மகாபாரதம்-அறத்தின் குரல்/5. கர்ணன் மரணம்
விரைவிலேயே தருமன் சமாதானமடைந்தான். ‘உடனே கர்ணனைக் கொன்று தீர்ப்பதாக’ வாக்குறுதியைக் கொடுத்தான் அர்ச்சுனன், அந்த வாக்குறுதியை அவனிடமிருந்து பெற்றுக் கொண்டபின் தருமன் அவனை மன்னித்தான். தான் காடு போவதையும் தருமன் நிறுத்திக் கொண்டான்.
இதன்பின் அர்ச்சுனன் மீண்டும் தேரில் ஏறி கர்ணனோடு போருக்குப் புறப்பட்டான். அர்ச்சுனன், கர்ணன் இருந்த இடத்தை அடையும் போது ஏற்கெனவே அங்கே வீமனுக்கும் கர்ணனுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. போன வேகத்தில் நெருப்புக் கணையை எடுத்து கர்ணன் மேல் செலுத்தினான் அர்ச்சுனன். கர்ணன் உடனே வருணா ஸ்திரத்தை ஏவி நெருப்புக்கணையை அழித்து விட்டான். பின்பு இருவரும் மாறி மாறிப் பல கணைகளைத் தொடர்ந்து ஒருவர் மேல் ஒருவர் எய்து கொண்டனர். ஒன்றை ஒன்று விழுங்கியும், ஒன்றைவிட ஒன்று எஞ்சியும், இருவர் அம்புகளும் போர்க் களத்தைச் செங்குருதி வெள்ளமாக மாற்றிக் கொண்டிருந்தன. கடைசியாக அர்ச்சுனன் பிரம்மாஸ்திரத்தைச் செலுத்தினான். ருத்திராஸ்திரத்தினால் அதைச் சுட்டுப் பொசுக்கி விட்டான் கர்ணன்.
இதன் பின் ‘ஒருவரை ஒருவர் எப்படித் தாக்குவது? என்ற யோசனையில் இருவருமே சிறிது நேரம் சும்மா இருந்து விட்டனர். கர்ணனுடைய உள்ளத்தில் குரோதம் புகைந்தது. அர்ச்சுனனை எப்படியாவது கொன்று தீர்த்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டு அதற்கென்றே தான் பல நாட்களாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த நாகாஸ்திரத்தை எடுத்தான் கர்ணன். காண்டவ தகனம் முடிந்த தினத்தில்லிருந்தே அர்ச்சுனனைப் பழி வாங்குவதற்குக் கர்ணனிடம் வளர்ந்து வந்தது அந்த அஸ்திரம். நாகாஸ்திரத்தை வில்லிலே வைத்துத் தொடுத்து அர்ச்சுனனுடைய கழுத்துக்கு நேரே குறி வைத்தான் கர்ணன்.
அப்போது அவனுடைய தேர்ப்பாகனாகிய சல்லியன் அவனைத் தடுத்தான். “கர்ணா! நான் சொல்வதைக் கேள், மாயா வினோதனாகிய கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு அருகில் இருக்கிறான். அவன் ஏதாவது சூழ்ச்சி செய்து உன் அஸ்திரம் அர்ச்சுனனை அணுக முடியாது செய்து விடுவான். ஆகையால் நீ அர்ச்சுனனுடைய கழுத்துக்குக் குறி வைத்துத் தொடுக்காதே, அர்ச்சுனனுடைய மார்புக்குக் குறி வைத்து அஸ்திரத்தைத் தொடு”
சல்லியனிடம் தனக்கு அந்தரங்கமாக இருந்த மனஸ்தாபங்களை உத்தேசித்து கர்ணன் அவனுடைய எச்சரிக்கையைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை தான் முதலில் தீர்மானித்திருந்தபடியே அர்ச்சுனனுடைய கழுத்துக்குக் குறி வைத்துத்தான் நாகாஸ்திரத்தைச் செலுத்தினான்.
