மகாபாரதம்-அறத்தின் குரல்/6. சூழ்ச்சியின் தோல்வி
வணக்கம், உபசாரங்கள் முதலியவற்றைச் செய்து அவனை வரவேற்றான்.
“இதோ; இது விருந்தினராகிய தங்களுக்கென்றே அமைக்கப்பட்ட ஆசனம். தாங்கள் இதன்மேல் அமர்ந்து எங்களைக் கெளரவிக்க வேண்டும்” என்று நிலவறையின் மேல் அமைக்கப்பட்டிருந்த வஞ்சக ஆசனத்தைக் கண்ணனுக்குச் சுட்டிக் காட்டினான். அவன் அவ்வளவு விசேடமாக அதைப் பற்றிக் கூறிய போதே கண்ணனுக்கு ‘அந்த ஆசனத்தில் தான் தன்னைக் கவிழ்க்கின்ற வஞ்சகச் சூழ்ச்சி மறைந்திருக்கிற தென்பது’ புரிந்து விட்டது! ஆனாலும் அவனது வேண்டுகோளை மறுக்க விரும்பாதவன் போல் அந்த ஆசனத்தின் மேல் உட்காருவதற்காக ஏறினான். அவன் கால்கள் சரியாக அதன் மேல் பதியக் கூட இல்லை. அதற்குன் அது ‘சடசட’ வென்று முறிந்தது. அடுத்த விநாடி கண்ணன் உடல் எங்கோ இருண்ட பள்ளத்தை நோக்கிக் கீழே இழுக்கப்படுவது போலிருந்தது. கண் இமைகள் அசைகிற நேரந்தான் இந்த அவஸ்தை. உடனே தன்னைச் சமாளித்துக் கொண்ட கண்ணன் விண்ணும் மண்ணும், திசைகளும் ஈரேழு பதினாலு புவனங்களும் அடங்காத தன் விசுவரூபத்தை மேற் கொண்டான். பூமியும் ஆகாயமும் ஒரு ஆட்டம் ஆடிக் குலுங்கின. கண்ணன் திருவடிகள் கீழே கீழே அதல பாதாளத்தை நோக்கித் தாழ்ந்தன. சிரம் மேலே வானமண்டலத்தைத் துளைத்துக் கொண்டு போயிற்று. நிலவறையில் கிடந்த வஞ்சக வீரர்கள் அந்தப் பரம்பொருளின் காலடியில் கிடந்து நசுங்கினர். அந்த விசுவரூபத்தின் சக்தியைத் தாங்கமுடியாமல் ஈரேழு பதினாலு புவனங்களும் பூகம்பம் ஏற்பட்டது போலக் கிடுகிடு என்று நடுங்கின. கோடானு கோடி உயிர் குலங்களின் ஓலம் ஊழிக் கடல் பொங்குவது போன்ற ஓசையை உண்டாக்கியது. மேலும் அந்த ஓலத்தை நீடிக்கச் செய்து உயிர்களைத் துன்புறுத்தக் கூடாதென்று கருதிய கண்ணன் சிறிது தன் சுய உருவை அடைந்து சிரித்துக் கொண்டே துரியோதனனுக்கு முன்னால் நின்றான். துரியோதனன் தன் சூழ்ச்சி பலியாமல் போனதைக் கண்டு மிரண்டு போனான். அப்படி யிருந்தும் தன் பயத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நடித்தான். சிரித்துக் கொண்டு நின்ற கண்ணனைக் கோபத்தோடு உறுத்துப் பார்த்தான்.
