உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் தோற்றமும் பரவலும்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து
vii



முன்னுரை
திருவாளர் டாக்டர். கே.ஆர்.அனுமந்தன் அவர்கள்

சென்னைப் பல்கலைக்கழக முதுபெரும் ஆராய்ச்சிப் பேரறிஞர் உயர்திரு. டாக்டர் வி.ஆர். இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்களின் சொற்பொழிவுகளின் மொழிபெயர்ப்பிற்கு ஒரு முன்னுரை எழுத நான் கேட்டுக் கொள்ளப்பட்டதை மிகப்பெரிய பெரும் பேறாக மதிக்கின்றேன். "தமிழ் இலக்கியம், மற்றும் வரலாறு பற்றிய ஆய்வு" (Studies in Tamil Literature and History), "சிலப்பதிகாரம்", "மத்சயபுராணம்" போலும் பொருள் செறிந்த நூல்கள் மூலம், தமிழ்நாட்டு மக்கள், மற்றும் தென்னிந்திய வரலாற்றுப் பேராசிரியர்கள் உள்ளத்தில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்றிருக்கும், திருவாளர் தீக்ஷிதர் அவர்களுக்குத் தனியே அறிமுகம் எதுவும் தேவை இல்லை. தமிழ்மொழி பற்றிய ஆய்வினை, அது, இன்னமும் குழந்தைப் பருவ நிலையில் இருக்கும் போதே, அன்போடு பேணி வளர்த்த முன்னோடிகளில், இவரும் ஒருவர் என்பது நன்கு தெரிந்த உண்மை.

இப்புத்தக வடிவில், மறுவலும் வெளியிடப்படும் இவ்விரு சொற்பொழிவுகளில், வரலாற்றுப் பேராசிரியர்களை, இன்று வரையும் குழப்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருப்பதான, திராவிடர் தோற்றம் குறித்த புரியா புதிரைப் புரிய வைக்க முயன்றுள்ளார். இச்சொற்பொழிவுகள் நெடுகிலும், திராவிடர் அல்லது அவர் முதலிடம் தரும் இருபெயராம் பழந்தமிழர் என்பார். இம்மண்ணுக்குரியவராவர் என்ற கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்துள்ளார். தம் கருத்தை உறுதிசெய்ய, அவர் தொல்பொருள் ஆய்வு, மற்றும் மொழி இயல் துறைகளில் தமக்குள்ள ஆழ்ந்த பெரும்புலமையை ஒன்று திரட்டிக்கொண்டு வந்துள்ளார். திராவிடர் வெளிநாட்டவராவர் என்ற கொள்கை பற்றியும், ஆய்வும், புத்தாய்வும் செய்துள்ளார். அவ்வாறு செய்யும் நிலையில் திருவாளர்கள் பி.டி. சீனிவாச அய்யங்கார், மற்றும் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை போலும் சிறந்த அறிஞர்களோடு கைகோத்தும் சென்றுள்ளார்.

