வெற்றி முழக்கம்/28. துயர வெள்ளம்

விக்கிமூலம் இலிருந்து

28. துயர வெள்ளம்

ண்பர்கள் நீண்ட நேரச் சிந்தனைக்குப்பின் நடந்த துன்பங்களைப் படிப்படியாக உதயணனுக்குக் கூறினார். வாசவதத்தைக்கு நேர்ந்த அவலம் அறிந்ததும் உதயணன் ஒரேயடியாகக் கதறினான். ஆருயிர் நண்பர் ஆறுதல் மொழி கூறினர். அதையும் பொருட்படுத்தாமல் எரிந்துகொண்டிருந்த அரண்மனையின் அந்தப்புர மாடங்களின் தீயிடையே தானும் குதித்து விடுவான்போல எழுந்து ஓடினான் உதயணன். “தத்தை இறந்தது இந்தத் தீயிலேதானே? நானும் இதிலேயே மூழ்கி இறக்கிறேன்” என்று கூறிக் கொண்டே ஒடிய அவனை நண்பர் தடுத்து நிறுத்துவதற்குப் பெரும்பாடுபட வேண்டியிருந்தது. அவனுடைய துயரம் சமாதானப் படுத்த இயலாத மிகப்பெரிய துயரமாயிருந்தது.

“நண்பனே! துன்பப் பொறை சுமக்கலாற்றாது நீ இங்ஙனம் தீப்புகுதல் உன் பகைவர் மகிழ்ச்சி அடைவதற்குரிய செயலாகும். அன்றியும், 'யூகியை இழந்தபின் வத்தவ குமரன் தனக்கெனச் சொந்த ஆற்றல் இல்லாது போயினமையால், தத்தையின் பிரிவுத் துயரை வாயிலாகக் கொண்டு கோழையாக மாறித் தானே இறந்து போனான்' - என்று பிறர் உன்னை இகழவும் இடந்தரும் இச் செயல், ஏற்கெனவே, ‘யூகி இறந்தபின் நீ ஏதும் செய்ய இயலாதவன் ஆயினை!’ என்று உன் பகைவர் எள்ளி நகையாடி உரைத்து வருகின்றனர். ஆகவே கலங்காமல் இரு” எனக் கூறி நண்பர் அவனைத் தீப்புகாமல் தடுத்து நிறுத்தினர். உதயணன் நலத்திற்காக நடிக்கப்பட்ட ஒரு போலி நாடகத்தை அவன் நம்பித் திருந்தவே, நண்பர்கள் இந்த ஏற்பாடு செய்திருந்தனர்.

புற்றிலிருக்கும் பாம்பை வெளியேற்றிச் சினமூட்டுவதற்காகப் புற்றின் வாயிலில் இட்ட நெருப்பைக் கண்டு, பாம்பு வெளியே போந்ததுமன்றிச் சிலரைத் தீண்டவும் தலைப்பட்டுவிட்டதுபோல உதயணன் அதை நம்பியதோடன்றித் தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளமுற்பட்டு விட்டது கண்டு அவர்கள் திடுக்கிட்டனர். முதலுக்கே மோசம் வந்துவிடும் போலிருந்தது. எவர் வேடிக்கை பார்க்கப் பாம்பை உள்ளேயிருந்து நெருப்பிட்டு வெளியேற்றினாரோ அவரையே அது கடித்துவிட்டால் என் செய்வது? அரிதின் முயன்று நிலை கொள்ளாமல் தடுமாறி உழன்று சுழலும் உதயணனைத் தேற்றினர் அவனுடைய தோழர்கள். காரிய நாடகத்தை அவன் மெய்யென நம்பியது அவர்களுக்கு மகிழ்ச்சியே தந்தது.

எல்லையற்ற நீர்ப்பெரும் பரப்பை உடையதாக இருந்தாலும் கடலுக்கும் கரை உண்டல்லவா? அதைக் கடந்து அது அப்பால் போய்விட முடியாதே? தன் தோழர்களின் சொல்லைக் கடந்தறியாத உதயணன் ஒருவாறு மனந்தேறித் தானும் தீயிற் புகுந்து உயிர்விடும் எண்ணத்தைக் கை விட்டான். 'சுற்றித் தீப்பற்றியபோது அஞ்சி நடுங்கிச் செய்வதறியாது குகையில் சிக்கிவிட்ட மயிலைப்போலத் தன் இன்னுயிராகிய என்னை நினைந்து தத்தை எப்படிப் பரி தவித்தாளோ' என்று நினைத்துப் பார்த்தபோது உதயணனுக்குத் தன் உடலில் உயிர்ப்பே நின்றுவிடும் போலிருந்தது. அவலத்தின் உணர்வுச் சுமைகள் அவன் நெஞ்சைப் பிடித்துத் தாழ்த்தின. பறி கொடுக்கக் கூடாததும் என்றும் பறிகொடுப்பதற்கு அரியதுமான ஒன்றைப் பறி கொடுத்துவிட்டவன் போல மயங்கிச் சோர்ந்தான் உதயணன். எரிந்து போன தத்தையின் பொன்னுடலையாவது ஒரு முறை கண்குளிரக் காண வேண்டும் போலிருந்தது அவனுக்கு. கண்டால்தான் தன்னிடம் கொந்தளிக்கும் சோகவெள்ளம் வடியும் என்று அவன் உள் உணர்வு பேசிற்று. “அரை குறையாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை அவித்துவிட்டு எரிந்துபோன அவள் பொன்னுடலையாவது எனக்குக் காட்டுங்கள்” என்று உதயணன் கேட்டபோது நண்பர்களுக்குப் பகீரென்றது.