கர்ணன் அர்ச்சுனன் கழுத்தை நோக்கி நாகாஸ்திரத்தைச் செலுத்துவதைக் கண்ணன் பார்த்துக் கொண்டுவிட்டான். அந்த நாகாஸ்திரத்தை அப்படியே விட்டுவிட்டால் அது அர்ச்சுனனைக் கொன்று முடித்துவிடும் என்பதும் அவனுக்குத் தெரியும். பார்த்தான் கண்ணன். ஒரே ஒரு விநாடி ஆழ்ந்து சிந்தித்தான். பின்பு ஒரு தந்திரம் செய்தான். நாகாஸ்திரம் அர்ச்சுனனுடைய கழுத்தை நெருங்குவதற்கு முன்பே தேர்ச் சக்கரங்களை பன்னிரண்டு விரற்கடை ஆழம் கீழே பூமியில் பதிந்துவிடும்படி அழுத்தினான். இதனால் விளைவு முற்றிலும் மாறிவிட்டது. கழுத்தை நோக்கி வந்த நாகாஸ்திரம் குறி தவறி அர்ச்சுனனுடைய கிரீடத்தை உருட்டித் தள்ளியதோடு போயிற்று.
இதனால் கர்ணன் பெரிதும் ஏமாற்றம் அடைந்தான். அப்போதே சல்லியன் சொன்னபடி கேட்டு மார்புக்குக் குறி வைத்திருந்தால் தேர் கீழே அழுத்தினாலும் கழுத்தையாவது தாக்கியிருக்குமே! கேட்காமல் அலட்சியம் செய்து தோற்று விட்டோமே என்று மனம் குமுறினான் கர்ணன். நாகாஸ்திரம் தன் முடியை இடறிக்கொண்டு விழுந்த உடனேயே அதன் மேல் வேறு ஓர் அம்பை எய்து அதை இரு கூறாக்கினான் அர்ச்சுனன் . ஆனால் எப்படியும் அர்ச்சுனனைப் பழிவாங்கியே தீருவது என்று பிடிவாதத்தோடு இருந்த அந்தப் பாம்பு திரும்பவும் கர்ணனிடம் சென்று, “கர்ணா! இன்னொரு முறை என்னை அர்ச்சுனன் மேல் ஏவு! நான் இம்முறை கட்டாயம் அவனைக் கொன்று தீர்த்து விடுகிறேன்” என்று வேண்டிக் கொண்டது. ஆனால் கர்ணன் அதனுடைய வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. “ஒரு முறைக்கு மேல் உன்னை அர்ச்சுனனிடம் ஏவமாட்டேன் என்று நான் குந்திக்கு வரம் கொடுத்திருக்கிறேன். ஆகையால் இனி உன்னை ஏவமுடியாது, நீ சென்று வரலாம்” என்று கூறி மறுத்துவிட்டான் கர்ணன். மனவேதனையுற்ற நாகாஸ்திரம் அப்பொழுதே அழிந்து மாண்டது.
கர்ணனிடம் நாகாஸ்திரத்துக்கு ஆளாகாமல் அர்ச்சுனன் பிழைத்துவிட்ட செய்தி தருமன், வீமன் முதலிய சகோதரர்களுக்கும் பாண்டவ சைனியங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சல்லியன் கர்ணனை இகழ்ந்து பேசத் தொடங்கினான்.
“அப்பொழுதே நான் கூறினேனே, நீ கேட்டாயா? மார்புக்குக் குறி வைத்திருந்தால் இப்பொழுது அர்ச்சுனன் பிழைத்திருக்க முடியுமா? மற்றவர்களுடைய சொற்களுக்கு மதிப்புக் கொடுக்காத அறிவிலி நீ. உன் போன்றவனுக்கு என்னால் தேர் ஓட்டியாக இருக்கமுடியாது. நீயும் முட்டாள், உன்னால் தனக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்பியிருக்கிறானே துரியோதனன்; அவனும் முட்டாள்” என்று கூப்பாடு போட்டு விட்டு கர்ணனுடைய தேரிலிருந்து கீழே இறங்கித் தனது தேரில் தனியே போய் ஏறிக்கொண்டான் சல்லியன். கர்ணனால் அவனைத் தடுத்து நிறுத்தவோ, சமாதானப்படுத்தவோ முடியவில்லை.