“திராவிடம்”, தொல்பழந்தமிழரின் தாயகம்: ஐரோப்பிய-ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையில் உள்ளதான நடுநிலக்கடல் பகுதி மக்கள் எனப்படுபவர். சிந்து கங்கை நிலப்பகுதி முழுமையாக உருவாகாத காலத்திலேயே, தென்னிந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் இணைத்திருந்து, கடலுள் ஆழ்ந்து போன ஒரு பெருநிலப்பரப்பின் ஒரு பிரிவாக இருந்ததும், திராவிடர்களின் தாயகமானதுமான, இந்திய தீபகற்பத்தையே தாயகமாகக் கொண்டிருந்தனர் என வாதிட்டு நிலை நாட்டுகிறார். உண்மையில், இது ஒரு துணிவான முடிவுதான். தென் ஆப்பிரிக்கா, தென்இந்தியா, தென்அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அனைத்தும் லெமூரியா என்ற பெயருடைய பெரிய நிலப்பரப்பின் பகுதிகளாம்; உலகின் நனிமிகப் பழமை வாய்ந்தன; நிலஇயல் விளைவாக, வேறு வேறாக ஒதுக்கப்பட்டன என்ற கருத்தைச் சில நிலநூல் ஆய்வாளர் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால், மண்ணில் மனித இனம் இருந்தமைக்கான அறிகுறி எதுவும் காணக் கூடாத ஐம்பது நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அத்தகைய நிலமாற்றம் நிகழ்ந்தது என உறுதிப்படுத்துகின்றனர். மாய்ந்து போன தமிழர்களின் பழைய எலும்புக்கூடுகளைக் காட்டிலும், நனிமிகப் பழமை வாய்ந்த மனித எலும்புக்கூடுகள், கிழங்(க்)கு ஆப்பிரிக்காவிலும், பெர்டிலெ க்ரெசென்ட், (Fertile Crescent) நிலப் பகுதியிலும் காணப்படுகின்றன என்பதைத் திருவாளர் “லீக்கெயய்” (Leakyey) மற்றும் வேறு சிலரின் தொல்பழங்கால ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. சீன நாட்டு பீகிங் நகரத்து மனிதன் மற்றும் ஜாவா நாட்டு மனிதன் ஆகியோர், தமிழர்களைக் காட்டிலும் தொல்பழங்காலத்தவர் என மனித இன நூல் ஆய்வாளர், ஆய்ந்து நிலை நாட்டியுள்ளனர். நிலைமைகள் இதுவாக, இந்தியாவில் கி.மு. 3250க்கு முற்பட்ட முதிர்ந்த பண்பாடு இருந்தமைக்கான அகச்சான்று எதுவும் இல்லை. ஆனால், “பெர்டிலெக்ரெசென்ட்” நிலப்பகுதி கலைகளும், அறிவியல்களும், ஒப்புக் காண மாட்டா உயர்வினைக் கி.மு. 3000 ஆண்டளவிலேயே அடைந்துள்ளன. பின்லாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் சிலர் மட்டுமே, சிந்து வெளிப்பண்பாட்டினைத் தமிழர் பண்பாட்டினோடு ஒருமை காண முயன்றுள்ளனர். தமிழரின் தொல் பழமையை நிலைநாட்டவல்ல, மனித இன ஆய்வுகள் மேலும் மேலும் நடைபெற வேண்டியுளது. உண்மையில், திருவாளர் தீக்ஷிதர் அவர்கள் அதுபோலும் அகவாழ்வு ஆய்வுகள் நடைபெற வேண்டும் என வாதாடியுள்ளார். அதற்கிடையில், கிடைத்துள்ள அகவாழ்வு ஆராய்ச்சிகளும் மொழியியல் உண்மைகளும் அளிக்கும் சான்றுகளிலிருந்து, துணிவான சில முடிவுகளைச் செய்துள்ளார்.