“ஏ! முட்டாள் மன்னனே! நெருப்போடு நீ விளையாடலாமா? கெட்ட எண்ணத்தோடு என்னைக் கொல்வதற்காக நீ குழி வெட்டியிருந்தாய்! இதே குழிக்குள் உன்னையும் உன் குலத்தையும் உன்னைச் சேர்ந்த சர்வத்தையும் ஆழப் புதைத்து நாசம் செய்ய முடியும் என்னால், அப்படியிருந்தும் எதற்காக இப்போது உங்களைக் கொல்லாமல் விடுகிறேன் தெரியுமா? உங்கள் யாவரையும் கொன்று உங்கள் குலத்தை வேரறுப்பதாகப் பாண்டவர்கள் சபதம் செய்திருக்கிறார்கள். அவர்கள் சபதம் நிறைவேறாமல் போய்விடக் கூடாதே என்று தான் உங்களை இப்போது உயிருடன் விடுகிறேன். தவிர, ‘உனக்கும் பாண்டவர்களுக்கும் இடையே உள்ள பகை காரணமாகப் போர் ஏற்பட்டால் பாண்டவர்கள் சார்பாக ஆயுதமெடுத்து உன்னுடன் போர் புரிவதில்லை’ என்று முன்பே உனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்த அவையிலிருந்து வெளியேறினான் கண்ணன். அப்படி வெளியேறும் போது கர்ணனை மட்டும் சைகை காட்டி அழைத்துச் சிறிது தொலைவு தன்னோடு கூட்டிக் கொண்டு சென்றான். கர்ணனுடைய அப்போதைய மனநிலையில் அவன் கண்ணனுடன் போயிருக்கமாட்டான். ஆனால் அவனை யறியாமலேயே ஒரு சக்தி அவனைக் கண்ணனோடு இழுத்துக் கொண்டு போயிற்று. ஒரு தனியிடத்துக்கு வந்ததும் கண்ணன் கர்ணனை நோக்கிக் கூறலானான்:-
“கர்ணா! இப்போது நான் கூறப்போகிற செய்தியைக் கேட்டு நீ திடுக்கிடாதே. நீ குந்திக்குப் பிறந்த முதல் மகன். பாண்டவர்கள் ஐந்து பேரும் உனக்குத் தம்பிமார்கள். துருவாச முனிவர் உன் தாய்க்குக் கொடுத்த வரத்தால் முதல் முதலில் கதிரவனைக் கூடி உன்னைப் பெற்றாள் குந்தி, விரிவான விவரங்கள் இன்னும் சிறிது காலத்தில் உனக்கே தெரியும். இப்போது நீ செய்யத்தக்கது உடனே துரியோதனாதியர்கள் கட்சியிலிருந்து விலகிப் பாண்டவர்கள் பக்கம் சேர்ந்தால் மூத்தவனாகிய உனக்கே அரசாட்சி கிடைக்கும். நீ இந்த அருமையான வாய்ப்பை தவற விட்டு விடாதே.” கண்ணன் கூறியனவற்றைக் கேட்டுக் கர்ணன் சிறிது நேரம் தனக்குள் யோசித்தான். பின்பு கூறினான்:-
“கண்ணா! நன்றியை விட அரச பதவியும் உறவும் பெரியவை அல்ல. ‘கர்ணன் நன்றி கெட்டவன்’ என்ற பழிச்சொல் உலகத்தில் ஏற்பட்ட விட்டு விட மாட்டேன். பிறப்பை உணர்த்தியதற்கும் உணர்ந்து கொண்டதற்கும் நன்றி. ஆனால் உண்ட சோற்றுக்கு உழைக்க விரும்புகிறேன். துரோகம் நினைக்க விரும்பவில்லை. என்னை இதற்கு மேல் வற்புறுத்தாதீர்கள்.”
