மகாபாரதம்-அறத்தின் குரல்/1. விசயன் தவநிலை

விக்கிமூலம் இலிருந்து

ஆரணிய பருவம்

1. விசயன் தவநிலை

எங்கு நோக்கினும் பசுமைக் கோலம் பரப்பி நிற்கும் மரக் கூட்டங்கள். சந்தன மரங்கள் ஒரு புறம் மணம் பரப்பிக் கொண்டிருந்தன. மலர்களின் நறுமணம் அகிற்கட்டைகளின் வாசனையோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தன. மலைச்சாரலைச் சேர்ந்த காடு அது. காமிய வனம் என்று பெயர். தமலைச் சிகரங்களில் அருவிகளாகப் பாய்ந்து கீழே கலகலவென்று சிற்றாறாக ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் ஓடைகளும், குளிர்ந்த சுனைகளும் மிகுந்திருந்தன. ஆழமாகவும், அகலமாகவும் அமைந்திருந்த சுனைகளின் நீல நிற நீர்ப் பரப்பில் கரிய யானைகள், கூட்டம் கூட்டமாக நீராடிக் கொண்டிருந்தன. வெயிலே நுழைய முடியாதபடி அடர்ந்து நெருங்கி வளர்ந்திருந்த மரங்களில் காய்கனிகளை உணவுக்கு நல்கும் பயன் மரங்களும் நிறைந்திருந்தன. அத்தினாபுரத்திலிருந்து வனவாசத்திற்காகப் புறப்பட்ட பாண்டவர்கள் இத்தகைய சிறப்புகளெல்லாம் பொருந்திய காமிய வனத்தில் வந்து முதன் முதலாகத் தங்கினார்கள். பாண்டவர்களோடு உறவினர்களிற் சிலரும் முனிவர்களும் உடன் வந்திருந்தனர். கங்கை முதலிய புனிதமான நதிகள் தோன்றும் இமயமலையின் வளமிக்க சாரலைப் போல் அந்தக் காமிய வனத்தின் இயற்கையழகும் சிறப்புற்று விளங்கியது. பாண்டவர்கள் வந்து தங்கியதால் அந்த வனத்திற்கே ஒரு தனிப்பெருமை ஏற்பட்டு விட்டதைப் போலிருந்தது.

இதற்குள் பாண்டவர்கள் அரசைத் துறந்து வனவாசம் புறப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி பல இடங்களில் பரவியிருந்தது, பாஞ்சால வேந்தன் துருபதன் முதலிய பெருமன்னர்களும் பிறரும் செய்தியறிந்து வருந்தினர். பாண்டவர்களை நேரில் சந்தித்து அனுதாபம் தெரிவிப்பதற் காகக் காமிய வனத்திற்குப் புறப்பட்டு வந்தனர். வந்த வேந்தர்களும் நண்பர்களும் பாண்டவர்களை இக்கதிக்குள்ளாகிய துரியோதனாதியர்களைப் பழி வாங்க வேண்டும் என்ற மனக் கொதிப்புடனிருந்தனர். எல்லோருமாக சேர்ந்து படையெடுத்துச் சென்று கெளரவர்களின் குலத்தையே நிர்மூலம் செய்து பாண்டவர்களுக்கு அரசாட்சி நல்கிவிடத் தயாராயிருந்தனர். பாண்டவர்களைக் காண்பதற்காக காமிய வனத்திற்கு வந்திருந்த கண்ணபிரான் அந்த மன்னர்களின் சினத்தை ஆற்றினார்.

“பாண்டவர்கள் மேல் அனுதாபமும் ஆதரவும் காட்டுகின்ற மன்னர் பெருமக்களே! உங்கள் சினமும் ஆத்திரமும் நியாயமானவை என்பதை நானும் அறிவேன். எது எப்படியிருந்தாலும் நாமெல்லோரும் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். சான்றோர்களும் ஆன்றோர்களும் நிறைந்த பேரவையில் வனவாசம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கின்றான் தருமன். இப்போது நாம் போர் மேற்கொள்வது தருமனுடைய வாக்குக்கு முரணானது. எனவே பாண்டவர்கள் வனவாச காலம் முடிந்த பிறகு ஏற்படப் போகிற பெரும் போரின் போது உங்கள் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும். இப்போது நீங்கள் காட்டுகிற ஆத்திரத்தையும் சினத்தையும் அப்போது காட்ட முன்வர வேண்டும்.” கண்ணபிரானின் இந்த அறிவுரையை ஏற்றுக் கொண்டு மன்னர்கள் சினந்தணிந்தனர். இதன்பின் தருமனுக்கென்று சில செய்திகளைத் தனியே கண்ணபிரான் கூறினார்.

