மகாபாரதம்-அறத்தின் குரல்/2. சிவேதன் முடிவு

விக்கிமூலம் இலிருந்து
2. சிவேதன் முடிவு


அர்ச்சுனனின் தயக்கத்தைக் கண்ணன் தன் அறிவுரையினால் போக்கிய பின்பு தொடங்கிய முதல் நாள் போர் விரைவாக வளரலாயிற்று. பிரளய காலத்துப் பேரொலி போல் திசைகள் அதிர்ந்து இது போகுமாறு போர் நடந்தது. பாண்டவருக்குத்துணைவந்த அரசர்கள் தங்களிடமிருந்த அம்புகளை எல்லாம் எதிரிகளின் மேல் ஆத்திரந்தீர எய்து தீர்த்துவிட்டார்கள். அம்புகள் தீர்ந்தால் என்ன? உள்ளத்திலிருந்த ஆத்திரம் தீரவில்லையே! பகைவர்களால் எய்யப்பட்டு ஏற்கனவே தங்கள் மார்பில் நுழைந்து நின்ற அம்புகளை வலியையும் பொருட்படுத்தாமல் பிடுங்கிப் பகைவர்கள் மேலேயே எறிந்தார்கள். நூழிலாட்டு என்று ஒருவகைப் போர் முறையாகும் இது! போரில் வலது கையை இழந்து போனவர்கள் இடது கையால் பகைவர்மேல் அம்புகளைப் பொழிந்தனர். இரண்டு கைகளையுமே இழந்தவர்கள் அம்புகளை வாயில் கவ்விக் கொண்டு பற்களால் உந்தி எறிந்தனர். வீரம் என்ற ஒன்று. ஆண்மை என்ற ஓன்று, தனியே வடிவெடுத்து வந்து அங்கே அந்தக் குருக்ஷேத்ரப் போர்க்களத்திலே நிதரிசனமாக விளங்கிக் கொண்டிருந்தது. பாண்டவர், கெளரவர் ஆகிய இரு திறத்தார்களுமே தத்தம் கட்சியில் உண்மையான ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் போர் புரிந்தனர். உறவு, பந்தம், பாசம் இவைகளைப் பற்றிய தயக்கத்தை எல்லாம் கண்ணனின் தெளிவுரையால் நீக்கிவிட்டுப் போருக்குத் துணிந்து விட்ட அர்ச்சுனன் முதறிஞனாகிய வீட்டுமனையே எதிர்த்து நின்றான். வீட்டுமனும் அர்ச்சுனனும் போர் செய்த கண்கொள்ளாக் காட்சி போர்க்களத்தையே அதிசயிக்கச் செய்தது. வீட்டுமன் உதவிக்காக தூரியோதனனும், அர்ச்சுனன் உதவிக்காக தருமனும், சில சிற்றரசர்களை உடன் அனுப்பியிருந்தனர். சகுனி, சல்லியன் முதலியவர்கள் வீட்டுமன் பக்கமும்: விந்தரன், அபி மன்னன் முதலியோர் அர்ச்சுனன் பக்கமும் துணையாக நின்றனர். ஒருவருக்கொருவர் எதிரிகள் என்ற முறையில் இருவரும் மகா உக்கிரமாகப் போர் புரிந்தார்கள்.