‘சரிதான்! முன்பு பரசுராமன் நமக்கு ஒரு சாபம் கொடுத்திருக்கிறான். ‘நீ படித்த யுத்த தந்திரங்களும், பிற கலைகளும் பயன்பட வேண்டிய சமயத்தில் பயன் படாமல் உனக்கு மறந்து போகட்டும்’ என்று அவன் அளித்த சாபம் இப்போது பலிக்கும் நேரம் நெருங்கி விட்டது போலிருக்கிறது. அதனால்தான் இத்தனை தோல்விகளையும், துன்பங்களையும், எனக்கு நானாகவே தேடிக் கொள்கிறேன்’ என்று கர்ணன் இவ்வாறு தன் மனத்திற்குள் சிந்தித்துக் கொண்டான்.
சல்லியன் பிரிந்து சென்ற பிறகு கர்ணனுக்கு வேறு தேரோட்டி கிடைக்கவில்லை. தேர்ப்பாகன் இல்லாத சாதாரணத் தேர் ஒன்றில் ஏறிக்கொண்டு சென்று அவன் அர்ச்சுனனோடு போர் செய்தான். கர்ணனை எப்படியேனும் கொன்று தீர்த்துவிட வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த அர்ச்சுனன் அதுதான் சமயமென்று அவனை வளைத்துக்கொண்டு கடும் போரில் இறங்கினான். போதாத காலம் நெருங்கி விட்டதோ, அல்லது பரசுராமருடைய சாபம் பலிக்கும் வேளையோ கர்ணனுடைய தைரியமும், வீரமும் விநாடிக்கு விநாடி நலிந்து கொண்டேயிருந்தது. அர்ச்சுனன் எய்த அம்புகள் கர்ணனுடைய இடையெங்கும் பாய்ந்து குருதியொழுகச் செய்து கொண்டிருந்தன. கர்ணனுடைய இதயமே அடங்கி ஒடுங்கி உயிர்ப் பிரிவுக்குத் தயாராகிவிட்டது போலிருந்தது. ஆனாலும் அந்த மனவேதனையைப் பொறுத்துக் கொண்டே அர்ச்சுனன் மேல் அம்புகளைப் பொழிந்து கொண்டிருந்தான் அவன்.
சூரியன் ஒளி மங்கி மறையப் போகிற நேரம், அத்த மனகிரியை அவன் அடைவதற்கு இன்னும் இரண்டு விற்கிடை (வில் கிடக்கின்ற அளவு தூரம்) தான் இருந்தது. அந்தச் சமயத்தில் கண்ணன் அர்ச்சுனனை நோக்கி, “அர்ச்சுனா! சிறிது நேரம் போரை நிறுத்து. ஒரு முக்கியமான காரியமாக நான் எதிரி பக்கத்தில் போய் ஓர் ஆளைப் பார்த்துவிட்டு வரவேண்டும்” என்று கூறினான். அர்ச்சுனன் அதற்கிணங்கிப் போரை நிறுத்தினான். கண்ணன் தேரிலிருந்து இறங்கி ஒரு வயதான கிழவேதியனைப் போல் தன்னுடைய உருவத்தை மாற்றிக் கொண்டு கர்ணன் இருந்த இடத்திற்குச் சென்றான். யாரோ ஒரு வேதியர் பருவம் முதிர்ச்சியையும் பாராமல் நம்மை நாடி வருகின்றாரே’ என்று வியந்த வண்ணமே தேரிலிருந்து கீழே இறங்கி மரியாதையாக நின்று கொண்டு, “ஐயா வேதியரே! வாருங்கள். நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவரை வரவேற்றான் கர்ணன்.
