ஈரோட்டுத் தாத்தா/சொல்லின் செல்வர்

விக்கிமூலம் இலிருந்து

சொல்லின் செல்வர்

பெரியார்தம் சொற்பொழிவைச் கேட்டவர்கள்
   வெறுப்பகற்றிப் பெரியார் கொள்கைக்
குரியாராய் மாறுவதாம் விந்தையிதன்
   உட்பொருளைச் சொல்வேன், கல்வி
தெரியாத மக்களையும் வசப்படுத்தும்
   முறைமைதனில் திறமை யாக
உரைபகர்வார் தன்னுளத்துப் பட்டதெலாம்
   ஒளியாமல் உரைப்பார் கண்டீர்!

காற்றடிக்கும்! புயல் வீசும்! இடையின்றி
   மழைபொழியும்! கருத்து, வெள்ளம்
போற்பெருகும்! அருவிஎன ஓடிவரும்!
   மணிக்கணக்காய்ப் பொழியும்! பேச்சில்,
ஆர்த்திருக்கும் நாட்டிலுள்ள வகைப்பட்ட
   பழமொழிகள் அத்த னையும்!
சோற்றினுக்குக் காய்கின்ற ஏழைகட்குச்
   செயல்காட்டிச் சோர்வ கற்றும்!

உவமைகளோ குவிந்திருக்கும்! சுவைப்பேச்சுப்
   பேசுங்கால் ஒன்றோ டொன்றாய்த்
தவழ்ந்துவரும் கேள்விகட்குப் பதில்சொல்லத்
   தெரியாமல் தவித்த பேர்கள்
இவர்கட்சித் தொண்டர்களாய் இன்றிருக்கும்
   நிலையொன்றே ஈரோட் டண்ணல்
இவர்பேச்சின் திறம்விளக்கப் போதுமெனக்
   கூறிடுவேன்! எழுச்சி கொள்வேன்!

சொற்பொழிவு மேடையிலே ஏறியதும்
   நான்சொல்லும் சொற்கள் தம்மில்
நெற்பயிரை அறுத்துவந்தே உமியரசி
   தவிடிதென நிலைபி ரித்து
வைப்பதுபோல் தனித்தனியே ஆராய்ந்து
   பார்த்ததன்பின் வளர்க ருத்திற்
கொப்புவன ஏற்றிடுக ஒவ்வாதேல்
   தள்ளுகென உரைப்பார் தாத்தா

கருத்துக்குத் தடையிட்டு வைத்திருந்த
   மதத்தலைவர் கயமை மாற்றிக்
கருத்துவெளிப் பட்டால்தான் மற்றவரும்
   சிந்தித்துக் காரி யத்தில்
கருத்துடனே உழைத்திடலாம்! இல்லை எனில்
   முன்னேறக் கருதிச் செல்லும்
கருத்துடையார் தடைப்படுவர் எனப்பேசிப்
   புதுமைமிக்க கருத்து ரைப்பார்!