வீட்டுமன் போர் செய்வதற்காக நின்று கொண்டிருந்த தேரின் உச்சியில் ஒரு பெரிய பாம்புக் கொடி பறந்து கொண்டிருந்தது. அர்ச்சுனன் அந்தக் கொடியின் மேல் பன்னிரண்டு அம்புகளை அடுத்தடுத்து வேகமாகச் செலுத்தித் துளைத்து விட்டான். வீட்டுமன் மார்பின் மேலும் உடலிலும் பூண்டிருந்த கவசத்தில் அர்ச்சுனனால் ஏவப்பட்ட ஒன்பது அம்புகள் தைத்திருந்தன. போரில் அனுபவம் மிக்கவனும் திறமைசாலியுமாகிய வீட்டுமன் இளைஞனான அர்ச்சுனனின் போர் வன்மை கண்டு மலைத்துப் போனான். கௌரவர்கள் பக்கம் சகுனி, சல்லியன் முதலியவர்கள் முன்னணியில் நின்றனர். வீட்டுமனைத் தாக்கியதோடு மட்டும் நின்று விடாமல் இவர்களையும் ஒரு கலக்குக் கலக்கி விட்டான் அர்ச்சுனன். இதனால், துரியோதனாதியர்களின் படை அணிவகுப்பே நிலை குலைந்து சிதறிப் போய்விட்டது. இந்த நிலையில் உத்தரனும் சல்லியனும் நேரடியாக ஒருவருக் கொருவர் எதிர் நின்று விற்போரில் இறங்கினர். போர்க்களத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த முனைப்பான எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் இவர்கள் எதிர்ப்பு முக்கிய நிலையை அடைந்திருந்தது. இருதரப்பிலிருந்தும் ‘விர் விர்ரென்று’ மழை பொழிவது மாதிரி அம்புகள் வேகமாகப் புறப்பட்டு மோதிக் கொண்டிருந்தன.

இங்ஙனம் இவர்கள் இருவருக்கும் நிகழ்ந்து கொண்டிருந்த போரில் திடீரென்று உத்தரன் கை ஓங்கியது. சல்லியன் நின்று கொண்டிருந்த தேரின் குதிரைகள் அம்பு மாரியைத் தாங்க முடியாமல் இரத்த வெள்ளத்தினிடையே வீழ்ந்தன. தேர்ப்பாகன் மார்பில் சேர்ந்தாற்போல் நாலைந்து அம்புகள் தைத்து அவன் உயிரைப் பறித்துக் கொண்டன. சல்லியன் நம்பிக்கை இழந்து விட்டான். அவன் உடல் மட்டுமல்ல; உள்ளமும் தளர்ந்து விட்டது. எல்லாம் தளர்ந்து போன இந்தச் சமயத்தில் உத்தரன் எய்த அம்புகளால் கையிலிருந்த வில்லும் நாணறுந்து இரண்டு துண்டாக முறிந்து விழுந்தது. நாணறுந்த பின்னும் நாணமில்லாமல் நின்ற சல்லியன் உத்தரவின் மேல் அடக்க முடியாத ஆவேசம் கொண்டுவிட்டான். ஆவேச வேகத்தில் போர்முறை, நீதி, நியாயம் எல்லாம் மறந்து விட்டன அவனுக்கு. தன் ஆத்திரத்தை முழுதும் ஒன்றாகத் திரட்டி அருகிலிருந்த ஓர் கூரிய வேலை எடுத்து உத்தரகுமாரனின் மார்பைக் குறிவைத்து எறிந்து விட்டான். முறைப்படி போர் முடிந்து விட்டது என்றெண்ணி வில்லையும் அம்பறாத் தூணியையும் கழற்றிக் கீழே வைத்திருந்த உத்தரன் திடீரென்று ஏவப்பட்ட வேலின் பாய்ச்சலை எதிர்த்துச் சமாளிக்க முடியாமல் அதற்கு இரையானான். சல்லியன் வீசிய வேல் உத்தரனின் நெஞ்சுக்குழிக்குள் ஆழப் பதிந்துவிட்டது. அடியற்ற மரம்போல் உயிரிழந்து கீழே சாய்ந்தான் உத்தரன். அவன் உயிர் விரைவில் உடலை விட்டுப் பிரிந்தது. வெற்றி வீரனாகப் போர்க்களத்தில் ஆரவாரம் செய்து கொண்டிருந்த உத்தரன், சில விநாடிகளில் விண்ணகம் புகுந்து