தமிழர் தோற்றமும் பரவலும்/ஆசிரியர் முன்னுரை
தொடர்ந்து வரும் பக்கங்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தின், சங்கர பார்வதி அறக்கட்டளை சார்பில், 1940-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 29, 30 நாட்களில் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகளை எடுத்துரைக்கின்றன.
இச்சொற்பொழிவுகளில், திராவிடர்களின் தோற்றம், அவர்களின் பண்பாடு ஆகியன குறித்து மேனாடு மற்றும் இந்திய நாட்டு அறிஞர்களிடையே உறுதிபட நிலவும் கருத்துக்களை ஆய்வதற்கும், திராவிடப் பண்பாடு எனப் பொதுவாக உணரப்படுவதும், தமக்குத்தாமே, தம்மளவிலான, அப்பண்பாட்டை உருவாக்கிய தமிழர், அம்மண்ணுக்கே உரிய தொல் பழங்குடியினர் என்பதை உணர்த்துவதற்கும், ஒரு பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தமிழர்கள் தங்கள் பண்பாட்டை மேற்கைப் போலவே, கிழக்கிலும் உள்ள தங்களின் பின்வரும் கால்வழியினர் கையில் கொடுத்தனர். இவ்வகையில், தொல் பழங்காலத்தில், இக்காலத்திலும், அவர்கள் பங்கு, தமக்கே உரிய தனித்தன்மை வாய்ந்தது; கருத்தைக் கவரத்தக்கது. உள்ளத்தில் ஆழ்ந்து பதியத் தக்கது சொற்பொழிவுகளின் பின் இணைத்திருக்கும் குறிப்புகள், ஆசிரியர் கூறுவன பற்றிய தீர்ப்பைப் படிப்பவர்கள் அளிக்கத் துணை செய்யவல்லன.
இச்சொற்பொழிவுகளை ஆற்ற என்னை அழைத்தமைக்கும், அவற்றை அச்சிட்டுக்கொள்ள அனுமதித்தமைக்கும், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவினர்க்கு நான் நன்றி செலுத்த வேண்டும்.
இந்நூலை அடையாறு நூல்நிலைய வரிசையில் இணைத்துக் கொண்டமைக்குத் திருவாளர் டாக்டர். ஜி. சீனிவாச மூர்த்தி அவர்களுக்கும், அந்நூல்நிலைய ஊதியம் பெறா இயக்குநர் காப்டன் வைப்யரத்தினம் அவர்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இச்சொற்பொழிவுகளின் தட்டச்சுப் படியைக் கூர்ந்து படித்தமைக்குத் திருவாளர் ராவ்பகதூர் கே. வி. அரங்கசாமி அய்யங்கார் அவர்களுக்கும் குறிப்புகளைத் தொகுத்தளித்து உதவியமைக்குத் திருவாளர் திவான்பகதுர் சி.எஸ். சீனிவாஸாச்சாரி அவர்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். அச்சாகும் நிலையில் பிழைதிருத்தியும் பொருள் அடக்க அட்டவணையைக் கொடுத்தும் நூலை விரைந்து அச்சிடச் செய்த அடையாறு நூல் நிலையத்தைச் சேர்ந்த திரு. ஏ. எஸ். கிருஷ்ண அய்யங்கார் அவர்களுக்கும் என் நன்றியைப் பதிவு செய்கின்றேன். வசந்தா அச்சகத்தாரால் அழகாகவும், விரைந்தும் இந்நூல் அச்சிடப்பட்டமை அதன் மேலாளர் திரு. சி. சுப்பராயுடு அவர்களுக்குப் பெரிய நன்றிக் கடனாற்ற என்னை வைத்துவிட்டது.
சென்னை | |
1-5-1947 | வீ.ஆர். ராமச்சந்திர தீக்ஷிதர் |