“சரி! நல்லது. நீ போய் வா..'’ கண்ணன் கர்ணனுக்கு விடை கொடுத்து அனுப்பினான். கர்ணன் சென்றதும் அசுவத்தாமனை அழைத்து வரச் செய்தான். அசுவத்தாமனைத் தனியிடத்திற்கு அழைத்துக் கொண்டு போகாமல் அவைக்கு எதிரிலேயே ஓரிடத்தில் நின்று அவையோர்களுக்குக் கேட்காத மெல்லிய குரலில் அவனோடு உரையாடினான். “அசுவத்தாமா! இந்தத் துரியோதனாதியர்கள் செய்வது அநியாயம் என்பதை நீயே ஒப்புக் கொள்வாய். காட்டில் வசித்து வந்தபின் உரிய காலத்தில் இவர்கள் பாண்டவர்களுக்குக் கொடுப்பதாக ஒப்புக் கொண்ட நாட்டை இப்போது ஏன் கொடுக்க மறுக்கிறார்கள்? இந்தக் கொடியவர்களுக்குப் போரில் நீ ஒத்துழைக்காதே! உன்னைப் படைத் தலைவனாகச் சொன்னால் ‘மாட்டேன்’ என்று சொல்லி மறுத்து விடு! கௌரவர்கள் பக்கத்தில் நீ படைத் தலைவனாக மறுத்து விட்டால் பின் பாண்டவர்களுக்குத் தான் வெற்றி” -இப்படிச் சொல்லிக் கொண்டே தந்திரமாகத் தம் கையிலிருந்த மோதிரத்தை வேண்டுமென்றே நழுவ விட்டார். கண்ணனுக்கு பதில் கூறுவதற்காக வாய் திறந்த அசுவத்தாமன் பதிலைக் கூறாமல் மோதிரத்தை எடுப்பதற்காகக் கீழே குனிந்தான். தன் தந்திரங்களைத்தான் அன்றி வேறெவரும் அறிய முடியாத கண்ணன் தனக்குள் சிரித்துக் கொண்டான். கண்ணன் புன்னகை புரிவதையும் அசுவத்தாமன் கீழே குனிவதையும் துரியோதனனும் அவையினரும் பார்த்துக் கொண்டே இருந்தனர். அசுவத்தாமன் மோதிரத்தை எடுத்துக் கண்ணன் கையில் கொடுத்தான்.
“அசுவத்தாமா! மேலே சூரியனைப் பார்! சுற்றிக் கோட்டையிட்டிருக்கிறது” அசுவத்தாமன் உடனே அண்ணாந்து சூரியனைப் பார்த்தான். அவன் சூரியனைப் பார்த்த பின்பே கண்ணன் அவன் கையிலிருந்து மோதிரத்தை வாங்கிக் கொண்டான். இந்த நிகழ்ச்சியைத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த துரியோதனனும் அவனைச் சேர்ந்தவர்களும் வேறு விதமாக அர்த்தம் செய்து கொண்டார்கள்.
“இந்த அசுவத்தாமன் கண்ணன் காலடியில் குனிந்து வணங்கி அவன் கைமேல் அடித்துச் சூரியன் சாட்சியாக மேலே அண்ணாந்து பார்த்து ஏதோ சபதம் செய்கிறான். பாண்டவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்க வேண்டும் அந்தச் சபதம்!” என்று எண்ணிக் கொண்டனர். அவர்கள் இப்படி எண்ணிக் கொள்ள வேண்டுமென்பதற்காகத் தானே கண்ணன் இந்த மாய நாடகத்தை நடித்தான். ஆனால், அசுவத்தாமன் பாவம்! அவனுக்கு இந்தச் சூழ்ச்சியெல்லாம் தெரியாது. எல்லாம் தற்செயலாக நடந்ததாகவே எண்ணியிருந்தான்.