விட்டான். சல்லியன்தான் உத்தரனைக் கொன்றான் என்றறிந்து துரியோதனாதியர் மனமகிழ்ந்தனர். தங்கள் துணைவனான உத்தரன் மறைவு பாண்டவர்களை மனங்கலங்கச் செய்தது. உத்தரனைக் கொன்ற சல்லியனைப் ‘பழிவாங்கியே தீருவேன்’ என்று உறுதி செய்து கொண்டு கிளம்பி விட்டான் வீமன். கதாயுதமும் கையுமாக விமன் துரத்திக் கொண்டு வருவதைக் கண்ட சல்லியன் பயந்து போய் ஓடிப்பதுங்கிக் கொண்டு விட்டான். சல்லியனுக்குப் பதிலாகத் துரியோதனனும் அவனுடைய தோழர்களும் சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்து வந்தார்கள். இருவகையினரும் ஒருவரோடொருவர் நெருங்கி எதிர்த்தனர். வீமனும் முரட்டுப் பலசாலி! துரியோதனனும் முரட்டுப் பலசாலி! இரண்டு முரட்டுப் பலசாலிகள் சேர்ந்து போரிட்ட காட்சி களத்திலேயே பிரம்மாண்டமானதாகத் தோன்றியது. கதாயுதத்தால் ஓங்கி அடித்துப் புடைத்த வீமன் துரியோதனாதியர் படை அணிவகுப்பே சிதறிப் போகுமாறு செய்தான். துரியோதனனுடைய தேரை அடித்துச் சிதைத்துத் தூள் தூளாக ஆக்சி விட்டான். ஆவேசமடைந்து வீமன் மேல் வில்லை வளைத்தான் துரியோதனன். சரியாக அதே நேரத்திற்கு அந்த வில்லையும் கதாயுதத்தால் முறித்துக் கீழே தள்ளி விட்டான் வீமன். துரியோதனன் போர்க்களத்தில் அனாதையாக, அனாதரவாக நின்றான். ‘அவன் தோற்றுவிட்டான்’ என்றே அவனைச் சுற்றி நின்றவர்கள் நினைத்தார்கள். அந்தப் பரிதாபகரமான நிலையில் துரியோதனனின் மைத்துனர்கள் அவனுக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். மைத்துனர்களோடு சேர்ந்து கொண்டு வீமனை எதிர்த்தான் துரியோதனன். வீமன் தயங்கவில்லை. தனது தைரியத்தை மறுபடியும் அவர்களுக்கு நிரூபித்துக் காட்டினான். ‘தலை சிதறிப் போகாமல் பிழைத்தால் போதும்’ என்று மைத்துனர்களை ஓட ஓட விரட்டினான். வீமனது ஆற்றலுக்கு எந்த விதத்திலும் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இதற்குள் பாண்டவர்களைச் சேர்ந்தவனும், சிவபெருமான் அருளிய வில்லைப் பெற்றவனும் ஆகிய ‘சிவேதன்’ என்பவன் சல்லியன் பதுங்கிக் கொண்டிருந்த இடத்தை விசாரித்து அறிந்து கொண்டு அவனைத் தாக்குவதற்கு ஓடினான். உத்தரனைக் கொன்ற சல்லியனைப் பழிவாங்க வேண்டும் என்பது அவனுடைய ஆத்திரம். அதிர்ஷ்டவசமாக எந்த இடத்தில் சல்லியன் இருப்பதாகச் சிவேதன் எண்ணினானோ அங்கே அவன் அகப்பட்டுவிட்டான். சிவேதனுக்கும் சல்லியனுக்கும் இடையே கடுமையான விற்போர் நடக்கத் தொடங்கிற்று. சல்லியனோடு துணையாய் இருந்து சிவேதனை எதிர்ப்பதற்கு துரியோதனன் ஆறு பெரிய வீரர்களை அனுப்பினான். அந்த ஆறுபேரும் சல்லியன் ஒருவனும் ஆக ஏழுபேர் சேர்ந்து சிவேதனோடு விற்போர் செய்தார்கள். ஆனால் சிவேதன் தனது அதிசயமான போர்த் திறமையினால் அந்த ஏழுபேரையும் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். இதைக் கண்ட துரியோதனனுக்குப் பகீரென்றது.