“கொடை வள்ளலே! நான் மேருமலையில் இறைவனை எண்ணித் தவம் செய்து கொண்டிருந்தவன். வருவோர்க்கெல்லாம் ‘வரையாது வழங்கும் வள்ளல்’ என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டேன். நான் ஏழ்மையினால் பெருந்துன்பமடைந்தவன். உன்னைத் தேடி இப்போது வந்திருக்கிறேன். நீ எனக்குச் செய்ய முடிந்த உதவியை இப்போதே செய்தால் நல்லது!” என்று மாய வேதியனாகிய கண்ணன் நடிப்புக்காக வரவழைத்துக் கொண்ட கிழட்டுக் குரலில் கர்ணனை வேண்டிக் கொண்டான்.
ஒரு பாவமுமறியாத கர்ணன் அந்த வேதியனுக்காக மனம் இரங்கினான். “ஐயா வயது முதிர்ந்த அந்தணரே, உமக்கு என்னிடமிருந்து எது வேண்டுமோ அதைக் கேளும்! கட்டாயம் கொடுக்கிறேன்” - கர்ணனின் குரலில் உறுதி தொனித்தது. “வள்ளல் பெருந்தகையே! இதுவரை நீ செய்திருக்கும் புண்ணியம் எல்லாவற்றையும் எனக்கு அப்படியே கொடு. நீ சொன்ன சொல் தவறாதவன். ஆகவே நான் கேட்டதைத் தயங்காமல் கொடுப்பாய் என்று எண்ணுகிறேன்."
ஒரு கணம் கர்ணன் அந்த வேதியரைக் கண் இமைக்காமல் உற்றுப் பார்த்தான், ஒரே ஒரு கணம்தான். மறுகணம் அவனுக்கே உரிய பெருந்தன்மை காரணமாக அந்த முகம் மலர்ந்தது. அதில் ஒரு வள்ளலுக்கே உரிய தாராள குணத்தின் சாயல் நிழலிட்டது.
“வேதியரே! உயிர் உடலின் உள்ளே இருக்கிறதா? வெளியே போய்விட்டதா? என்று நானே அனுமானித்து உணர முடியாத அந்திம காலத்தில் நீர் என்னைத் தேடி வந்திருக்கிறீர். யார் எதைக் கேட்டாலும் நான் தயங்காமல் வாரி வழங்கிக் கொண்டிருந்த காலத்தில் வராமல் போர்க்களத்தில் உயிருடனும் உடம்புடனும் போராடிக் கொண்டிருக்கும் வேதனை நிறைந்த சந்தர்ப்பத்தில் வந்திருக்கிறீர் பரவாயில்லை. இப்போது இந்த ஒன்றுமில்லாத நிலையிலும் உமக்கு வேண்டியதாகவும் என்னால் கொடுக்க முடிந்ததாகவும் ஒரு பொருள் என்னிடம் இருக்கிறது. அதை உமக்குக் கொடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இதோ என்னுடைய புண்ணியம் முழுவதையும் பெற்றுக் கொள்ளும்” என்று கூறிக்கொண்டே கர்ணன் தன் புண்ணியம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு அந்த வேதியரின் கால்களில் விழுந்து வணங்கினான்.
“கர்ணா! மிகவும் நன்றி. கையில் தண்ணீரைத் தாரை வார்த்து முறைப்படி உன் புண்ணியத்தை எனக்குத் தானம் செய்து கொடு” என்றான் வேதியன்.
ஆனால் அந்த நேரத்தில் பயங்கரமான போர்க்களத்தின் இடையே தண்ணீர் ஏது, தாரை வார்த்துக் கொடுக்க? தன் மார்பிலிருந்து வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை ஏந்தி அதையே வேதியனின் கையில் தண்ணீராக வார்த்து, தான் செய்த புண்ணியம் முழுவதையும் கர்ணன் அவருக்குத் தத்தம் செய்து கொடுத்தான். வேதியன் சந்தோஷத்துடன் அதை வாங்கிக் கொண்டான்.