“இனி அசுவத்தாமனை நாம் நம்பமுடியாது. அவனுக்குப் போரில் படைத்தலைமையும் கொடுக்க முடியாது. அவன் நமக்குத் துரோகம் செய்து பாண்டவர்களுக்கு ஆதரவாகக் கண்ணனிடம் ஏதோ வாக்குக் கொடுத்துவிட்டான்” என்று அப்போதே தன் அருகில் இருந்தவர்களிடம் கூறி விட்டான் துரியோதனன். தன் சூழ்ச்சி இனிது நிறைவேறியதை உணர்ந்து கொண்ட கண்ணன், “சரி அசுவத்தாமா! நீ போய் வா! என் வேண்டுகோளுக்கு இணங்க உனக்கு விருப்பமில்லை போலும். இதற்கு மேல் நான் வற்புறுத்த மாட்டேன்” என்று கூறிக் கொண்டே அசுவத்தாமனுக்கு விடை கொடுத்து விட்டுத் தானும் கிளம்பினான். கிளம்பியவன் அங்கிருந்து நேரே விதுரன் மாளிகைக்குச் சென்றான். விதுரன் மாளிகையில் தனியிடம் ஒன்றிலமர்ந்து இந்திரனை எண்ணினான். இந்திரனிடம் அப்போது அவனுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தது. முன்னவனே முன்னின்று சிந்தித்தால் முடியாத காரியமும் உண்டா? கண்ணன் எண்ணிய சிறிது நேரத்திற்கெல்லாம் இந்திரன் அவன் முன் தோன்றி வணங்கினான். கண்ணன் அவனை வரவேற்று அருகில் அமரச் செய்து நலம் விசாரித்த பின் தான் கூறவேண்டிய காரியத்தைக் கூறலானான். “உன் மகன் அர்ச்சுனன் நிகழவிருக்கும் போரில் வெற்றி பெற்று உயிர் பிழைப்பதற்காக இப்போது நீ ஒரு காரியம் செய்ய வேண்டும்! கர்ணனிடம் அவன் பிறக்கும்போதே தோன்றிய கவசகுண்டலங்கள் இரண்டு உள்ளன. அந்தக் கவசகுண்டலங்கள் அவனிடத்தில் உள்ளவரை அவனை எவராலும் தோல்வியுறச் செய்ய இயலாது. மேலும் காண்டவவனத்திலிருந்து தப்பிய பாம்பு ஒன்று போரில் அர்ச்சுனனைக் கொல்வதற்காகவே கர்ணனிடம் வளர்ந்து வருகின்றது. இந்த அபாயங்களை எல்லாம் கடந்து அர்ச்சுனன் உயிர் பிழைக்க வேண்டுமானால் நீ ஒன்று செய்ய வேண்டும். வேதியனைப் போல மாறுவேடம் பூண்டு கர்ணனிடம் சென்று எப்படியாவது அவனுடைய கவசகுண்டலங்களைத் தானமாக வாங்கிக் கொண்டு வந்து விட வேண்டும். இந்தக் கவச குண்டலங்கள் கர்ணனிடமிருந்து பிரிக்கப்படவில்லையானால் போரில் அர்ச்சுனனால் கர்ணனை வெல்லவே முடியாது” - என்று அர்ச்சுனனின் தந்தை முறை உடையவனான இந்திரனை வேண்டிக் கொண்டான் கண்ணன்.
இந்திரன் கண்ணனின் வேண்டுகோளின்படி, வேத மோதுகின்ற முதுபெருங் கிழவனாகிக் கர்ணனுடைய மாளிகையை அடைந்தான். எப்போது எவர் வந்து எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்கக் கூடியவனான கர்ணன் இந்த முதுபெருங்கிழவனை வரவேற்று உபசரித்தான். “பெரியவரே, உமக்கு எது வேண்டுமானாலும் கேளும்! தருகிறேன்.”
“நிச்சயமாக நான் எதைக் கேட்டாலும் நீ கொடுப்பாயா?”
“சந்தேகமே வேண்டாம்! கண்டிப்பாகக் கொடுக்கிறேன்.”
“அப்படியானால் உன் செவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அந்தக் குண்டலங்கள் இரண்டையும் கழற்றி எனக்குக் கொடு! இன்னும் நீ பிறக்கும் போதே உடன்பிறந்த கவசங்களையும் கொடு!”