‘இந்தச் சிவேதன் பெரிய வீரனாக இருப்பான் போலிருக்கிறதே! இவனை எதிர்க்க வேண்டுமானால் இவனை விட மீறிய கையாகத்தான் இருக்க வேண்டும்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டே அவன் படைத்தலைவனும் மிகப் பேரறிஞனுமாகிய வீட்டுமனை சிவேதனை எதிர்ப்பதற்கு அனுப்பினான். தன்னை அடக்குவதற்காகத் துரியோதனன் வீட்டுமனை அனுப்பியிருப்பதை அறிந்து கொண்ட சிவேதன், சல்லியன் முதலியவர்களை விரட்டித் துரத்துவதை நிறுத்திக் கொண்டு வீட்டுமன் முன் நின்று அவனை எதிர்த்தான். சிவேதனின் சிறிதும் கலக்கமில்லாத தீரம் வீட்டுமனையே அஞ்சிக் கலக்கம் கொள்ளும்படியாகச் செய்தது. எனினும் அவன் சமாளித்துக் கொண்டு சிவேதனோடு போர் செய்தான். சிவேதனுக்கும் வீட்டு மனுக்கும் நிகழ்ந்த போரில் வீட்டுமனின் தேர், தேர்க்கொடி எல்லாவற்றையும் சிவேதன் அறுத்துத் தள்ளிவிட்டான். வில் நாணையும் அறுத்து வீழ்த்தி வீட்டுமனை வெறுங்கையானாக்கி விட்டான். மகா வல்லமை வாய்ந்தவனான வீட்டுமன் திகைத்து விட்டான். சினங்கொண்ட துரியோதனன் களத்திலிருந்து வேறு பல அரசர்களைத் திரட்டி வீட்டுமனுக்குப் பக்கபலமாக சிவேதனை எதிர்க்க அனுப்பினான். சிவேதனை எதிர்க்க அவர்கள் ஓடி வந்தார்கள். வீட்டுமனும் புதிய வில் ஒன்றை எடுத்துக் கொண்டு எதிர்த்தான். சிறிது நேரம் போர் நடந்தது. இரண்டாம் முறையாக வீட்டுமனின் வில்லை ஒடித்து வீழ்த்தினான் சிவேதன். அம்முறை வீட்டுமனுடைய மனத்தில் வெட்கம் உறைத்தது. அவமானமாக இருந்தது அவனுக்கு.

“அடே! சிவேதா! உனக்கு வில்லைத் தவிர வேறு எந்த ஆயுதத்தை எடுத்தும் போர் செய்யத் தெரியாது போலிருக்கிறது? தெரியுமானால் வாளை எடுத்துப் போர் செய்வதற்கு வா” என்று வீட்டுமன் கூவியழைத்தான். ஒரு சூழ்ச்சியை மனத்தில் பொதிந்து வைத்துக் கொண்டே அவன் இப்படிக் கறினான். சிவேதன் இதை மெய்யென்று எண்ணிக் கொண்டு தன் வில்லைக் கீழே வைத்துவிட்டு, வாளை எடுத்துக் கொண்டு போர் புரிய வந்தான். திடீரென்று வீட்டுமன் வேறோர் வில்லை எடுத்துச் சிவேதனின் தோள் பட்டையைக் குறிவைத்து அம்பைத் தொடுத்தான். அம்பு சிவேதனின் தோள் பட்டையில் ஆழமாகப் பாய்ந்து கையைத் துண்டித்துத் தள்ளிவிட்டது, மனங்குமுறிய சிவேதன் தனக்கு மீதமிருந்த ஒரே கையால் வாளை ஓங்கிக் கொண்டு வீட்டுமனைக் கொல்வதற்காக அவன் மேலே பாய்ந்தான். அதற்குள் வீட்டுமனுடைய வில்லிருந்து இன்னொரு அம்பு புறப்பட்டு விட்டது. இந்த அம்பு சிவேதனின் மார்பிலே தைத்து அவனைக்கொன்று விட்டது. சிவேதன் ஆவிதடுமாறி மண்ணில் வீழ்ந்தான். சூழ்ச்சியினால் வீட்டுமன் அவனைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டான். இப்படியாக முதல் நாள் போரில் வீரமாகப் போர் புரிந்த உத்தரன், சிவேதன் என்ற இருவரும் பாண்டவர்களுக்கு மேலும் உதவ முடியாமல் மறைந்து அமரராயினர். இவர்கள் இருவருமே விராடனின் மக்கள்.