தத்தையின் பிணத்தைக் காணவேண்டும் என்று உதயணன் கேட்பான் என அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நெருக்கடியான நிலை ஏற்பட்டது அவர்களுக்கு. இப்பொழுது அவன் கேட்ட கேள்வியால் தங்கள் குட்டு உடைபட்டு நாடகம் அம்பலமாகி விடுமோ என்று அவர்கள் உள்ளுற நடுக்கமும் அடைந்தார்கள். எல்லாம் உதயணன் நன்மைக்காகவே செய்திருந்தார்கள். என்றாலும் பொய் பொய்தானே? ‘எரிந்துபோன கரிப்பிணத்தை அரசர்கள் காண்பது வழக்கமில்லை. அது அவர்கள் மங்கலத்திற்குத் தகாது’ என்று தங்களைச் சமாளித்துக்கொண்டு ஒரு பொய்யைச் சாமர்த்தியமும் சாதுரியமும் தோன்ற வெளியிட்டு உதயணனை நம்ப வைத்தார்கள். முதலில் அதற்கு இணங்கிய உதயணன் பின்பு மனம் மாறிவிட்டான். கண்டிப்பாக எரிந்துபோன தத்தையின் உடலைக் காணத்தான் வேண்டுமென்று பிடிவாதத்தோடு ஒற்றைக் காலில் நின்றான். அவனுடைய பிடிவாதத்தைத் தளர்த்துவது கடினமாயிருக்குமெனத் தோன்றியது.

உதயணன் துயரத்தையும் அந்தத் துயர வேகத்தில் நொடிக்கு நொடி அதிகமாகி வரும் அவனுடைய பிடிவாதத்தையும் கவனித்த உருமண்ணுவா, அதைத் தீர்க்கும் வழி நாடிச் சற்றே நுணுக்கமாகச் சிந்தித்துப் பார்த்தான். இந்த நிலையில் உதயணனுடைய பிடிவாதத்தை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தினால் என்ன நிகழும் என்பதையும் உரு மண்ணுவா அதுமானம் செய்தான். ‘தத்தை தீப்பட்டு இறந்து போனது உண்மையாயின் இவர்கள் பிணத்தைக் காட்ட மறுப்பானேன்? ஒருவேளை இதில் ஏதாவது சூழ்ச்சி இருக்குமோ? எனக்கு உயிர் நண்பர்களாகிய இவர்கள் இத்தனை பேர் இங்கிருந்துமா தத்தையை இறந்துபோக விட்டிருப்பார்கள்? இல்லை! இல்லை! ஒரு போதும் இருக்காது. தத்தை இறந்திருக்கமாட்டாள். வேண்டுமென்றே ஏதோ காரணம் பற்றித்தான் இவர்கள் இப்படிக் கூறியிருக்க வேண்டும்’ என்று இந்த விதமாக உதயணன் சந்தேகமுற்று நினைத்து விடுவானானால் பின் மேலே நடக்க வேண்டிய அருமையான திட்டங்கள் அவ்வளவும் சரிந்து போகும். உதயணன் மனம் எவ்வளவு கூர்மையானது என்பதை நன்றாக அறிந்திருந்த உருமண்ணுவா இமைப் பொழுதில் தங்கள் நெருக்கடியை உணர்ந்துகொண்டான். நல்ல வேளையாக வாசவதத்தையின் பள்ளியறைப் பக்கத்தில் முன்பே இரண்டு வேடர்களைத் தத்தை சாங்கியத்தாய் ஆகிய இருவருடைய அணி ஆடைகளுடன் நெருப்பில் தள்ளி வைத்திருந்தனர். ‘இப்பொழுது கரிந்து அடையாளங் கண்டுகொள்ள முடியாமல் இருக்கும் அவர்கள் பிணங்களை அருகில் போக விடாமல் தூரத்திலிருந்தே காட்டி, உதயணனைத் திருப்தி செய்துவிடலாம்’ என்ற முடிவுடன், உதயணனுக்குப் பிணத்தைக் காட்ட ஒப்புக் கொண்டு அவனை அழைத்துச் சென்றான் உருமண்ணுவா. உதயணனோடு தான் அங்கே புறப்படுவதற்கு முன்பாக, உருமண்ணுவா வேறு ஒரு முக்கியமான காட்சியை உதயணன் கண்களிலிருந்து மறைக்க வேண்டியதாயிற்று. உதயணன் பிணத்தைப் பார்வையிட வேண்டிய இடத்திற்கு அருகில்தான் தத்தையும் சாங்கியத் தாயும், யூகி இருக்குமிடத்திற்குத் தப்பிச் சென்ற சுரங்க வழி திறந்து கிடந்தது. உருமண்ணுவா முன்னேற்பாட்டுடன் தந்திரமாக ஒர் ஏவலன் மூலம் அந்தக் கதவை அடைத்து எரிந்துபோன நீற்றையும் கட்டைகளையும் கொண்டு மூடிச் சுரங்க வழியை மறைத்து விடுமாறு சொல்லி அனுப்பியிருந்தான். போன ஏவலனிடமிருந்து காரியம் முடிந்ததாகத் தகுந்த குறிப்புக் கிடைத்த பின்னே உதயணனை அழைத்துக்கொண்டு எரிந்து போன பள்ளியறைக்குள் நுழைந்தான் உருமண்ணுவா. சற்று விலகியிருந்தபடியே தத்தை, சாங்கியத் தாய் இவர்களின் எல்லா அணிகளும் பூட்டப்பெற்று உருத்தெரியாமற் கரிந்து போயிருந்த போலிப் பிணங்களை உதயணனுக்குக் காட்டி, இருவரும் இறந்தது பொய்யில்லை என்பதை அவன் நம்பும்படி செய்தான். உதயணனும் அதை அப்படியே நம்புவதற்குச் சந்தர்ப்பம் துணை செய்தது.