கர்ணன் திகைத்தான்! என்ன செய்வது? வாக்குக் கொடுத்தபின் மறுக்கவா முடியும்? கிழவருக்குக் கொடுப்பதற்காகக் குண்டலங்களையும் கவசங்களையும் கழற்றத் தொடங்கினான். “கர்ணா! கழற்றாதே. இதில் சூழ்ச்சி நிறைந்திருக்கிறது. இவற்றைக் கழற்றிக் கொடுப்பதனால் உனக்கு நீயே அழிவைத் தேடிக் கொள்கிறாய்” -வானிலிருந்து கதிரவன் எழுப்பிய மேற்படி எச்சரிக்கைக் குரல் அசரீரியாகக் கர்ணன் செவிகளில் கேட்டன. ஆனால் கர்ணன் இவற்றைப் பொருட்படுத்தவில்லை. தன் வாக்குத் தவறக்கூடாது என்பதற்காகக் கூறியபடியே குண்டலங்களையும் கவசங்களையும் கிழவனாரிடம் கொடுத்து விட்டான். கொடுக்கக்கூடாதவை எவையோ அவற்றையே கொடுத்துப் பெருமை கொண்ட அந்தக் கொடையாளியின் தியாகம் சகலபுவனங்களிலும் ஓர் வியப்பை உண்டாக்கியது. போலிக் கிழவனாக உருமாறி வந்திருந்த இந்திரன், உடனே தன் சுய உருவில் கர்ணனுக்கு முன் தோற்றமளித்து அவனது செயற்கரிய கொடைத் திறனைப் பாராட்டி வாழ்த்தினான். தனது பாராட்டுக்கு ஓர் அடையாளமாகச் சிறப்பும் வலிமையும் வாய்ந்த வேலாயுதம் ஒன்றைக் கர்ணனுக்குப் பரிசளித்து, “கர்ணா! குருக்ஷேத்திரப் போரில் கடோற்கசனோடு போர் செய்ய நேரிடுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த வேல் உனக்குப் பெரிதும் பயன்படும்” -என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான் இந்திரன். தனது எண்ணப்படியே கர்ணனது கவச குண்டலங்கள் பறிக்கப்பட்டதை அறிந்து உவந்தான் கண்ணன். இந்திரன் கண்ணனைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறினான்.
“இந்திரா! இந்தக் கர்ணன் இருக்கிறானே; இவன் கொடை என்ற மகாவேள்விக்காகவே அவதரித்தவன், கவசகுண்டலங்களை இழந்த பின்பு, தான் தோல்வி அடைவது உறுதி -என்று தெரிந்து கொண்டே உனக்காக அவற்றைத் தியாகம் செய்திருக்கிறான் பார்த்தாயா? சாதாரண மக்கள் வெறும் பொருளைத்தானம் செய்யவே பயப்படுகின்றார்கள். பெரியோர்களோ, உயிரையும் அந்த உயிரைவிட உயர்ந்த பொருள்களையும் கூடத் தியாகம் செய்துவிடுகிறார்கள்” என்று மாயவனாகிய கண்ணபிரான் கர்ணனைப் பாராட்டினார். தன் மகன் அர்ச்சுனனுக்குப் போரில் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடிந்ததே என்ற மனநிறைவோடு இந்திரன் விடைபெற்றுக் கொண்டு சென்றான்.
இந்திரன் சென்ற பின்னர் மீண்டும் குந்தியைப் போய்ச் சந்தித்து, தான் கூறிய காரியத்தை விரைவில் முடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டான் கண்ணன். அத்தினாபுரியில் அவனுக்கு எஞ்சியிருந்த கடைசி வேலை குந்தியின் மூலம் கர்ணன் மனத்தைக் கலைத்துப் பாண்டவர்கள் பக்கம் சேர்க்க முயல்வதே! அது முடிந்தால் அப்புறம் ஊருக்குப் புறப்பட வேண்டியது தான்.