நடுநிலக்கடல் நாடுகள், மற்றும் தென்னிந்தியா இவற்றைச் சேர்ந்த மொழிகள், நாகவழிபாடு, இலிங்க வழிபாடு, தாய்வழி உறவு, மற்றும் தேவதாசி முறைபோலும் சமுதாய அமைப்புகள் இவற்றிற்கிடையேயான ஒருமைப்பாடு, திராவிடர்கள், அந்நாடுகளிலிருந்து இங்குக் குடிவந்தனர் என்பதைக் காட்டிலும், தமிழர்கள் அந்நாடுகளுக்குக் குடிபெயர்ந்தனர் என்பதன் விளைவே என ஆய்ந்து முடிவு செய்துள்ளார். திருவாளர்கள், டாக்டர் லஹோவரி, பேராசிரியர் டி.பி. பாலகிருஷ்ண நாயர், டாக்டர் ஐ.டி. கார்னெலியஸ் மற்றும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் போன்ற வரலாற்றுப் பேராசிரியர்களால், இதே வாதம் நடுநிலக்கடல் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர் திராவிடர் என்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏர் கொண்டு உழுதலும், வரப்பு கட்டிப் பயிரிடுதலும் முதன் முதலில், மெசபடோமியாவிலும், பாலஸ்தீனத்திலும்தான், மேற்கொள்ளப்பட்டு பின்னர், அவர்களால் தென்னிந்தியாவில் புகுத்தப்பட்டது என்பது அவ் வரலாற்று ஆசிரியர்கள் கருத்து. திருவாளர் டாக்டர் ஸ்பீச் அவர்கள் கூற்று, திராவிடர்கள் மேற்கு ஆசியாவிலிருந்து அலை அலையாக வந்து, தென்னிந்தியாவில் இறந்தார் உடலை அடக்கம் செய்யும் பாரக்கல் நினைவுச்சின்னப் பண்பாட்டினை உருவாக்கினர் என்பது, திருவாளர் “ஹைமென்தார்ப்” (Huimendarf) அவர்கள் கூற்று, திராவிடர்தாம், தொல்பழங்கால பாரக்கல் நினைவுச் சின்னங்களை எழுப்பியவர், தென்னிந்தியாவிலேயே வாழ்ந்தவர் என்பது லெமூரியாக் கண்டம் என்ற கொள்கையும், திராவிடர்தாம் இம்மண்ணுக்குரிய மக்களாவர் என்ற கொள்கையும், இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாதன அறிவொடு படாதன எனக் கருதுகின்றனர். திருவாளர்கள், டாக்டர் ஐ.டி. கார்னெலியஸ், மற்றும் பேராசிரியர் நீலகண்டசாஸ்திரியார் ஆகியோர். ஆனால், பின்லாந்து நாட்டு வரலாற்றுப் பேராசிரியர்களின் அண்மைக்கால ஆய்வுகள் தந்த விளக்கத்தில், திராவிடரின் தோற்றம் பற்றிய ஆய்வு புதிய நிலையை அடைந்துளது. திருவாளர் தீக்ஷிதர் அவர்களின் இக்கருத்து, இத்துறையில், புதிய ஆய்வுகளைத் தாண்டி விளக்க முடியாத இப்புதிர் மீது மேலும் விளக்க வொளியினை உறுதியாக வீசும். ஆரியர் திராவிடர் என்பன போலும் இனம் எதுவும் இல்லை; இந்தியா மீது ஆரியப்படையெடுப்போ, திராவிடர் படையெடுப்போ இல்லை; பழங்கற்காலப் பண்பாட்டிலிருந்து புதிய கற்காலப் பண்பாட்டிற்கும், புதிய கற்காலப் பண்பாட்டிலிருந்து, பாரக்கல் நினைவுச்சின்னப் பண்பாட்டிற்கும் பாரக்கல் நினைவுச்சின்னப் பண்பாட்டிலிருந்து இரும்பு காலப் பண்பாட்டிற்குமாக, தொடர்ந்த இந்தியப் பண்பாட்டு வளர்ச்சி நிலை இருந்தது என்ற அவர் கொள்கை, ஆய்வறிவுக்குப் புத்துணர்வு ஊட்டவல்லது; இந்திய ஒருமைப்பாட்டை வளர்க்கக் கூடியது.

தமிழகத்தில், தமிழ்ப் பண்பாட்டு நிலையில், கலை, இலக்கிய மறுமலர்ச்சி ஒன்று இப்போது எழுந்துளது. தமிழ் ஆராய்ச்சிக்குப் புதிய புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வெளியீடு தொடர்ந்து மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி உணர்வை, ஐயத்திற்கு இடனின்றிக்(த்) தூண்டும். தமிழக அரசு, ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும், தமிழக வரலாறு எழுதும் பணிக்குத் துணைசெய்யும். இந்நூலை வெளியிட முன்வந்த புகழ்மிகு முயற்சிக்குச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தவர், நன்றிப் பெருக்கோடு பாராட்டத்தக்கவர். வரலாற்றுத் துறை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறவேண்டிய ஊக்கத்தைப் பெறத் தகுதி வாய்ந்தது இந்நூல்.