பிணத்தின்மேலும் வேறு சில இடங்களிலும் சிதறிக் கிடந்த தத்தையின் அணிகலன்கள் ஏவலரால் ஓரிடத்தில் கொண்டு வந்து குவிக்கப் பெற்றன. அவை பெரும்பாலும் சிதைந்து போயிருந்தன. அந்த நகைகளுக்கு முன் அமர்ந்து உதயணன் கண்ணிர் விட்டுக் கதறிய காட்சி உண்மை தெரிந்த உருமண்ணுவா முதலியோரைக்கூட மனம் உருக்கி வருத்தத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு பொன்னகையும் தத்தையின் செவ்விதழ்களுக்கு நடுவே தோன்றிய புன்னகையை உதயணனுக்கு நினைவூட்டின. முத்து வடமும், சித்திர உத்தியும், நித்திலத் தாமமும், நெற்றிச் சுட்டியும், கழுத்தணி கண்டிகையும் என்று சொல்லில் அடங்காத பல அணிகலன்களில் அவள் செளந்தரியப் புன்முறுவல் நிச்சயம் அவனுக்குத் தெரிந்து தான் இருக்கவேண்டும். ஒவ்வோரணி கலனும் தத்தையின் உடலில் அழிந்துபோன ஒவ்வோர் அங்க வனப்பையும் அவனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தது; நினைவூட்டிக் கொண்டிருந்தது. அவன் கண் கலங்கினான். கடகங்கள் தந்தத்தில் செதுக்கி வைத்தாற்போல் இருந்த அவள் முன் கையை நினைவில் கொண்டுவந்து காட்டின. பல நிற வைரக் கற்கள் பொருத்தப் பெற்ற மோதிரங்கள் தாமரையின் நீண்ட இதழ்களைச் சுருட்டியதுபோல் காட்சியளித்த அவள் விரல்களின் நளினத்தை எண்ணச் செய்தன. தோளணிகள் மழுமழுவென்று முற்றி இழைத்த சந்தனக் கட்டைகள்போன்ற, ஆனால் பஞ்சுபோல் மெல்லியனவாகிய அவள் தோள்களை அறிமுகம் செய்தன. பவழமும் காசும் கோத்துச் செய்யப்பட்ட பாண்டில் என்னும் இடுப்பணியும் எட்டுவடங்களாகக் கோத்த விரிசிகை என்னும் மேகலையும் தத்தையின் இடையழகைத் தாமும் உதயணனுமுமே அறிய முடிந்த பெருமையை இழந்து விட்டதுபோல அவனை நோக்கி அல்லல் காட்டின. கிண் கிணிச் சிலம்பு முதலிய காலணிகள் என்றோ செய்த இன்ப ஒலிகளை அவன் நினைவிற் படரச் செய்தன. தாரும் தழையும் கண்ணியும் மாலையும் கொண்டு உன்னை அழகு செய்ய வந்தேன். நீயோ உனக்கு முன்புள்ள அணி கலன்களையே விட்டுச் சென்று விட்டாய் என்று பலவாறு பிதற்றி வாசவதத்தையைப் பற்றிய பழைய நினைவுகளில் ஆழ்ந்து கிடந்தான் உதயணன். யானை பிடிப்போர் இட்ட குழியில் தன் பெண் யானையைப் பறி கொடுத்த களிற்றைப் போல நீங்காச் சோகம் அவனை நிலையாக வாட்டிய வண்ணமிருந்தது. வாசவதத்தையின் அழகிய உடலை இழந்து விட்ட உதயணன் அவளுடைய அணிகலன்களிலிருந்து அவை முன்பு அணி செய்த ஒவ்வோர் அங்கமாக நினைத்துக் கூட்டிக் கற்பனையில் அவளை உருவாக்க முயன்றான்.