“தருமா! வனவாசத்துக்காகக் குறித்த ஆண்டுகளில் நீயும் தம்பியரும் மறைவாக இருக்க வேண்டியது முக்கியம். வனவாசத்திற்குரிய நிபந்தனைகளில் அதுவும் ஒன்றல்லவா? உங்களுடைய புதல்வர்கள் யாவரையும் அங்கங்கே இருக்கும் சுற்றத்தினர் வீடுகளில் வசிக்குமாறு ஏற்பாடு செய்து விடு. தாயையும் அம்மாதிரியே எங்காவது தங்கி வாசிக்கச் செய்வது, நல்லது. அவ்வாறன்றி அவர்களையும் வனத்துக்கு அழைத்துக் கொண்டு போவது உங்களுக்கும் அவர்களுக்கும் பலவகை இடையூறுகளைக் கொடுக்கும். வனவாசம் மறைவாக நடக்க வேண்டியது முக்கியம். நாம் வெற்றிக்குரிய செயல்களில் ஈடுபடுவதற்கு அமைதியும் தனிமையும் வேண்டும்.”

“நீ கூறியதை நான் எப்போதாவது மறுத்ததுண்டா கண்ணா ? இப்போது நீ கூறியபடி உடனே செய்கின்றேன்” -என்று தருமன் ஒப்புக் கொண்டான். தாய் குந்தியைக் காந்தாரியோடு போய் இருந்து வசிக்குமாறு அனுப்பினார்கள். புதல்வர்களைப் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனோடு வசிப்பதற்கு ஏற்பாடு செய்து அவன் வசத்தில் ஒப்பித்தனர். அனுதாபம் கூறுவதற்காக வந்திருந்த மன்னர்களும் உற்றார் உறவினரும் காமிய வனத்தில் பாண்டவர்களை விட்டு விட்டுப் பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றனர். தருமன் முதலிய சகோதரர்கள் ஐவரும் திரெளபதியும் அந்த அழகிய வனமும் அதன் இயற்கை வளமுமே அங்கே எஞ்சியவர்கள். எல்லோரும் சென்ற பின்னர் தனியே இருந்த பாண்டவர்களின் மனநிலை துயரம், ஏக்கம், தனிமை முதலிய உணர்ச்சிகளால் சூழப்பட்டிருந்தது. அந்தச் சகோதரர்களின் நெஞ்சங்களில் தெளிவை உண்டாக்கிக் கவலையைப் போக்குவதற்கென்றே வந்தவர் போல வியாச முனிவர் அப்போது அங்கே வந்தார். பிரம்மாவுக்குச் சமமான அந்த மாமுனிவரை ஏற்றபடி வரவேற்று உபசரித்தனர் பாண்டவர். வியாசர் அவர்களிடம் அத்தினாபுரத்தில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் கேட்டு அறிந்து கொண்டார். விதி வகுத்த துன்பச் சிக்கல்களுக்காக மனமார வருந்தினார். ஆறுதலும் அனுதாபமும் கூறினார்.

“துயரங்களுக்கெல்லாம் காரணம் மாந்தரது வினைப்பயனே. சூதாடியதால் வாழ்விழந்து அல்லலுற்றது உன் ஒருவனுடைய அனுபவம் மட்டும் அன்று. மன்னாதி மன்னனாகிய நளனும் சூதினாலேயே அரசும், இன்பமும் இழந்தான். இப்போது நீங்கள் வனவாசம் செய்ய நேர்ந்திருப்பதும் அந்த சூது விளைத்த பயன்தான். வனவாசம் நிகழ்ந்து முடிந்ததும் உங்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே பெரிய போர் நேரிடலாம். அதில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் உங்கள் சொந்த ஆற்றல் ஒன்று மட்டும் போதாது. இறைவன் அருள் துணை வலிமையும் வேண்டும். அந்த அருள் துணையை அடையும் முயற்சியில் இப்போது முதலில் அர்ச்சுனனை ஈடுபடுத்தலாம் என்று கருதியே நான் வந்தேன். சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் என்ற வன்மை வாய்ந்த அஸ்திரம் ஒன்றுள்ளது. அதை அடைவதற்காக அர்ச்சுனன் அந்தக் கடவுளை நோக்கித் தவம் செய்ய வேண்டும். இப்போதே இந்த விநாடியிலிருந்து என் சொற்களை மதித்துத் தனிமையிற் சென்று இந்தத் தவ முயற்சியில் ஈடுபடுதல் வேண்டும்.” வியாசர் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன் அவரையும் தமையனையும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகச் சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்காகச் சென்றான்.

“தர்மம் தோற்காது; சத்தியம் என்றும் அழியாது என்பதை அறிந்து கொண்டவன் நீ தருமா! வஞ்சங்களுக்கும் பகைவர் தீமைகளுக்கும் மனம் தளராமல் இந்த வனவாச காலத்தைக் கழித்து விட்டால் வெற்றி உன் பக்கமே காத்திருக்கிறது” என்று மேலும் கூறிவிட்டு வியாச முனிவரும் அவர்களுக்கு ஆசி கூறிவிட்டுச் சென்றார். எத்தனை யெத்தனை துயரங்களும் தொல்லைகளும் அடுக்கடுக்காக வந்தாலும் தளராத உறுதி கொள்ள வேண்டும் என்ற துணிவு வியாசரின் அறிவுரையால் அவர்கள் உள்ளத்தே விளைந்து முற்றத் தொடங்கியிருந்தது.