“கர்ணா! நான் கேட்டதை நீ மறுக்காமல் கொடுத்து விட்டாய். இனி நீ உனக்கு வேண்டிய வரம் ஒன்றை மறுக்காமல் என்னிடம் கேள். நான் கொடுக்கிறேன்.”
“எனக்கு வேண்டிய வரமா? வேறென்ன வேண்டும்? இன்னும் எத்தனை ஜன்மங்களில் நான் பிறந்தாலும் இல்லையென்று வருந்தி என்னிடம் வருபவர்களுக்கு நான் இல்லையென்று சொல்லாமல் கொடுத்து உதவும் நல்ல மனத்தை எனக்கு அளித்தருளுங்கள். அதுதான் நான் உம்மிடம் கேட்கும் ஒரே ஒரு வரம்!”
“அப்படியே ஆகட்டும்! நீ எவ்வளவு பிறவி பெற்றாலும் ஒவ்வொரு பிறவியிலும் மாபெரும் செல்வத்தையும் கொடைக் குணத்தையும் பெற்று வாழ்வாயாக! பின்பு கிடைப்பதற்கரிய மோட்ச பதவியும் உனக்குக் கிடைக்கும்!”
இறுதியில் விடை பெற்றுக் கொண்டு செல்வதற்கு முன் அந்த மாய வேதியன், “கர்ணா! இதோ நன்றாக என்னைப் பார். ஒரே ஒரு விநாடி உண்மையில் நான் யார் என்பதை உற்றுப் பார்” என்று கூறிக்கொண்டே சங்கு சக்ரதாரியாக தேஜோமயமான காட்சி கொடுத்தான். கர்ணன் விழிகள் வியப்பால் மலரச் சிரமேல் கைகளைக் கூப்பி வணங்கினான். தன் முன் சாஷாத் நாராயணனாகிய மகாவிஷ்ணு நின்றுகொண்டிருப்பதைக் கண்டதும் அவனுக்கு ஏற்பட்ட பரவசமும் மகிழ்ச்சியும் இவ்வளவு அவ்வளவென்று சொல்லி முடியாது. சிறிது நேரத்தில் கண்ணன் மீண்டும் தன்னுடைய பழைய வேதிய உருவை மேற்கொண்டு வந்த வழியே திரும்பி அர்ச்சுனன் இருந்த இடத்திற்குச் சென்றான்.
அர்ச்சுனன் அருகே சென்றதும் சுயவுருவில் தேர் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, “அர்ச்சுனா! உன்னிடமுள்ள அஞ்சரீகம் என்னும் அஸ்திரத்தை எடுத்து கர்ணன் மேல் செலுத்து. இம்முறை அது அவனுடைய உயிரை வாங்கிவிடும்” என்றான். அவ்வாறே அர்ச்சுனன் அஞ்சரீகக் கணையை எடுத்து வில்லிலே வைத்துக் கர்ணன் மேல் செலுத்தினான். நல்வினைகளையெல்லாம் இழந்து சாதாரண மனிதப் பிறவியாகத் தளர்ந்து ஒடுங்கித் தேரின் மேல் நின்றுகொண்டிருந்த கர்ணன் மார்பிலே பாய்ந்து அவனைக் கீழே தள்ளியது அந்த அஸ்திரம். உயிர் தளர்ந்து பிரியும் வேதனையோடு கீழே விழுந்து நெருப்பில் அகப்பட்ட மலர் போலத் துடிதுடித்தது அவன் உடல் துரியோதனனுக்கும் அவன் படைகளுக்கும் பெருமையைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு மகாவீரன் அந்த விசாலமான போர்க்களத்தில் கேட்பாரில்லாமல் தன்னந்தனியே வீழ்ந்து இறந்து கொண்டிருந்தான். அவனுடைய உடலிலிருந்து உயிர் அணு அணுவாகப் பிரிந்து சென்று கொண்டிருந்தது. ஒளி மெல்ல மெல்ல ஒடுங்கியது.