதாவது பணம் வட்டிக்குக் கொடுத்து உதவுபவனாகவும் இருந்ததாக அவர்கள் வாழ்க்கைச் சரித்திரம் ஒன்றால் அறிகிறோம்.

துன்புத்தை அநுபவித்த அடிமைகளும் ஏதென்ஸ் நகரில் இருந்தனர்; அவ்வடிமைகள் நிலச் சுரங்கங்களில் வேலை செய்பவராவர். அவர்கள் ஆழத்தில் ஆடையின்றிச் செல்ல வேண்டும். கையில் விளக்கைக் கொண்டு அச் சுரங்கங்களில் வெள்ளி கிடைக்கக் கூடிய மண்ணையும் இடத்தையும் தேடவேண்டும். சுரங்கத்தில் செய்யும் வேலைக்கு நேரம் என்பது இல்லை. இரவும் பகலும் வேலைதான் ஆனால், அடிமைகள் மட்டும் அவ்வப்போது மாறி மாறி வேலை செய்ய வேண்டும். ஓர் அடிமை செய்ய வேண்டிய வேலை நேரம் பத்துமணியாகும். இவ்வாறு இந்தச் சுரங்கங்களில் பணிபுரியும் அடிமை நிலைதான் வருந்தத்தக்கது. இவர்கள் இங்கு வேலை செய்வதினும் இறப்பதே மேல் என்று கூட எண்ணும்படி இருக்கும். இவ்வாறு இவர்கள் கஷ்டப்பட்டதனால்தான் இவர்களில்பல்லோர் பிலோபோனேசியன் (Pelopponnesian) சண்டையிலும் சேர்ந்து உயிர்விடத் துணிந்தனர். சுரங்க அடிமைகளின் வாழ்வு இவ்வாறு இருந்தது என்பது தான் வருந்த வேண்டியிருக்கிறது, அக்காலத்தில் ஆபிரகாம்லிங்கன் போன்ற அடிமை வாழ்வை அகற்ற முன்வரும் அன்பர்கள் ஏதென்ஸ் நகரில் தோன்றியிலர் போலும்!