மகாபாரதம்-அறத்தின் குரல்/2. கன்னிப் பருவத்தில் நடந்த கதை

விக்கிமூலம் இலிருந்து
2. கன்னிப் பருவத்தில் நடந்த கதை

குந்தி போசர் அரண்மனையில் எழிலும் வனப்புமாக வளர்ந்துவந்த பிரதை, வளர்பிறைச் சந்திரன் கலை கலையாக வளர்ந்து முழுமை கனிவது போல நிறைவை நெருங்கிக் கொண்டி ருந்தாள். துள்ளித் திரிந்து ஓடியாடி விளையாடும்இளமைப் பருவத்தில் இளமயில் போலப் பழகி வந்தாள் அவள். இந்த நிலையில் தவ வலிமை மிக்கவராகிய துர்வாச முனிவர் ஒருமுறை குந்திபோசர் அரண்மனைக்கு விஜயம் செய்து தங்கியிருந்தார். முனிவர் வரவால் தன் விளையாடல்களையெல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு முழு நேரத்தையும் அவருக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபடுத்தினாள் பிரதை.

“இவர் இங்கே தங்கியிருக்கின்ற வரையிலும் இவருக்குரிய பணிவிடைகள் எல்லாவற்றையும் நீயே செய்ய வேண்டும்! முனிவர் பணிவிடையினால் உனக்குப் பல நன்மைகள் எய்தும்” என்று அவள் தந்தையும் அவளுக்குக் கட்டளையிட்டிருந்தான். பிரதை, கழங்காடல், பந்தாடல், அம்மானையாடல், மலர் கொய்தல் முதலிய எல்லா விளையாட்டுக்களையும் மறந்து முனிவர் பணியில் மூழ்கினாள். எதற்கெடுத்தாலும் விரைவில் சினங்கொண்டு விடுபவராகிய துருவாசரும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டு சினமின்றி இருக்குமாறு ஓராண்டுக் காலம் அலுக்காமல் சலிக்காமல் இந்தப் பணிவிடையைப் பொறுமையோடு தொடர்ந்து செய்தாள் பிரதை. ஆத்திரத்தின் அவதாரமாகிய துர்வாச முனிவரே கண்டு வியந்து மகிழும்படி அவ்வளவு பயபக்தியோடு அந்த ஓராண்டுப் பணியை நிறைவேற்றி யிருந்தாள் அவள். ஓராண்டு கழிந்ததும் மனமகிழ்ந்த துருவாசர் தபோவனத்திற்குத் திரும்பி செல்லுமுன் அவளுக்குச் சிறந்ததொரு வரத்தை அளித்துவிட்டுச் சென்றார். அந்த வரத்தை அவள் அடைவதற்குரிய மந்திரத்தையும்  கற்பித்தார். “உனக்கு விருப்பமான எந்தத் தேவர்களை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தைக் கூறினாலும் அவர்கள் உடனே உன்னையடைந்து தங்கள் அருள்வலியால் தம்மைப் போலவே அழகும் ஆற்றலும் மிக்க ஓரோர் புதல்வனை உனக்கு அளித்துவிட்டுச் செல்வார்கள். இது உன் வாழ்வில் உனக்கு மிகவும் பயன்படக்கூடிய மந்திரமாகும்” - என்பது தான் துருவாசர் கூறிச் சென்ற வரம். பிரதை அதை நன்றிப் பெருக்கோடு ஏற்றுக் கொண்டாள். இது நடந்து சில நாட்கள் கழிந்திருக்கும். ஓரு நாள் இரவு நிலவு இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. நிலா முற்றத்தில் தன்னந்தனியே அமர்ந்து இரவின் குளிர்ந்த சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்த பிரதையின் மனம் என்றைக்குமில்லாத புதுமை யாகக் காரணமில்லாமலே பெரிய மகிழ்ச்சி உணர்வில் சிக்கியிருந்தது. ஏன்? எதற்காக? எப்படி? அந்த மகிழ்ச்சி ஏற்பட்டது என்பது அவளுக்கே விளங்கவில்லை. மேலே முழு நிலவு! மேனியிலே வருடிச் செல்லும் தென்றல் பிரதை இனம் புரியாத ‘போதை’ ஒன்றில் சிக்கினாள். அவள் மனம் காற்றில் மிதக்கும் பஞ்சாக மாறிவிட்டது போலிருந்தது. துருவாசர் கூறிச் சென்ற மந்திரத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இப்போது சிறிது சிறிதாக ஏற்பட்டு முற்றிக் கனிந்தது. மந்திரத்தை மனத்தில் நினைத்தாள். கதிரவன் பெயரைக் கூறி அழைத்தாள். கதிரவன் அவள் முன்பு தோன்றினான்! செம் பொன்னைப் போலக் கொழுந்து விட்டு எரியும் தீயின் நிறத்தில் ஆடை செவியில் ஒளிமயமான கவச குண்டலங்களும் சிரத்தில் வெயிலுமிழும் மணிமுடியும்! தோளில் வாகுவலயங்கள் முன்கையில் கடகங்கள் கம்பீரமான தோற்றம்! பிரகாச கண்களைப் பறித்தது. தன் முன் நிற்கும் ஆஜானுபாகுவான அந்த அழகனைக் கண்டு திகைத்துப் போனாள் குந்தி (நேயர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் விளங்குவதற்காகப் ‘பிரதை’ யை இனிமேல் குந்தி என்ற பெயராலேயே அழைப்போம்.) “பத்மினி! உன் அழகு எனக்கு மயக்க மூட்டுகிறது என் அருகே வா” - என்று கூறியவாறே பவழப் பாறை போன்ற தன் மார்பில் அவளைத் தழுவிக் கொள்ள முயன்றான் கதிரவன். குந்தி அஞ்சி நடுநடுங்கியவளாய் மனங்குலைந்து. “ஐயோ! நான் கன்னிப் பெண். என்னைத் தொடாதே! இது அறமா? முறையா?” - என்று அவன் பிடியிலிருந்து விலகித் திமிறி ஒதுங்கினாள். அவள் இவ்வாறு கூறிவிட்டு ஒதுங்கவும், கதிரவனுடைய கண்கள் மேலும் சிவந்தன. அவன் ஆத்திரத்தோடு, “அப்படியானால் என்னை ஏன் வீணாக அழைத்தாய்? என் கருத்துக்கு இசையாமல் என் வரவை இப்போது வீணாக்குவாயானால் உனக்கு இந்த வரத்தைக் கொடுத்த முனிவனுக்கு என்ன கதி நேரிடும் என்பதை நீ அறிவாயா? அல்லது உன் குலம் என்ன கதியடையும்? என்பதாவது உனக்குத் தெரியுமா? பெண்ணே! நான் சொல்வதைக் கவனமாகக் கேள் உன்னைப் பெற்ற தந்தை இதை அறிந்து உன் மேல் வெறுப்புக் கொள்வானே என்று நீ பயப்பட வேண்டாம். என் வரவு உனக்கு நன்மையையே நல்கும்! இதனால் என்னைக் காட்டிலும் தலைசிறந்த மைந்தன் ஒருவனை நீ அடைவாய்! இதை உன் தந்தை அறியாதபடி நான் மீண்டும் உனக்குக் கன்னிமையை அளித்துவிட்டுப் போவேன்” - என்றான். அவன் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போதே குந்திக்கு நன்னிமித்தத்திற்கு அறிகுறியாக இடக்கண்கள் துடித்தன. அவள் கதிரவனை நோக்கிப் புன்முறுவலோடு தலையசைத்தாள். கதிரவன் மீண்டும் அவளை நெருங்கினான். வானத்திலிருந்த சந்திரனுக்கு இதைக் கண்டு வெட்கமாகப் போய்விட்டதோ என்னவோ? அவன் சட்டென்று தன் முகத்தை மேகத்திரளுக்குள் மறைத்துக் கொண்டான். மேகத்திலிருந்து, சந்திரன் மறுபடியும் விடுபட்டு வெளியே வந்த போது நிலா முற்றத்தில் கதிரவன் குந்தியிடம் விடைபெற்றுக் கொண்டி ருந்தான். தான் வந்தது, குந்தியை மகிழ்வித்தது, அவளுக்கு மீண்டும் கன்னியாக வரங்கொடுத்தது, எல்லாம் வெறுங் கனவோ, என்றெண்ணும் படி அவ்வளவு வேகமாக விடை பெற்றுக்கொண்டு சென்றான் அவன். சஞ்சலம், சஞ்சாரம், சாரத்யம், முதலியவைகளையே தன் குணமாகக் கொண்ட காலம் மீண்டும் வெள்ளமாகப் பாய்ந்தோடியது. குந்தியின் வயிற்றில் ‘கர்ணன்’ பிறந்தான். தேவர்களும் அறியாத கொடைப் பண்பை நிரூபித்துக் காட்டுவான் போலத் தோன்றிய இந்தப் புதல்வன் செவிகளில் கவச குண்டலமும் ஈகை யொளி திகழும் முகமுமாக விளங்கினான். உலகும், குலமும், பழிக்கும் என அஞ்சிய குந்தி இந்தப் புதல்வனை ஒரு பேழையில் பொதிந்து வைத்துக் கங்கை வெள்ளத்தில் மிதக்க விட்டுவிட்டாள். பேழை கங்கையிலே மிதந்து கொண்டே குழந்தையுடன் சென்றது. அதிரதன் என்னும் பெயரைப் பெற்ற ‘சூதநாயகன்’ என்கிற தேர்ப்பாகன் தன் மனைவி ‘ராதை’ என்பவளுடனே நீராடக் கங்கைக்கு வந்தான். குந்தி மிதக்கவிட்ட பேழையை இவர்கள் கண்டெடுத்தனர். வெகுநாட்களாக மக்கட்பேறின்றி வருந்தி வந்த இவர்கள் மனமகிழ்வோடு அழகும் அருளொளியும் ததும்பும் கர்ணனாகிய குழந்தையை இன்னானென்று தெரியாமலே வளர்த்து வந்தனர். இது தான் குந்தியின் கன்னிப் பருவத்தில் நடந்த மறைமுகமான கதை.